Read in : English

மரபு நெல்லினங்களை சாகுபடி செய்யும் உழவர்களின் எண்ணிக்கை ஒவ்வோராண்டும் அதிகமாகிக் கொண்டே வருவதைக் காண முடிகிறது. குறிப்பாக மாப்பிள்ளைச் சம்பா, கருப்புக் கவுணி ஆகிய நெல்லினங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

திருவண்ணாமலை, திருவாரூர், கடலூர், மதுரை, தஞ்சாவூர் என்று அனைத்து மாவட்டங்களிலும் மரபு நெல் பயிரிடுவோரின் எண்ணிக்கை பரவலாக உள்ளது. ஆனால் இதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் சந்தைப்படுத்தல் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

பொதுவாக இயற்கை வேளாண்மை செய்பவர்கள் துண்டு துண்டாக பரவாலாகவே இருக்கின்றார்கள். ஒரு குறிப்பிட்ட ஊரில் உள்ள அனைவருமோ அல்லது பெரும்பான்மையான உழவர்களோ இல்லை.

ஊருக்கு இரண்டு மூன்று பேர் என்ற அளவிலேயே உள்ளதால் ஒருங்கிணைத்து சந்தைப்படுத்தும் வாய்ப்பு குறைவாக உள்ளது.

அடுத்தாக நுகர்வோர்களும் நகரம் சார்ந்தே உள்ளார்கள். உள்ளூர் மக்களில் பெரும்பாலானோர் நியாயவிலைக் கடை அரிசியை நம்பியே உள்ளனர். மரபு வகை அரிசிக்கான சந்தை சென்னை, கோவை, பெங்களுர் என்று தொலைவில் உள்ளது. போக்குவரத்துச் செலவு அதிகமாக உள்ளதால் விலையும் அதிகமாக உள்ளது.

அடுத்ததாக இவற்றின் நுகர்வு அளவும் குறைவாகவே உள்ளது. நாள்தோறும் பொன்னி அரிசி உண்போர் வாரத்திற்கு ஒரு நாள் கவுணி அரிசி சாப்பிடுபவராக இருப்பார். எனவே உற்பத்தி செய்பவர்கள் ஆங்காங்கே இருப்பதும், நுகர்வோர்கள் தொலைவில் இருப்பதும் மரபின அரிசிகளை பரவல்மயமாக்குவதில் சிக்கலாக இருக்கின்றது.

வெகுமக்கள்மயம் என்ற நிலையை எட்ட இன்னும் அதிக அளவு உழவர்கள் குறிப்பிட்ட பகுதியளவாக அதிக எண்ணிக்கையில் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட சந்தை இருக்க வேண்டும். இப்போது வழமையான நெல் வகைகளை அரசு கொள்முதல் நிலையங்கள் வழியாக வாங்குகின்றன. ஆனால் அவற்றுக்குக் கொடுக்கப்படும் தொகை குறைவாக இருப்பதால் மரபின நெல் வகைகளை உழவர்கள் அந்த மாதிரியான அரசு கொள்முதல் நிலையங்களில் கொண்டு சேர்ப்பதில்லை.

அத்துடன் அரசு வாங்கும் நெல் வகைகளைப் பொருத்த அளவில், வெள்ளை நிற நெற்களைத்தான் வாங்குகின்றனர். சிவப்பு, கருப்பு வகை நெல்லினங்கள் வேறு சந்தை வழியாகவே விற்கப்படுகின்றன. குறிப்பாக நாகை மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டங்களில் பரவலாக வானவாரி (மானாவாரி) நெல்லினங்கள் (சிவப்பு) பயிரிடப்படுகின்றன. இவை கேரளத்திற்கு ஏற்றுமதியாகிவிடுகின்றன.

வானவாரி நிலங்களில் சிறுதானியங்கள் எனப்படும் அருந்தவசங்களான வரகு, சாமை, குதிரைவாலி மட்டுமல்லாது, நெல்லினங்களும் பயிரிடப்படுகின்றன. வானவாரி நிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் நமது உணவுப் பாதுகாப்பு மட்டுமல்லாது சூழலியல் பாதுகாப்பும் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தைப் பாதுகாப்பதற்கான சூழலியல் அக்கறையுடன் கூடிய கொள்கைகளும் திட்டங்களும் இல்லை. வானவாரி எனப்படும் மானாவாரி நிலம் என்பது வான் மழையை மட்டும் நம்பி வேளாண்மை செய்யும் பகுதியாகும். உலகம் முழுமைக்கும் 80 விழுக்காடு நிலப்பரப்பு மானாவாரியாகவே உள்ளது.

இந்திய அளவில் 60 விழுக்காடு நிலம் மானவாரி நிலமாகும். தமிழகத்தைப் பொருத்த அளவில் 70 விழுக்காடு வேளாண்மை மழையை நம்பியே உள்ளது. அதே சமயம் நாம் உண்ணும் உணவில் 70 விழுக்காட்டிற்கு மேல் மானாவாரி நிலங்களில் இருந்து வருபவையாகவே உள்ளன. 89 விழுக்காடு சிறுதானியங்கள், 88 விழுக்காடு பருப்பு வகைகள் 69 விழுக்காடு எண்ணெய் வித்துகள் ஏன் நாம் இப்போது பேசும் மரபின நெல்லில் 40 விழுக்காடு நெல்லும் மானாவாரி நிலங்களில் இருந்துதான் கிடைக்கின்றன.

நமது ஆடைகளுக்கான பருத்தியில் 73 விழுக்காடு மானாவாரிப் பருத்தியே. அதுமட்டுமல்ல நமது கால்நடை வளர்ப்பிற்கு மிகவும் அடியாதாரமாக இருப்பவை மானாவாரிப் பகுதிகளே. பகுதி நேர மேய்ச்சல் மட்டுமல்லாது, கால்நடைகளுக்கான தீவனங்களை வழங்குபவையும் மானாவாரி நிலங்களே. ஏறத்தாழ 64 விழுக்காடு மாடுகளுக்கான தீவனமும், 78 விழுக்காடு செம்மறி, வெள்ளாடுகளுக்கான தீவனமும் மானாவாரி நிலங்களில் இருந்தே கிடைக்கின்றன.

உலகிலேயே அதிக அளவு மானாவாரி வேளாண்மையில் ஈடுபடும் நாடுகளில் முதன்மையானது இந்தியா. அது மட்டுமல்ல உலகிலேயே அதிக அளவு மக்கள் மானாவாரி வேளாண்மையை நம்பி இருப்பதும் இந்தியாவில்தான். ஆனால் நமது நாட்டின் வேளாண்மைக் கொள்கைகளும் திட்டங்களும் பெரிதும் பாசன நிலங்களை முன்னிறுத்தியே உருவாக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக இரண்டு கூறுகளை எடுத்துக் கொள்ளலாம், கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான ரசாயன உரங்களுக்கான மானியம் ரூ.1,42,633 கோடி என்ற அளவில் கொடுக்கப்படுள்ளது. அதே சமயம் ஒருங்கிணைந்த நீர்ப்பிடிப்பு மேலாண்மைக்கு வெறும் ரூ.14387 கோடி மட்டுமே கடந்த 2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரண்டு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல பாசனப்பகுதிகளில் விளையும் பொருள்களுக்கு குறிப்பாக நெல்லுக்கும் கோதுமைக்கும் கொடுக்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான ஒதுக்கீடு மிக அதிகமாகவும் மானாவாரியில் விளையும் பொருள்களுக்கான ஒதுக்கீடு குறைவாகவும் இருப்பதைக் காண முடியும். எடுத்துக்காட்டாக கடந்த 2003-04 முதல் 2012-13 வரையிலான பத்தாண்டுகளில் நெல்லையும் கோதுமையையும் வாங்குவதற்கு ஒதுக்கிய தொகை 5,40,000 கோடி ரூபாய்கள் அதே சமயம் அதே காலகட்டத்தில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள் ஆகிய அனைத்திற்கும் ஒதுக்கிய தொகை வெறும் ரூ.3,200 கோடி மட்டுமே.

இப்படியான ஓரவஞ்சனையான போக்கு மானாவாரி வேளாண்மையின் மீது காட்டப்படுவதை நாம் கவனிக்க முடியும். வங்கிகள் மானாவாரி உழவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அவர்களை ஒரு பொருட்டாகவே எடுப்பதும் இல்லை.

வங்கிகளில் பார்வை ஒருபுறம் இருக்க, மரபின விதைகளை பெரும்பாலும் நமது உழவர்களே பரிமாறிக் கொள்கிறார்கள். இவர்கள் விற்கமுடியாது. விதைச் சட்டம் அதைத் தடை செய்கிறது. பரிமாற்றம் மட்டுமே செய்ய முடியும். அரசாங்க அமைப்புகள், குறிப்பாக வேளாண்மைத்துறை வழியாக இந்த விதைகள் உரிய நேரத்தில், உரிய அளவில் உழவர்களிடம் கொண்டு சேர்க்கப்படுவதில்லை.

அதற்கான தனி அமைப்பும் இல்லை. தனியார் விதை நிறுவனங்கள் இன்னும் இந்தத் துறையில் நுழையவில்லை. அவர்கள் இந்த விதைகளை விற்கத் தொடங்கவில்லை. ஏனெனில் அதில் அதிக லாபம் இல்லை. ஆகவே விதைகள் விருப்பப்படும் உழவர்களுக்கு கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தேவை.

அடுத்ததாக ஆராய்ச்சி நிறுவனங்களைப் பொருத்தளவில் அவர்கள் மரபின நெல்லை ஒரு பொருட்டாகவே எடுப்பதில்லை. பூங்கார் என்ற நெல்லின் முளை ஊன்மம் (Germplasm) அவர்களிடம் இருந்தாலும் அவற்றை அவர்கள் பெருக்கிக் கொடுப்பதில்லை. அவ்வாறு கொடுத்தாலும் அவற்றை உரிய பெயரைச் சுட்டி அழைப்பதில்லை. எண்களின் பெயர்களைக் கொடுக்கின்றனர்.

அனைத்தையும் ‘எண்களாக’ ஆக்கும் குறியாளர்களாக ஆராய்சி மைய வல்லுநர்கள் மாறிவிடுகிறார்கள். இதனால் என்ன பெயரில் எந்த நெல் இருந்தது என்று நமக்குத் தெரியாது. பெயர் மாற்றம் செய்யும் வேலையை அந்தக் கால சமஸ்கிருதவாணர்கள்போல செய்து விடுகிறார்கள். பெருவுடையாரை பிரகதீஸ்வரர் என்றும், எனவே இவர்கள் கையில் விதையைப் பெருக்கும் பணியைக் கொடுத்தால் நமது பெயரையும் மாற்றிவிடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.

முருகன், சுப்ரமணியனாகவும் பெருவுடையார் பிரகதீஸ்வரராகவும், சொக்கி மீனாட்சியாகவும், வாடாமலர் மங்கை, அசோககுசுமாம்பாள் என்று பெயர் மாறியதுபோல நமது ஆத்தூர் கிச்சிலி திடீர்மாற்ற ஆய்விற்கு உட்பட்ட பின்னர் கோனாமணி என்று பெயர் பெறுகிறது. ஐ.ஆர் 8 முதல் கோ.42 வரை எண்களாக மாறிவிடுகின்றன. இப்படியாக நமது மரபுப் பெயர்கள் மாற்றப்பட்டு விடுகின்றன. அவை அதன் மூல வடிவத்தில் உழவர்களுக்குக் கிடைப்பதில்லை.

மரபு நெல்லினங்களைப் பாதுகாப்பதில் அரசின் பங்கு மிக முக்கியமானது. பகுதிக்கேற்ற வகைகளாகவே நெல்லின் சிறப்பு காணப்படுகிறது. குறிப்பாக களர்ப்பாளை என்பது திருவண்ணாமலைக்குரியது, அரிக்கிராவி என்பது நெல்லை மாவட்டத்திற்குரியது. இப்படியாக வட்டாரம் சார்ந்த தன்மைதான் அவற்றின் சிறப்பு. ஆனால் இன்றைய உலகமயம், இயற்கை வேளாண்மையாக்கம், சந்தையாக்கம் ஆகியவற்றால் இந்த வட்டாரத்தன்மை மாறி வருகிறது. தொண்டை மண்டலத்தின் சிறப்பான சீரகச் சம்பா தமிழகத்தின் பல இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு பயிராகிறது.

இதனால் அதன் வட்டாரத் தன்மை மாறுகிறது. எடுத்துக்காட்டாக நெல்லைக்காரர்கள் ‘ஏலே எங்கலே இருக்க?’ என்று அழைப்பார்கள், சென்னைக்காரர்கள் ‘என்னாபா எங்க கீற?’ என்று அழைப்பார்கள். இரண்டும் இரண்டு வட்டாரங்களை வெளிப்படுத்தும். அதேபோலதான் மரபுப் பயிர்களும் அந்தத்த திணைக்கு உரியவை. குறிஞ்சித் திணையில் உள்ளது, நெய்தல் திணைக்குப் பொருந்தாது. எனவே வட்டாரவாரியாக நெல்லினங்களைப் பாதுகாப்பதற்கு ஆராய்ச்சி நிலையங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி, அவற்றுடன் உழவர்களை இணைத்து உயிர்ப்புடன் நெல்லினங்களைப் பேணி வரவேண்டும்.

அரசு, வட்டார அளவில் விளையும் நெல்லை முடிந்தவரை அரிசியாக்கி அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் முறையான விலையுடன் கொடுக்க வேண்டும். ஒன்றிய அரசு வலியூட்டப்பட்ட அரிசி (fortified rice) என்ற பெயரில் நுண்ணூட்டச் சத்துக்களை ரசாயனங்கள் மூலம் சேர்த்த செயற்கை அரிசிக்கு ரூ.3000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நியாய விலைக் கடைகள் மூலம் அவை இந்தியாவெங்கும் பரவ உள்ளன. தமிழ்நாட்டிலும் அந்தத் திட்டம் நியாயவிலைக் கடைகள் மூலம் செயலாக்கம் பெறுகின்றன. இந்த வண்ண அரிசிக்கு ஒதுக்கும் தொகையை மரபரிசிகளுக்கு ஒதுக்கினால் பல நூறு உழவர்களுக்கும் பயன்கிட்டும், மரபு நெல்லினங்களும் பாதுகாக்கப்படும், மக்களுக்கும் சத்தான அரிசி உள்ளூரிலேயே கிடைக்கும்.

ஆனால் ஒன்றிய அரசு 5 பெரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரூ.3000 கோடி அள்ளி வழங்குகிறது (பார்க்க. டவுன் டு எர்த், செப்.2019).

இப்படியாக அள்ளித் தந்து எந்தச் சத்தை வாங்கப் போகிறார்கள் என்று பார்த்தால் வைட்டமின் பி-12 என்று கூறுகிறார்கள். அரிசியை பழைய சோறாக்கிச் சாப்பிட்டால், அல்லது நீராகாரம் குடித்தால், ஏன் கேப்பைக் கூழ், கம்பங்கூழ் குடித்தால் வைட்டமின் பி-12 சாதாரணமாகக் கிடைக்கும் இதை நாம் சொல்லவில்லை. அரசு உணவு ஆராய்ச்சி நிறுவனங்கள் கூறுகின்றன.

பழைய சோறு சாப்பிடும் பழக்கத்தையும் கூழ் குடிக்கும் பழக்கத்தையும் நம்மிடம் இருந்து இழிவுபடுத்தி விரட்டியது யார்? அதற்கு எதற்கு ரூ.3000 கோடி? அந்தப் பழக்கத்தை மீட்டுவிட்டாலே போதுமல்லவா?

அடுத்தாக இரும்புச் சத்தை செயற்கை அரிசி மூலம் தரப்போகிறோம் என்கிறார்கள். பொதுவாக தீட்டாத அரிசியில் இரும்புச் சத்து உண்டு, அதிலும் செந்நெல் யாவற்றிலும் இரும்புச் சத்து இன்னும் கூடுதல் உண்டு, கருப்பு நெல்லிலும் உண்டு. கருங்குறுவை என்ற அரிசியில் மற்ற அரிசியைவிட ஆறு மடங்கு இரும்பச் சத்து கூடுதலாக உள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன.

குறிப்பாக காடியாக (நொதிக்க வைத்து) மாற்றும்போது கருப்பு அரிசிகளில் மிகச் சிறப்பாக இரும்புச் சத்து கிடைக்கிறது. அதனால்தான் சித்த மருத்தவர்கள் கருங்குறுவைக் காடியை ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். ஆக, பழைய சோற்றுக்கு மாறினால் ரூ.3000 கோடி மிச்சம். இந்தச் தொகையை மரபு நெல்லினங்களைப் பாதுகாக்கப் பயன்படுத்தலாம்.

‘ஒரேமயத்தின்’ கூறான ஒரே ரேசன் கார்டு மூலம் சில பன்னாட்டு நிறுவனங்கள் பயன்பெறப் போகின்றன. ஆனால் அல்லும் பகலும் உழைத்து சத்தான மரபின நெல்லை உருவாக்கும் பரந்துபட்ட மக்களுக்கான எந்தத் திட்டமும் இல்லை.

நாம் தீர்வுகளை நம்மிடமிருந்து தேடுவதைவிட்டுவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து தேடுகின்றோம். இது தற்சார்பிற்கு வழி வகுக்காது. ஆக வழக்கமான உழவர்களிடம் தரைமட்ட விலைக்கு நெல்லை வாங்குவதுபோல வாங்காமல் உரிய விலை கொடுத்தால்தான் இது பரவலாகும்.

உழவர் சந்தை என்ற திட்டம் நுகர்வோர்களுக்கும் காய்கறி உழவர்களும் பயன் தந்துள்ளதைப்போல உள்ளூர் சந்தைகளை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலம் இந்த அரிசிகளை பரவலாக்கலாம்.

மரபின நெல்லை உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு நேரடியாக உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். பொருளாகக் கொடுக்காமல் நேரடியாக பணம் உழவர்களின் கணக்குக்கு வர வேண்டும். இயற்கை வேளாண்மைக்கான சான்றிதழ் கொடுப்பதுபோல ஒரு அரசின் அமைப்பு இதை முறைப்படுத்த வேண்டும்.

மரபின அரிசிகளை அதிலும் தீட்டாத அரிசியாக வாங்கி சுவையான உணவாகத் தயாரித்து சத்துணவு மையங்கள் மூலம் தமிழ்நாடு அரசு வழங்கினால் அந்த நல்ல விலை மரபின நெல்லை விளைவிக்கும் உழவர்களுக்குச் சென்று சேரும்.

தமிழ்நாட்டில் மோசமான சத்துக்குறைவான குழந்தைகள் 8 விழுக்காடும், பெண்களிடம் பொதுவான சத்துக்குறைபாடு 54 விழுக்காடும் உள்ளதாக தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-2017 குறிப்பிடுகிறது. ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுத் திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.3788 கோடி வரை ஒதுக்கப்படுகிறது.

அதில் இணை உணவிற்கு என்றும் செலவு செய்யப்படுகிறது. பள்ளிகளில் நண்பகலுணவிற்காக ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.1860 கோடி வரை ஒதுக்கப்படுகிறது.

ஆக இந்த உணவுத் திட்டத்தில் உள்ள தொகையை இணைத்து ஒருங்கிணைந்த ஊட்ட வேளாண்/உணவுத் திட்டத்தின் மூலம் ‘அடிசில் அக்கறை’ (food concern) என்று இணைத்துவிட்டால் பெண்கள், குழந்தைகள், உழவர்கள் யாவரும் பயன்பெறுவர். சத்துக்குறைபாடு என்பது மக்களிடம் இருந்து நீக்கப்படும்.

குறிப்பிட்ட அளவு நெல்லை அல்லது அரிசியை உறுதியான விலையில் அரசு கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டால் (அதாவது சத்துணவுக்கு என்று) மரபு நெல் உற்பத்தி செய்யும் உழவர்கள் பயன்பெறுவர். இதற்கென்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை.

அரசும் பிற அக்கறையுள்ள சமூக இயக்கங்களும் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை முடுக்கிவிட வேண்டும். ஆங்காங்கே உணவுத் திருவிழாக்கள், ‘அடிசில் அரங்குகள்’ ஒழுங்கு செய்யப்பட வேண்டும்.

ஆராய்ச்சி நிறுவனங்கள் உழவர்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த ஆராய்ச்சிப் பணிகளைத் தொடங்க வேண்டும்.

முதலில் உழவர்களின் அறிவை மதிக்கப் பழக வேண்டும். அதிலும் வேளாண் ஆராய்ச்சியார்கள் தமிழில் பேச வேண்டும். பல ஆய்வுக் கூட்டங்களில் உழவர்களை வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசும் ‘ஆய்வாளர்களை’ என்னவென்பது? இந்த ஆணவப் போக்கு மாற வேண்டும். அரசுக் கூட்டங்களில் பதாகைகள் தமிழில் கட்டாயம் இருக்க வேண்டும்.

தேவையெனில் பிற மொழிகளை அடியில் எழுதிக் கொள்ளலாம். ஆங்கிலம் தெரிந்த ஒரு வெளி விருந்தாளிக்காக நூற்றுக்கணக்கான தமிழ் மட்டும் தெரிந்த உழவர்கள் விழி பிதுங்க வேண்டியுள்ளது. இந்த மனமாற்றம் அவசியம்.
மிக அருமையான மரபின நெல்லினங்களை நமது உழவர்கள் தேடிப் பிடித்து வைத்துள்ளனர்.

அவர்களை முறையாக அங்கீகாரம் செய்து அந்த நெல்விதைகளைப் பாதுக்காக்க ஆராயச்சியாளர்கள் உதவ வேண்டும். எப்படி விதையைத் தேர்வு செய்வது, எப்படி வரிசையாக நடுவது, கலப்பில்லாமல் எப்படிப் பிரிப்பது என்ற நுட்பங்களைச் சொல்லித்தர வேண்டும். அப்படிச் செய்தால் நிறைய இளைஞர்கள் முன்வருவார்கள். விதை என்பது நல்ல வருமானம் தரும் தொழில்முனைவாகவும் அவர்களுக்கு இருக்கும்.

எனக்குத் தெரிந்து மிக அருமையான மக்களை நேசிக்கும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இன்னும் ஆராய்ச்சி நிலையங்களில் உள்ளனர். அவர்கள் முறையாக அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு பொறுப்புக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்களது அர்ப்பணிப்பு போற்றப்பட வேண்டும். இதை மரபு அரிசிகளுக்கு மட்டுமல்லாது அனைத்து உணவுப் பயிர்களுக்கும் விரிவாக்கம் செய்ய இயலும். அதன் மூலம் நல்லதொரு உணவுப் பரிமாற்றம் நடைபெறும்.

எனவே துண்டுதுண்டான உற்பத்தி முறைகள், நுகர்வின் தொலைவு, அரசின் கொள்கை/திட்டங்களின் ஆதரவின்மை, ஆராய்ச்சியாளர்களின் புரிதல் இன்மை என்று பன்முனைக் காரணிகளால் மரபின நெல்லினங்கள் மக்கள்மயப்படவில்லை. இந்தக் குறைகள் களையப்படும்போது, ஊட்டமிக்க, மருத்துவச் சிறப்பு மிக்க, மண்ணுக்கேற்ற, பரவல்மயப்படுத்தப்பட்ட அரிசிச்சோறு அனைவருக்கும் கிடைக்கும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival