Read in : English
உயர்கல்வியில் தமிழ்வழிக் கல்வி, காசி தமிழ் சங்கமம் என்று தமிழ்நாட்டில் தமிழ் அரசியலை பாஜக கையில் எடுக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியும் தனது வன்னியர் அரசியல் பாதையில் இருந்து தமிழ் தேசியக் களத்துக்கு மாறியுள்ளது.
தேசியக் கட்சியான பாஜகவுக்கு வேண்டுமானால் தமிழ் அரசியல் பேசுவது புதிதாக இருக்கலாம். பாமகவைப் பொறுத்தவரை தமிழ் தேசிய அரசியல் என்பது புதிதல்ல.
1989ல் அக்கட்சி தொடங்கப்பட்டபோது, வன்னியர் நலன் மட்டுமின்றி தனித்தமிழீழ ஆதரவையும் தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே என்ற ஒருமொழிக் கொள்கையையும் வலியுறுத்தியது.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, வன்னியர் அரசியலை முழுமையாகவே கையில் எடுத்தது பாமக. வன்னியர்க்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று முழக்கம் எழுப்பியதுடன் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தியதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கடுமையாக முயற்சித்தபோதும், பாமகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வன்னியர்கள் பெருமளவு அக்கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை
பாமகவின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிவித்தது.
அதிமுக கூட்டணியில் 23 இடங்களைப் பெற்றுக்கொண்ட பாமக தலைவர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியதால் தேர்தலில் குறைந்த அளவு இடங்களை ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்கள். இதைச் சுட்டிக்காட்டி வன்னியர் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யக் கட்சி தயாராக இருப்பதாகக் கூறி பாமகவினர் தேர்தல் கூட்டங்களில் வாக்கு கேட்டனர்.
2016 சட்டமன்றத் தேர்தலில் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தனியாகப் போட்டியிட்டபோது 5.32 சதவீத வாக்குகளைப் பெற்றது பாமக. ஆனால், 2021ல் 3.8 சதவீதம் வாக்குகளையே வாங்கியது; 5 தொகுதிகளில் மட்டும் வென்றது. 10.5 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கடுமையாக முயற்சித்தபோதும், பாமகவின் பாரம்பரிய வாக்கு வங்கியான வன்னியர்கள் பெருமளவு அக்கட்சிக்கு ஆதரவளிக்கவில்லை என்பதையே கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காட்டின.
தற்போது, இலங்கையில் தமிழர்களுக்குத் தனித் தாயகம், தமிழகத்தில் தனியார் துறை வேலைகளில் தமிழர்களுக்கு 80 சதவீத இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை மீண்டும் எழுப்பியுள்ளது பாமக. நவம்பர் 27ஆம் தேதி அனுசரிக்கப்படும் மாவீரர் தினத்தை முன்னிட்டு, பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். அதில் தனித்தமிழ் ஈழம் குறித்து ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மாறாத உறுதியை பாமக தொடர்ந்து வெளிப்படுத்தியதில்லை.
2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் கடுமையாகப் போர் நடத்தியபோது பாமகவின் இன்றைய தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒன்றிய அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார். அப்போது தமிழ் ஈழம் பற்றி நாடாளுமன்றத்திலோ வேறு எந்த அரங்கங்களிலோ அவர் பேசியதில்லை. அதேநேரத்தில், ஆட்சியை இழந்த பிறகு ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச மன்றங்களில் நடந்த கூட்டங்களில் பங்கேற்று, இலங்கைத் தமிழர்கள் படுகொலை குறித்த சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் தனித்தமிழீழத்தை ஆதரித்தும் பேசியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மாறாத உறுதியை பாமக தொடர்ந்து வெளிப்படுத்தியதில்லை
இலங்கைத் தமிழர் பிரச்சினை மட்டுமின்றி, தற்போது தமிழ்நாட்டில் தனியார் வேலைகளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பேசத் தொடங்கியுள்ளது பாமக.
ஓசூரில் அமையப்போகும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் தமிழர்களுக்கு வேலை கிடைக்க திமுக அரசு முயற்சி செய்யும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டிய அன்புமணி, 18,000 வேலைவாய்ப்புகளில் 2,348 வேலைகள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்கும் சட்டத்தை இயற்ற வேண்டிய நிலையில் இருக்கும் திமுக அரசு ஏன் கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். .
அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமையும் என்று சமீபத்தில் அன்புமணி அறிவித்திருந்தாலும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவை எடுப்பதில் பெரும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறது பாமக. தேசிய அளவில் முக்கிய அணிகளில் ஒன்றாக இருக்க வேண்டுமானால் அக்கட்சியை திமுக கூட்டணி ஏற்க வேண்டும் அல்லது பாஜகவுடன் கூட்டணியில் தொடர வேண்டும்.
1989ல் பாமக போட்டியிட்ட முதல் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று 5.82 சதவீத வாக்குகளைப் பெற்றது. 1991ஆம் ஆண்டும் தனியாகவே தேர்தலைச் சந்தித்து 5.14 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதே பாணியில், தமிழர் பிரச்சினைகளைப் பேசி அனைத்து சமூகத்தினரின் வாக்குகளையும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெற்று தனது வாக்கு வங்கியை அதிகப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக பாமகவினர் நினைக்கலாம்.
அதிமுகவில் கவர்ச்சிகரமான தலைமை இல்லாத சூழலில், எதிர்க்கட்சிக்கான இடத்தை பாமக குறி வைப்பதால் அதன் அணுகுமுறையில் மாற்றம் தெரிகிறது. மாற்றம் இந்த முறையாவது முன்னேற்றத்தைத் தருமா என்ற எதிர்ப்பார்ப்பு அக்கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.
Read in : English