Read in : English

நகர்ப்புற வளர்ச்சி, சுற்றுப்புறச் சூழல் தொடர்பான பிரச்சினைகளை விவாதிக்கும் அனைவரும் தற்போது அவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டனர். குப்பை கையாளப்படுவதில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக, ஒவ்வொரு மாநகரத்திலும், நகரத்திலும், சிறிய நகரத்திலும், இப்போது ஒவ்வொரு கிராமத்திலும் கூட, பல ஆண்டுகளாகக் கொட்டிக் கிடக்கும் குப்பைக்கழிவு அல்லது மரபுவழிக் கழிவுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஆகப்பெரும் சவால்கள் குவிந்து கிடக்கின்றன. இந்த மரபுவழிக் கழிவை அரசுகளோ கொள்கை வகுப்பாளர்களோ, கல்வித்துறை ஆய்வாளர்களோ, தொழிலதிபர்களோ, உள்ளாட்சி அமைப்புகளோ பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சொல்லப்போனால் இந்தப் பிரச்சினைக்குக் காரணமே இவர்கள்தாம்.

மலையளவு குவிந்துகிடக்கும் குப்பையும், கழிவுகள் நிறைந்த ஏரிகளும் கடந்த சில ஆண்டுகளாக நீரையும், காற்றையும் மாசுபடுத்தி, மோசமான விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அதே நேரம் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ் சுற்றுப்புறச்சூழலின் வீழ்ச்சியைத் தடுக்கவும், நிலத்தை மீட்டெடுத்து மாற்றுப் பயன்பாடுகளுக்கு மடைமாற்றம் செய்யவும் கடுமையாக முயல்கிறார்கள்; முனைப்புடன் செயல்படுகிறார்கள். இந்தியாவில் மொத்தம் 3,075 குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன. சுற்றுவட்டப் பொருளாதாரச் செயற்திட்டங்கள் மூலம், இந்தக் குப்பைக் கிடங்குகளைச் சுத்தப்படுத்தும் கொள்கைச் செயற்பாட்டு முயற்சிகள் பரிசீலிக்கப்படுகின்றன.

திடக்கழிவு என்பது இரண்டு விதமானது: ஒவ்வொரு நாளும் புத்தம் புதிதாய் உருவாகிப் பதப்படுத்தப்படுவது அல்லது மண்ணுக்குள் கொட்டப்படுவது ஒருவிதம்; பதப்படுத்தாமல் கழிவுகளை அப்படியே பல ஆண்டுகளாகக் குப்பைக் கிடங்குகளில் கொட்டுவது இன்னொரு விதம்.

தமிழ்நாட்டில் 271 குப்பைக் கிடங்குகள் இருக்கின்றன; 207 இலட்சம் கன மீட்டர் மரபுவழிக் கழிவு குவிந்துகிடப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவற்றில் 269 குப்பைக் கிடங்குகளில் ‘பயோமைனிங்க்’ திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது; அதாவது 19 மாநகராட்சிகளில், 95 நகராட்சிகளில், 121 ஊராட்சிகளில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படவிருக்கிறது. 69 குப்பைக்கிடங்குகளிலிருந்து 32 கனமீட்டர் மரபுவழிக் கழிவுகள் அகற்றப்பட்டுவிட்டன; 360 ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது. ‘பயோமைனிங்’ திட்டங்களுக்காகப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருக்கிறது.

 திடக்கழிவுப் பொருள்களை நுண்ணுயிரிகளின் செயற்பாட்டின் மூலம் பிரித்தெடுத்து மறுபயன்பாட்டுக்குத் தகுதியாக்கும் வண்ணம் பண்படுத்தும் முறைக்குப் பயோமைனிங்க் என்று பெயர். அந்த முறையில் மிச்சப்படும் கழிவு மண்ணோடு மண்ணாக்கப்படும்

இவையெல்லாம் தமிழக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் 2022 ஜூன் 22 அன்று சமர்ப்பித்த அறிக்கையில் இருக்கும் தரவுகள்.

ஆயினும், மாநிலம் முழுவதும் இருக்கும் சிறிய குப்பைக் கிடங்குகள் பற்றிய தரவுகளை அரசு வழங்கவில்லை. நிலத்தை மீட்டெடுக்கும் திட்டங்களை காலந்தவறாமல் நிறைவேற்றுவதையும், அதற்கான செலவீனங்களையும் கண்காணிக்கச் சரியானதொரு திட்ட மேலாண்மைக் கட்டமைப்பு தமிழகத்தில் இல்லை என்று கள ஆய்வுகள் சொல்கின்றன. தாறுமாறான நிதி மேலாண்மையும், திட்டத்தின் கால தாமதங்களும் இருக்கின்றன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க:

பெருங்குடி குப்பைக் கிடங்கு தீ விபத்து: மீத்தேன் அபாயத்தை எதிர்கொள்வது எப்படி?

சர்வதேச அந்தஸ்து பெறும் பள்ளிக்கரணை சதுப்புநிலம்

சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 1986 சொல்லும் விதிகளை மீறிய குற்றத்திற்காகத் தமிழகத்தில் 15 மாநகராட்சிகளுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 2020இல் மொத்தம் ரூ 5.86 கோடி அபராதம் விதித்திருக்கிறது. நகராட்சித் திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016 சொல்லும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க தவறியதற்காகப் பல நகராட்சிகளுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இருக்கும் 23 குப்பைக் கிடங்குகளில் 6.81 இலட்சம் கனமீட்டர் மரபுவழிக் கழிவு பயோமைனிங்க் திட்டம் மூலம் பதப்படுத்தப்பட்டது. இதில் தஞ்சாவூரின் பங்குதான் மிக அதிகமானது; அதாவது 30 சதவீதம்; செங்கல்பட்டின் பங்கு 17 சதவீதம்; கடலூரின் பங்கு 8 சதவீதம்; சென்னை மற்றும் திருவள்ளூர் பங்கு தலா 6 சதவீதம்; ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகியவற்றின் பங்கு தலா 5 சதவீதம். இதெல்லாம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021ஆம் ஆண்டு அறிக்கை தந்த தரவுகள்.

129 குப்பைக் கிடங்குகளில் நிலத்தை மீட்டெடுக்க பயோமைனிங்க் திட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் 58 குப்பைக் கிடங்குகளில் இந்தத் திட்டம் கொண்டுவரப்படவிருக்கிறது. திடக்கழிவுப் பொருள்களை நுண்ணுயிரிகளின் செயற்பாட்டின் மூலம் பிரித்தெடுத்து மறுபயன்பாட்டுக்குத் தகுதியாக்கும் வண்ணம் பண்படுத்தும் முறைக்குப் பயோமைனிங்க் என்று பெயர். அந்த முறையில் மிச்சப்படும் கழிவு மண்ணோடு மண்ணாக்கப்படும்.

2015இல் கும்பகோணம் நகராட்சியில்தான் மரபுவழிக் கழிவில் பயோமைனிங்க் கருத்தாக்கத்தை முதன்முதலாகத் தமிழ்நாடு கொண்டுவந்தது. தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் முப்பது ஆண்டாகக் கிடந்த 10.5 ஏக்கர் குப்பைக் கிடங்கில் தொடர்ந்து தீப்பிடித்தது. அந்தக் கிடங்கில் 3.5 இலட்சம் டன் கழிவு இருந்தது; அதில் ஒரு இலட்சம் டன் வெகுவிரைவில் காலியானது; ஐந்து ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டது

பயோமைனிங்க் திட்டங்களில் இருக்கும் பெரிய பிரச்சினைகள் மரபுவழிக் கழிவின் அளவை மதிப்பிடுவது, விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்தல், மையமாக்கப்பட்ட திட்ட ஒப்புதல் கட்டமைப்பு, திட்ட நிறைவேற்றத்திற்கான காலவரம்பு போன்றவை. பெரும்பாலான பயோமைனிங்க் திட்டங்கள் தாமதமாகின்றன அல்லது முற்றுப் பெறாமல் இருக்கின்றன. ஏனென்றால், கழிவுப் பொருள்களை நிலையாக்கல், கழிவைப் பிரித்தெடுக்கும் போதுமான கருவிகள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமை, விஷநீர்க் கசிவைச் சரிபடுத்த மேற்கொள்ளும் தரமற்ற முறைகள் ஆகியவை பெருங்குறைபாடுகளாக இருக்கின்றன. உதாரணமாக, உள்ளாட்சி அமைப்புகளில் கொண்டுவரப்பட்டிருக்கும் 129 பயோமைனிங்க் திட்டங்களின் நிறைவேற்றம் என்பது பூஜ்யத்திலிருந்து 99.90 சதவீதம் வரையிலான நிலையில் இருக்கிறது.

58 பயோமைனிங்க் திட்டங்கள் கொண்டுவரப்படவிருக்கும் குப்பைக் கிடங்குகளில் 10 கிடங்குகளில் புதிய கழிவுகள் மரபுவழிக் கழிவுகளோடு சேர்ந்து கலந்துவிடுவது திட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுகிறது. அதனால் திட்டம் முற்றுப்பெறுவதும் தாமதமாகிவிடுகிறது.

2015இல் கும்பகோணம் நகராட்சியில்தான் மரபுவழிக் கழிவில் பயோமைனிங்க் கருத்தாக்கத்தை முதன்முதலாகத் தமிழ்நாடு கொண்டுவந்தது. தேப்பெருமாநல்லூர் கிராமத்தில் முப்பது ஆண்டாகக் கிடந்த 10.5 ஏக்கர் குப்பைக் கிடங்கில் தொடர்ந்து தீப்பிடித்தது. அந்தக் கிடங்கில் 3.5 இலட்சம் டன் கழிவு இருந்தது; அதில் ஒரு இலட்சம் டன் வெகுவிரைவில் காலியானது; ஐந்து ஏக்கர் நிலம் மீட்டெடுக்கப்பட்டது.

எனினும், பயோமைனிங்க் திட்டம் தமிழ்நாட்டில் ஒரே சீராக நடக்கவில்லை. சென்னையில் மரபுவழிக் கழிவுக் கிடங்குகள் என்று பல ஆண்டுகளாக விவாதத்திற்கு ஆளானவை 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை, அத்திப்பட்டு, சாத்தாங்காடு, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகியவை. பெருங்குடியில் அடிக்கடி பற்றி எரியும் நெருப்பு பல ஆண்டுகளாக பொது சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. 2024ஆம் ஆண்டு முடிவிற்குள் பெருங்குடியிலும், கொடுங்கையூரிலும் பயோமைனிங்க் திட்டத்தையும் நில மீட்டெடுப்புத் திட்டத்தையும் முடிக்க உத்தேசித்திருக்கிறது மாநில அரசு.

இந்த ஆண்டு மார்ச்சில் தலைமைச் செயலர் டாக்டர் வி. இறையன்பு பெருங்குடி, பள்ளிக்கரணைப் பயோமைனிங்க் திட்டங்களை ஆய்வுசெய்தார். திட்டங்களை விரைந்து முடிக்கும்படி அவர் உள்ளாட்சி அமைப்புகளையும், ஒப்பந்ததாரர்களையும் கேட்டுக்கொண்டார். ஆனாலும், திட்டங்கள் இன்னும் முடிந்தபாடில்லை.

கோயம்புத்தூரில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மரபுவழிக் கழிவுகள் பல ஆண்டுகளாக நாறிப்போய்க் கிடக்கின்றன. 2020இல் பயோமைனிங்க் திட்டம் கொண்டுவரப் பட்டது. 60 ஏக்கர் நிலத்தில் பரவிக் கிடக்கும் சுமார் 9.5 இலட்சம் கனமீட்டர் கழிவை அகற்றும் நோக்கத்தைக் கொண்டது அந்தத் திட்டம். ஆனால், இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னும், திட்டத்தின் 40 சதவீதம் மட்டுமே முடிந்திருக்கிறது. காலக்கெடு 2023 மார்ச்சுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

சென்னையில் மரபுவழிக் கழிவுக் கிடங்குகள் என்று பல ஆண்டுகளாக விவாதத்திற்கு ஆளானவை 15  ஏக்கர் பரப்பளவு கொண்ட பள்ளிக்கரணை, அத்திப்பட்டு, சாத்தாங்காடு, பெருங்குடி, கொடுங்கையூர் ஆகியவை

இதற்கிடையில் அந்தக் குப்பைக் கிடங்கில் அடிக்கடி பற்றி எரியும் நெருப்பு மாநகரத்தில் விஷப்புகையைப் பரப்புகிறது. அதைக் கட்டுப்படுத்த கோயம்புத்தூர் மாநகராட்சி நிறையச் செலவு செய்கிறது. இந்தக் குப்பை மலையை அப்புறப்படுத்துமாறு ஏற்கெனவே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

திருச்சி மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் அரியமங்கலத்தில் 47.7 ஏக்கரில் பரவிக் கிடக்கும் குப்பைக் கிடங்கில் கொண்டுவரப் பட்ட பயோமைனிங்க் திட்டம் 2018இலிருந்து தாமதமாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. அதைப் போல, பெரம்பலூர், ராஜபாளையம், தஞ்சாவூர் மாவட்டங்களில் இருக்கும் நகராட்சிகள், பேரூராட்சிகள் உட்பட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்பட்ட பயோமைனிங்க் திட்டங்கள் எல்லாம் காலதாமதத்தில் மாட்டிக் கொண்டுவிட்டன.

இப்படி ஆமை வேகத்திலே போனால், 200 குப்பைக் கிடங்குகளில் முழுமையான பயோமைனிங்க் திட்டத்தை 2024 டிசம்பர் 31-க்குள் முடிக்க வேண்டும் என்ற மாநில அரசின் இலக்கு நிறைவேறுவது சாத்தியமில்லை. பயோமைனிங்க் திட்டத்தின் காலதாமத்தையும், நிதி விரயத்தையும் அவ்வப்போது அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதற்குப் பல்வேறு பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு கண்காணிப்புக் குழுவைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்தால் மிகவும் நல்லது.

(கட்டுரையாளர் பொருளாதார அறிஞர், பொதுக்கொள்கை நிபுணர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival