Read in : English
தமிழ்நாட்டில் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழ்நாட்டில் சுமார் 50 இடங்களில் ஒரு பேரணியை நடத்த உத்தேசித்திருந்தது. ஆனால், தமிழக அரசு இந்தப் பேரணியை நடத்த அனுமதி தரவில்லை. இதைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. தங்கள் சீருடையுடன் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தவும் பொதுக்கூட்டவும் அனுமதி கோரியது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வு ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்துத் தீர்ப்பு வழங்கியது.
இந்தப் பேரணி நடத்தப்பட்டால் தமிழ்நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளையலாம் எனச் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் வரலாறு தெரிந்தவர்களால் இந்த அச்சத்தைத் தவிர்க்க இயலவில்லை. இப்படியான சூழலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியது. ஆர்எஸ்எஸ் பேரணியைத் தடைசெய்ய வேண்டும் என்று கோரிய அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மறுத்துவிட்டது. ஏற்கெனவே ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறிவிட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அதே அக்டோபர் 2 அன்று சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்தது. இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியும், இன்னும் சில அமைப்புகளும் கலந்துகொள்ளும் என்று தெரிவித்தன.
சமூகநீதி பேசும் திராவிட அரசியலும் சனாதனத்தை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சிந்தாந்தரீதியில் ஒன்றுக்கொண்டு கடுமையாக முரண்படுபவை. ஆகவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பை மிகுந்த எச்சரிக்கையாகவே கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்த திராவிட கட்சிகள் ஆட்சியே தொடர்ந்து நடந்துவருகிறது.
ஒரே நாளில் நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் பேரணி, சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிப் போராட்டம் இரண்டும் சேர்ந்து தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் சூட்டைக் கிளப்பியிருந்தது. இந்த நிலையில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடைகாரணமாக நிலவும் அசாதாரண சூழலைக் காரணம் காட்டி சட்டம் ஒழுங்கைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு இந்த இரண்டு நிகழ்வுகளையுமே தடைசெய்துவிட்டது. ஆர்எஸ்எஸ் பேரணியைத் தடைசெய்திருப்பதாகத் தமிழகக் காவல் துறை அறிவித்தது. உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த ஒரு பேரணிக்கு இப்படி அனுமதி மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு என்று கூறிய ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள், இது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு தொடரப்போவதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தால் அதை அவசர வழக்காக விசாரிப்பதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. அதற்கேற்ப ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழ்நாட்டு அரசுக்கெதிராகவும் காவல் துறைக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 30 அன்று விசாரணைக்கு வந்தது.
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதித்தும் அரசும் காவல்துறையும் பேரணிக்கு அனுமதி தர மறுப்பது நீதிமன்ற அவமதிப்பு என அத்தரப்பின் சார்பாக வாதிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், பொது அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறை தெரிவித்ததன் பேரிலேயே அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
மேலும் படிக்க: மதச்சார்பின்மை கொண்டவரா ஸ்டாலின்?
காந்தி ஜெயந்தி நாளில் ஊர்வலம் செல்வதற்குத்தான் அனுமதி மறுக்கப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். வேறு நாளில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டால் பரிசீலிக்கப்படும் என போலீஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நான்கு நாள்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நாளான நவம்பர் 6 அன்று ஊர்வலம் நடத்திக்கொள்ளும்படி உயர் நீதிமன்றம் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியது. அக்டோபர் 31 ஆம் நாளுக்குள் பேரணிக்கு அனுமதி வழங்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் எனக் கூறிய நீதிமன்றம் வழக்கு விசாரணையை அக்டோபர் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.
சமூகநீதி பேசும் திராவிட அரசியலும் சனாதனத்தை வலியுறுத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சிந்தாந்தரீதியில் ஒன்றுக்கொண்டு கடுமையாக முரண்படுபவை. ஆகவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அணிவகுப்பை மிகுந்த எச்சரிக்கையாகவே கைக்கொள்ள வேண்டிய பொறுப்பை உணர்ந்த திராவிட கட்சிகள் ஆட்சியே தொடர்ந்து நடந்துவருகிறது. ஏற்கெனவே, 2014 ஆம் ஆண்டில் நவம்பர் 9 அன்று இப்படியொரு ஊர்வலத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஊர்வலத்துக்கு ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டது. அப்போதும் உயர்நீதிமன்றம் சென்று அனுமதி கோரியது ஆர்எஸ்எஸ் அமைப்பு. சில கட்டுப்பாடுகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதியும் வழங்கியது. என்றபோதும், தமிழ்நாட்டு அரசு ஊர்வலத்தை அனுமதிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
இதற்கடுத்ததாக 2016 ஆம் ஆண்டில் பேரணி நடத்த திட்டமிட்டு உயர்நீதிமன்ற அனுமதியும் பெற்றனர். அப்போது, உயர்நீதிமன்றம் பேரணியை அனுமதித்தது. ஆனால், அரைக் கால் சட்டை அணியாமல் முழுக்கால் சட்டை அணிந்து ஊர்வலம் நடத்தும்படி கோரியது. பேரணி 2017ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் அதன் காவல் துறைக்கும் உள்ளது. அமைதிப் பூங்கா என்ற பெயரைப் பெற்றிருக்கும் தமிழ்நாட்டில் அமைதியைப் பேணிக் காக்கும் கடமையிலிருந்து தமிழ்நாட்டு அரசால் நழுவவும் முடியாது. அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க மறுத்தால், அதனால் அரசுக்கும் காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படக்கூடும்.
இந்தச் சூழலில் இப்போது நவம்பர் 6 என ஒரு நாளை முன்வைத்துள்ளது. காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2 அன்று பேரணி நடத்த தமிழக அரசு மறுத்துவிட்டது. அந்த நாளும் கடந்துவிட்டது. சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தடுத்த தமிழக அரசு நவம்பர் 6 அன்று பேரணி நடத்த ஒத்துழைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு என்பதை எதிர்கொள்ள நேரிடும் என்பதே இப்போதைய சூழல். இது முழுக்க அரசியல்ரீதியான சிந்தாந்தரீதியான ஒரு மோதல் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்திருந்த உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளைச் சுட்டிக்காட்டி, நீதிமன்றமே இப்படியான கட்டுப்பாடுகளை விதித்திருக்கும்போது, பொது அமைதிக்குப் பங்கம் விளையாது என்று எப்படிச் சொல்ல முடியும் என அவர்கள் கேட்கிறார்கள்.
கரசேவை என்னும் பெயரில் நடத்தப்பட்ட நிகழ்வில் 1992 ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உள்ளிட்ட பல சம்பவங்களைச் சுட்டுக் காட்டும் அரசியல் விமர்சகர்கள், ஆர்எஸ்எஸ் பேரணி என்பது எப்போதுமே சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் என்பதே வரலாறு என்கின்றனர். தமிழ்நாடு அரசு சிறுபான்மையினரைக் காக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியை மறுத்தால் அதனால் அரசுக்கு என்ன ஆபத்து ஏற்படுமோ? ஏற்கெனவே 2014இல் ஜெ.ஜெயலலிதா உயர்நீதிமன்ற அனுமதி தந்த பேரணியை நடத்த மறுத்துள்ளார் என்பது இங்கே நினைவுகூரத் தக்கது.
ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கும் அதன் காவல் துறைக்கும் உள்ளது. அமைதிப் பூங்கா என்ற பெயரைப் பெற்றிருக்கும் தமிழ்நாட்டில் அமைதியைப் பேணிக் காக்கும் கடமையிலிருந்து தமிழ்நாட்டு அரசால் நழுவவும் முடியாது. அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் பேரணியை அனுமதிக்க மறுத்தால், அதனால் அரசுக்கும் காவல் துறைக்கும் கெட்ட பெயர் ஏற்படக்கூடும். எப்படிச் சமாளிக்கப் போகிறது தமிழ்நாட்டு அரசு என்பதையே ஒட்டு மொத்த தமிழர்களும் உற்றுக் கவனிக்கிறார்கள்.
Read in : English