Read in : English
1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை நகரம் அதிரத் தொடங்கியது. மருத்துவமனை, ரயில்வே நிலையம், மார்க்கெட் பகுதி என 18 இடங்களில் அடுத்தடுத்து வெடித்த வெடிகுண்டுகள் ரத்தத்தை உறைய வைத்தன. ரத்த வெள்ளத்தில் உடல்கள் சிதறிக் கிடக்க, ஆங்காங்கே மரண ஓலங்கள் காதைக் கிழித்தன.
கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். கோடிக்கணக்கில் பொருட்சேதம் ஏற்பட்டது.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து கால் நூற்றாண்டை நெருங்கிய பின்பும் அதன் தாக்கமும் வடுக்களும் இன்றும் அதே உயிர்ப்புடன் இருப்பது வேதனைக்குரியது. குண்டு வெடிப்பிற்கு பிறகு இஸ்லாம் சமூகத்தின் மீதான அச்சுறுத்தலும், புறக்கணிப்பும் இன்றும் அவர்களது வாழ்வை நரகமாக்கி வருகிறது.
ஒரு சிலரின் சுயநலம், ஆத்திரம், கோபம் பலரது வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டுள்ளது.
• குண்டு வெடிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த சமூகம் அடிப்படையிலான புறக்கணிப்பு (இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற மனப்போக்கு)
• தொழில் நகரமாக இருந்த கோவை, பதற்றமான கண்காணிப்புப் பகுதியாக மாறியது
• பதற்றமான பகுதி என முத்திரை குத்தப்பட்டதால் பொருளாதார அளவிலான பாதிப்பு
• குண்டு வெடிப்பில் தொடர்புடைய குடும்பங்களின் அடுத்த தலைமுறையினரின் கல்வி கேள்விக்குறியானது
• சிறையில் உள்ளவர்களது குடும்பத்தாரின், பெண்களின் பாதிப்பு
• குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் குற்றப்பரம்பரையாக்கப்பட்ட அவலம்
• குடிசை வாழிட உணர்வுக்குள் தள்ளப்பட்ட இஸ்லாமிய சமூகம்
இதற்கான கள ஆய்வில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
டவுன் ஹால் அருகே அருகே ராஜவீதியில் உடற்பயிற்சி நிலையம் வைத்திருப்பவர் பெரோஸ்பாபு. கடந்த 10 ஆண்டுகளாக உடற்பயிற்சி நிலையம் வைத்திருக்கும் இவர் தனக்குப் புதிய சிக்கல் வந்துள்ளதாகக் கூறுகிறார்.
கோவை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து கால் நூற்றாண்டை நெருங்கிய பின்பும் அதன் தாக்கமும் வடுக்களும் இன்றும் அதே உயிர்ப்புடன் இருப்பது வேதனைக்குரியது
“ஒரு சிலர் கடை வைத்திருப்பதால், பணி முடிந்து இரவு 8 மணிக்கு மேல் தான் உடற்பயிற்சி நிலையத்திற்கு வருவார்கள். சில இளைஞர்கள் நீளமான தாடி வைத்திருப்பார்கள். தற்போது ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாலும், 1998ம் ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய நவாபின் மகன் கைது செய்யப்பட்டதாலும் இங்குள்ள மற்ற சமூகத்தினருக்கு இஸ்லாமியர்களைக் கண்டால் ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனால், தொழில்ரீதியாக நேரடியாகப் பாதிக்கப்படுகிறேன்.
தாடி வைத்திருப்பவர்கள் பயிற்சி நிலையத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு கூறுகிறார் கடை உரிமையாளர். ஒரு சிலர் செய்த தவறுக்கு ஒட்டுமொத்த சமூகத்தையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது எந்தவிதத்தில் சரியாகும். குண்டு வெடிப்பில் கைதானவர் திலகம் வைத்திருந்தால், இதே சமூகம் திலகம் வைத்த அனைவரையுமே தவறாக பார்த்திடுமா?” என பெரோஸ் பாபு கேள்வி எழுப்புகிறார்.
மேலும் படிக்க: கோவை குண்டுவெடிப்பில் என்ஐஏ விசாரணை: முடங்கிய அரசியல் ஆட்டம்!
“தாடி வைத்திருப்பதும், என் பெயரும் தான் இங்கு குற்றமா…?” என்று கேட்கிறார் சலீம்(பெயர் மாற்றம்). “நீளமான தாடி வைத்திருப்பதால் நான் ஒரு அமைப்பில் தொடர்புடையவாக இருப்பேன் என என்னைப் பற்றி கணிப்பதற்கு அவர்கள் யார்? பஞ்சாப்பில் போதைப்பொருள் புழக்கம் அதிகம், அதனால் தலைப்பாகை அணிந்த சிங்குகள் அனைவரையும் போதைப்பொருள் கடத்துபவர்கள் எனக் கூறிட முடியுமா? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகிறார்.
1998ம் ஆண்டு கலவரத்தின் போது 18 வயது சிறுவனாக இருந்தவர் அப்பாஸ். “அன்று என்.எச்.சாலையில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன. இந்தியாவின் எந்த மூலையில் இருப்பவர்கள் கோவைக்கு வந்தாலும், ஷோபா துணிக்கடையில் ஒரு துணியாவது வாங்காமல் செல்ல மாட்டார்கள். மிகப்பெரிய அந்த துணிக்கடை கலவரத்தின் போது சூறையாடப்பட்டது. கடையில் இருந்த பட்டுபுடவைகள், உயர் ரக துணிகளை அள்ளிக் கொண்டு ஓடினர். தட்டி கேட்க வந்தவர்களை கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு வெடித்து விடுவோம் என மிரட்டினர். அதன் உரிமையாளருக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பில் அப்பகுதியை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டது.
சொந்தமாகக் கடை நடத்தி வந்தவர்கள் கலவரத்தால் ஒரே நாளில் வீதிக்கு வந்தனர். குனியமுத்தூர், குமரன் மார்க்கெட், கரும்புக்கடை, உக்கடம் பகுதியில் ஒன்றாக வாழ்ந்த எங்களின் இஸ்லாமிய சமூகம், மூலைக்கு ஒரு பக்கமாகச் சிதறியது. அதுவரை அண்ணன் தம்பியாய் பழங்கியவர்கள் கலவரத்துக்குப் பிறகு எங்கு சென்றார்கள் என்று கூட தெரியவில்லை.
சாலையில் தள்ளுவண்டி கடை வைத்தவர்கள் அனைத்தையும் இழந்து நடுரோட்டில் நிற்கதியாய் நின்றனர். நூற்றுக்கணக்கான தள்ளுவண்டிக் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், பழங்கள், அரிசி, மல்லிகைப்பொருட்கள், துணிகள் வாரி செல்லப்பட்டன. வாழ்வாதாரத்தை இழந்த சிலர் வேறு இடத்துக்கு கூலி வேலைக்கு சென்றனர். கடன் வாங்கி கடைகளை நடத்தி வந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
1998 கலவரத்தின் போது அழிக்கப்பட்ட இஸ்லாமியர்களின் கடைகள் தற்போது வேறொரு சமூகத்துக்கு சொந்தமாக உள்ளது. கண்ணெதிரில் எங்களின் சமூகம் பாதிக்கப்பட்டு, மற்றொரு சமூகம் ஆக்கிரமித்து இருப்பதை பார்த்து சகித்துக் கொண்டு வாழ்கிறோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு சிதறடிக்கப்பட்ட என் சமூகம் மீண்டும் ஒன்றிணையவில்லை” எனக் கவலையுடன் கூறுகிறார் அப்பாஸ்.
வாடகைக்கு வீடு தருவதில்லை, வேலை கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள், சிறை சென்றவரின் மனைவி என்ற அவப்பெயருடன் வாழ்ந்து வருகிறேன்
“கலவரம் நடந்தப்போது எனக்கு 15 வயது. போலீஸ்காரர்கள் துப்பாக்கியுடன் வந்து எங்கள் வீட்டுக்குள் இருந்த அனைத்தையும் தூக்கிப்போட்டு உடைத்தனர். ஒரு போலீசார் துப்பாக்கியை திருப்பி அதன் பின்பக்கமாக எனது நெஞ்சில் அடித்தார். இத்தனை ஆண்டுகள் கடந்தும் அதன் வலி என் நெஞ்சில் உள்ளது. மருத்துவமனைக்குச் சென்று வருகிறேன்.
என் பெற்றோருக்கு இரு மகன்கள், 8 மகள்கள். எனது தந்தை இறந்து விட்டார். கலவரத்தின்போது, வீட்டில் இருந்த அனைத்து ஆண்களையும் போலீசார் கைது செய்தனர். நாங்களும் ஆண்களாக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் இருப்போம். பெண்கள் என்பதால் எங்களைக் கைது செய்யாமல் விட்டனர். ஆனால், சிறை செல்லாமல் 24 ஆண்டுகளாகத் தண்டனையை அனுபவித்து வருகிறோம்.
எங்கள் வீட்டு ஆண்கள் சிறைக்குச் சென்றதால், குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்தோம். வேறு வழியில்லாமல் நாங்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தோம். ஒரு பக்கம் காசு சம்பாதித்து குடும்பத்தைப் பார்க்க வேண்டும், மறுபக்கம் சிறையில் உள்ள ஆண்களை விடுதலை செய்யப் போராட வேண்டும். இப்படியே எங்களின் 24 ஆண்டு கால வாழ்க்கை வீணாகிவிட்டது. ஒரு தலைமுறையையே இழந்து விட்டு நிற்கிறோம்” என்று சொல்லும்போது பரிதாவின் கண்களில் நீர் கசிகிறது. (பரிதா பெயர் மாற்றம்)
மேலும் படிக்க: ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு: கடுமை காட்டும் திமுக!
கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைதாகி 24 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பவரின் மனைவி மரியம்( பெயர் மாற்றம்). அவர் பேசுகையில், “கணவர் சிறையில் இருப்பதால் வாழ்க்கை தினமும் நரகமாக உள்ளது. வாடகைக்கு வீடு தருவதில்லை. வேலை கேட்டாலும் கொடுக்கமாட்டார்கள். சிறை சென்றவரின் மனைவி என்ற அவப்பெயருடன் வாழ்ந்து வருகிறேன். கணவர் இல்லாததால், துணி தைப்பதுடன் வீடு வீடாகச் சென்று தவணை முறையில் ஆடைகளை விற்று வருகிறேன்.
குழந்தை பிறந்ததால் அந்த வேலையும் சரியாக செய்ய முடியவில்லை. மருத்துவச் செலவுகளுக்கு என்னுடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். அப்பா எப்போது வீட்டுக்கு வருவார் என என் பிள்ளை கேட்கும்போது பதிலளிக்க முடியவில்லை.
சிறைக்குச் செல்லும்போது என் கணவர் 4ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். இத்தனை ஆண்டுகளில் சிறையில் இருந்தபடி படித்தவர், தற்போது இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளார். 24 ஆண்டுகள் கடந்து விட்டன. இனியாவது அவருக்கு விடுதலை கிடைக்குமா எனக் காத்திருக்கும் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
சிறை சென்றவர்கள் ஒரு முறை பரோலில் வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் ரூ.20,000 இருந்து ரூ.30,000 வரை செலவாகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் திணறும் என்னால் எப்படி அவ்வளவு செலவு செய்து அவரைச் சென்று பார்க்க முடியும். எங்களுக்கு எந்த அமைப்போ, கட்சியோ உதவுவதில்லை. நான் வேலை செய்து தான் என் குடும்பத்தை பார்க்க வேண்டும். ஆனால், அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் எங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி ஆதாயம் பார்க்கின்றன” என அழுகிறார் மரியம்.
“என் சகோதரர் சிறையில் உள்ளார். ஒரு தலைமுறையை இழந்து விட்டோம். 1998ம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண் குழந்தைகளுக்கு சிறை சென்றவர்கள் மாமா, சித்தப்பா, தாத்தா, அண்ணன் என்று கூறவே அஞ்சுகிறோம். ஏனெனில், ஏதாவது ஒரு இடத்தில் சிறியதாகப் பிரச்சினை ஏற்பட்டாலும், எங்கள் பூர்வீகத்தை விசாரிக்கும் போலீசாருக்கு அவர்கள் குண்டு வெடிப்பில் சிறை சென்றவர்களின் உறவினர் எனத் தெரிந்தால், உடனே குற்றவாளிகளாக வழக்கு பதிவு செய்கின்றனர். அப்படித் தான் கல்லூரி படிக்கும் என் சகோதரியின் மகன் மீது 6 மாதத்திற்கு முன்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண் பிள்ளைகளை பிரச்சனைகளில் இருந்து காப்பதே எங்களுக்குப் பெரும்பாடாக உள்ளது” என்கிறார் கதீஜா(பெயர் மாற்றம்).
“சிறையில் உள்ளவர்களுக்கு திருமணம், இறப்பு சம்பவங்களில் ஒரு சில மணி நேரங்களோ அல்லது ஒரு நாள் மட்டுமோ ஜாமீன் கிடைக்கும். கடந்த ஆண்டு என் உறவினரின் தாய் இறந்து விட்டார். கடைசி நேரத்தில் தான் அவரது மகன் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார். இறந்த தாயின் முகத்தைப் பார்க்க மட்டுமே அவர் அனுமதிக்கப்பட்டார். சிறைக் கைதிகளின் குழந்தைகளை கம்பிக்கு இந்தப்புறம் இருந்தபடி காட்டும் வேதனையை யாரிடம் சென்று முறையிடுவது” என்று கேட்கிறார் கதீஜா(பெயர் மாற்றம்).
கலவரத்தில் மிகப்பெரிய அளவில் இருந்த பர்னிச்சர் கடை சூறையாடப்பட்டதாக கூறினார் சித்திக். “கோடிக்கணக்கான பொருட்களை இழந்த அதன் நிர்வாகி இன்று தெருமுனையில் செருப்புக்கடை வைத்துள்ளார். கலவரத்திற்கு பிறகு போலீசாரை கண்டு அச்சப்படும் அவர்கள் யாரிடமும் பேசுவதில்லை.
கடை சூறையாடப்பட்டதால் அவர்களின் குடும்பமே உருக்குலைந்து போனது. கலவரத்துக்குப் பிறகு சொந்தமாகத் தொழில் செய்ய வங்கிக்கடன் வழங்குவதில்லை. கடைகளில் வேலையும் கிடைப்பதில்லை. அதனால் சில முஸ்லீம் சகோதரர்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர்.
எங்காவது ஏதாவது நிகழ்ந்தால் உக்கடம், குனியமுத்தூர், கரும்புக்கடை, மரக்கடை, கேகே நகர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்படுவதால், சமூகத்தில் எங்களைக் குற்றவாளிகளாகவே அரசும் சித்தரிக்கிறது. கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவத்தால் எனது குடியிருப்பு பகுதியில் 20 போலீசார் முகாம் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். எங்கோ கார் குண்டு வெடிக்க இங்கு பாதுகாப்பு போடப்படுகிறது. எங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் வாழும் சூழலை உருவாக்கி விட்டனர். எங்கு குண்டு வெடித்தாலும் அதற்கு இஸ்லாமியன் மட்டும் தான் காரணம் ஆகிறானா..?
எங்கள் பிள்ளைகள் படிப்பை நோக்கி நகர்வதால் வன்முறை குறித்துச் சிந்திக்க நேரமில்லை. ஆனால், பதற்றமான பகுதி என இஸ்லாமியர்கள் வாழும் பகுதியை அடையாளப்படுத்திக் காட்டுவதால், இத்தனை நாட்களாக நட்புடன் பழகியவர்களே எங்களைப் பார்த்து அஞ்சுகின்றனர். அனைத்தையும் இழந்து வலியுடன் வாழும் எங்களுக்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தீவிரவாத முத்திரை குத்தப்படுவது வேதனை அளிக்கிறது” என வருந்துகிறார்.
சிறியதாகப் பிரச்சினை ஏற்பட்டாலும், குண்டு வெடிப்பில் சிறை சென்றவர்களின் உறவினர் எனத் தெரிந்தால் உடனே குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்கின்றனர்
குண்டு வெடிப்பு சம்பவம் நிகழந்து 20 ஆண்டுகள் கடந்தாலும், கோவை தெற்குப் பகுதி பொருளாதாரத்தில் இருந்து மீளவில்லை என எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா தெரிவிக்கிறார். ” கோவை கலவரத்தில் அழிக்கப்பட்ட தொழில்கள் இன்றும் முடங்கியுள்ளன. பெரும்பாலும் இஸ்லாமியர்கள் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தனர். நவம்பர் கலவரத்திற்குப் பிறகு அவர்கள் பொருளாதாரரீதியாக நசுக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான கடைகளும் நிறுவனங்களும் சூறையாடப்பட்டதால் ஒரு சமூகமே ஒட்டுமொத்தமாக பொருளாதார பாதிப்பை சந்தித்தது” என்கிறார்.
நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பதாக அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி, 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பபர்களை விடுவிக்கப்படுவார்கள் என காத்திருந்தவர்களுக்கு அண்மையில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு பின்னடைவை தந்துள்ளதாகவும், அதனால் சிறையில் இருப்பவர்கள் விடுதலையாகி வருவது கேள்விக்குறியாகி உள்ளதாகவும் சிறை சென்றவர்களின் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
Read in : English