Read in : English
தலைமைக் காவலர் ராஜா தனது சக காவலர்களின் பசியாற உணவுப் பொட்டலங்கள் வினியோகிக்க வந்தார். அப்போதுதானே போராட்டக்காரர்களுடன் மல்லுக்கட்ட அவர்களுக்குத் தெம்பு உண்டாகும். ராஜா சீருடை அணியாமல் சாதாரண உடைகள் அணிந்திருந்தார். அப்போது அவர் பணியில்தான் இருந்தார். பின்பு, மேலதிகாரிகளின் கட்டளைக்கிணங்க ராஜா ஒரு எய்ச்சர் போலீஸ் வாகனம் மேலேறி போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டார். அவர் கையில் இருந்தது 0.410 மஸ்கட். இந்தியக் காவல்துறை 1920களில் பயன்படுத்திய பழையதொரு துப்பாக்கி. ராஜா வாகனத்தில் மேல் நின்று போராளிகளைச் சுட்ட அந்தக் கொடூரமான காட்சி தூத்துக்குடியில் குறிப்பிட்ட அந்த கோரமான நாளில் வெளிப்பட்ட காவல்துறை அராஜகத்தின் குறியீட்டுப் படிமமாக ஊடகவியலாளர்களின் மற்றும் பொதுமக்களின் மனங்களில் உறைந்துவிட்டது.
2018, மே 22 அன்று நடந்த தூத்துக்குடித் துப்பாக்கிச் சூட்டில் ராஜாவின் குண்டுகளுக்கு முதலில் கார்த்திக் என்பவர் பலியானார் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சொல்கிறது. அறிக்கை சுடலைக்கண்ணுவைக் கடுமையாகச் சாடியிருக்கிறது. சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் பயிற்சி எடுத்திருந்த சுடலைக்கண்ணு மிருகங்களைச் சுடும் வேட்டைக்காரனைப் போல செயற்பட்டிருக்கிறார் என்று அறிக்கை சொல்கிறது. தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளைவின் அருகே, இந்திய உணவுக் கழக அலுவலகத்தின் அருகே, இறுதியில் மீனவர் குடியிருப்பான திரேஸ்புரத்தில் என்று மொத்தம் மூன்று இடங்களில் சுடலைக்கண்ணு போராட்டக்கார்களை நோக்கிச் சுட்டார் என்று சுட்டிக் காட்டியிருக்கிறது அருணா ஜெகதீசன் அறிக்கை.
திரேஸ்புரத்தில் சுடலைக்கண்ணு 40 வயதான ஜான்சி ராணியை மிக அருகே நின்று சுட்டிருக்கிறார்; அதில் மூளை சிதறி அந்தப் பெண்மணி இறந்துவிட்டார். அன்று ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்த மரணங்களால் திரேஸ்புரத்து மக்கள் மனம்கொதித்து கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்களைக் கட்டுப்படுத்தியாக வேண்டிய சூழல் எழுந்தது என்றது காவல்துறை. சில நாட்கள் கழித்து, இந்தப் பத்திரிக்கையாளர் திரேஸ்புரத்தில் குடிசை மாதிரியான குடிசையில் வசித்த ஜான்சி ராணியின் வசிப்பிடத்திற்குச் சென்றிருந்தரர். அப்போது அந்தப் பெண்மணியின் உறவுக்காரர்கள் தன்மகளுக்குச் சமைக்க மீன்கொடுக்க வெளியே வந்த ஜான்சி ராணியை எப்படிப் போராளியாகப் பார்த்தது போலீஸ் என்று கேட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர்கள் என்று ராஜா, சுடலைக்கண்ணு, சங்கர், ரென்னஸ், சொர்ணமணி மற்றும் சிலரை அருணா ஜெகதீசன் அறிக்கை அடையாளப்படுத்தி இருக்கிறது. உதவி ஆய்வாளர் ரென்னஸ் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்களை ஓடஓட விரட்டி அவர்களை நோக்கி 9 எம்.எம் துப்பாக்கியால் சுட்ட காணொலிக்காட்சி மற்றுமொரு தீய ஞாபகம். அவர்கள் அனைவரும் மேலதிகாரிகளின் ஆணைகள்படி நடந்துகொண்டார்கள். துணைக் கண்காணிப்பாளர் திருமலை, கண்காணிப்பாளர் மஹேந்திரன், துணைக் காவல் தலைவர் – தென்மண்டலத் துணைக் காவல் தலைவர் (டிஐஜி) கபில் குமார் சரத்கர் அல்லது தென்மண்டலக் காவல் தலைவர் (ஐஜி) ஷைலேஷ் குமார் யாதவ் ஆகியோர் அந்த மேலதிகாரிகள் என்று அறிக்கை சொல்கிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளை மாவட்ட நிர்வாகம் மக்கள் மத்தியில் பரப்பியிருந்தால் இந்தப் போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும் என்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம்
அருணா ஜெகதீசன் ஆணையம் 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. மாநில அரசு நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்துவிட்டது. மேற்கொண்டு நடவடிக்கை இனிவரும் நாள்களில் தொடரலாம்.
பலமான ஆதாரங்களோடு அதிர்ச்சியான தகவல்களையும், படுபயங்கரமான சட்டமீறல்களையும் அருணா ஜெகதீசன் ஆணையம் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தூத்துக்குடி போலீஸ் துப்பாக்கிச்சூடு நிச்சயமாக மிகையான ஓர் எதிர்வினை என்ற தனது அடிப்படைக் கருத்தில் ஆணையம் உறுதியாகவே இருந்தது. கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்பதை விட போராட்டக்காரர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற காவல்துறையின் ஆசையில்தான் விளைந்தது இந்தத் துப்பாக்கிச்சூடு என்று அறிக்கை உறுதியாகச் சொல்கிறது.
மேலும் படிக்க: ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?
போராட்டக்காரர்கள் சண்டை போட்டார்கள்: கல்லெறிந்தார்கள். வாஸ்தவம்தான். ஆனால் அவர்களைக் கடுமையான ஆயுதங்களால் கொல்ல வேண்டிய அவசியமில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட வன்முறை முதலில் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் இறந்ததின் விளைவாக நிகழ்ந்தது. அதனால் வன்முறையைக் கட்டுப்படுத்தத்தான் தாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினோம் என்று காவல்துறை அதிகாரிகள் சொல்ல முடியாது என்று அருணா ஜெகதீசன் அறிக்கை முடிவாகச் சொல்லியிருக்கிறது.
காவல்துறைதரப்பு வாதம் பின்வருமாறு இருந்தது:
ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூடச்சொல்லி, ஆயிரக்கணக்கான போராளிகள் கற்களையும், சிலசமயங்களில் பெட்ரோல் குண்டுகளையும் வீசிக்கொண்டிருக்கும் போது காவலர்களால் வேறென்ன செய்ய முடியும்? போராளிகளின் எண்ணிக்கை காவலர்களின் எண்ணிக்கையை விட மிகமிக அதிகமானதால், ஏராளமான காவலர்கள் தாக்கப்பட்டனர். அதனால் அவர்கள் விவிடி சிக்னலில் பயந்தோடினர். தடையுத்தரவையும் மீறி போராளிகள் அங்கிருந்து முன்னேறி சென்றனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இடதுசாரி செயற்பாட்டாளர்கள் வேறு அவர்களின் கொந்தளிப்பு உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டனர். நிலவரம் கலவரம் ஆனது; அதனால் பெரியதோர் அதிகார வலிமையை, பலத்தைப் பிரயோகிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி வாதித்தது காவல்துறை.
அருணா ஜெகதீசன் ஆணையம் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்டி போராட்டத்தைக் காவல்துறை எப்படிப் பார்த்தது என்பதை எடுத்துரைத்தது. 2018, மே 23 அன்று அண்ணா நகரில் துப்பாக்கிச் சூட்டில் கடைசியாகக் காயம்பட்ட மனிதர் ஒருவர் தரையில் விழுந்து கிடந்தார். காவலர்கள் அவரது கால்களைப் பிடித்துத் தரதரவென்று இழுத்து சாலையோரத்தில் போட்டனர். அப்போது அவர் வலியால் நெளிந்தார். வலியால் நெளிந்த மனிதரைப் பார்த்து அவன் சும்மா நடிக்கிறான் என்று காவலர்கள் முணுமுணுத்தனர்.
அதற்கு முந்திய நாள், ஒருபக்கம் காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது, இன்னொரு பக்கம் அவர்கள் செல்வசேகர் என்பவரை தலையிலும் மார்பிலும் லத்திகளால் அடித்துக் காயப்படுத்திக் கொன்றனர் என்று அருணா ஜெகதீசன் அறிக்கை சொல்கிறது. தன்பெண்ணின் பூப்புனித விழாவுக்கு அழைப்பிதழ்கள் வினியோகிக்க வந்த அந்தோனி செல்வராஜ் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த காவலர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். காயம்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு போகக் கூட காவலர்கள் மறுத்துவிட்டனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் போன்ற நல்ல உள்ளம் கொண்ட சில மனிதாபிமானவாதிகள்தான் காயம்பட்டவர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் என்று அறிக்கை சொல்கிறது.
போராட்டங்களின் விடாப்பிடியான தன்மையும், மூர்க்கமும் ஒருவேளை காவல்துறையின் கோபத்தைத் தூண்டியிருக்கலாம். சொல்லப்போனால் 2018, மே 22 போராட்டத்தின் நூறாவது நாள். சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்திய ஓர் ஆலைக்கு எதிரான தீவிர எதிர்ப்பு அது.
போராட்டம் தீவிரமாவதைத் தடுப்பதற்குப் பல்வேறு வாய்ப்புகள் இருந்தன என்றும், ஆனால் அவை தவறவிடப்பட்டன என்றும் அருணா ஜெகதீசன் அறிக்கை கூறுகிறது. போராட்டத்தின் போது ஸ்டெர்லைட் ஆலை பத்து நாள்கள் பராமரிப்பிற்காக மூடப்பட்டிருந்தது. 2018, ஏப்ரல் 9 அன்று ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி தர மறுத்தது. ஏனென்றால், விஷக் கழிவை உருவாக்கி அதை ஒழிப்பதற்கு ஆலைக்குக் கொடுக்கப்பட்டிருந்த அனுமதி 2013 ஆம் ஆண்டே காலாவதியாகியிருந்தது.
ஆனாலும், ஆலை இயங்கிக் கொண்டுதான் இருந்தது. மேலும் ஒன்றிய அரசு விதிகளின்படி ஸ்டெர்லைட் நிறுவனம் ஒரு ஜிப்சம் தேக்கத்தைக் கட்டியிருக்க வேண்டும். ஆனால், அதைக் கட்டவில்லை. மேலும் சட்டப்படி நிலத்தடிநீர் ஆய்வு செய்திருக்க வேண்டும்; அதையும் செய்யவில்லை. உப்பார் நதியில் கொட்டப்பட்ட தாமிரக் கழிவை அகற்றும்படி நிறுவனம் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அது அகற்றப்படவில்லை. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்த இந்தத் தகவல்களை எல்லாம் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
அருணா ஜெகதீசன் ஆணையம் 17 காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்திருக்கிறது. மாநில அரசு நான்கு பேரைப் பணியிடை நீக்கம் செய்துவிட்டது. மேற்கொண்டு நடவடிக்கை இனிவரும் நாள்களில் தொடரலாம்
ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல்முறையீட்டு ஆணையத்திடம் ஸ்டெர்லைட் மேல்முறையீடு செய்தது என்று அறிக்கை சொல்கிறது. 2018, மே 4 அன்று அந்த மேல்முறையீட்டு ஆணையமும் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்க மறுத்தது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளை மாவட்ட நிர்வாகம் மக்கள் மத்தியில் பரப்பி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த ஆணைகளை அமல்படுத்த மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தால், இந்தப் போராட்டம் எப்போதோ முடிந்திருக்கும் என்று எடுத்துரைக்கிறது அருணா ஜெகதீசன் அறிக்கை.
ஒழுங்கு நடவடிக்கை முகாந்திரமாக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலையின் மின்சாரத் தொடர்பைத் துண்டிக்கும்படி டான்ஜெட்கோவைக் கேட்டுக்கொண்டது. அதனால் அந்த ஆலையை மூடிவிட வேண்டும் என்ற நோக்கம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கே இருந்திருக்கிறது. அதுதானே தூத்துக்குடிப் போராளிகளின் நோக்கமும் கூட! ஆனால் துரதிர்ஷ்டம்! அந்த ஆணை ஒருநாள் தாமதமாக வந்தது; அப்படியொரு ஆணை வருகிறது என்று போராளிகளுக்குத் தெரியவில்லை.
மேலும் படிக்க: விற்பனைக்கு வருகிறது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை!: பெயர் மாறினாலும், பிரச்சினை தீருமா?
பொது சுகாதாரத்தின்மீது ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை மதிப்பீடு செய்ய ஒரு குழுவை ஏற்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் அப்போதைய தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு வாட்ஸ்அப் மூலம் கேட்டுக் கொண்டார். அப்படியோர் ஆய்வு நடந்திருந்தால், போராளிகளைச் சாந்தப்படுத்தியிருக்க முடியும்.
அரசு விதித்த வழமையான மீன்பிடித் தடையால் சும்மாவிருந்த மீனவர்களை இடதுசாரிகள் நம்பவைத்து, ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வைத்துவிடுவார்கள் என்று உளவுத்துறைத் தலைவர் கே.என்.சத்யமூர்த்தி அப்போதைய டிஜிபி கே. ராஜேந்திரனிடம் சொல்லியிருந்தார். ஆதலால் மீனவர்களோடு நயமாகப் பேசி அவர்களைப் போராட்டத்தில் குதிக்கவிடாமல் அரசு செய்யவேண்டும் என்றார் அவர். இவையெல்லாம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சொல்லப்பட்டது. ஆனால் அவர் செயல்படவில்லை. மே 22 அன்று திரண்ட போராளிகளிலேயே ஆகத்தீவிரமாகப் போராடியவர்களுடன் மீனவர்கள் இருந்தார்கள். 16 வயது ஸ்னோலின் உட்பட பல மீனவர்கள் உயிரிழந்தார்கள்.
போராட்டம் தீவிரம் ஆக ஆக, பல்வேறு தரப்பு மக்களும் அதில் குதிக்க ஆரம்பித்தனர். இறுதியில் 100 ஆவது நாள் யுத்தத்திற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். அதற்குள் மக்கள் அதிகாரம் போன்ற இடதுசாரி அமைப்புகள் மக்கள் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பை எடுத்துக் கொண்டன.
ஆனால், போராளிகள் திட்டமிட்டிருந்த 100ஆவது நாள் தீவிரப் போராட்டத்தின்போது வன்முறை ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதைத் தடுக்கும்வகையில், மே 21 அன்று நடந்த சமாதானக் குழுக் கூட்டத்திற்கு அந்த இடதுசாரி அமைப்புகள் அழைக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டிருக்கும் ஆணைய அறிக்கை, அவர்கள் அழைக்கப்பட்டிருந்தால் வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதையும் குறிப்புணர்த்துகிறது.
அந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகரத்தில் பழைய பேருந்து நிலையத்தின் அருகே இருக்கும் எஸ்ஏவி மைதானத்தில் எதிர்ப்புக் கூட்டம் நடத்தப் போராளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மே 21 அன்று இரவு இரண்டு காவல்நிலைய அதிகார வரம்புப் பகுதிகளில் பிரிவு 144-ன் படி தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டது. ஒரு புறம் போராளிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது, மறுபுறம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பெருங்குழப்பம் விளைந்தது. இரவோடு இரவாக போடப்பட்ட தடையுத்தரவு பற்றி மக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.
பனிமய மாதா தேவப் பேராலயத்தில் (பாஸிலிகா: தூத்துக்குடி மக்கள் அதைப் பெரிய கோயில் என்று அழைப்பார்கள்) மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். அது ஒரு தவறான நடவடிக்கை என்று சொல்கிறது அருணா ஜெகதீசன் ஆணையம். அங்கிருந்துதான் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்ல ஆரம்பித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தருகே நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பெறப்படவில்லை என்பதால் அது சட்டத்திற்குப் புறம்பானது என்று சுட்டிக் காட்டுகிறது அறிக்கை.
தூத்துக்குடியில் பல்வேறு போராட்டக் களங்களில் விசேஷ செயல் மாஜிஸ்ட்ரேட்டுகளை நியமிக்கும் உத்தரவு மே 21 அன்று பின்னிரவில் பிறப்பிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டுக்கான உத்தரவு வழங்க இந்த மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக ஏரியாவில் விசேஷ செயல் மேஜிஸ்ட்ரேட்டாக நியமிக்கப்பட்டவர் கே. ராஜ்குமார் தங்கசீலன். போராளிகள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த அவர் ஆணையிடவில்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையம் உறுதியாகத் தெரிவிக்கிறது.
திரேஸ்புரத்தில் நியமிக்கப்பட்டிருந்த வேறொரு விசேஷ செயல் மாஜிஸ்ட்ரேட், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஏரியாவில் துப்பாக்கிச் சூட்டுக்குத் தான் உத்தரவு வழங்கியதாகச் சொன்னார்; காரணம் அங்கே இருக்க வேண்டிய ராஜ்குமார் தங்கசீலன் அங்கே இல்லாமல் போய்விட்டார் என்றார் அவர். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ராஜ்குமார் தங்கசீலன் இருந்ததற்கான ஆதாரங்களை திரட்டியிருந்த ஆணையம், திரேஸ்புர விசேஷ செயல் மாஜிஸ்ட்ரேட் கொடுத்த வாக்குமூலம் பொய் என்பதைக் கண்டுபிடித்தது. மேலும், இதை உறுதிப்படுத்த ராஜ்குமார் தங்கசீலன் இப்போது உயிரோடு இல்லை என்பதை அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பிடுகிறது.
Read in : English