Read in : English

Share the Article

ராகுல் காந்தியின் நடவடிக்கைகளால் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. புத்தாண்டு பிறக்கும்போதே அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க எதிர்க்கட்சிகளின் வியூகம் பற்றியும் அதில் காங்கிரஸ் இடம்பெறுமா இல்லையா என்பதையும் விவாதம் தொடங்கிவிட்டது.

ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எந்த விவாதத்துக்கும் இடமில்லாமல் திமுக அணியில் காங்கிரஸ் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

திமுகவின் அடிப்படைக் கொள்கைகள் சிலவற்றை வெளிப்படையாகப் பாராட்டியும் ஆதரவு காட்டியும் ராகுல் காந்தி பேசியுள்ளார். அவரைப் பாராட்டியும் தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு அணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இமாசலப் பிரதேசத்திலும் டெல்லியிலும் சில இடைத்தேர்தல்களிலும் பாஜக அடைந்த தோல்வி திமுகவுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி நாடு முழுவதும் பிரதிபலிக்காது என்று ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

காங்கிரஸ் மீண்டும் எழுச்சிப் பாதையில் செல்கிறது என்றும் தேசிய அளவில் அதன் இடத்தையோ முக்கியத்துவத்தையோ இழக்கவில்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குஜராத்தில் பாஜக பெற்ற வெற்றி நாடு முழுவதும் பிரதிபலிக்காது என்று ஸ்டாலின் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

இந்தியா முழுவதும் பல மாநிலக் கட்சிகள் மத்தியில் ஆட்சியைக் குறிவைக்கின்றன. தங்கள் மாநிலங்களில் பாஜகவைத் தோற்கடிக்கும் வலிமையும் அந்தக் கட்சிகளுக்கு இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்சிகள் தங்கள் மாநிலப் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன.

தமிழ்நாடு தொடர்பான பிரச்சினைகளைக் கண்டுகொள்வதேயில்லை. இந்த நிலையில் காங்கிரசை ஒதுக்கிவிட்டு அந்தக் கட்சிகளுடன் இணைவதை நோக்கி திமுக நகர வாய்ப்பில்லாமல் போனது.

மேலும் படிக்க: ராகுல் காந்தி தோல்விக்கு காரணம் சுணக்கமா?

2004 முதல் 2014 வரை திமுக அரசு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தவும் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு உதவி செய்தது. ஈழத்தமிழர் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, பொருளாதாரக் கொள்கைகள் போன்றவற்றில் சில கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டாலும் இந்தப் பிரச்சினைகளில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதை கடந்த 9 ஆண்டுகள் ஆட்சியில் பாஜக காட்டிவிட்டது.

இந்த பிரச்சினைகளில் பாஜக அரசு நடந்துகொண்ட முறையால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் மீதான எதிர்ப்புப் பிரச்சாரம் முற்றிலும் கூர்மழுங்கிவிட்டது. 2011 ஆம் ஆண்டு ஜெ ஜெயலலிதாவின் அரசு ஈழத்தமிழர் பிரச்சினையில் சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியது. இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணை, தனித் தமிழ் ஈழம் பற்றி உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு உள்ளிட்ட தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானங்களை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெறும் பாஜக அரசும் காங்கிரசின் நிலைப்பாட்டில்தான் இருந்துள்ளது.

தமிழ்நாட்டின் முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிரான கர்நாடகத்தின் நிலைப்பாட்டை ஆதரித்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. 2018 ஏப்ரலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தபோது இது அவருக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டத்துக்குக் காரணமாக இருந்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளை உச்ச நீதிமன்றத்தில் விடுவிக்க பாஜக அரசும் காங்கிரசைப் போலவே எதிர்ப்பு தெரிவித்தது. காங்கிரஸ் பின்பற்றிய பொருளாதாரக் கொள்கைகளையே பாஜக அரசும் பின்பற்றுகிறது. அதே நேரத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளில்

தமிழ்நாட்டுடனும் திமுகவுடனும் இருப்பதை ராகுல் காந்தி நாடாளுமன்றத்திலும், வெளியிலும் தனது பேச்சு மூலம் வெளிப்படுத்தியுள்ளார். காங்கிரசுக்கும் திமுகவுக்கும் பல கொள்கைகளில் ஒற்றுமை இருக்கிறது என்று ஸ்டாலினும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் புதிய கட்சிகள் வந்தால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் இருந்த சந்தேகங்கள் முழுவதும் விலகியுள்ளன

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராஜஸ்தானில் உள்ள அல்வாரில் பேசிய ராகுல், பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை ஆதரித்தார். ஆங்கிலத்திற்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வர வேண்டும் என்ற பாஜகவின் நிலைப்பாட்டை நேரடியாகத் தாக்கிப் பேசிய ராகுல், உலகின் பிற மக்களிடம் நீங்கள் பேச விரும்பினால், இந்தி உதவாது, ஆங்கிலம் உதவி செய்யும்” என்று கூறினார்.

இந்தித் திணிப்புக்கு எதிராக ஆங்கிலக் கல்விக்கு ராகுல் காந்தியின் ஆதரவு, ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டை முழுவதும் ஆதரிப்பதாக இருக்கிறது. இதுவரை, பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் திமுக தலைவர்கள் தங்கள் குழந்தைகளை இந்தி கற்க அனுப்புவதாகவும், அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுவதை எதிர்ப்பதாகவும் சொல்வது வழக்கம்.

இதே பாணியில் பாஜக மீது குற்றச்சாட்டை வீசி திமுகவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் ராகுல். இதுபற்றிப் பேசிய அவர் “பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்கப்படுவதை பாஜக தலைவர்கள் விரும்பவில்லை. ஆனால், அனைத்து பாஜக தலைவர்களின் குழந்தைகளும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்குச் செல்கிறார்கள்.

மேலும் படிக்க: ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?

உண்மையில், அவர்கள் ஏழை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆங்கிலம் கற்று பெரிய அளவு கனவுகளை வளர்த்துக்கொள்வதை விரும்பவில்லை” என்றார். தேசியக் கட்சியான காங்கிரஸ் இதுவரை இவ்வளவு தீவிரமாக ஆங்கிலக் கல்வியை ஆதரித்துப் பேசியதில்லை.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியால் ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது என்று மோடிக்கு சவால் விடுத்தார். தமிழ்நாட்டை சுட்டிக்காட்டிப் பேசிய அவர் மாநிலங்களின் மொழிகள், பண்பாடு, வரலாற்றை ஒன்றிய அரசால் அடக்க முடியாது என்றார். இதை ராகுல் காந்தியில் ‘எழுச்சியான பேச்சு’ என்று வர்ணித்த ஸ்டாலின் “தமிழர்களின் நீண்ட கால கருத்துகளுக்கு குரல் கொடுத்ததற்காக” ராகுலை உடனடியாக பாராட்டினார்.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதாக திமுக அரசு வாக்குறுதி அளித்தும்,ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற விமர்சனத்தைச் சந்தித்து வருகிறது. நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டாலும், பாஜக அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதற்காக காங்கிரஸ் அரசை பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில், ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு நீட் விலக்கு தருவதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது திமுகவையும் காங்கிரஸையும் ஒன்றிணைக்கும் காரணங்களில் ஒன்றாகும்.

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், தமிழகத்தில் பாஜக தோல்வியடைந்தபோது, திமுக தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார். ஆனால், தேசிய அளவில் காங்கிரஸ் சந்தித்த படுதோல்வி திமுகவின் இந்த நிலைப்பாடு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடருமா என்ற கேள்வியை எழுப்பியது.

ஆனால், தற்போதைய நிலவரப்படி அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அணியில் புதிய கட்சிகள் வந்தால் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருந்தாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதில் இருந்த சந்தேகங்கள் முழுவதும் விலகியுள்ளன.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles