Read in : English
இந்து அடையாள அரசியல் இதுவரை தமிழ்நாட்டில் எதிர்பார்த்த பலனைத் தராத நிலையில் ‘தமிழ்’ அரசியலை பாஜக கையில் எடுத்துள்ளது. அண்மையில் தமிழ்நாடு வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ் மொழியைப் புகழ்ந்து பேசியதுடன் திமுக அரசு பொறியியல், மருத்துவம் ஆகிய உயர்படிப்புகளில் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கோரிக்கையையும் வைத்தார்.
ஐஐடி, ஐஐஎம் மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்று அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்தது. அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து ஆங்கிலத்துக்கே திமுக அதிக முக்கியத்துவம் தருகிறது என்ற அடுத்த பிரச்சாரத்தை பாஜக ஆரம்பித்தது.
தமிழ் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல், அரசியல் ஆதாயங்களுக்காக திமுக தமிழைப் பயன்படுத்துகிறது என்று தமிழ்நாடு பாஜக தலைவர்கள் குற்றம் சாட்டிவரும் நேரத்தில் அமித் ஷாவின் இந்தக் கருத்து வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழ் தொடர்பான பிரச்சினைகளை மையமாக வைத்து நடக்கும் அரசியல் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்டது போல் பாஜகவின் அண்மைச் செயல்பாடுகள் இருக்கின்றன
பாஜகவின் தமிழ் பற்று!
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுக்கு வந்தபோது, “தமிழ் உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் மொழியைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு” என்று கூறினார். கூடவே, “மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் தமிழ் மொழியைப் பயிற்று மொழியாக திமுக அரசு அறிமுகம் செய்தால், அது தமிழுக்குச் செய்யும் சிறந்த சேவையாக இருக்கும் ” என்று குறிப்பிட்டார்.
பாரதிய ஜனதா கட்சி இந்தியை மட்டும் வலியுறுத்தவில்லை என்றும், கல்விச் செயல்பாட்டில் ஆங்கிலத்தை அகற்றி தாய்மொழியை வளர்க்க விரும்புகிறது என்றும் காட்டிக்கொள்ளும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.
அமித் ஷா மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடி கூட பலமுறை தமிழைப் புகழ்ந்துள்ளார். அடிக்கடி திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டி வருகிறார். இமாச்சலப் பிரதேச தேர்தல் பிரசாரத்தின்போது கூட தமிழ்நாடு பற்றிக் குறிப்பிட்டவர், அறுபதுகளில் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்று கூறினார். இமாச்சலப் பிரதேச தேர்தலின்போது தமிழ்நாட்டைப் பற்றி மோடி பேசியது, பாஜகவின் அரசியல் செயல்திட்டத்தில் தமிழ்நாட்டுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையே காட்டுகிறது.
மேலும் படிக்க: உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு: எதிர்க்கும் தமிழ்நாடு!
மருத்துவப் படிப்பில் தமிழ்!
பாஜகவின் தமிழ் அடையாள அரசியலை திமுக எவ்வாறு எதிர்கொள்கிறது?
அமித் ஷாவின் கருத்தை வரவேற்கும்விதமாக உடனடியாகப் பதிலளித்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. பொறியியல் படிப்பில் 12 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் வழிக் கல்வியைத் திமுக அரசு அறிமுகப்படுத்தியதைச் சுட்டிக்காட்டியவர், தமிழில் மருத்துவப் படிப்பை அறிமுகப்படுத்த மூன்று பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகக் கூறினார்.
அதோடு நின்றுவிடாமல், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்றும், சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். ஒன்றிய அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாய மொழியாக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் பொன்முடி.
இந்த கோரிக்கைகளுக்கு இதுவரை பாஜகவிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல தமிழ் தேசிய அரசியல் அமைப்புகள், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு 80 சதவீத இடஒதுக்கீடு கோரி வருகின்றன. தமிழர் அடையாள அரசியலில் பாஜகவும் இறங்குவது அவற்றை அரசியல் களத்தின் மையத்துக்குக் கொண்டு வருமென்று கருதப்படுகிறது.
இந்தியை மட்டும் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தவில்லை; கல்விச் செயல்பாட்டில் ஆங்கிலத்தை அகற்றி தாய்மொழியை வளர்க்க விரும்புகிறது என்றும் காட்டிக்கொள்ளும் வகையில் அமித் ஷாவின் பேச்சு அமைந்தது
தமிழ்நாட்டில் பாஜக!
இந்தியாவில் பாஜகவால் இரட்டை இலக்க வாக்குகளைக் கூட எட்ட முடியாத மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டு மக்களால் மதிக்கப்படும் பாஜக தலைவர் எனும் சிறப்பு முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு மட்டுமே உள்ளது. அவரது அமைச்சரவையில் திமுக, மதிமுக இரண்டும் அங்கம் வகித்தன. இலங்கையில் தமிழர்களுக்கான தனி தாயகத்தை ஆதரிக்கும் தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பில் (TESO) வாஜ்பாய் உறுப்பினராக இருந்தார். அவர் பிரதமராக இருந்தபோதுதான் தேசிய அளவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்காது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு, அப்படியொரு நிலைப்பாட்டை நோக்கி பாஜக நகரவே இல்லை.
1965ல் வெடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தொடர்ந்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது திமுக. 2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை ராணுவம் போர் நடத்தியபோது, அதனை நிறுத்தக் கோரி முத்துக்குமார் உள்ளிட்ட 17 தமிழர்கள் தீக்குளித்து இறந்தனர். 2017ஆம் ஆண்டு தலைவர்களும் அரசியல் கட்சிகளும் இல்லாமல் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் முன்வைத்தே நடைபெற்றன.
மேலும் படிக்க: வயர்-மெட்டா-பாஜக சர்ச்சை: சிறுதவறுக்காக ஊடகச் சுதந்திரத்தைப் பலி கொடுக்க முடியுமா
‘பொன்னியின் செல்வன்’ திரைப்பட வெற்றியைப் பயன்படுத்தி, ராஜராஜ சோழனை இந்துப் பேரரசர் ஆகக் காட்ட பாஜக முயன்றபோது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் இந்துக்கள் இல்லை என்று கடும் எதிர்ப்பு உருவானது. அதன் தொடர்ச்சியாக, இந்து சமய அறநிலையத் துறையையே சைவம், வைணவம் என்று இரு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
இதையடுத்து, தமிழ்நாட்டில் தமிழ் தொடர்பான பிரச்சினைகளை மையமாக வைத்து நடக்கும் அரசியல் மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது என்பதையும் இந்து அடையாள அரசியல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் உணர்ந்துகொண்டது போல் பாஜகவின் அண்மைச் செயல்பாடுகள் இருக்கின்றன.
இப்போது ஆளுநர் ஆர்.என்.ரவி கூட ‘இந்து’ என்பதற்குப் பதிலாக ‘சனாதன தர்மம்’ என்ற வார்த்தையை மட்டுமே பயன்படுத்துவதைக் கூட, இந்த கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
‘இந்து’ என்பதற்குப் பதிலாக ‘சனாதன தர்மம்’ என்ற வார்த்தையை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்துவதைக் கூட, இந்த கண்ணோட்டத்திலேயே பார்க்க வேண்டியிருக்கிறது
தமிழார்வச் செயல்பாடு!
2014ல் நரேந்திர மோடியின் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது , பாஜகவின் அப்போதைய எம்பியும் ஆர்எஸ்எஸ் வார இதழான பாஞ்சஜன்யாவின் முன்னாள் ஆசிரியருமான தருண் விஜய் தமிழ் அரசியலைக் கையிலெடுத்தார். வட இந்தியப் பள்ளிகளில் திருக்குறள் கற்பிக்கப்பட வேண்டும் என்று கோரி ‘குறள் யாத்திரை’ நடத்தினார்; உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவ முயன்றார்.
ஆனால், திருவள்ளுவர் தாழ்த்தப்பட்டவர்களால் பாராட்டப்படும் ஒருவர் என்றும், ஆதிசங்கரருக்கு அருகில் அவரது சிலையை அனுமதிக்க முடியாது என்றும் ஹரித்துவாரில் உள்ள இந்து சாமியார்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; அதனால் வள்ளுவரின் சிலையை நிறுவவில்லை.
காங்கிரஸ் ஆட்சியின்போது தமிழைச் செம்மொழிகளில் ஒன்றாக ஆக்கியபோதும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் வாக்குகள் சுமார் ஐந்து சதவீதமாகக் குறைந்துவிட்டது. தமிழைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு என்று உதட்டளவில் சொல்லிக்கொண்டிருக்கும் பாஜக நடைமுறையில் தமிழ் மீதான அன்பைக் காட்ட ஏதும் திட்டங்கள் வைத்துள்ளதா என்று தெரியவில்லை. செயலளவில் தமிழுக்கு எதுவும் செய்யாமல் சொல்லளவில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் தமிழ் அடையாள அரசியல் களத்தில் தாக்குப்பிடிப்பது கடினம்!
Read in : English