Read in : English

இணையம் செய்தி வாசிப்போருக்கும் பத்திரிகையாளருக்கும் புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இதில் நுழைவதற்கான தடைகள் குறைவு. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்கள் போலல்லாமல், இணைய பத்திரிகைகள் நடத்துவதற்கான முதலீடு என்பது சம்பளங்களுக்கான தொகை மட்டுமே. ஏற்கெனவே பத்திரிகைத் துறையில் ஆழங்காற்பட்ட ஊடக நிறுவனங்களில் வியாபார நலன்கள், அரசியல் மற்றும் பிற சார்பு நலன்கள் செய்தி உள்ளடக்கத்தை ஆக்கிரமிக்கின்றன. ஆனால், இணைய பத்திரிகைகளில் அந்த மாதிரியான தலையீடுகள் பெரிய அளவில் இல்லை என்பதால் அவை உண்மையைப் பேசுவதற்கான சாத்தியத்தை அதிகமாகக் கொண்டுள்ளன. பத்திரிகையியலுக்குத் தேவைப்படும் உயர்நிலைத் தொழில்முறையியலும், தரமும் இணையதளத்தில் இருந்தால் இணையத்தில் செய்திகளை வாசிப்போர் அத்தகைய இணையதளத்தை விரும்பி வாசிக்கும் சாத்தியம் இருக்கிறது.

ஆனால், இணைய பத்திரிகைகள் என்பவை போட்ட முதலை எடுக்கும் அளவுக்கு வருமானம் தருவதல்ல. அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களும் அப்படித்தான் என்பது வேறு விஷயம். நுகர்வோர்கள் செய்தித்தாளுக்குக் கொடுக்கும் விலையும், நுகர்வோர்களின் கேபிள் சந்தாவும் ஊடகத்தொழிலில் கிடைக்கும் மொத்த சம்பாத்தியத்தில் சிறுதுளிகள் மட்டுமே. சொல்லப்போனால் செய்தி என்பது இலவசமே என்றாகிவிட்டது. அந்தக் காரணத்தினால்தான், தொழில் நலன்களும், அரசு உட்படப் பல்வேறு விளம்பரதாரர்களின் அழுத்தங்களும் செய்தி வெளியிடும் விசயத்தில் அதிகமாகவே தலையிடுகின்றன.

இணைய தளங்கள் தங்களுக்குக் கிடைக்கும் விளம்பர வருமானத்தை உள்ளடக்கப் படைப்பாளிகளுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாமா என்று அரசு யோசிப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு திட்டமும் வரைவு வடிவத்தில்கூட உருவான மாதிரி தெரியவில்லை.

தி வயர் போன்ற சுயாதீன செய்தி ஊடகம் கூகுள் விளம்பரங்கள் மூலம் மாதம் ரூ.2 இலட்சம் மட்டுமே சம்பாதிக்கிறது என்பதை இணையத்தின் தேடுபொறியில் துரிதமாகவே கண்டுபிடித்துவிடலாம். என்றாலும், தனது யூடியூப் தளத்தின் மூலம் அது பன்மடங்கு சம்பாதிக்கக்கூடும். எப்படிப் பார்த்தாலும், இதெல்லாம் அந்த ஊடக நிலையத்தின் நிர்வாகச் செலவுகளுக்குப் போதாது. அதனால்தான் தி வயர் நன்கொடை கேட்கிறது. இந்த இணயதளத்தின் பக்கங்கள் ஒரு நாளைக்கு 70,000 தடவை வாசிக்கப்படுகின்றன அல்லது பார்க்கப்படுகின்றன.

தி வயர் உறுப்பினராக இருக்கும் தி டிஜிடல் நியூஸ் பப்ளிஷர்ஸ் ஆஃப் இந்தியா, காம்பெட்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவிடம் ஒரு மனுவைச் சமர்ப்பித்திருக்கிறது. கூகுள் மின்னணுப் போக்குவரத்தில் எதேச்சாதிகாரம் செய்கிறது; போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது என்று அந்த மனுவில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏராளமான மக்கள் கூகுள் தேடுபொறி பக்கங்களிலே தங்கிவிடுகிறார்கள்; வேறு இணையதளங்களைக் கிளிக் செய்வதில்லை. அதனால் தனிப்பட்ட தளங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைந்துவிடுகின்றன. கூகுள் மற்றவர்கள் உற்பத்தி செய்யும் செய்தி உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி விளம்பர வருமானத்தின் மூலம் சம்பாதிக்கிறது.

மேலும் படிக்க: வெகுமக்கள் ஊடகங்களை அம்பலப்படுத்தும் சமூக ஊடகம்!

கடந்த பத்தாண்டுகளில், இணையச் செய்தி நல்லதொரு தொழில் சாத்தியம் கொண்டதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால், மின்னணு விளம்பரச் செலவுகளும் உயர்ந்துவிடும் சாத்தியம் இருந்தது. ஒட்டுமொத்த விளம்பரங்களில் மின்னணு விளம்பரத்தின் பங்கு வருடாவரும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தி டிஜிடல் நியூஸ் பப்ளிஷர்ஸ் ஆஃப் இந்தியாவின் மனுவில் சுட்டிக்காட்டிய கேபிஎம்ஜி, டெண்ட்சு மற்றும் பிட்ச் மாடிசன் அறிக்கைகள் சொல்கின்றன. 2020இல் மின்னணு விளம்பரத்தின் பங்கு மூன்றில் ஒருபங்கு என்ற விகிதத்தில் இருந்தது. 2025இல் இது ரூ. 58,000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த மின்னணு விளம்பரச் செலவின் அபரிமிதமான அதிகரிப்பால் பலனடைந்தவர்கள் கூகுள், யூடியூப், ஃபேஸ்புக் போன்ற மின்னணுத் தளங்களே அன்றி மின்னணுச் செய்திகளை உருவாக்குபவர்கள் அல்ல என்று தெரிய வந்திருக்கிறது.

இந்த மின்னணுத் தளங்கள் சம்பாதிக்கும் விளம்பர வருமானத்தில் எவ்வளவு அமெரிக்காவில் இருக்கும் மூல நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன என்று தெரியவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் வழக்கமாக இலாபத்தை அறிவுசார் சொத்துப் பயன்பாட்டுக்கான காப்புரிமையாக அனுப்பிவிடுவதுண்டு.

இந்திய படைப்பாளிகளால் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தில் செய்யப்படும் விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதி ஒன்றை அந்த மின்னணுத் தளங்கள், பெரிதும் பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய மின்னணு உள்ளடக்கப் படைப்பாளிகளுடன் பகிர்ந்துகொண்டால் அது படைப்பாளிகளுக்குப் பெரியதோர் உந்துதலை அளிக்கும். அதனால் பெரிய ஊடகங்கள் மட்டுமல்ல, சுயாதீன ஊடகங்களும், கல்லா கட்டமுடியும். பெரிய ஊடகங்களில் சுயநல ஆதிக்கவாதிகள் காட்டும் பாரபட்சத்தையும், சார்பு நிலையையும் கண்காணிக்கும் ஒரு காவல் கட்டமைப்பை உருவாக்கவும், செய்திகளின் வெளியைச் சமச்சீராக்கவும், சுயாதீன ஊடகங்களின் இருப்பும், போட்டியும் உதவும். இறுதியாக, உள்ளடக்கப் படைப்பாளிகளுக்குச் செல்லும் அதிகமான பணம் என்பது அரசிற்குச் செல்லும் வரிவருமானத்திற்கும் பெரும் உந்துதலாக இருக்கும்.

கூகுள் மின்னணுப் போக்குவரத்தில் எதேச்சாதிகாரம் செய்கிறது; போக்குவரத்தைக் கட்டுப்படுத்துகிறது

இணைய தளங்கள் தங்களுக்குக் கிடைக்கும் விளம்பர வருமானத்தை உள்ளடக்கப் படைப்பாளிகளுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுக்கும் நோக்கத்துடன் ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாமா என்று அரசு யோசிப்பதாகச் செய்திகள் வந்தன. ஆனால், இதுவரை எந்தவொரு திட்டமும் வரைவு வடிவத்தில்கூட உருவான மாதிரி தெரியவில்லை.

அந்த மாதிரியான சட்டங்களை அறிமுகப்படுத்தும் போக்கு மற்ற நாடுகளில் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலியா, ஃபிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் ஏதொவொரு வகையான கட்டுப்பாடு இருக்கிறது. இதுசம்பந்தமான மசோதா அமெரிக்க சட்டசபையில் நிலுவையில் இருக்கிறது. வருமானத்தை எப்படிப் பகிர்ந்துகொள்வது என்பதைத் தீர்மானிக்கும் விசயத்தில் இணைய தளங்களுக்கும் உள்ளடக்கப் படைப்பாளிகளுக்கும் இடையே ஒரு சீரற்ற தன்மை நிலவுகிறது என்பதை இந்தச் சட்டங்கள் புரிந்துகொள்கின்றன. உதாரணமாக, கூகுள், ஃபேஸ்புக்கில் கையாளப்படும் செய்தி உள்ளடக்கங்களுக்கான சம்பளத்தை மொத்தமாகப் பேரம் பேசுவதற்கு, ஆஸ்திரேலியன் காம்பெட்டிஷன் அண்ட் கன்சியூமர் கமிஷன் 2021 ஆகஸ்டு 5 அன்று கண்ட்ரி பிரஸ் ஆஸ்திரேலியாவிற்கும், 2021 அக்டோபர் 29 அன்று கமர்சியல் ரேடியோ ஆஸ்திரேலியாவிற்கும் தனித்தனியாக அதிகாரம் அளித்திருக்கிறது. இப்படிப்பட்ட கட்டமைப்பு இந்தியாவிற்கும் முன்னுதாரணமாக இருக்கும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival