Read in : English

பலமாகப் பெய்துகொண்டிருக்கும் பருவமழையின் காரணமாகக் கேரள அணைக்கட்டுகளின் நீர்மட்டம் சடசடவென்று உயர்ந்துகொண்டேபோகிறது. இந்தச் சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளி அன்று அறிவித்திருப்பதால் கேரள மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடந்த தென்னிந்திய மாநில முதல்வர்களின் தென்மண்டல சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் பேசியதாகத் தகவல்கள் கூறுகின்றன. மிகவும் சர்ச்சைக்குள்ளான முல்லைப் பெரியாறு அணை உட்பட இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கும்முகமாக மேற்கொண்டு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு இருமுதல்வர்களும் பரஸ்பரம் ஒத்துக்கொண்டார்கள் என்று மேலும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முல்லைப் பெரியாறு அணையின் பொறுப்பிலிருக்கும் தமிழக அதிகாரிகள் அணைக்கட்டில் அதிகபட்சநீர் இருக்கும்வண்ணம், நீர்மட்டத்தை அதிகபட்சம் அனுமதிக்கக்கூடிய எல்லைவரை (142 அடி) வைத்திருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் கடந்தகாலத்தில் இருந்தன. கீழ்நோக்கிப் பாயும் நீர்நிலைகளில் வெள்ளம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, அணையின் அதிகபட்சம் அனுமதிக்கக்கூடிய எல்லைக்கு இரண்டு அல்லது மூன்று அடிகள் கீழாகவே நீர்மட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பதைக் கேரளத்தின் மனுமீது நடந்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொண்டது.

 முல்லைப் பெரியாறு அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பிற்காகத் தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  அறிவித்திருப்பதால் கேரள மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்

அகால நேரங்களில் பொதுமக்களுக்கு முன்னறிவிப்பு ஏதும் தராமல் அணைநீரைத் திறந்துவிடுவதால் மிகைநீர்ப் பாதைகளில் பெருக்கெடுத்தோடும் நீரால் கீழ்நோக்கிப்பாயும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களுக்குத் துயரம் உண்டாகிறது என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இப்போதுதான் முதன்முதலாக ஒரு தமிழக முதல்வர் வந்து கேரள பூமியில் கால்பதித்து அந்த மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கிறார். அதனால் ஸ்டாலின் வாக்குறுதி மிகவும் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும், ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராகப் பதவி ஏற்ற நாளிலிருந்து, இரு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கிடையிலான பணிரீதியிலான உறவில் அதிரடியான முழுமாற்றம் உண்டாகியிருக்கிறது. அதனால் அரசியல் மற்றும் அதிகாரி வட்டாரங்களில் நம்பிக்கை வளர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க:

ஆம்,கேரள வெள்ளத்தில் தமிழகத்துக்கு பங்கு இருக்கலாம், ஆனால், கேரளாவின் 40 அணைகளின் பங்கு என்ன? 

முல்லைப் பெரியாறு: எந்த வகையில் கேரளத்துக்குத் தமிழகம் உதவலாம்?

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது இடுக்கி, எர்ணாகுளம், பத்தணம்திட்டா, திரிச்சூர், கோட்டயம் ஆகிய கேரளத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு மிகப்பெரும் அழிவை உண்டாக்கிவிடும் என்றும், கொச்சி மாநகரமே அரபிக்கடலில் மூழ்கிவிடும் என்றும் பல்வேறு அச்சங்கள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றன.

அணையின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் அச்ச நெருப்புக்கு நெய்வார்ப்பது போல, 35 லட்சத்திற்கும் மேலான மக்களை அச்சுறுத்தும் விதத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உட்கட்டமைப்பு மோசமாகிக் கொண்டிருக்கிறது என்று 2021இல் வெளியிடப்பட்டதாகச் சொல்லப்படும் ஓர் அறிக்கை கூறுகிறது. ஐக்கிய நாட்டுச் சபை பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுப்புறச்சூழல், சுகாதாரக் கழகத்தின் அறிக்கை அது என்றும் சொல்லப்பட்டது.

2018ல் கேரளா வெள்ளம் (Photo credit: Kerala Floods- Noushad bakimar- Flickr)

இந்த அணைப்பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் தற்போது ஏற்பட்டிருக்கும் மனமாற்றத்திற்குக் காரணமாக இரு மாநிலங்களில் ஆட்சி செய்யும் திமுக மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு இடையே இருக்கும் இணக்க உறவை அரசியல் அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஏப்ரல் 2 அன்று கேரளாவில் கண்ணூரில் நடந்த சிபிஎம்-மின் அதிமுக்கியமான இயக்க மாநாட்டில் பெரும் மதிப்புக்குரிய விருந்தாளியாக ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பதை இங்கே நினைவுகூர வேண்டும். கட்சி ஊழியர்களிடம் உரையாற்றும்படி பினராயி விஜயன் அழைத்துவந்த ஸ்டாலினுக்கு அவர்கள் பலத்த கோஷங்களுடன் மிகப் பெரிய உணர்வுமயமான வரவேற்பை அளித்தனர்.

ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வராகப் பதவி ஏற்ற நாளிலிருந்து, இரு மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கிடையிலான பணிரீதியிலான உறவில் அதிரடியான முழுமாற்றம் உண்டாகியிருக்கிறது. அதனால் அரசியல் மற்றும் அதிகாரி வட்டாரங்களில் நம்பிக்கை வளர்ந்திருக்கிறது

கேரளத்தின் முன்னணி இடதுசாரிக் கட்சியான சிபிஎம் தமிழ்நாட்டில் திமுகவின் தலைமையிலான கூட்டணியில் பல ஆண்டுகளாக அங்கம் வகிக்கிறது என்ற வரலாற்று உண்மை இரு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கிறது. ஏப்ரல் 3 அன்று டில்லியில் நடந்த திமுக அலுவலகத் திறப்புவிழாவில் சிபிஎம் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி மிகவும் பிரபலமான முகமாகக் கலந்து கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) எதிரான பலமானதோர் கட்டமைப்பை உருவாக்குவதில் இருமாநில முதல்வர்களும் பெரும்பங்காற்றுகிறார்கள்.

அது மட்டுமின்றி, என்டிஏ-வின் ஒன்றிய அரசு தென்னிந்தியாவில் இந்தியைத் திணிக்கவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஊறு விளைவிக்கும் வண்ணம் மாநிலங்களின் அதிகாரங்களைத் தன்னிச்சையாகப் பறிக்கவும் முயலும்போது, தமிழக, கேரள முதல்வர்கள் கைகோத்துத் தோளோடு தோள்சேர்த்துப் போராடும் தோழர்களாக எழுகிறார்கள்.

மேலும் படிக்க: மாநிலங்களின் சுயநலனில் சிக்கித் தவிக்கும் முல்லைப் பெரியார் பிரச்சினை!

சமீப காலமாகத் தமிழக அதிகாரக் கட்டமைப்பில் மனித நேய உணர்வு அதிகரித்திருப்பதாகக் கேரளத்தின் மூத்த அதிகாரிகள் பலர் சொல்கிறார்கள்.  ஆகஸ்ட்டில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்துகொண்டே போனபோது, கேரள முதல்வர் அலுவலகத்திலிருந்து சென்னைக்கு அவசரகால உதவிகேட்டு வேண்டுகோள் ஒன்று பறந்துபோனது. அதற்கு விரைந்து செயலாற்றினார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அணை பாதுகாப்பாக இருக்கிறது என்றும், 2021இல் மத்திய நீர் ஆணையம் அங்கீகரித்த விதிகள் படி (ரூல் கர்வ் அண்ட் கேட் ஆபரேஷன் ஷெட்யூல்) அணையின் வெள்ளக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவிட்டன என்றும், ஸ்டாலின் கேரள முதல்வருக்கு உடனடியாகத் தகவல் அனுப்பினார்.

முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டால், அது இடுக்கி, எர்ணாகுளம், பத்தணம்திட்டா, திரிசூர், கோட்டயம் ஆகிய கேரளாவின் ஐந்து மாவட்டங்களுக்கு மிகப்பெரும் அழிவை உண்டாக்கிவிடும் என்றும், கொச்சி மாநகரமே அரபிக்கடலில் மூழ்கிவிடும் என்றும் பல்வேறு அச்சங்கள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றன

ஆகஸ்டு 5 அன்று, மிகைநீர்ப் பாதை மதகுகள் திறந்துவிடப்பட்டன. அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து உள்வரும் நீர்ப்போக்கிற்கு ஏற்றவண்ணம் அணையின் நீர்மட்டத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக, வெளியேற்றப்படும் நீர் அளவு அதிகரிக்கப்பட்டது. அணையில் நீர்வரத்து அதிகரிக்கும்போதெல்லாம், மிகைநீர் வைகை வடிகால் பகுதிக்கு மடைமாற்றம் செய்யப்பட்டது.

இருமாநிலங்களின் கடுமையான கூட்டு முயற்சியால், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், செப்டம்பர் 3 நிலவரப்படி, 136.55 அடி என்ற அளவில் இருந்தது.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, மிகைநீர்ப் பாதைகள் திறக்கப்படுவதற்கு முன்பே இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனால் கீழ்நோக்கிப் பாயும் நீர்நிலைகளில் தகுந்த வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாவட்ட நிர்வாகத்தால் எடுக்க முடிந்தது. கடந்த காலத்தில் இந்த மாதிரியான நடைமுறைகள் எல்லாம் கிடையாது.

முல்லையாறும், பெரியாறும் சங்கமிக்கும் இடத்தில் 1887 முதல் 1895 வரை ஆங்கிலேயே பொறியியலாளர் ஜான் பென்னிகுவிக்கால் கட்டப்பட்டது முல்லைப் பெரியாறு அணை. அந்தப் பழைய அணை தருகின்ற அச்சுறுத்தலோடு வாழும் கேரளா மக்கள் புதிய அணைடு கட்ட வேண்டும் என்று கோரிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழகத்து நிபுணர்கள் பழைய அணை பாதுகாப்பானதுதான் என்றும், கொஞ்சம் வலுவூட்டும் பணிகள் செய்தாலே போதும் என்றும் சொல்கிறார்கள். ஆனாலும், புதியதோர் அணையைக் கட்டும் சாத்தியத்தைத் தமிழகம் மறுதலிக்கவில்லை. 126 வயதான முல்லைப் பெரியாறு அணை கேரளத்திற்குச் சொந்தமானதுதான் என்றாலும், கேரளத்துடன் போட்ட ஒரு 999 வருடகாலத்து ஒப்பந்தப்படி, தமிழ்நாடுதான் அணையை இயக்கிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், திருவனந்தபுரத்தில் சனிக்கிழமை அன்று நடந்த தென்னிந்திய மாநில முதல்வர்களின் தென்மண்டல சபைக் கூட்டத்தில்,  உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு மாநிலங்களுக்கிடையிலான நீர்ப் பிரச்சினைகளை அந்த முதல்வர்கள் தாங்களாகவே தீர்த்துக் கொள்ளட்டும் என்று ஆணையிட்டிருக்கிறார் எனச் சில தகவல்கள் சொல்கின்றன.

பல்லாண்டுகாலமாக பற்றி எரிகின்ற முல்லைப் பெரியாறு அணைப்  பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, தமிழகத்திலும் கேரளாவிலும் மாறியிருக்கும் இணக்கமான அரசியல் சூழல் மீதும், இரு மாநில முதல்வர்களுக்கும் இடையே வளர்ந்துவரும் நல்லுறவின்மீதும், கேரளா மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

(ஜோஸ் நிவேதிதா கேரளத்தின் கோழிக்கோட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival