Read in : English

இலங்கை வரலாற்றில் முதன்முதலாக மக்கள் தாங்கள் வெறுத்த தலைவர் ஒருவரை ‘அமைதிவழிப் போராட்டம்’ மூலம் விரட்டியடித்திருக்கிறார்கள். அந்த வகையில் அவர்களது அமைதிப் போராட்டம் வெற்றிகரமான ஒன்றே! இனம், மதம், சமூகம் என்ற வேறுபாடுகளைக் கடந்து இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி ‘அரகலயா’ என அழைக்கப்படும் மக்கள் போராட்டத்தில் இணைந்தனர்.

‘அரகலயா’ என்னும் சிங்களச் சொல்லுக்குப் போராட்டம் என்பதே பொருள். அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்: அது ஒருகாலத்தில் கதாநாயகன் போல் வணங்கப்பட்ட ராஜபக்சக்களின் ராஜ்யத்தை வீழ்த்துவதுதான். ஒன்றுதிரண்ட மக்கள் சக்தி பிரதமர் மகிந்த ராஜபக்ச, அவருடைய சகோதரர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச ஆகியோரை ஓடஓட விரட்டியது; கோத்தபய நாட்டைவிட்டே ஓடிவிட்டார்.

இந்த எழுச்சி 2022 மார்ச்சில் தொடங்கியது. நெடுநேர மின்தடையால் இருள்மயமான மாலைநேரத்தில் மக்கள் மெழுகுவர்த்திச் சுடர்களைக் கையிலேந்திக் குழுமினர்; கூடினர்; விவாதித்தனர். பின்பு இந்த மக்கள் எழுச்சி இலங்கை முழுவதும் பரவியது.

மின்தடைக்கு எதிராகத் தொடங்கிய கிளர்ச்சி நாட்டில் நிலவிய ஆகக் கொடுமையான, ஆகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்த்த போராட்டமாக மாறியது. கோவிட் பெருந்தொற்று பொருளாதாரத்தை மேலும் சிக்கலாக்கிச் சராசரி இலங்கை மக்களின் ஜீவிதத்தைச் சீரழித்தது. ஆனால், இப்படியான சோதனைகளில் அல்லல்பட்ட மக்களின் துன்பம் அடுத்த கட்டத்துக்கும் போனது; நாட்டின் பொருளாதாரத்தைத் தாறுமாறாகக் கையாண்ட ராஜபக்ச ஆட்சி ஊழலில் திளைத்து ஊரை நாசமாக்கியது.

மே 9-க்கு முன்புவரை ‘அரகலயா’ அரசியல் சார்பற்று இருந்தது. ஆனால், பின்பு அரசியல் கட்சிகள் போராளிகளின் கூட்டத்திற்குள் நுழைந்து அரசியல் இலாபத்திற்காக ‘அரகலயா’வையும் ‘கோத்த கோ காமா’வையும் துஷ்பிரயோகம் செய்தன

அத்தியாவசியத் தேவைகளுக்கான உணவு, எரிபொருள், மருந்து, சமையல் வாயு போன்ற பொருள்களில் ஏற்பட்ட பற்றாக்குறை மக்களின் பொறுமையைப் பயங்கராமாகச் சோதித்துவிட்டது. அரசியல்வாதிகளின், அவர்களின் குடும்பங்களின் அப்பட்டமான பகட்டும், படோடாபமும், நாடாளுமன்றத்தில் காட்டுமிராண்டித்தனமான பெரும்பான்மைப் பலம் கொண்ட அரசின் திமிர்த்தனமான மனப்பான்மையும், மக்களின் கண்ணீரைக் கண்டுகொள்ளாத அலட்சியமும் மக்களின் சினமெனும் நெருப்புக்கு நெய்வார்த்தன. அடித்தட்டு மக்களின் ஆற்றாமைக் குரல்கள் ஆளுவோர் காதுகளில் விழவில்லை.

மக்களின் விரக்தியும் வேதனையும் மார்ச் மாதத்தின் நடுவில் உச்சம் தொட்டன. அப்போது இலங்கை முழுவதும் மக்கள் வீதிக்கு வந்து திரண்டனர்; அதிபருக்கும் அவரது அரசுக்கும் எதிரான தங்கள் வெறுப்பைக் காட்டியவண்ணம் முழக்கமிட்டு ஊர்வலம் சென்றனர். ஏப்ரல் 9 அன்று தனித்தனியாகச் சிதறிக்கிடந்த போராளிகள் அனைவரும், அதிபர் செயலகத்திற்கு அருகில் காலே ஃபேஸ் கிரீனில் ஒன்றுதிரண்டு அதுவரை இலங்கை கண்டிராத ஆயுதங்களற்ற ஓர் அறப்போராட்டத்தை, அரகலயாவைத் தொடங்கினர்.

மேலும் படிக்க:

ராஜபக்ச குடும்பம்: சர்வாதிகாரம், ஊழல், மோசமான ஆட்சியின் அடையாளம்!

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கை: கொந்தளிக்கும் இலங்கை இளைஞர்கள்!

‘ஆக்குபை காலே ஃபேஸ்’ போராட்டம் 2022 ஏப்ரல் 9 அன்று தொடங்கியது. “வீட்டுக்குப் போ கோத்த’, “வீட்டுக்குப் போ ராஜபக்ச” என்ற ஒருமித்த குரல்கள் பீறிட்டுக் கிளம்பி வானை முட்டின. ராஜபக்சக்களுக்கு வாக்களித்த அறுபது இலட்சத்திற்கும் மேலான இலங்கை மக்களுக்கும் அந்தச் சகோதரர்கள்மீது தீராத வெறுப்புணர்வு ஏற்பட்டது.

வெறும் போராட்டக்களமாக இருந்த காலே ஃபேஸ் ஓர் உயிர்த்துடிப்புள்ள ஜீவஸ்தலமாகப் பரிணாமம் பெற்றது. அது ‘கோத்த கோ காமா’ (கிராமத்திற்குப் போ கோத்த) என்று புதிய பெயரோடு இயங்கியது.

எல்லா மட்டங்களிலிருந்தும் வந்த இலட்சக்கணக்கான இலங்கை மக்கள் குழந்தைகளோடும், உறவுகளோடும், நண்பர்களோடும் காலே ஃபேஸில் திரண்டு கோத்தபய ராஜபக்சவைப் பதவிவிலகச் சொல்லி முழக்கமிட்டனர். தேசியக் கொடிகளை ஏந்திய மக்களிடமிருந்து ‘வீட்டுக்குப் போ கோத்த’ என்ற குரல்கள் வெடித்தன.

ஊழல்மிக்க ராஜபக்ச ஆட்சிக்கு முடிவு கட்ட விரும்பிய பணக்காரர்கள் போராளிகளுக்கு நிதியுதவி செய்தனர். போராட்டக்களம் தன்னிறைவு பெற்ற ஒரு ஸ்தலமாக மாறியது. எல்லோருக்குமான சமையலறை, நகரும் கழிவறைகள், முதலுதவி மையம், சூரிய ஆற்றல் மின்சாரம், தற்காலிக நூலகம், சட்ட உதவி அலுவலகம், மக்களின் பல்கலைக்கழகம், கலைக் கூடம், இலவச உணவு, குடிபானங்கள் என்று அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி இருந்தது போராட்டக்களம்.

அமைதியான போராட்டம் என்று அகிலம் புகழ்ந்த அந்தக் களத்தில் மே 9 அன்று ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் உட்புகுந்து வெறித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். போராளிகளை அடித்து துவம்சம் செய்தனர். ஓடிப்போன பல போராளிகள் திரும்பிவரவே இல்லை

மே 9 அன்று வன்முறை நெருப்பு பற்றியெரிந்தது. அதுவரையிலும், “கோத்த கோ காமா’ ஓர் அமைதியான, ஒழுங்கான, கட்டுப்பாடுமிக்க போராட்டக் களமாகத்தான் விளங்கியது. இசை, கவிதை, நடனம் என்று மக்களின் கோரிக்கைகளைச் சித்தரித்த கலைவடிவங்கள் அங்கே ஆட்சி செய்தன. மேலும், அது இலங்கையின் மத, இன ஒற்றுமையின் குறியீடாகத் திகழ்ந்தது.

இலங்கையிலும், கடல்தாண்டி இலங்கை மக்கள் குடியேறிய ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அமெரிக்க ஆகிய நாடுகளிலும் பரவிய அரசியல் விழிப்புணர்வால் உத்வேக உற்சவமானது அந்தப் போராட்டக்களம்.

அமைதியான போராட்டம் என்று அகிலம் புகழ்ந்த அந்தக் களத்தில் மே 9 அன்று ராஜபக்சக்களின் ஆதரவாளர்கள் உட்புகுந்து வெறித்தனமான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். போராளிகளை அடித்து துவம்சம் செய்தனர். ஓடிப்போன பல போராளிகள் திரும்பிவரவே இல்லை.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார் (Photo credit: Parliament of Srilanka)

அதன்பின்னார் நாடுமுழுவதும் வன்முறை வெடித்தது; தேசம் நாசத் தீயில் பற்றி எரிந்தது. நாற்பது ஆளும்கட்சி எம்பிக்களின் வீடுகளும், வாகனங்களும் தீயில் கொளுத்தப்பட்டன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் உட்பட மொத்தம் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

புரட்சிகரமான இடதுசாரிக் கட்சி ஜேவிபியும் அதன் இளைஞர் நிறுவனங்களும்தாம் வன்முறையைத் தூண்டிவிட்டன என்று அரசு குற்றஞ்சாட்டியது. ஆனால், அதை ஜேவிபி வழக்கம்போல் மறுத்தது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியதும் சட்டம், ஒழுங்கு ஓரளவு சீரானது. அதன் தொடர்சியாக ‘கோத்த கோ காமா’வில் போராட்டம் தொய்வடைந்தது. ஒரு ராஜபக்ச போனவுடன் மக்கள் சிறிது திருப்தியடைந்தனர். ஆனால், அந்த திருப்தி நீண்டநாள் நிலைக்கவில்லை.

மே 9-க்கு முன்புவரை ‘அரகலயா’ அரசியல் சார்பற்று இருந்தது. ஆனால், பின்பு அரசியல் கட்சிகள் போராளிகளின் கூட்டத்திற்குள் நுழைந்து அரசியல் இலாபத்திற்காக ‘அரகலயா’வையும் ‘கோத்த கோ காமா’வையும் துஷ்பிரயோகம் செய்தன.

இலங்கையின் புரட்சி இடதுசாரிக் கட்சிகளான ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுனா), அதன் பிளவுக்கட்சி எஃப்எஸ்பி (ஃப்ரண்ட்லைன் சோசலிஸ்ட் பார்ட்டி) ஆகியவை ‘அரகலயா’விற்குப் புத்துயிர் கொடுத்து அதைத் தீவிரமான இயக்கமாக மாற்றின. அதனால் இறுதியில் இரண்டு ராஜபக்ச சகோதரர்களும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டார்கள்.

தேசத்தின் சமூக, பொருளாதார, அரசியல் நெருக்கடி மீது சவாரி செய்துகொண்டு தங்களுக்கான அரசியல் இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இந்த இரண்டு கட்சிகளும் சமீபகாலமாகவே முயன்றுகொண்டிருக்கின்றன.

ஜேவிபியின் தேசியவாத இளைஞர் அணியான ஐயூஎஸ்எஃப் (இண்டர் யூனிவர்சிடி ஸ்டூடண்ஸ் ஃபெடரேஷன்) மே-9-க்குப் பிந்திய ‘அரகலயா’வில் முன்னணியில் நின்று, தொழிற்சங்கங்களை, மாணவர் அமைப்புகளை, இடதுசாரிச் சிந்தனை கொண்ட பொதுமக்களை ஒன்றுதிரட்டி அதிபர் கோத்தபய ராஜபக்சவை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தியது. இப்போது ஐயூஎஸ்எஃப் எஃப்எஸ்பி-யோடு இணைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

ராஜபக்சக்கள் வெளியேறியதால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்தித் தன்னை ‘மூன்றாவது அரசியல் சக்தியாக’ நிறுவிக்கொள்ளும் நோக்கத்தில்தான் ஜேவிபி ‘அரகலயா’வில் ஈடுபட்டதாக அரசியல் ஆய்வாளார்கள் கருதுகிறார்கள்.

“மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு குழு” பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பிடித்து வைத்திருக்கிறது என்று ஆளும் எஸ்எல்பிபி அரசைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறார் ஜேவிபி தலைவர் எம்பி அனுரா குமார திசநாயக்கே.

2019இல் ஜேவிபியின் தேர்தல் பலம் என்பது வெறும் 3 சதவீதமே என்றாலும், ஆயிரக்கணக்கான மக்களை, குறிப்பாக இளைஞர்களைத் திரட்டி அதிபரை அதிகாரத்திலிருந்து இறக்கி நாட்டை விட்டே விரட்டி அடித்ததும், பின்பு அவர் பதவியை ராஜிநாமா செய்ய வைத்ததும் ஜேவிபின் நம்பிக்கையையும் பலத்தையும் கூட்டியிருக்கிறது.

இலங்கையில் இன்று மிகவும் முக்கியமானது அதன் அரசியல் ஸ்திரத்தன்மையே; அது இல்லாமல் பொருளாதார மீட்சி சாத்தியமில்லை.

அண்டைநாடான இலங்கையின் அரசியல் ஸ்திரமின்மை இந்தியாவுக்குக் கவலை ஏற்படுத்தும் விசயம் என்பதில் சந்தேகமில்லை. ஏப்ரலில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தைத் தொட்டபோது, இந்தியா 3.8 பில்லியன் டாலர் கடன் கொடுத்து உதவியது. என்றாலும், இந்தியாவை ராஜபக்ச ஆட்சியின் ஆதரவாளராய்ச் சித்தரித்து இலங்கையின் சிக்கலில் அந்த நாட்டிற்கும் பங்குண்டு என்பது போல விமர்சிக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

கொழும்பில் இருக்கும் இந்திய தூதரகம் பல சமயங்களில் தனது டிவிட்டரில் அந்த விமர்சனங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிதாயிற்று. “இலங்கை மக்கள் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்குமான தங்கள் ஆசைகளை ஜனநாயக முறைகள், விழுமியங்கள் மூலமாகவும், ஆழங்கால் பட்டிருக்கும் இயக்கங்கள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றத் துடிக்கிறார்கள். அவர்களின் பின்னே இந்தியா தொடர்ந்து நிற்கும்” என்று இந்திய தூதரகம் தொடர்ந்து டிவிட்டரில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான வதந்திகளைத் தூண்டிவிட்டவை, இந்தியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் எதிரான எஃப்எஸ்பி, ஜேவிபி ஆகிய இடதுசாரிக் கட்சிகள்தான் என்ற சந்தேகத்திற்கு இடமிருக்கிறது.

சீனாவுக்கு ஆதரவான இடதுசாரிக் கட்சியிலிருந்து பிரிந்துவந்த ஜேவிபி இந்தியாவுக்கு எதிரான கட்சி. இலங்கைச் சிறுபான்மையினரான தமிழர்களின் அதிகாரப் பங்கீட்டுக் கோரிக்கையை ஜேவிபி எதிர்க்கிறது. தேசத்தின் ஆட்சி மொழிகளாகச் சிங்களத்தையும், தமிழையும், ‘தொடர்பு மொழியாக’ ஆங்கிலத்தையும் அறிவிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 13-ஆவது திருத்தத்தை ஜேவிபி எதிர்த்து வந்திருக்கிறது.

மேலும், இந்திய வம்சாவளியைச் சார்ந்த இலங்கைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளை அதீத தேசியவாத ஜேவிபி கட்சி இந்தியாவின் ‘ஐந்தாம் படை’ என்று கருதுகிறது.

மக்கள் ஒற்றுமையாகத் திரண்டு வந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி, தாங்கள் தேர்ந்தெத்த அரசியல் தலைவர்களை ஓட ஓட விரட்டி இறுதியில் அரசாங்கத்தை வீழ்த்த முடியும். இதுதான் இலங்கை ’அரகலயா’ கற்றுக்கொடுத்த அரசியல் பாலபாடம்

என்னதான் ஜேவிபி பாராளுமன்ற அரசியல் கட்சியாக நிறம் மாறினாலும், இது இன்னும் வன்முறைமிக்க தனது கடந்த காலத்தை முற்றிலும் கடந்துவரவில்லை என்பதைச் சமீபத்து நிகழ்வுகள் நிரூபித்திருக்கின்றன. இதற்கிடையில், இலங்கைக்கு இந்தியா செய்த 3.8 பில்லியன் டாலர் கடனுதவியைச் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் ஜேவிபியின் கொள்கைதான் எஃப்எஸ்பி-யின் கொள்கை. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகளையும் எஃப்எஸ்பி எதிர்க்கிறது.

மத வேற்றுமைகளைக் கடந்து, இன வேற்றுமைகளைக் கடந்து, வெள்ளமென ஒற்றுமையாகத் திரண்டுவந்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி, தாங்கள் தேர்ந்தெத்த அரசியல் தலைவர்களை ஓட ஓட விரட்டி இறுதியில் அரசாங்கத்தை வீழ்த்த மக்களால் முடியும்.

இதுதான் ‘அரகலயா’ நமக்குக் கற்றுக்கொடுத்த பாலபாடம். வாக்களித்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் மக்கள் பிரதிநிதிகளிடம் பொறுப்புணர்வு இருக்க வேண்டும்; நீதியுணர்வு இருக்க வேண்டும். நல்லாட்சி வேண்டும்; வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்று ஒரு நாடே ஒட்டுமொத்தமாக, பலமாக ஆணையிட வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை மக்களின் ஒற்றுமைதான்.

அரகலயா கற்றுக்கொடுத்த இந்தப் பாடத்தைக் கற்றுக் கொண்ட இலங்கை ஃபீனிக்ஸ் பறவை போல சாம்பலிலிருந்து மீண்டெழுந்து புதியதோர் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் என்று நம்புவோமாக!

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival