Read in : English

நம் சமூக அமைப்பை நீண்டகாலமாகவே செல்லரித்துக் கொண்டிருக்கிறது இலவசம் என்னும் வல்லூறு. இதை ஒழிக்கும் தீர்வுகளுக்கான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அரசுக்கொள்கை வகுப்பாளர்களும், அரசியலமைப்புச் சட்ட நிபுணர்களும் அல்லது சட்டரீதியான சுயாட்சி அமைப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இலவசங்களை ஒழிக்கும் விவகாரத்தில், அரசியலமைப்புச் சட்டவிதிகள் மூலம் தீர்வுகள் கண்டுபிடித்து இலவசங்களை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, நிர்வாகத்துறையிலும் சரி, நீதித்துறையிலும் சரி, யாரும் ஆர்வம் காட்டியதில்லை.

தேசிய, மாநிலக் கட்சிகள் அள்ளிவழங்கும் இலவசங்களால் மாநிலங்களிலும், ஒட்டுமொத்த நாட்டிலும் நிதிநிலைமை அதலபாதாளத்திற்குச் சரிந்துபோனது என்பது பொறுப்புள்ள அரசியல்வாதிகளுக்கும், மக்கள் தலைவர்களுக்கும், அரசுக் கொள்கைவகுப்பாளர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

இலவசங்களின் பட்டியலில் மின்சாரம், சைக்கிள், இருசக்கரவாகனம், கல்வி, சமையல்வாயு, மடிக்கணினி, பொதுப்போக்குவரத்துத் துறைப் பேருந்துப் பயணம், கடன் தள்ளுபடி, தொலைக்காட்சிப் பெட்டி, வீட்டு உபயோகப் பொருட்கள், இத்யாதிகள்… இத்யாதிகள்… இடம்பெற்றிருக்கின்றன. மேலும், இலவசமான ரொக்கங்களும் மானியங்களும் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. அவற்றிலிருக்கும் நிதிதொடர்பான ஆபத்துகள் ஒருபோதும் மதிப்பீடு செய்யப்படுவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு விதிமுறையும் இல்லை. ‘இலவச மின்சாரம், இலவச நீர், சில வகையான இலவச உரங்கள்’ என்று பொங்கிவழியும் பண்பாடு சுற்றுப்புறச்சூழல் லட்சியங்களுக்கு முரணானது என்று 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என். கே. சிங் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறினார்.

எல்லா இலவசங்களும் ஒரே மாதிரியானவை அல்ல; அவற்றில் சில சமூக நலனுக்காக வழங்கப்படுபவை; பின்தங்கியவர்களை அரவணைத்து இணைத்துக் ள்ளப் பயன்படுபவை என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. என்றாலும், இலவசங்கள் மாநிலங்களின் நிதிநிலைமையில் இழப்பை ஏற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர்-ஜெனரல் (சிஏஜி) அறிக்கையும், ரிசர்வ் வங்கி அறிக்கையும் இலவசங்கள் மாநிலங்களின் நிதிநிலையில் ஏற்படும் இழப்பை இடைவிடாமல் ஆவணப்படுத்தியுள்ளன

கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர்-ஜெனரல் (சிஏஜி) அறிக்கையும், ரிசர்வ் வங்கி அறிக்கையும் இலவசங்கள் மாநிலங்களின் நிதிநிலையில் ஏற்படுத்தும் இழப்பை இடைவிடாமல் ஆவணப்படுத்தியுள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கை (ஜூன் 2022) இப்படிக் கூறுகிறது: சிஏஜியின் சமீபத்தைய தரவுகளின்படி, மானியங்களுக்காக மாநிலங்கள் செய்யும் செலவுகள் 2020-21-ல் 12.9 சதவீதமும், 2021-22-ல் 11.2 சதவீதமும் உயர்ந்திருக்கின்றன. அதைப்போல, மாநிலங்களின் மொத்தச் செலவில் மானியங்களின் பங்கு 2019-20-ல் 7.8 சதவீதமாக இருந்து 2021-22-ல் 8.2 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

“இலவசங்கள் கடன் கலாச்சாரத்தைப் பலவீனப்படுத்தும் வல்லமை படைத்தவை; குறுக்கு மானியமுறை மூலமாக விலைகளைத் திரித்து, தனியார் முதலீட்டுக்கான ஊக்கங்களை ஒழித்துவிடும்; நடப்புக் கூலி விகிதங்களில் தொழிலாளர்கள் வேலை செய்வதைத் தடுத்து, உழைக்கும் வர்க்கத்தின் பங்களிப்பைக் குறைத்துவிடும்” என்று ரிசர்வ் வங்கியின் அறிக்கை சொல்கிறது.

இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் அதிக மதிப்புடைய இலவசங்களை அறிவித்த மாநிலங்களும், அவற்றின் மாநில உள்நாட்டு மொத்த உற்பத்தித் திறன்களும் (ஜிஎஸ்டிபி சதவீதத்தில்) கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன:

பஞ்சாப் (2.7%), ஆந்திரப்பிரதேசம் (2.1%), ஜார்க்கண்ட் (1.7 %), மத்தியப்பிரதேசம் (1.6 %), ராஜஸ்தான் (0.6%), மேற்குவங்கம் (1.1%), பீகார் (0.1%), ஹரியானா (0.1%).

தவறு செய்யும் அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வமான அங்கீகாரத்தையும், அவற்றின் தேர்தல் சின்னங்களின் அங்கீகாரத்தையும் நீக்க வேண்டும் என்று பல பொதுநல வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. அதனால் சில ஊடகச் செய்திகளையும், அவை ஓரிரு நாள் பேசப்பட்டதையும் தவிர்த்து ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. தேர்தலில் வாக்குகள் வாங்குவதற்காக இலவசங்கள் கொடுப்பதன் மூலம் தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகளான 14, 162, 266(3) மற்றும் 282 ஆகியவற்றை மீறுகின்றன என்று அண்மையில் ஒரு பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கிறது.. சட்டப்பிரிவு 293(3) பின்வருமாறு சொல்கிறது: “கடன் நிலுவை வைத்திருக்கும் ஒரு மாநிலம், இந்திய அரசின் சம்மதமின்றி, எந்தவொரு கடனையும் வாங்க முடியாது.”

மேலும் படிக்க:

பாஜகவின் தேசியவாத வளர்ச்சியை திராவிட மாடல் சித்தாந்தம் ஜெயிக்குமா?

தமிழக பொருளாதாரமும், திமுக அரசு செய்ய மறுக்கும் சீர்திருத்தங்களும்

இலவசங்கள் பிரச்சினையைப் பற்றிக் குழுக்களோடும், ஆணையங்களோடும், சிறப்புக் குழுக்களோடும், நிபுணர் ஆய்வாளர்களோடும் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கருத்தியல் ரீதியான உரையாடலை இதுவரை மேற்கொண்டதே இல்லை.

அண்மையில் இரண்டு நிகழ்வுகள் அறிவுக்கொவ்வாத இலவசங்கள் பற்றிய ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தி உள்ளன. ஆனாலும், பிரச்சினையைத் தீர்க்கக் கையாள வேண்டிய முறைமைகளும், தீர்க்கமும் தெளிவில்லாமல்தான் இருக்கின்றன.

முதல் நிகழ்வு இதுதான். உத்தரப்பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி இப்படிப் பேசினார்: “ரியூரி (பொறிக்கப்பட்ட இனிப்புப்பண்டம்) கல்சர் (இலவசங்களின் கலாச்சாரத்தைக் குறிக்கும் இந்தி வார்த்தை) நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது. ரியூரி கலாச்சாரத்தை ஆதரிப்பவர்களால் புதிய எக்ஸ்பிரஸ் சாலைகளை, புதிய விமான நிலையங்களை அல்லது டிஃபென்ஸ் காரிடர்களை உருவாக்க முடியாது. நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த மனப்பான்மையை ஒழிக்க வேண்டும்; நாட்டின் அரசியலிலிருந்து ரியூரி கலாச்சாரத்தை நீக்க வேண்டும்.”

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் இந்தக் கருத்தைச் சொன்னது ஒரு நகைமுரண். வெறும் உதட்டளவு சம்பிரதாயமான கருத்து இது என்பதைத் தாண்டி இதில் ஒன்றுமில்லை. ஏனென்றால், பிரதமரின் கட்சியான பாஜகவின் அரசே அந்த மாநிலத்தில் நேரடியாகப் பலன்பெறுவோர் திட்டங்கள் (டிபிடி) மூலம் இலவசங்களைச் சிறுசிறு மாற்றங்களுடன் அள்ளித் தருகிறது.

“வாக்காளர்களுக்கு இலவசங்கள் மூலம் லஞ்சம் கொடுப்பதைத் தன்னால் தடுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுமென்றால், தேர்தல் ஆணையத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்… இதைக் (இலவசங்களை) கட்டுப்படுத்தியாக வேண்டும். எப்படிச் செய்ய வேண்டும் என்பதை ஆராய வேண்டும்” என்று அண்மையில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி இலவசங்களின் கலாசாரத்தை ஒழிக்க வேண்டிய அவசியத்தைப் பேசியது ஒரு நகை முரண். ஏனென்றால், பாஜக அரசே அந்த மாநிலத்தில் நேரடியாகப் பலன்பெறுவோர் திட்டங்கள் (டிபிடி) மூலம் இலவசங்களைச் சிறுசிறு மாற்றங்களுடன் அள்ளித் தருகிறது

இந்தக் கருத்தும்கூட வெறும் உதட்டளவுப் பேச்சுத்தான். ஏனென்றால், இதே உச்சநீதிமன்றம் வாக்காளர்களுக்கு இலவசங்கள் கொடுக்கும் அரசியல் கட்சிகளை நிரந்தரமாகத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ தன்னால் முடியாது என்று 2013-ல் கூறியது. இலவசங்கள் நேர்மையான சுதந்திரமான தேர்தல் கட்டமைப்பின் ஆணிவேரையே அறுத்துவிடுகிறது என்றாலும், இந்தப் பிரச்சினையில் தொடர்புள்ளவர்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதபோது, நீதிமன்றம் தனது கையறுநிலையை வெளிப்படுத்தியிருப்பது ஆச்சரியமில்லை.

மேலும், இலவசங்கள் விஷயத்தில் நிதி ஆணையம் மாநிலங்களுக்கு முழுச் சுதந்திரம் அளித்து, பரிசோதித்துப் பார்க்கும்படி ஒன்றிய அரசை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இது இந்தப் பிரச்சினையை அணுகும் முறையில் இருக்கும் மற்றுமொரு குறைபாடு. குடியரசுத் தலைவரால் ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒருமுறை உருவாக்கப்படுவதுதான் நிதி ஆணையம். ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் அல்லது யூனியன் பிரதேசங்களுக்கும் இடையே வரிவருமானத்தைப் பங்கீடு செய்வதைக் குறிப்பிட்ட காலத்திற்கு ஆராயும் அமைப்பு அது. இலவசங்களைப் பற்றியெல்லாம் கருத்துச்சொல்லும் நிரந்தர அமைப்பு அல்ல அது.

என்றாலும், 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவர் என்.கே. சிங், “இலவசங்களின் பொருளாதாரம் முற்றிலும் தவறானது. இலவசங்கள் பொருளாதாரத்திலும் அரசியலிலும் தீமைகளை ஆழமாய்ப் பாய்ச்சியிருக்கின்றன. அதல பாதாளம் நோக்கிப் போகும் ஓட்டப்பந்தயம் இது. திறமையையோ செழுமையையோ நோக்கிப் போகும் சாலை அல்ல. ஆனால், கடுமையான நிதிவீழ்ச்சிக்கான கடவுச்சீட்டு இது” என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.

இலவசங்கள் என்னும் வல்லூறைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடத்தை விதிகளின்படி முயற்சியெடுக்க வேண்டியது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடமை என்று இன்றைய ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தியிருக்கும் மென்மையான எதிர்வினை அநேகமாக மூன்றாவது பெரிய உதட்டளவுக் கருத்தாக இருக்கலாம்.

“தேர்தலின் போதும், தேர்தல் முடிந்தபின்னும் இலவசங்களை விநியோகம் செய்வது சம்பந்தப்பட்ட கட்சியின் கொள்கைத் தீர்மானம். அந்த மாதிரியான கொள்கைகள் நிதிரீதியாகச் சாத்தியமா மாநிலத்தின் பொருளாதார நிலைமையில் அவை மோசமான விளைவுகளை ஏற்படுத்துமா என்பவை எல்லாம் வாக்காளர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டிய பிரச்சினைகள். தேர்தலில் வெற்றிபெறும் கட்சி ஆட்சியமைத்த பின்னர் தீட்டும் கொள்கைளையும், எடுக்கும் முடிவுகளையும் தேர்தல் ஆணையத்தால் கட்டுப்படுத்த முடியாது. சட்டத்தில் அதற்கான ஷரத்துகள் இல்லாத சூழலில் தேர்தல் ஆணையம் அப்படிக் கட்டுப்படுத்த முயன்றால் அது அதிகாரவரம்பு தாண்டிய செயலாகும்.”

கட்சிகள் இலவசங்கள் கொடுப்பதைத் தடைசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கின் விசாரணையின்போது சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில் தேர்தல் ஆணையம் சொன்ன வார்த்தைகள் மேற்கண்டவை.

உச்சநீதிமன்றம் வாக்காளர்களுக்கு இலவசங்களைக் கொடுக்கும் அரசியல் கட்சிகளை நிரந்தரமாகத் தடுக்கவோ கட்டுப்படுத்தவோ தன்னால் முடியாது என்று 2013-ல் கூறியது. இலவசங்களைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்

வரிசார்ந்த பொருளாதாரம் எப்படியிருந்தாலும், இலவசங்கள் வழங்கும் திட்டங்களைத் தீட்டும் கட்டற்ற சுதந்திரம் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள், சமூக நலன் என்ற பெயரில் இலவசங்களுக்காகச் செலவழிக்க முந்தைய அரசு வாங்கிய கடன்களுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் வட்டி செலுத்துபாவையே. நடப்பு நிதியாண்டில் மாநிலங்கள் அறிவித்திருக்கும் இலவசங்களின் அளவு மலைக்க வைக்கிறது.

ஆயிரமாயிரம் கோடிகளில் கடனை வாங்காமல், ஆண்டுக்கணக்காக வட்டி கட்டாமல் வரிவருமானங்களை மட்டுமே அதிகரிக்கச் செய்வதில் எந்தவிதக் கவனமும் செலுத்தப்படுவதில்லை; முயற்சியும் எடுக்கப்படுவதில்லை. பஞ்சாப், மேற்குவங்கம், கேரளம், தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப்பிரதேசம், சட்டிஸ்கார், ஆந்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் போன்ற பெரும்பாலான மாநிலங்கள் கடுமையான நிதிநெருக்கடியில் மாட்டிக்கொண்டு விட்டன. ஏற்கெனவே சீரழிந்துகிடக்கும் பொருளாதார நிலைமை அந்தந்த மாநிலங்களில் நீண்டகால உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கத் தேவையான உற்பத்தித்திறன்மிக்க முதலீடுகளைச் செய்யவிடாமல் தடுத்துக்கொண்டிருக்கிறது.

எதிர்காலச் சந்ததியினர் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கப்போகும் வருமானத்தில் எதுவும் மிச்சப்படாமல் போகும் அளவுக்கு, அவர்களால் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாமல் போகும் அளவுக்கு, அவர்கள்மீது பெரியதொரு பாரத்தை மறைமுகமாக வைக்கும் இந்த இலவசங்களை முற்றிலும் ஒழித்தாக வேண்டும். அதற்காக ஒன்றிய அரசும், உச்ச நீதிமன்றமும், மாநிலங்களும் ஒன்றிணைந்து அதிகாரமிக்கதொரு கட்டமைப்பை உருவாக்க வேண்டும். அதற்கான நேரம் இதுதான்!

(கட்டுரையாளார் பொருளாதார அறிஞர் மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival