Read in : English
பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்ததும், அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நோக்கி அனைத்து அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பும். தமிழ்நாட்டில் அரசியல் நடவடிக்கைகள் மீண்டும் சூடுபிடிக்கும்.
கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதி என்பதால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது பலத்தை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இருந்தாலும், கட்சியின் சின்னமான ‘இரட்டை இலை’யின் நிலை இன்னும் தெளிவாகவில்லை. தனித்துப் போட்டியிட்டு தனது பலத்தைக் காட்ட பாஜக விரும்புகிறதா என்பதையும் பார்க்கவேண்டும்.
2021 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டதால், ஆளும் திமுக மீண்டும் காங்கிரசுக்கு தொகுதியை விட்டுத்தரும் என்று எதிர்பாக்கப்படுகிறது. வலுவான ஆளுங்கட்சி களத்தில் இல்லாதது எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், இதைப் பயன்படுத்திக்கொள்ளும் நிலையில் எதிர்க்கட்சிகள் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வின் மந்திரச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காமல் போனால் பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம்
தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க அதிக வாய்ப்புகள் இருந்தும், பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வின் மந்திரச் சின்னமான ‘இரட்டை இலை’ சின்னம் கிடைக்காமல் போனால் பெரும் பின்னடைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சென்றமுறை தமிழ் மாநில காங்கிரஸுக்கு அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதி என்பதால், மீண்டும் அதே கட்சிக்கு ஒதுக்கி, போட்டியிலிருந்து பழனிசாமியின் அதிமுக ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் தற்போது அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இல்லை. அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலத்தில் தனித்துப் போட்டியிடும் பலம் தனது கட்சிக்கு உள்ளது என்று அண்மையில் கூறியிருக்கிறார். காவி கட்சி அந்த இடத்தில் ஒரு வேட்பாளரை நிறுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க: மக்களவைத் தேர்தலில் திமுக அணியில் காங்கிரஸ்: உறுதி செய்த ராகுல் காந்தி!
பாஜக வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெற்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுடன் வலுவான பேரம் பேசமுடியும். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் ஆதரவையும் பாஜக பெறலாம், கொங்குமண்டலத்தில் செல்வாக்கு இல்லாததால் அவர் அந்த இடத்தில் வேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடாமல் இருக்கலாம். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கடந்தமுறை இந்தத் தொகுதியில் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. இந்த முறை களம் இறங்குவாரா என்பதையும் பார்க்கவேண்டும்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் தற்போதைய நிலையை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் உடைப்பதே பழனிசாமி முன்னுள்ள முக்கிய பணியாகும். விரைவில் இதைச் செய்து முடித்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வியூகம் வகுக்கவும் கட்சியை வலுப்படுத்தவும் மக்கள் ஆதரவைத் திரட்டவும் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகவும் முடியும்.
தி.மு.க., கூட்டணி உறுதியாக இருக்கும் நிலையில், தலைமைப் போட்டியை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிமுகவில் தாமதம் தொடர்ந்தால் தேர்தல் பணிகளைத்தொடங்குவதிலும் இது எதிரொலிக்கும். ஏற்கனவே, 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2022 இல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்த அதிமுக தனது வாக்குகள் சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்துகொண்டே தங்கள் சொந்தத் தொகுதிகளில் வாக்களிப்பது பற்றி இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்துக்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் இருவருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளராகவும், பழனிசாமியை இணை ஒருங்கிணைப்பாளராகவும் குறிப்பிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள அழைப்பை பழனிசாமி ஏற்க மறுத்தாலும், ஆணையம் மீண்டும் அனுப்பியதன் மூலம் தற்போதைய நிலைமையை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
சென்றமுறை தமிழ் மாநில காங்கிரஸுக்கு அ.தி.மு.க., ஒதுக்கிய தொகுதி என்பதால், மீண்டும் அதே கட்சிக்கு ஒதுக்கி, போட்டியிலிருந்து பழனிசாமியின் அதிமுக ஒதுங்கிக்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது
பழனிச்சாமி இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டிருந்தால், அது தனது போட்டியாளரை தலைவராக அங்கீகரிக்கும் நிலையை ஏற்றுக்கொண்டதாகவே அமைந்திருக்கும். ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்க எவ்வளவு கால அவகாசம் எடுக்கும் என்று தெரியவில்லை. பொதுக்குழு கூட்டத்தின் செல்லுபடியை உச்சநீதிமன்றம் உறுதி செய்தால் பன்னீர்செல்வத்தின் தலைமைக் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி பதவியேற்பார். ஆனால், இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்து, கட்சிகளை மீண்டும் சிவில் நீதிமன்றங்களுக்குச் செல்லச் சொன்னால், தலைமைப் போராட்டம் நீண்ட காலம் நீடிக்கலாம்.
பிப்ரவரியில் மூன்று வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படலாம். ஆனால் , தேர்தலுக்கு தயாராகும் காலம் குறைவாக இருப்பதால், மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தல் நடக்கும்போது இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகளே அதிகம்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுகள்: ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் திமுக!
2021ல் தமிழ் மாநில காங்கிரஸ் இத்தொகுதியில் போட்டியிட்டபோது, அதற்கு ‘இரட்டை இலை’ சின்னம் வழங்கப்பட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரை தலைமைப் பதவி முடிவாகாமல் இருந்தால் மீண்டும் அதே கட்சியை சுயேட்சை சின்னத்தில் போட்டியிடச் சொல்லலாம். அப்போது அதிமுகவின் இரு அணிகளுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இருப்பினும், பழனிச்சாமி தனது போட்டியாளரான பன்னீர்செல்வத்தின் ஆதரவை பெறக்கூடாது என்ற நிபந்தனையுடன் தமிழ் மாநிலக் காங்கிரசுக்கு ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளது. இத்தொகுதி கொங்கு மண்டலத்துக்குள் வருவதால் தமாகா பெறும் வாக்குகளை வைத்து பழனிசாமி தனது பலத்தைக் காட்டலாம்.
இடைத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள போதிலும், முக்கிய கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிட நினைத்தால், பொங்கலுக்குப் பிறகு உடனடியாக தங்கள் தேர்தல் வேலைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றன்பின் ஒன்றாக அப்போது தெளிவாகும்.
Read in : English