Read in : English
அண்மையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் அனைவரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியது. பிரியாவின் திறமை, கனவு, லட்சியம் பற்றிப் பேசும் நாம், அவரைப் போன்றிருக்கும் பல இளந்தளிர்களின் வேட்கையைக் கவனிக்கத் தவறுகிறோம்.
சென்னைக்குப் பல அடையாளங்கள் இருந்தாலும், வடசென்னை என்றாலே வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்கள் என்ற அடையாளம் மட்டும் எந்த ஆட்சியாளர்கள் காலத்திலும் மாறுவதில்லை. அப்படியொரு சூழலை எதிர்கொண்டு, பிரியாவைப் போன்று பல பேர் கால்பந்தாட்டமே தங்களது வாழ்க்கை என்று சுற்றிச் சுழன்று வருகின்றனர்.
இந்த வீராங்கனைகளுக்கு எனத் தனியாக விளையாட்டு அரங்கமோ, ஆடம்பரமான பயிற்சி உடையோ, விளையாடுவதற்கான காலணிகளோ இருப்பதில்லை. இவ்வளவு ஏன், உடலுக்கு ஆற்றல் அளிக்கும் உணவு கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனாலும், இவர்களின் கண்களில் நிறைந்திருக்கும் நம்பிக்கை ஒளியும், செயல்பாட்டோடு பின்னிப் பிணைந்திருக்கும் விடா முயற்சியும் இவர்களின் திறமையை ஆணித்தரமாகக் காட்டுகின்றன.
எந்த இடத்தில் பலப்பல கனவுகளையும் லட்சியங்களையும் கொண்ட பிரியா என்ற வீராங்கனை விதையாகப் புதைக்கப்பட்டாரோ, அதே களத்தில் ‘நாங்கள் இருக்கிறோம்’ எனப் பல நூறு பிரியாக்கள் எழுந்து நிற்கின்றனர்.
எந்த இடத்தில் கால்பந்து வீராங்கனை பிரியா விதையாகப் புதைக்கப்பட்டாரோ, அதே களத்தில் ‘நாங்கள் இருக்கிறோம்’ எனப் பல நூறு பிரியாக்கள் எழுந்து நிற்கின்றனர்
அப்படிப்பட்ட சில பிரியாக்களை இன்மதி உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறது.
வட சென்னையின் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் சிலர் அண்ணா சாலையில் இருக்கும் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்களின் தனித்துவ அடையாளமாக விளங்குவது கால்பந்தாட்டம் மட்டுமே. உறவுகளை இழந்து வறுமையில் வாடினாலும் உலகமே கொண்டாடும் கால்பந்தாட்டத்தின் மீதான ஈர்ப்பு மட்டும் இந்த மாணவிகளிடம் மங்காமல் இருப்பது ஆச்சர்யம்.
12 ஆண்டுகளுக்கு மேலாக கால்பந்தாட்டம் விளையாடி வருகிறேன் எனக் கூறி ஆச்சர்யம் அளித்தார் இளங்கலை 3ம் ஆண்டு பயின்றுவரும் மோனிஷா.
மேலும் படிக்க: கால்பந்தாட்ட வீராங்கனை மரணம்: உயரும் அச்சம்!

மோனிஷா, பள்ளியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றார்
சிறுவயதிலேயே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்து வரும் மோனிஷா, பள்ளியில் படிக்கும்போதே மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றார். குடும்பச் சூழல் காரணமாக பகுதி நேரமாக வேலைக்குச் சென்றவாறே கல்லூரிக்குச் சென்று வருகிறார்; கால்பந்தாட்டத்திலும் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
“ஆறாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவிடம் ஃபுட்பால் ஷூ கேட்டேன். அவர் தனது நகையை அடமானம் வைத்து ஃபுட்பால் ஷூ, ஜெர்சி, பந்து வாங்கிக் கொடுத்தார்” என்று சொல்லும்போது மோனிஷாவின் கண்கள் கலங்குகின்றன.
“கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகை நான். ஓவர் ஹெட் கிக், பைசைக்கிள் கிக் செய்து கோல் அடிக்கும் அவரது அசாத்தியமான திறமை ரொம்பப் பிடிக்கும். அவர்தான் என் ரோல்மாடல்” என்று சொல்லும் மோனிஷா, ரொனால்டோ போலவே கோல் அடிக்கவும் பல முறை முயன்றிருக்கிறார்.
தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் விடுதியில் தங்கிப் பள்ளியில் படித்தவாறே சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற தடகள வீராங்கனை வசந்தி. கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற வசந்தி 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார். கல்லூரியில் சேர்ந்ததும் தடகளப் பயிற்சியுடன் கால்பந்தாட்டத்திலும் ஒரு கண் பதித்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து யமுனா, ஜனனி, ஜீவப்பிரியா, ஆர்த்தி, ஹரிபிரதா ஆகியோரும் கால்பந்தாட்டக் கனவுகளை நெஞ்சில் சுமந்து வருகின்றனர். இவர்களது பெற்றோர் வீட்டு வேலை செய்தும், தள்ளுவண்டி கடை நடத்தியும், ஆட்டோ ஓட்டியும் இவர்களது கால்பந்து ஆர்வத்திற்குத் துணை நிற்கின்றனர்.
கால்பந்தாட்டப் பயிற்சியைக் கடுமையாக மேற்கொண்டாலும், இம்மாணவிகளுக்கு ஊட்டச்சத்து உணவு சரியாகக் கிடைப்பதில்லை. பயிற்சி முடிந்ததும், தண்ணீரே எங்களுக்குப் போதுமானது எனக் கூறுகிறார் ஒரு மாணவி. கடினமான சூழலிலும் தங்களைத் தாங்கிப் பிடிக்கும் பெற்றோரை மேலும் கஷ்டப்படுத்த விரும்பவில்லை என்பதே இவரைப் போன்றவர்களின் பதிலாக இருக்கிறது.
பயிற்சியின்போது ஊட்டச்சத்து உணவுகளைக் கூட எடுத்து கொள்ள முடியாத மாணவிகளிடம் காசு எதிர்பார்ப்பதை விட, அவர்களுக்கு அரசு வேலையோ அல்லது படிப்பதற்கு வசதியையோ ஏற்படுத்தித் தருவதே மனிதாபிமானம்
கால்பந்தாட்டத்தில் ஆர்வம் இருப்பவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளித்து சிறந்த வீராங்கனைகளாக உருவாக்கி வருகின்றனர் நூர் பாஷா, உமா சங்கர் போன்ற கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள்.

வசந்தி, கடந்த மாதம் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற வசந்தி 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடம் பிடித்தார்.
அகாடமியில் ஒரு கால்பந்தாட்டப் பயிற்சி பெற ஒரு மாணவிக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.2,500 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் நூர் பாஷா, உமா சங்கர் போன்றவர்கள் அரசு விளையாட்டு மைதானங்களில் நடுத்தர மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு கட்டணமின்றியும், குறைந்த கட்டணத்திலும் பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஆனாலும் மாவட்ட அளவிலோ, மாநில அளவிலோ, தேசிய அளவிலோ நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்குத் தேவையான செலவுகளை அந்தந்த வீராங்கனைகளே ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.
“நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாணவிகள் இது போன்ற விளையாட்டில் ஆர்வம் செலுத்துவதே அரிது. பயிற்சியின்போது முட்டை, பாதாம், பழம் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுகளைக் கூட எடுத்து கொள்ள முடியாத அளவுக்கு வசதியில்லாத மாணவிகளிடம் காசு எதிர்பார்ப்பதை விட, கால்பந்து விளையாட்டின் மூலம் அவர்களுக்கு அரசு வேலையோ அல்லது படிப்பதற்கு வசதியையோ ஏற்படுத்தித் தருவதே மனிதாபிமானம்” என்கிறார் பயிற்சியாளர் நூர் பாஷா.
கொரோனா பரவலுக்கு முன்பாக, 2019ம் ஆண்டு சர்வதேசப் போட்டியொன்றில் விளையாடத் தேர்வானார் சவுமியா என்ற மாணவி. ஆனால், ரூ.90,000 இல்லாத காரணத்தால் அந்த போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தற்போது அவர் திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார். பணம் மட்டுமல்லாமல் உறவினர்களின் எதிர்ப்பு, ஆடை பிரச்சனை இப்படிப் பலவற்றை எதிர்த்துச் சாதிக்க வேண்டுமென்றால் அப்பெண்களுக்கு அரசின் உதவி அவசியம் என்கிறார் நூர் பாஷா.
“கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மறைவு மற்ற மாணவிகளின் பெற்றோருக்கு அச்சத்தை அளித்துள்ளது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நிறைய செலவு செய்து மருத்துவம் பார்க்கும் வசதி இல்லை என்று பெற்றோர் சொல்கிறார்கள். ஒவ்வொரு பெற்றோரிடமும் மாணவிகளை விளையாட அனுமதி கேட்டும், உரிய உத்தரவாதம் அளித்து புரிய வைப்பதும் கடினமாக உள்ளது” என்று வருந்துகிறார் நூர் பாஷா.
தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விளையாடி மாணவிகள் சாதித்தாலும் அவர்களுக்கான அரசின் அங்கீகாரம் முறையாகக் கிடைப்பதில்லை என்கிறார் உமா சங்கர். “அண்டை மாநிலங்களில் விளையாட்டில் சாதிக்கும் வீரர் வீராங்கனைகளுக்கு எளிதில் அரசு வேலையும் ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. இங்கோ வீரர் வீராங்கனைகளின் சாதனைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவே பெரும்பாடு படுகிறோம்” என்று கூறும் இவர், விளையாட்டில் ஆர்வம் செலுத்தும் நடுத்தர, ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவ அரசு முன் வர வேண்டும் என்கிறார்.
இன்று உலகமே கொண்டாடும் ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்க, இந்தியா மட்டும் மட்டும் வேடிக்கை பார்க்கும் நாடாக உள்ளது. கிரிக்கெட்டில் ஜாம்பவான் என மார்தட்டிக்கொள்ளும் இந்தியா, கால்பந்தாட்டத்தில் இருக்கும் இடம் தெரியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? 138 கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் கால்பந்தாட்டம் விளையாட வீரர், வீராங்கனைகளே இல்லை எனக் கூறிட முடியாது. திறமையானவர்களுக்கான வாய்ப்பும் அங்கீகாரமும் சரியான நேரத்தில் கிடைக்கிறதா என்பதே இங்கு விடை தெரியா கேள்வி.
பிரியா எனும் இளம் வீராங்கனையின் மரணம், அவரைப் போன்றே கால்பந்து கனவுகளைச் சுமந்துகொண்டிருக்கும் எத்தனையோ பேரின் மனதில் வேட்கையை மூட்டியிருக்கிறது. சிதறிக் கிடக்கும் தங்க துகள்களாக மிளிரும் அந்த வீராங்கனைகளின் மீது அரசின் கவனம் விழுந்தால், உலகக் கோப்பை எனும் தங்கக் கனவும் கூட வசப்படும். சிதைந்துபோன பிரியாவின் கனவுகளுக்குச் செய்யப்படும் பிராயசித்தமும் அதுவே!
Read in : English