Read in : English
அதிமுகவின் போட்டி அணிகளுடன் இணைய வேண்டும் என்று பாஜக தரும் நெருக்கடியை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக எதிர்ப்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி வியூகத்தை அமைப்பதில் பாஜகவுக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு மட்டுமே உள்ளது. இந்தச் சூழலில் அதிமுக தலைமைப் பதவிக்குப் போட்டியிடுபவர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்துகொள்ளுமாறு பழனிசாமியைப் பணியவைக்கும் முயற்சி நடந்து வருவதாகவும், அதில் பாஜக தோல்வி அடைந்தால் அதிமுக அணிகளுக்கு இடையே போட்டி ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் சொல்லப்படுகிறது. அதைத் தவிர்க்க, அதிமுகவை ஒருங்கிணைக்க பாஜக செய்யும் முயற்சிகள் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டி.டி.வி.தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்படுவதற்கான தெளிவான அறிகுறிகள் தென்படுகின்றன. ஆனால், மூன்று போட்டித் தலைவர்களுடனும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை மிகுந்த உறுதியுடன் நிராகரித்து வருகிறார் பழனிசாமி.
மேலோட்டமாகப் பார்த்தால், தேர்தல் களத்தில் ஆளும் திமுகவை எதிர்த்து நிற்க வலுவான அதிமுக வேண்டுமென்று பாஜக விரும்புவதாகத் தெரிகிறது. இது ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம்;ஆனால், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பவர் என்று கருதப்படும் பன்னீர்செல்வத்தை அதிமுக தலைவர்களில் ஒருவராக நிறுத்துவதன் மூலம் அதிமுகவை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வர பாஜக திட்டம் தீட்டுகிறதா என்ற சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.
அதிமுக போட்டித் தலைவர்களுடனும் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை மிகுந்த உறுதியுடன் நிராகரித்து வருகிறார் பழனிசாமி
பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையை ஏற்று துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதாக வெளிப்படையாகவே கூறியவர் பன்னீர்செல்வம். பாஜகவுக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, தனது அறிவுரைப்படியே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வம் தியானம் செய்ததாக முன்னர் கூறியிருந்தார்.
அப்படி பாஜகவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒருவர் அதிமுகவின் முக்கியத் தலைவராக இருக்க முடியுமா என்ற கேள்வியும் இங்கு எழுகிறது.
மேலும் படிக்க: பறிபோகும் ’இரட்டை இலை’: பணிவாரா எடப்பாடி?
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது வியூகத்தை வெளிப்படுத்திய பழனிசாமி, கூட்டணிக்கு தனது கட்சியே தலைமை தாங்கும் என்று இப்போதே அறிவித்துவிட்டார். கூட்டணியில் இடம்பெறும் கட்சிகளை தலைமை வகிக்கும் கட்சியே முடிவு செய்யும் என்பது பாமரரும் அறிந்தது. தனித்துப் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் அளவுக்கு அதிமுக பலமாக உள்ளது என மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுகவில் போட்டித் தலைவர்களைச் சேர்க்க வற்புறுத்தினால் கூட்டணியில் பாஜகவுக்கே இடம் இருக்காது என்பதாகவே இந்த தனித்துப் போட்டி எச்சரிக்கை நோக்கப்படுகிறது.
இதே நிலைப்பாட்டை வலியுறுத்திய முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ, “அதிமுக ரயில் விரைவில் டெல்லி நோக்கிச் செல்லும். ரயிலில் ஏற விரும்புபவர்கள் வரலாம். இது பெரியார் மண், அண்ணா மண். திராவிடக் கட்சிகளால் மட்டுமே இங்கு ஆட்சி அமைக்க முடியும்” என்று பாஜகவை எச்சரித்துள்ளார். ஆனால், இதுவரை பழனிசாமி கூட்டணிக்கான கதவுகளைச் சாத்தவில்லை.
2019 மக்களவைத் தேர்தலில் உடன்பாடு செய்தது கொண்டதுபோல அதிமுக அணியில் பாஜகவுக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்படலாம். ஆனால், அப்போது பழனிசாமி ஆட்சியில் இருந்தார். தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். இப்போது டெல்லியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக கூடுதல் இடங்களைக் கேட்க வாய்ப்பு அதிகம்.
பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் போட்டியிடுவதைவிட அதிக வெற்றிகளைப் பெறுவதையே பாஜக விரும்பும்
பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோருடன் கூட்டணி அமைத்து, அதனை வழிநடத்தி, அதிகத் தொகுதிகளில் பாஜகவால் போட்டியிட முடியும். ஆனால், அதிக இடங்களில் போட்டியிடுவதைவிட அதிக வெற்றிகளைப் பெறுவதையே பாஜக விரும்பும்.
கூட்டணி மட்டுமல்லாமல், எம்ஜிஆரின் மந்திரச் சின்னமான ‘இரட்டை இலை’ யாரிடம் இருக்கிறது என்பதும் தேர்தல் முடிவுகளில் முக்கியப் பங்கு வகிக்கும். இரட்டை இலை முடக்கப்பட்டால் 61 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் ஆதரவைப் பெற்றுள்ள பழனிசாமிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாகலாம். ஒருவேளை சின்னம் பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்துவிட்டால் அவரும் சம அளவில் மோதும் வாய்ப்பு இருக்கிறது.
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி பிளவுபட்டவுடன் ‘வில் அம்பு’ சின்னத்தை விரைவாக முடக்கியது இந்தியத் தேர்தல் ஆணையம். ஆனால் 2,661 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,550 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஆதாரங்களை வழங்கியுள்ள பழனிசாமியின் மனு மீது ஆணையம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த முறை 10 எம்.எல்.ஏக்களுடன் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் விலகியதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டபோது, அப்போதைய முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவாக 123 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையம் ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்கியது.
பன்னீர்செல்வம் மீண்டும் இணைந்தபின்னும் அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு ‘இரட்டை இலை’ வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
பழனிசாமிக்குப் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. ஆனால், அவர் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ‘இரட்டை இலை’ சின்னத்தை ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் உத்தரவு பிறப்பிக்கவில்லை.
இரட்டை இலை இல்லாமல் பழனிச்சாமி வாக்குகளைப் பெற முடியாது என்று தினகரன் கூறியது சின்னத்தை வைத்து ஆடப்படும் விளையாட்டை வெளிப்படுத்துகிறது
உச்ச நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்குச் சின்னம் ஒதுக்க பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் இருவரது கையெழுத்தும் தேவைப்படும். இந்த காரணத்தால் இரண்டு அணிகளும் உள்ளாட்சி இடைத்தேர்தல்களைப் புறக்கணித்து வருகின்றன. தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்காமல் இருந்தால் இரட்டை இலையை எந்த அணியும் பயன்படுத்த முடியாது.
தினகரனும் இந்த சூழலைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரட்டை இலை சின்னம் இல்லாமல் பழனிச்சாமி வாக்குகளைப் பெற முடியாது என்றும் அவர் கூறியது சின்னத்தை வைத்து ஆடப்படும் விளையாட்டை வெளிப்படுத்துகிறது.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்கியிருந்த போதும் திமுக எளிதாக வெற்றி பெற்றது. தற்போது திமுக ஆட்சியில் இருக்கிறது. மின் கட்டண உயர்வு போன்ற காரணங்களால் மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தாலும் எதிர்க்கட்சி வாக்குகள் பிளவுபடும்போது மீண்டும் திமுக பிரமாண்டமான வெற்றிபெறும் வாய்ப்புகளே இருக்கின்றன.
அதேநேரத்தில், தற்போதைய நிலைப்பாட்டில் பழனிசாமி உறுதியாக நின்றால் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காகப் பாஜக தீட்டும் திட்டங்கள் கானல்நீரில் மீன் பிடிக்கும் முயற்சியாகவே முடியும்!
Read in : English