Read in : English
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகப் பரிசு பொருட்கள் கொடுப்பதிலும், பணப்பட்டுவாடா செய்வதிலும் திருமங்கலம் பார்முலாவையே மிஞ்சிவிடும் அளவுக்குச் செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. வெளிப்படையாக அரங்கேறும் தேர்தல் மோசடிகளைச் சுட்டிக்காட்டி இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு அறப்போர் இயக்கம் கடிதம் எழுதி இருந்தது.
இடைத்தேர்தல் நடைபெறும்போதெல்லாம் பணப்பட்டுவாடா செய்வதென்பது புதுப்புது வரலாறைப் படைத்து வருகிறது. அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் இந்த ஜனநாயக மீறலுக்குத் தீர்வு என்ன என்பதை பகிர்ந்து கொண்டார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்.
கேள்வி: தேர்தலில் பரிசு கொடுக்கும் கலாச்சாரத்தைப் பிரதானக் கட்சிகளே பகிரங்கமாக ஊக்குவிக்கின்றனவே?
பதில் : தேர்தல் நேரத்தில் பரிசுகளோ, பணமோ கொடுப்பதை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றன. அந்த கட்சி கொடுக்கிறது, நாங்கள் கொடுத்தால் என்ன என்று தங்கள் தவறை நியாயப்படுத்தும் கட்சிகளாக தான் அரசியல் கட்சிகள் உள்ளன. ஒரு தவறைச் சமூகத்தில் நடைமுறைப்படுத்தினால் அதைத் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன.
தேர்தலில் 85% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறும் ஆளும் கட்சியும், ஈரோடு கிழக்கு தொகுதிக்குப் பல நலத்திட்டங்களை அமல்படுத்தி உள்ளதாகக் கூறும் இதற்கு முன்னதாக ஆட்சி செய்த கட்சியும் எதற்காக வாக்காளர்களுக்குப் பணமோ அல்லது பரிசுகளோ வழங்க வேண்டும். தொகுதி மக்களுக்கு நன்மை செய்து இருந்தால் அதன் மூலமே மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கலாமே.
ஒரு கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருந்தால் அவர்கள் ஏன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்
ஒரு கட்சிக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருந்தால் அவர்கள் ஏன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். பிரதான கட்சிகள் பணப்பட்டுவாடா செய்வதை நிறுத்தினால் ஒரு சமுதாயத்தையே சரியான பாதையில் கொண்டு செல்லலாம். ஆனால் ஆளும் பொறுப்பில் இருக்கும் கட்சித் தலைவர்கள், தங்களின் கடமையை மறந்து லஞ்சம் கொடுப்பது, பிரச்சாரத்திற்குப் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வருவது, டிரெண்டுக்கு ஏற்றார்போல் பரிசுப் பொருட்களை கொடுப்பது என்றிருப்பது நாளுக்கு நாள் ஊழலை வளர்க்கின்றன.
கேள்வி: ஓட்டுக்கு லஞ்சம் கொடுப்பதை எந்த வகையில் தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியும்?
பதில்: ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்தால் குறிப்பிட்ட வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்குப் பலம் இல்லை. தேர்தல் விதிமுறையை மீறும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்யலாம். அப்படி வழக்குப் பதிவு செய்தாலும் வேட்பாளர் மீது சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
தேர்தல் முடிந்ததும் தேர்தல் ஆணையத்தின் வேலை முடிந்து விடுகிறது. அதன்பின்னர், வேட்பாளர் மீது போடப்பட்ட வழக்கைக் கையாளும் மாநில அரசு நியாயமாகச் செயல்படுமா? இதைத் தடுக்க லஞ்சம் கொடுக்கும் வேட்பாளர் மீது போடப்படும் வழக்கை தொடர்ந்து தேர்தல் ஆணையமே நடத்த வேண்டும். அதற்கான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்துக்கு வழங்க வேண்டும். இந்த நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லை என்றால், அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும்.
மேலும் படிக்க: செய்திகளை இருட்டிப்பு செய்யும் தமிழ் ஊடகங்கள்: `அறப்போர் இயக்கம்’
மக்களுக்காக நடைபெறும் ஜனநாயக நாட்டில், மக்களின் நன்மைக்காக மாற்றங்களைக் கொண்டு வருவதில் தவறில்லை. தேர்தல் ஆணையத்தின் வேலை தேர்தலை மட்டும் நடத்துவது என்றில்லாமல், ஜனநாயகக் கடமையை காப்பதும் தான் என்பதைச் செயல்படுத்த வேண்டும்.
கேள்வி: லஞ்சம் வழங்கும் வேட்பாளர் அல்லது அரசியல் கட்சிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்?
பதில்: ஒரு வேட்பாளரின் பெயரில் லஞ்சம் கொடுத்தால் அவரைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். ஆனால், அதற்கான சரியான சட்டம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை. மாறாக அந்த தேர்தலையே இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்யலாம். அப்படித்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
தேர்தல் ஆணையச் சட்டத்தில் சில சீர்த்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். வேடிக்கை என்னவென்றால், ஆட்சியாளர்கள் லஞ்சத்தையே நன்கொடையாக வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். 2012ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தினால் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்றனர்.
இதனால் பிரதானக் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் மறைமுகமாக நன்கொடைகள் குவிகின்றன. கருப்புப் பணத்தை ஒழிப்பதாகக் கூறும் அரசுகள், தேர்தல் நேரத்தில் அதை நன்கொடையாகக் கொடுத்து மாற்றி விடுகின்றன. தேர்தல் ஆணையம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக கூறிவிட்டு, மறைமுகமாக நன்கொடை வழங்கலாம் எனக் கூறுவது ஜனநாயக விரோதப் போக்கு.
ஓட்டு போடும் உரிமையைக் காசுக்காக அடமானம் வைப்போர் மீது நடவடிக்கை எடுத்தால், அச்சத்தின் காரணமாகப் பலர் பணம் வாங்குவதைத் தவிர்ப்பார்கள்
கேள்வி: ஓட்டுக்காக கொடுக்கும் பணத்தை மக்களே விரும்பி வாங்கிறார்களே?
பதில்: ஓட்டுக்கு பரிசுப் பொருட்களையோ அல்லது பணத்தையோ லஞ்சமாக வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு கொள்ளையடிக்கிறார்கள்; அதில் ரூ.500 அல்லது ரூ.1000 வாங்குவதில் என்ன தவறு இருக்கிறது என்பார்கள். ஒரு தவறைக் காட்டி இன்னொரு தவறை நியாயப்படுத்தும் மனப்போக்கு தான் அதிகமாக உள்ளது. ஒரு பக்கம் கல்வி அறிவு இல்லாதவர்கள் ஓட்டுக்குப் பணம் வாங்குகின்றனர், மற்றொரு பக்கம் படித்தவர்களோ யார் ஆட்சிக்கு வந்தால் என்ன என்ற அலட்சியத்தில் வாக்களிப்பதில்லை.
இரண்டுமே நாட்டுக்கு நல்லதில்லை.
ஒருநாள் கிடைக்கும் சொற்ப தொகைக்கு ஓட்டுகளைக் கொடுத்துவிட்டால், நாமே கொள்ளையடிக்க 5 ஆண்டுகளுக்கு லைசன்ஸ் கொடுப்பதாக அர்த்தம். மக்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஓட்டுக்காகப் பணம் கொடுத்தால், அவர் எப்படிப்பட்ட வேட்பாளர் அல்லது அந்த கட்சி எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நேர்மையாக நடந்து கொள்ளும் நபர் ஏன் பணம் தர வேண்டும்?
மேலும் படிக்க: ஊழலுக்கு எதிராக திமுக அரசின் நடவடிக்கைகள்: அறப்போர் இயக்கம் என்ன சொல்கிறது?
கேள்வி: ஓட்டுக்காகப் பணம் வாங்கும் கலாச்சாரத்தை தடுக்கும் வழிமுறை என்ன?
பதில்: ஓட்டுக்காகப் பணம் கொடுப்பவர் மீது எடுக்கப்படும் சட்ட நடவடிக்கையை, பணம் வாங்குபவர் மீதும் எடுக்க வேண்டும். ஓட்டு போடும் உரிமையைக் காசுக்காக அடமானம் வைப்போர் மீது நடவடிக்கை எடுத்தால், அச்சத்தின் காரணமாகப் பலர் ஓட்டுக்காகப் பணம் வாங்குவதைத் தவிர்ப்பார்கள். பணம் கொடுப்பது எந்த வகையில் தவறோ அதேவகையில் பணம் பெறுவதும் தவறு என்பதை ஒவ்வொருவருக்கும் அழுத்தமாக அறிவுறுத்த வேண்டும்.
அது மட்டுமின்றி, தவறுகளை ஏற்றுக்கொண்டு வாழ்வதை விட அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் மக்கள் இயக்கங்களும் தன்னார்வ அமைப்புகளும் கேள்வி எழுப்பினால் ஒரு நாள் எல்லாம் மாறும்.
கேள்வி: என்ன செய்யலாம்..?
பதில்: வளமான சமுதாயத்திற்காகவும் ஜனநாயக நெறிமுறைகள் சீரழியாமல் இருக்கவும் போராட வேண்டியுள்ளது. ஒவ்வொரு நல்லதும் போராட்டங்கள் மூலமே பெறப்படுகிறது. பேனர் நடைமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதால் தமிழகத்தில் இன்று பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க முடிந்திருக்கிறது.
மக்களுக்கான நல்ல திட்டங்கள் போராட்டங்கள் மூலமாகப் பெறும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் கேள்வி கேட்டால், அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டு அதைச் செயல்படுத்தும்.
ஒவ்வொரு வாக்கும் நமது தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடியது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
அது மட்டுமில்லாமல் ஆரோக்கியமான அரசியல் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்லூரிகளில் அரசியல் குறித்த விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் அடுத்த தலைமுறைக்கு நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். இதற்கு முன்பு ஆட்சி செய்த கட்சிகளோ அல்லது ஆளும் கட்சிகளோ மக்களுக்காகச் செயல்படுகிறார்கள் என்பதை நூறு சதவீதம் கூற முடியாது.
ஆனால், தங்கள் தொகுதியில் அல்லது வார்டில் போட்டியிடும் வேட்பாளரின் பின்புலன், அவரது வாழ்க்கை முறை, கல்வி அறிவு, சொத்து விவரம், சமூக சேவை மனப்பான்மை குறித்து ஒவ்வொரு வாக்காளரும் அறிந்திருக்க வேண்டும்.
ஒவ்வொரு தேர்தலிலும் மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்திற்காக சில சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இங்கு இரண்டு கட்சிகள் மட்டுமே விளம்பரப்படுத்தப்படுவதால், நல்ல வேட்பாளர்களையும் சுயேட்சை வேட்பாளர்களையும் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.
தங்களின் தேர்வு சரியா, தவறா என்பதை மக்கள் தான் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கும் நமது தலையெழுத்தைத் தீர்மானிக்கக் கூடியது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
Read in : English