Read in : English

Share the Article

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு எதிரான பாஜகவின் வியூகம் எப்படி இருக்கும்? ராகுலின் ஆடை பற்றியும், சர்ச்சையான கத்தோலிக்கப் பாதிரியாருடன் அவர் கொண்ட சந்திப்பைப் பற்றியும் அமித்ஷா அடித்த கிண்டல் அதைக் குறிப்பால் உணர்த்துகிறது.

தனது யாத்திரையின் தொடக்கப் புள்ளியாக ராகுல் காந்தி கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்தது பல்வேறு குறியீட்டுத்தன்மைகள் கொண்டது. இந்தியா என்பது காஷ்மீர்-கன்னியாகுமரி என்ற எல்லைகளைக் கொண்ட ஒரு நாடு. அதனால்தான் ராகுலின் யாத்திரை இங்கே தொடங்கியிருக்கிறது. ஆனால், தேர்தலில் வெற்றிக்கனியைப் பிடிக்க காங்கிரஸும், பாஜகவும் நேருக்கு நேர் போட்டிபோடும் கட்சிகளாக நாட்டின் மிகக் குறைந்த தொகுதிகளில்தான் உள்ளன. அப்படித் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே தொகுதி கன்னியாகுமரிதான்.

பாரத் ஜோடோ யாத்திரையின் வரைபடத்தில் இடம்பெற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஒரே இடம் கன்னியாகுமரிதான். திமுகவுக்கு அரசியல்ரீதியாக அதிகமான விமர்சனம் பெற்றுத்தந்த ராகுலின் தகப்பனார் ராஜீவ்காந்தியின் படுகொலை நிகழ்ந்த ஸ்ரீபெரும்புதூருக்குக்கூட ராகுல் போகப்போவதில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆறு சட்டசபைத் தொகுதிகளில் குறைந்தபட்சம் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் இன்னும் பலமானதொரு கட்சிதான். கடந்தகாலத்தில் காங்கிரஸ் இங்கே பெரும் ஆதிக்கம் செலுத்திய கட்சி. அதன் பிரதானமான எதிர்க்கட்சி சிபிஎம். 1969 மற்றும் 1971 ஆண்டுகளில் காமராஜரை நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்த கன்னியாகுமரி அரசியல்ரீதியான மறுவாழ்வை அவருக்கு வழங்கியது. அப்போது திமுக-காங்கிரஸ் கூட்டணி தேர்தலில் அமோகமாக வெற்றிபெற்றது. காங்கிரஸ் (ஓ) என்னும் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாகத் தமிழ்நாட்டில் வெற்றிபெற்ற ஒரே வேட்பாளர் காமராஜர்தான்.

தனது யாத்திரையின் தொடக்கப்புள்ளியாக ராகுல் காந்தி கன்னியாகுமரியைத் தேர்ந்தெடுத்தது பல்வேறு குறியீட்டுத்தன்மைகள் கொண்டது. இந்தியா என்பது காஷ்மீர்-கன்னியாகுமரி என்ற எல்லைகளைக் கொண்ட ஒரு நாடு. அதனால்தான் ராகுலின் யாத்திரை இங்கே தொடங்கியிருக்கிறது

ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்துவம் வளர்ந்து மற்ற மதங்களைவிடவும் அதிகமான எண்ணிக்கையில் விசுவாசிகளைக் கொண்டிருக்கும்போது, இந்துமத வங்கியைக் கட்டமைத்துக்கொள்ள பாஜகவால் முடிந்தது. பெரும் செல்வாக்குப் படைத்த நாடார் இனம் இந்து, கிறித்துவர் எனும் பேதத்திலும், அரசியல் பேதத்திலும் கிட்டத்தட்ட செங்குத்தாகப் பிரிந்துகிடந்தது. சாதி இன்னும் மற்ற காரணிகளில் ஆதிக்கம் செலுத்திய போதிலும், இந்து-கிறித்துவர் திருமணங்கள் சகஜமாகிவிட்ட போதிலும், நாடார் இன மக்கள் மத்தியில் பலமானதொரு செல்வாக்கைக் கட்டமைத்துக் கொண்டிருக்கிறது ஆர்எஸ்எஸ்.

மேலும் படிக்க: காங்கிரஸ் கட்சிக்கு ப்ரியங்கா ஏன் தலைமை ஏற்க வேண்டும்?

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிபிஎம்மின் செல்வாக்கு சரிந்துகொண்டிருக்கிறது. திராவிடச் சித்தாந்தம் தனது வேர்களை ஆழமாகப் பதித்திடவில்லை. ஆனால், காங்கிரஸ் இன்னும் அங்கே செல்வாக்குடன் விளங்குகிறது; அதன் ஆதரவு அஸ்திவாரத்தில் பிரதானமான அம்சமே கிறித்துவம்தான்.

இந்தச் சூழலில் ராகுலின் யாத்திரை விஜயம் இங்கே அவரது கட்சிக்காரர்களையும், மற்றவர்களையும் உற்சாகப்படுத்திவிட்டது. சாமானியர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் என்று எல்லோரையும் அவர் சந்தித்திருக்கிறார்.

காங்கிரஸுடன் தொடர்புகொண்ட கத்தோலிக்கப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவும் மற்றவர்களும் ராகுலைச் சந்தித்திருக்கின்றனர் (Photo credit: @shehzad_ind Twitter page)

கடந்த காலத்தில் காங்கிரஸ் ஒன்றிய அரசுகளின் முயற்சிகளால் தலையெடுத்த கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த எஸ்.பி.உதயகுமார்கூட மிக ஆர்வத்துடன் ராகுலைச் சந்தித்திருக்கிறார்.

இந்த யாத்திரை முனைப்பையும், முன்னெடுப்பையும் பெரும் வெற்றியாக்க காங்கிரஸ் எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்திருக்கிறது. ஊடகவெளிச்சம் பேரளவில் கிடைப்பதற்காகப் பத்திரிகையாளர்கள் ரயிலிலும் விமானத்திலும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். காங்கிரஸுடன் தொடர்புகொண்ட கத்தோலிக்கப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவும் மற்றவர்களும் ராகுலைச் சந்தித்திருக்கின்றனர்.

கிறித்துவ அடிப்படைவாதக் கருத்துகளை சுதந்திரமாக, படுதீவிரமாக முன்பு வெளிப்படுத்தியவர் இந்தப் பொன்னையா. இது ராகுலுக்குத் தெரியுமோ தெரியாதோ?. உண்மையான ஆத்மார்த்த ஞானத்தேடல் கொண்ட ஒருவர் பற்றற்ற ஒரு ஞானியிடம் ஆன்மிக வினாக்களைத் தொடுக்கும் ஒரு காட்சியைப் போன்று தோற்றமளித்தது அந்தச் சந்திப்பு. அதன் காணொலிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ‘வைரல்’ ஆகியிருக்கின்றன.

ஆனால், பொன்னையாவின் கடந்தகாலம் சமூக வலைத்தளங்களில் ராகுலைக் கிண்டலடிக்க ஓர் ஆயுதமாக பாஜகவுக்குக் கிடைத்திருக்கிறது. சங்கிகள் ராகுலைக் கடுமையாகக் கேலி செய்தனர்; தேசிய ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் ராகுலைச் சந்தித்தவர்களைப் பற்றிய விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டன.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கு எதிரான பாஜகவின் வியூகம் எப்படி இருக்கும்? ராகுலின் ஆடை பற்றியும், சர்ச்சையான கத்தோலிக்கப் பாதிரியாருடன் அவர் கொண்ட சந்திப்பைப் பற்றியும் அமித்ஷா அடித்த கிண்டல் பாஜகவின் வியூகத்தைக் குறிப்பால் உணர்த்துகிறது

காலில் செருப்பணியாத உள்ளூர் பாஜக எம்எல்ஏ எம்.ஆர்.காந்தியைக் கிண்டலடித்ததற்காக பொன்னையா சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறைவைக்கப்பட்டார். பாரத மாதாவின் மண் புனிதத்தைக் காலணியால் தான் கெடுக்கவிரும்பவில்லை என்று காந்தி சொல்லியிருந்தார். அதற்குக் கடுமையான வார்த்தைகளில் பதில் சொன்னார் பொன்னையா. பாரத மாதாவின் மண் நோய்வாய்ப்பட்டது; அதில் கால்பதித்தால் நோய்வரும்; அதனால் காலணி தேவையில்லை என்று கிண்டலாகத் தனது மதக்கூட்டத்தில் உரையாற்றினார் அவர்.

மேலும் படிக்க: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி இன்னும் ஏன் தேவைப்படுகிறது?

பொன்னையாவுக்குப் பிணை கிடைத்தவுடன், அவரது ஆதரவாளர்கள் பாளையங்கோட்டைச் சிறைக்கு வெளியே அவரை வரவேற்கக் காத்திருந்தனர். பொன்னையாவின் தீவிரமான கருத்துகளுக்கு ஆதரவாளர்கள் இருந்தனர் என்பதை இந்நிகழ்வு காட்டியது.

காங்கிரஸுடன் தொடர்புகொண்ட கத்தோலிக்கப் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கிறித்துவ அடிப்படைவாதக் கருத்துகளைச் சுதந்திரமாக, படுதீவிரமாக வெளிப்படுத்தியவர். இது ராகுலுக்குத் தெரியுமோ தெரியாதோ?

ராகுலுக்கும் காங்கிரஸுக்கும் கன்னியாகுமரி ஏதாவது கற்றுக் கொடுத்திருக்கிறது என்றால் அது இதுதான்: ராகுலின் இந்திய அம்சத்தையும், தேசியத்தையும் பற்றித் தொடர்ந்து பாஜக கேள்விகளை முன்வைத்துக் கொண்டேயிருக்கும்; அதுதான் அதன் அரசியல் வியூகம். ராகுலின் யாத்திரை உற்றுநோக்கப்படுகிறது. ராகுல் இந்தத் தேசிய முன்னெடுப்பினால் பயனடைந்துவிடக் கூடாது என்பதால், நிஜமான அல்லது கற்பனையான தவறுகளை ஊதிப் பெரிதாக்க பாஜக காத்துக்கொண்டிருக்கிறது.

அர்விந்த் கெஜ்ரிவால் பாஜகவின் இந்துத்வாவை நேருக்குநேர் எதிர்கொள்ள மறுத்துவிட்டார். ஆனால், காங்கிரஸ் சமீபகாலமாகத் தன்னை பாஜக அல்லாத கட்சியாக முன்னிறுத்திவிட்டது. கெஜ்ரிவால் ஹனுமான் சாலிசா ஓதுவதை ஆதரிக்கிறார். ஆனால், காங்கிரஸ் இந்துத்வாவை நேரடியாக எதிர்கொண்டு மோதுகிறது. மதச் சார்பற்ற, தாராளமயமான இந்துக்களையும், சிறுபான்மையினரையும் ஒன்றுசேர்த்து ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டிருக்கிறது.

ஆனால், பாஜக நிச்சயமாக காங்கிரஸை இந்துமதத்துக்கு எதிரான கட்சியாகவும், அதனால் தேசத்திற்கு எதிரான கட்சியாகவும் சித்தரித்து சிதைக்க முயலும் என்பதில் சந்தேகமில்லை.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles