Read in : English
சமீபத்தில் நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதீய ஜனதா இமாலய வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அது ஒன்றும் மிகையில்லை. மோர்பி நகரில் தொங்கு பாலம் தகர்ந்து குழந்தைகள் உட்பட 135 பேர் பலியாகினர்; அது நடந்து ஒரு மாதத்தில் சட்டமன்றத் தேர்தல். ஆனாலும், ஆளும் கட்சியான பாஜக 182 தொகுதிகளில் 156ஐ கைப்பற்றி அனைவரையும் வியப்பிலாழ்த்துகிறது; மோர்பியிலும் வெல்கிறது.
தொடர்ந்து ஊழல் புகார்கள், நிர்வாகம் மோசம் என விமர்சனங்கள்; ஆயினும் வாக்காளர்கள் பாஜகவையே ஆதரிக்கின்றனர். காங்கிரசோ வெறும் 17 இடங்களில்தான் வெல்கிறது. ஆம் ஆத்மி கட்சியினர் பாஜகவிற்கு எதிரான வாக்குகளைப் பறித்து விட்டனர் எனக் கூறப்படுகிறது. அது எவ்வளவு தூரம் சரி, தவறு என இங்கே நாம் ஆராயப் போவதில்லை. மாறாக இத்தோல்வியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு என்ன பங்கு என்பதை மட்டுமே விவாதிக்கப் போகிறோம்.
இதற்கு முந்தைய குஜராத் சட்டமன்றத் தேர்தல்களின்போது ராகுல் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். நூற்றுக்கணக்கில் கூட்டங்கள். ஒவ்வொரு ஊராக ஆலய தரிசனம், இந்து வாக்காளர்களைக் கவர்வதற்காக.
ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி, அல்பேஷ் தாகோர் ப்படி இளந்தலைவர்களை கட்சிக்குள் கொண்டுவந்தது காங்கிரஸ். தலித் மக்கள் கவனத்தை ஈர்த்தவர் மேவானி, படேல்களின் இட ஒதுக்கீட்டிற்காக இன்றும் குரல் கொடுக்கிறார் ஹர்திக், பிற்படுத்தப்பட்ட சாதியினர் தலைவராக வளர்ந்து நிற்கிறார் அல்பேஷ்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஏனோ தானொவென்று ஓரிரு இடங்களில் மட்டும் பங்கேற்றார் ராகுல் காந்தி; விளைவு, இறுதியில் படுதோல்வி
இந்தக் கூட்டணியின் விளைவாக ராகுல் காந்தியின் பிரச்சாரம் சூடு பிடிக்க, இறுதியில் காங்கிரஸ் 80 இடங்களில் வென்றது. அப்போது பாஜக பெற்ற இடங்கள் 99 மட்டும்தான். ஒருவேளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துவிடுமோ என்ற பிரமை கூட இருந்தது.
கலங்கிப் போயிருந்த பாஜக ஒரு வழியாக சமாளித்து எழுந்தது. மோடியும் அமித் ஷாவும் நிலைமையினைத் தொடர்ந்து கண்காணித்தனர். ஆனால், ராகுல் குஜராத் பக்கமே திரும்பவில்லை. இரண்டாண்டுகளுக்குப் பின் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றிக்கொடி நாட்டியது.
மேலும் படிக்க: ஆறு பேர் விடுதலை: ராகுல் எதிர்ப்பு?
மாநில அரசு நிர்வாகம் மேம்படவில்லை, ஆனால் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள் வரிசையாக பாஜகவிற்கு தாவத் தொடங்கினர். இந்த தேர்தலுக்கு முன்னதாக, 15க்கும் மேற்பட்டோர் இவ்வாறு ஜோதியில் ஐக்கியமாயினர்; ஹர்திக் படேலும் அல்பேஷ் தாகோரும்தான்.
எதையும் காங்கிரஸ் தலைமை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி ஏனோ தானொவென்று ஓரிரு இடங்களில் மட்டும் பங்கேற்றார். விளைவு, இறுதியில் படுதோல்வி.
ஏறத்தாழ இதே கதைதான் உத்தரப்பிரதேசத்திலும். அங்கே நிலைகுலைந்திருந்த காங்கிரஸ், ராகுலின் பிரச்சாரம் காரணமாகவே 2009 நாடாளுமன்றத் தேர்தல்களில் 21 தொகுதிகளில் வென்றது. நோக்கர்களெல்லோரும் பிரமித்தனர். ஆஹா, காங்கிரஸ் எழுந்துவிட்டது எனக் கட்சியினர் ஆர்ப்பரித்தனர். ராகுல் காந்தி புது யுக நாயகனார்.
ஆனால் அவரோ அத்துடன் உ.பி.யை மறந்துவிட்டது போலத் தோன்றியது. எங்கெங்கோ சென்று கொண்டிருந்தார், கட்சியைச் சீரமைக்க எவ்வித நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. அடுத்த இரண்டாண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 22 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது. அதன் பிறகு தொடர் இறங்குமுகம்தான்.
அதே 2009 ஆண்டில்தான் இளைஞர் காங்கிரசிற்கு புத்துயிரூட்டப் போகிறேன் என முழங்கி, போலி உறுப்பினர்களைக் களைந்து முன்னாள் தேர்தல் ஆணையர்கள் மேற்பார்வையில் அவ்வணிக்குத் தேர்தல்கள் நடத்தினார். அப்படி முறையாகச் சேர்க்கப்பட்டவர்களே அந்தந்தப் பகுதி பழம் பெருச்சாளிகளின் விசுவாசிகள், விசுவாசம் காட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் உள்ளே கொண்டு வரப்பட்டவர்கள்.
ஒருபுறம் தலைமைக்கு அடிபணிவது, இன்னொரு புறம் தத்தமக்கென கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு தலைவர்களாக வலம் வருவது, இப்படிப்பட்டவர்களின் கட்டுக்குள்தான் காங்கிரஸ் இன்றும் உள்ளது
நம் ஊரில் கூட கார்த்தி சிதம்பரம் ஆர்ப்பாட்டமாக ஆட்களைப் பிடித்து அவருக்கு வேண்டியவர்களைப் பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட வைத்தார். பின்னர் அவர்களை ஒன்று திரட்டி, ‘தெரியுமா என்னால்தான் நீங்கள் இவ்வாறு பொறுப்புகளைப் பெற்றிருக்கிறீர்கள், என்னை மீறி எதுவும் செய்யமுடியாது, மதிக்கவில்லையெனில் மிதிதான்’ என மிரட்டினார்.
இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டுதான் புத்துயிரா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, அப்படிப்பட்ட முறையான தேர்தல்களும் அத்தோடு நின்றுவிட்டன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அதன்பிறகு காங்கிரசில் எம்மட்டத்திலும் முறையாக தேர்தல்கள் நடைபெறவில்லை.
ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி பிரதமரானபோது கட்சியும் அவரது குடையின் கீழ்தான் என்றான நிலையில், அரசியல் தரகர்களுக்கு முடிவு கட்டப் போகிறேன் என சூளுரைத்தார். அப்போது, மூப்பனார் உள்ளிட்ட இடைநிலைத் தலைவர்கள் மிரண்டனர். ஆனால், நாளடைவில் அத்தலைவர்களின் கைதியாகிப் போனார் ராஜீவ். அவர்களை மீறி அவரால் எதுவும் செய்ய முடியவே இல்லை.
மேலும் படிக்க: ராகுல் பாரத யாத்திரை: குமரி கைகொடுக்குமா, கைவிடுமா?
ஒருபுறம் தலைமைக்கு அடிபணிவது, இன்னொரு புறம் தத்தமக்கென கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு தலைவர்களாக வலம் வருவது, இப்படிப்பட்டவர்களின் கட்டுக்குள்தான் காங்கிரஸ் இன்றும் உள்ளது. அவர்களின் ஆலோசனையின் கீழ்தான் சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ செயல்படவேண்டியிருக்கிறது.
நேரு குடும்பத்தினர் உத்தம புத்திரர்கள், உள்நோக்கம் ஏதுமின்றி சமூக மேம்பாட்டிற்காக மட்டுமே அவர்கள் அல்லும்பகலும் உழைக்கின்றனர், கூட இருப்பவர்கள்தான் அவர்களைக் கெடுக்கின்றனர் என்பதல்ல என் வாதம்.
காங்கிரஸ் மீண்டும் மக்களின் நம்பிக்கையினைப் பெற, மதவாத அரசியலின் பிடியிலிருந்து அவர்களை மீட்க, கட்சியில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. அத்தகைய மாற்றங்களை தலைவர்கள் எவரும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை, அவ்வளவுதான்.
பலரின் கவனத்தை ஈர்த்திருக்கும் ஜோடோ யாத்திரை ஒரு நன்முயற்சிதான். கட்சிக்கு புதுத்தெம்பு வந்துவிட்டதாகக் கூடப் பலரும் கருதுகின்றனர். யாத்திரையைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் செய்தியினை மற்ற தலைவர்கள் மக்களிடம் கொண்டுசெல்வர், அதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராகுல் காந்தி அவை குறித்து போதிய கவனம் செலுத்துவாரா என்பதுதான் நம் கேள்வி.
மத்தியப்பிரதேசத்தில் ஒரு கல்லூரி நூலகத்தில் மதவெறிக்கு எதிரான கட்டுரைத் தொகுப்பு வைக்கப்பட்டிருந்ததென சங் பரிவாரத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்க, முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த அக்கல்லூரி முதல்வர் பதவி விலகியிருக்கிறார், தொகுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம்தான். அறிவிக்கப்படாத அவசர நிலை. ஆட்சியாளர்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் இறங்க எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. மனித உரிமை அமைப்புக்களுந்தான். நீதிமன்றங்களில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட மெல்ல மெல்ல தகர்ந்து வருகிறது.
இது மிக அவலமானதொரு சூழல். இவ்விருள் விலக கடும் உழைப்பு, புத்திக்கூர்மை, விட்டுக்கொடுக்கும் போக்கு எல்லாம் தேவைப்படும். ராகுல் காந்தியிடம் அவற்றை எதிர்பார்க்க முடியுமா? காலந்தான் பதில் சொல்ல வேண்டும்.
Read in : English