Read in : English
மாதவிடாய் காலத்தின்போது சானிட்டரி நாப்கின்களுக்கு பதிலாக மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துவது குறித்து கேரளா மாநில அரசும் பல்வேறு அமைப்புகளும் மக்கள் பிரதிநிதிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்; ‘நாப்கின் வேண்டாம், எம்-கப்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்ற பிரச்சாரத்தால் கேரளா பரபரப்பாக உள்ளது. சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கோப்பை, மறுபயன்பாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாகும். ஒரு மாதவிடாய் கோப்பையைச் சுத்தம் செய்து சுமார் 5-10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்.
பயனர்களின் கூற்றுப்படி, எம்-கப்புகள் (மாதவிடாய்க் கோப்பைகள்) எரிச்சல் மற்றும் யோனி வறட்சியைக் குறைக்கின்றன, குறைவான கசிவுகளைக் கொண்டுள்ளன. சானிட்டரி நாப்கின்களை விட நீண்ட நேரம் அணியக் கூடியவை. மாதவிடாய் திரவத்தைச் சேகரிக்க உதவும் இந்த மறுபயன்பாட்டு கொள்கலன்கள் படிப்படியாக கேரளா பெண்களிடையே பிரபலமடைந்து வருகின்றன.
மற்ற தென்னிந்திய மாநிலங்களும் எம்-கப்புகளை ஊக்குவிப்பதில் அதிகக் கவனம் செலுத்தி வரும் நிலையில், தமிழக அரசு அவற்றை ஊக்குவிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. சுகாதாரமான மாதவிடாய் தயாரிப்புகள் பெண்களுக்குக் கிடைக்காமல் செய்தன கொரோனா காலத்து ஊரடங்குகள். அப்போது மாற்று மற்றும் மறுபயன்பாட்டுத் தயாரிப்புகள் மீது பெண்கள் மத்தியில் ஆர்வம் உண்டானது.
பெண்களிடையே மாதவிடாய் கோப்பைகளைப் பிரபலப்படுத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ .10 கோடியை ஒதுக்கியிருக்கிறது கேரளா அரசு. அதனால் சானிட்டரி நாப்கின்களுக்குப் பதிலாக மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது அதிகமான பெண்கள் அறிந்துள்ளனர்.
ஒரு மாதவிடாய் கோப்பையைச் அடிக்கடிச் சுத்தம் செய்து சுமார் 5-10 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம்
சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடு, தரம் குறைந்த நாப்கின்களால் பெண்கள் எதிர்கொள்ளும் உடல்நலக் கேடுகள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்படும் நிதிச் சுமை ஆகியவற்றை மாதவிடாய் கோப்பைகள் நீக்குகின்றன; பெண்கள் எதிர்கொள்ளும் மாதவிடாய் காலத்து மந்த உணர்வுகளையும் குறைத்துள்ளன. எம்-கப்பின் இந்த நன்மைகளைப் பிரச்சாரம் எடுத்துரைக்கிறது.
2019ஆம் ஆண்டில் ஆலப்புழா நகராட்சியால் ‘திங்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டபோது இந்த கருத்தை பரிசோதிக்கத் தொடங்கியது கேரளா. தமிழைப் போலவே மலையாளத்திலும் ‘திங்கள்’ என்றால் சந்திரன் என்று பொருள். பழங்காலத்தில் பெண்கள் தங்கள் மாதவிடாய்ச் சுழற்சியை சந்திரனின் இயக்கத்தை வைத்துக் கணக்கிட்டார்கள்.
மேலும் படிக்க: முடி உதிர்தல் பற்றி கவலையா?
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக பெண்களுக்கு 5,000 கோப்பைகள் வழங்கப்பட்டன. பின்னர் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கும்பலாங்கி என்ற கிராமமும், ஆலப்புழா மாவட்டத்தில் முஹம்மா கிராமமும் மாநிலத்தில் ’சானிட்டரி பேட்’ இல்லாத முதல் கிராமங்களாக மாறின.
மத்திய பொதுத்துறை நிறுவனமான எச்எல்எல் லைஃப்கேர் லிமிடெட் உதவியுடன் செயல்படுத்தப்பட்ட ‘திங்கள்’ திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஏனெனில் அதன் ஏற்பு விகிதம் 91.5 சதவீதமாக இருந்தது, திருவனந்தபுரம் மாநகராட்சியின் நான்கு வார்டுகளைச் சேர்ந்த 10,000 பெண்கள் எம்-கப்புகளைப் பெற்றனர்.
எர்ணாகுளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிபி ஈடன் கடந்த ஆண்டு தொடங்கிய எம்-கப்பு பிரச்சாரத்தால், மாநில அரசு எம்-கப்புகளின் வினியோகத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று தொடங்கிய இந்த பிரச்சாரம் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. 24 மணி நேரத்தில் 1,00,001 கோப்பைகளை வெற்றிகரமாக விநியோகித்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் இடம்பிடித்திருக்கிறது.
இந்திய மருத்துவ சங்கத்துடன் (ஐஎம்ஏ) இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர். எர்ணாகுளம் தொகுதி முழுவதும் மால்கள், மெட்ரோ ரயில்கள் மற்றும் பிற பொது இடங்கள் உட்பட 126 இடங்களில் எம்-கப்புகள் விநியோகிக்கப்பட்டன.
கவர்ச்சிகரமான தலைப்புகளுடன் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரம் எண்ணற்ற பெண்கள் மாதவிடாய் கோப்பைகளுக்கு மாறுவதற்கான உந்துதலைத் தந்தது. இந்த பிரச்சாரத்தின் வெற்றியும், மாநில அரசிடமிருந்து அது பெற்ற அங்கீகாரமும் பல மூன்றடுக்கு பஞ்சாயத்துகளை இந்தத் திட்டத்திற்கு ஈர்த்தன. எர்ணாகுளத்தில் உள்ள பலக்குழா பஞ்சாயத்து இந்த திட்டத்திற்காக ரூ.26,000 ஒதுக்கியுள்ளது; வயநாடு மாவட்டத்தில் நென்மேனி மற்றும் மீனங்காடி கிராம பஞ்சாயத்துகளும் ‘எம்-கப்’ பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
எர்ணாகுளத்தில் நடந்த பிரச்சாரத்திற்கு ‘நம்பிக்கை கோப்பை’ என்றும், வயநாட்டில் நடந்த பிரச்சாரத்திற்கு ’உயிர்க் கோப்பை’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
பெண்களிடையே மாதவிடாய் கோப்பைகளை பிரபலப்படுத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் 10 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது கேரளா அரசு
நென்மேனி ஊராட்சியில், 3,000 மாதவிடாய் கோப்பைகள் பெறத் தகுதியான பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. எம்-கப்புகளை எவ்வாறு பொருத்துவது, அகற்றுவது என்பது குறித்து பெண்களுக்குப் பயிற்சியும் உதவியும் அளிக்க குடும்பஸ்ரீ, சுகாதாரத் துறை மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகிய அமைப்புகள் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன
கர்நாடக மாநில அரசு சமீபத்தில் மைத்ரி மாதவிடாய் கோப்பை விநியோகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது; இதன் கீழ் 16-18 வயதுக்குட்பட்ட 10,000 வளரிளம் பெண்களுக்கு இலவச மாதவிடாய் கோப்பைகள் கிடைக்கும். தட்சிண கன்னடா மற்றும் சாமராஜ் நகர் மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி பெற்றால், வரும் ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள 2.23 கோடி பெண்களுக்கு எம்-கப்புகளை விநியோகிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்தியாவில் 0.3 சதவீத பெண்கள் மட்டுமே மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று தரவுகள் சொல்கின்றன. ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் மாதவிடாய் கோப்பைகளின் சந்தை பங்கு சுமார் 6 சதவீதமாக உள்ளது.
மேலும் படிக்க: அலோபதியில் மாற்று மருத்துவம்: சரியா?
மலிவான விலை
ரூ.200 முதல் ரூ.2,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்ட சுமார் 200 பிராண்டு மாதவிடாய் கோப்பைகள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. மாதவிடாய் கோப்பைகளை 5-10 ஆண்டுகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதால் சானிட்டரி நாப்கின்களுடன் ஒப்பிடும்போது மிகவும் செலவு குறைந்தவை; சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி வாங்குவது போல எம்-கப்புகளை வாங்கத் தேவையில்லை.
எச்எல்எல் லைஃப் கேர் லிமிடெட் கார்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) பிராண்ட் ‘திங்கள்’, உள்நாட்டு பிராண்டான ‘வெல்வெட்’ மற்றும் சர்வதேச பிராண்டான ‘கூல் கப்’ ஆகிய மூன்று பிராண்டுகளை வெளியிடுகிறது.
இயற்கைக்கு ஒரு வரப்பிரசாதம்
சானிட்டரி நாப்கின்களின் மாதவிடாய் கழிவுகளிலிருந்து இயற்கையைக் காப்பாற்ற உதவும் எம்-கப்புகளைப் பயன்படுத்துவதை உள்ளாட்சி உள்ளூர் நிர்வாக அமைப்புகள் பிரபலமாகுவதற்குக் காரணம் எம்-கப்புகளின் ஆயுட்காலம் ஆகும். பெரும்பாலான நாப்கின்களில் சூப்பர் உறிஞ்சும் பாலிமர்கள் (எஸ்ஏபி) உள்ளன, அவை சிதைவடையாது. எஸ்ஏபி மைக்ரோ பிளாஸ்டிக்குகளாக உடைவதும் இயற்கையை மாசுபடுத்துகிறது.
5 ஆண்டுகளில் 5,000 பெண்களால் 100 டன் மக்காத மாதவிடாய் கழிவுகள் உருவாகும் என்று கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார். 13 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்களிடையே அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வில், 80 லட்சம் பெண்கள் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. நவீன சானிட்டரி நாப்கின்கள் சிதைவடைய சுமார் 500 முதல் 700 ஆண்டுகள் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 12.3 பில்லியன் சானிட்டரி நாப்கின்கள் குப்பையில் விழுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (என்எஃப்எச்எஸ்-5) தரவுகளின்படி, மாதவிடாய் பாதுகாப்புக்கான சுகாதாரமான முறைகளைப் பயன்படுத்தும் 77.6 சதவீத இந்தியப் பெண்களில், 15-24 வயதுக்குட்பட்டவர்களில் 64.4 சதவீதம் பேர் சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகின்றனர், அதே நேரத்தில் 49.6 சதவீதம் பேர் துணியை, 15 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாப்கின்களை மற்றும் 1.7 சதவீதம் பருத்தித் து்ணிகளைப் பயன்படுத்துகின்றனர். 0.3 சதவீதம் பேர் மட்டுமே மாதவிடாய் கோப்பைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
தமிழகத்தில் முருகானந்தம் அருணாசலம் மறுபயன்பாட்டு மற்றும் மக்கும் தன்மை கொண்ட சானிட்டரி நாப்கின்களை தலா ரூ.3க்கு கிடைக்கும் விலையில் தயாரிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்தார். கடந்த 15 ஆண்டுகளில் 5,000 பேடு தயாரிக்கும் இயந்திரங்களை விற்பனை செய்ததுடன், பெண்களுக்கு பேடு தயாரிக்கும் பயிற்சியும் அளித்தார் முருகானந்தம். 2014ஆம் ஆண்டில், டைம் இதழ் அவரை உலகின் ‘100 மிகவும் செல்வாக்குமிக்க நபர்களில்’ ஒருவராகப் பட்டியலிட்டது. 2016ல் அவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது இந்தியா. இப்போது இவரது தொழில்நுட்பம் உலகின் 27க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பெண்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மக்கும் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்க உதவுகிறது.
வாழை நார் போன்ற இயற்கைப் பொருட்களிலிருந்து குறைந்த விலையில் மறுபயன்பாட்டு நாப்கின்களை உருவாக்கினார் இந்தியாவின் ’பேடு வுமன்’ (pad woman) என்று அழைக்கப்படும் அஞ்சு பிஸ்ட். கடந்த சில ஆண்டுகளில் இந்திய மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான நாப்கின்களை விற்பனை செய்த ‘சௌக்யம் நாப்கின்கள் இந்தியா’ என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார் பிஸ்ட்; இவர் தயாரித்த நாப்கின்களால் 43,750 டன் பிளாஸ்டிக் சானிட்டரி கழிவுகள் குப்பையில் கொட்டாமல் தவிர்க்கப்பட்டது.
ஆரோக்கியத்திற்கு நல்லது!
பிரபல சர்வதேச மருத்துவ இதழான தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு எம்-கப்களைப் பயன்படுத்துவதன் நன்மைகளை எடுத்துரைக்கிறது. மாதவிடாய் கோப்பைகள் சானிட்டரி நாப்கின்களுக்கு சரியான மாற்று என்றும், பாதுகாப்பானவை என்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் அந்த ஆய்வு சொல்கிறது.
பல்வேறு சுகாதாரக் கணக்கெடுப்புகளின்படி, இந்தியாவில் 23% பெண்கள் முதல் மாதவிடாய் காலத்தில் பள்ளிப்படிப்பை நிறுத்துகிறார்கள்; ஒவ்வொரு ஆண்டும் சுமார் 75,000 பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறக்கின்றனர். மரணம், பெண்களின் நோய்ச் சுமை, உற்பத்தித்திறன் இழப்பு – இவை அனைத்திற்கும் நிதிப் பிரச்சினைகள் மற்றும் சமூகத் தடைகள் காரணம் எனில் தரமான சானிட்டரி நாப்கின்கள் கிடைக்காததே அவை ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம்.
கர்நாடக மாநில அரசு சமீபத்தில் மைத்ரி மாதவிடாய் கோப்பை விநியோகத் திட்டத்தைத் தொடங்கியது; இதன் கீழ் 16-18 வயதுக்குட்பட்ட 10,000 வளரிளம் பெண்களுக்கு இலவச மாதவிடாய் கோப்பைகள் கிடைக்கும்
70 சதவீத பெண்களுக்கு, மாதவிடாய்க்கு முன்பான நோய்க்குறி (பி.எம்.எஸ்) மாதவிடாய் தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்குகிறது, மற்றவர்களுக்கு இது பல நாட்களுக்கு முன்பே தொடங்குகிறது. தாங்க முடியாத முதுகு வலி, குமட்டல், அதிக இரத்தப் போக்கு, மனநிலை மாற்றங்கள், வயிற்று வலி மற்றும் காலில் பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளுடன் வரும் மாதவிடாய்க் காலத்து வேதனை பெரும்பாலான பெண்களுக்கு, குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஒரு துர்க்கனவாகவே உள்ளது.
சானிட்டரி நாப்கின்களை விட்டுவிட்டு மாதவிடாய் கோப்பைக்கு மாறுவதால் பெண்களுக்குத் தரமற்ற நாப்கின்களால் உருவாகும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளில் இருந்தும், தோல் அரிப்புகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். மேலும் மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை அணிவதால் ஏற்படும் சங்கடமும் தீர்ந்துவிடும்.
சானிட்டரி நாப்கின்கள் பிரபலமடைவதற்கு முன்பு, மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு துணித் துண்டுகள், மாட்டு சாணம் மற்றும் மண் போன்ற சுகாதாரமற்ற பொருட்களைப் பயன்படுத்தினர் பெண்கள்.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய மாதவிடாய் கோப்பைகளின் வரலாறு 1930களில் இருந்து தொடங்குகிறது என்பது பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத விஷயம். அவற்றின் ஆரம்பகால வடிவங்கள் நவீன வடிவங்களைப் போல வசதியாக இல்லை. அவை பெல்ட்டாக அணியப்பட்டு, இணைக்கப்பட்ட கம்பியால் கருப்பை வாய் அருகே வைக்கப்பட்டது.
முதல் புல்லட் வடிவ எம்-கப்பு 1932ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்லாசன் மற்றும் பெர்கின்ஸ் என்ற மகப்பேறு செவிலியர் குழுவால் பரிசோதனை முயற்சியாகத் தயாரிக்கப்பட்டது. பின்னர் லியோனா சால்மர்ஸ் என்ற அமெரிக்க நடிகை 1937ஆம் ஆண்டில் முதல் மறுபயன்பாட்டு வணிக கோப்பைக்குக் காப்புரிமை பெற்றார்.
இருப்பினும், ஆரம்பகால மாடல்கள் சந்தையில் வெற்றி பெறவில்லை. ‘கீப்பர்’ என்ற லேடெக்ஸ் ரப்பருடன் கூடிய முதல் எம்-கோப்பை 1987ஆம் ஆண்டில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது; வணிகரீதியாகச் சாத்தியமான முதல் எம்-கோப்பை இன்றும் கிடைக்கிறது.
‘தி மூன்’ என்று பெயரிடப்பட்ட முதல் சிலிகான் எம்-கப் 2001ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டது. பெரும்பாலான எம்-கப்புகள் இப்போது மருத்துவத் தர சிலிகானிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, ஏனெனில் அந்த சிலிகான் நீண்டநாள் உழைக்கக் கூடியது; அதில் அலர்ஜி தரும் அம்சங்கள் இல்லை.
Read in : English