Read in : English
கடந்த நவம்பர் 23ஆம் தேதியன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்தபின்னர், அதிமுக தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த இடைக்கால போர்நிறுத்தம் இரு அணிகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதேநேரம் இணைப்புக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை வலியுறுத்தி பாஜக தன்னுடைய அணியுடன் மட்டும் கூட்டணிக்கு வரலாம் என்ற அழைப்பா என்ற கேள்வியும் எழுகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் நவம்பர் 25-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்தப் பேட்டியை அப்படியே ஏற்பதாக இருந்தால் பாஜகவுடன் சமரசம் செய்துகொண்டு பழனிசாமி அணியுடன் மட்டும் கூட்டணி அமைத்துக்கொள்ளும் முயற்சி என்பதே சரியாக இருக்கலாம். போட்டித்தலைவர்களுடன் இணைப்பு என்பதை கடுமையாக மறுத்த ஜெயகுமார் பன்னீர்செல்வத்துடனும் டிடிவி தினகரனுடன் உடன்பாடு ஏதும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
தனது போட்டியாளர்களுடனான உட்கட்சி மோதலில் பாஜகவின் ஆதரவைப் பெறும் நோக்கத்துடன் பழனிசாமியின் சந்திப்பு நடத்தப்பட்டது என்றே ஆளும் திமுகவும் குற்றம்சாட்டியுள்ளது.
அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை ஒத்திவைக்குமாறு அவரே கோரியுள்ளார். பன்னீர்செல்வமும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரனும் பழனிசாமியை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளனர். இந்த இரண்டு நிகழ்வுகளும் அதிமுக அணிகளுக்கு இடையே சமரசப் பேச்சு நடக்கிறதா என்ற கேள்வியை முன்வைக்கிறது.
அதிமுக அணிகளுக்கு இடையேயான மோதல் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடந்ததாக குற்றம் சாட்டியுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு
ஆளுநரைச் சந்தித்த பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும்போது, மாநில அரசு மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய மனுவை அளித்துள்ளேன் என்றே கூறினார். ஆனால், அதிமுக அணிகளுக்கு இடையேயான மோதல் தொடர்பாகவே இந்த சந்திப்பு நடந்ததாகவும், ஆளுநரிடம் கொடுத்த மனு மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் நோக்கம் கொண்டது என்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த சந்திப்பின் உண்மையான காரணத்தை அதிமுகவினர் வெளியிடவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: பாஜகவின் கனவு: கலைத்த பழனிசாமி!
ஆளுநர் ரவி – பழனிசாமி சந்திப்புக்கு முன்னர் அதிமுக தனித்துப்போட்டி என்று கூறி வந்த அதிமுக தலைவர்கள் இப்போது கருத்து எதையும் தெரிவிப்பதில்லை. ஆளுநரை எதிர்த்து திமுக கடுமையாகப் பேசிவரும் சூழலில் இதுவரை மௌனம் காத்து வந்த பழனிசாமி, இப்போது ஆளுநருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளதுடன் அவரின் செயல்பாட்டையும் பாராட்டியுள்ளார்.
ஆளுநர் ரவி – பழனிசாமி சந்திப்புக்கு முன்னர் ’தனித்துப்போட்டி’ என்று கூறி வந்த அதிமுக தலைவர்கள் இப்போது கருத்து எதையும் தெரிவிப்பதில்லை
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் திமுக அரசுக்கு எதிரான பாஜகவின் தீவிரப் பிரச்சாரத்தில் இணையாமலிருந்த பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை இப்போது எதிரொலித்துள்ளார். மாநில அரசு உளவுத்துறையின் தோல்வியாலேயே குண்டுவெடிப்பு நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
அதேநாளில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அதிமுக – பாஜக இடையேயான உறவு தொடர்கிறது. மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ளதால் அதிமுக-பாஜக கூட்டணியில் இணையக்கூடிய கட்சிகள் குறித்து இப்போது முடிவு செய்ய முடியாது” என்று கூறினார். சிறு பிரச்சனைகளுக்கு இப்போதே தீர்வு காண வேண்டிய அவசியமில்லை, கூட்டணியில் யார் யார் இடம்பெறுவார் என்பதையும் இப்போது முடிவு செய்ய முடியாது” என்று அண்ணாமலை சொன்னது, மோதலில் இருக்கும் அதிமுக அணிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தொடரும் என்பதையே காட்டுகிறது.
மேலும் படிக்க: ஆளுநர் தேவையா?: அனல் கிளப்பிய தீர்ப்பு!
மத்திய சுகாதார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக அதிமுக எம்பி எம்.தம்பிதுரை நியமிக்கப்பட்ட பிறகு ஆளுநருடனான பழனிசாமியின் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது. நியமனம் முடிந்த உடனேயே, தம்பிதுரையும் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்க்க மாட்டோம்என்றும், தினகரனின் அமமுகவுடன் கூட்டணி கிடையாது என்றும் பழனிசாமி இதுவரை வலியுறுத்தி வந்தார்.
ஆளுநரைப் பழனிசாமி சந்திக்கும் முன், அவரது ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்று வெளிப்படையாகக் கூறினார். பாஜகவின் முக்கிய எதிரியான காங்கிரஸ், தற்போது திமுகவின் கூட்டணிக் கட்சியாக உள்ளது. ஜெயக்குமாரின் பேச்சு அந்தக் கட்சிக்கும் பொருந்தும்.
அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், பாஜகவால் பன்னீர்செல்வம், தினகரனுடன் மட்டுமே கூட்டணி அமைக்க முடியும். அதனால், தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டியும் ஏற்படும்.
தினகரனைக் கூட்டணியில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்று பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து தினகரனும் பதிலுக்கு கடுமையாகச் சாடினார். இப்போது, முற்றிலுமாக பழனிசாமியைப் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டார்.
பழனிசாமியைப் பற்றி கடுமையாகப் பேசிவந்த பன்னீர்செல்வம் கூட, இப்போது ஜல்லிக்கட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி வருகிறார். பழனிசாமி தலைமையிலான அணியில் இருக்கும் அனைத்து தலைவர்களும் திமுக அரசை விமர்சிப்பதில் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
Read in : English