Read in : English

Share the Article

அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு டான்ஜெட்கோ வழங்கும் மின்சேவையின் தரம், மின்தடைக்கான காரணிகள் ஆகியவை குறித்துக்  கவனம்கொள்ளச் செய்திருக்கிறது. டான்ஜெட்கோ தரமான சேவையளித்திருந்தால் நுகர்வோர்கள் அதிகமான மின்கட்டணம் செலுத்துவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்.

குறைபாடு கொண்ட மின் விநியோகம் காரணமாகத் தமிழகத்தில் பல இல்லங்களில் ஏதோவொரு கட்டத்தில் குளிர்சாதனப் பெட்டிகளும், தொலைக்காட்சிப் பெட்டிகளும், குளிர்பதனக் கருவிகளும் பழுதுபட்டுவிடுகின்றன. அந்தச் சாதனங்களுக்குச் சரியான அளவில் மின்சாரம் வழங்க உதவும் வோல்டேஜ் ஸ்டெபிலைசர்களும்கூடப் பழுதாகிவிடுகின்றன. இப்படியான சூழலில் அந்தக் கருவிகளை மாற்றவேண்டியதாகிவிடுகிறது. சிலநேரத்தில் மின்தடைக்குப் பின்பு மீண்டும் வரும் மின்சாரத்தால் வீட்டு உபகரணங்கள் பழுதாகிவிடுகின்றன. இரவில் ஏசி இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கும்போது வோல்டேஜ் குறைவதாலும் உபகரணங்கள் சீர்கெட்டுப் போகின்றன.

வீடுகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் குறிப்பிட்ட மின்னழுத்த (வோல்டேஜ்) அளவுகளுக்குள் இருக்க வேண்டும். அந்த அளவில் மாறுபாடு ஏற்படும்போது மின்சாதனங்கள் பழுதுபட்டுவிடும். ஆகவே, இதைப் போன்ற அம்சங்களைக் கணக்கில்கொண்டே மின்சாரத்தை வழங்கும் கடமையுணர்வு மின்னாலைகளுக்கு உண்டு. ‘கிரிட் கோட்’ என்று ஒரு விதி உண்டு. அதை மின்னாலைகள் கடைபிடித்தாக வேண்டும். அதைப்போல, நுகர்வோர்களுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தில், மின்வழங்கல் விதிமுறைகளின்படி, குறிப்பிட்ட சில அம்சங்கள் இருக்க வேண்டும். உதாரணமாக, 220 வோல்ட்டில் பத்து சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்.

இந்தத் தரவிதிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டத்தில் இன்னும் தெளிவுகள் இல்லை. ஆனால், விதிக்கப்பட்ட தரத்திலான மின்சாரம் வழங்கப்பட வேண்டும்; அப்படிச் செய்யத் தவறினால் தொடர்புடைய அமைப்புகள் பதில் சொல்லியாக வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனால் வீடுகளின் நாம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ், ஏசி, வோல்டேஜ் ஸ்டெபிளைசர் போன்றவை மின்சாரக் குறைபாட்டால் கெட்டுப்போய்விட்டால் டான்ஜெட்கோ நமக்கு நட்டஈடு கொடுத்தாக வேண்டும்.

மூன்று ஃபேஸ் மின் இணைப்பைப் பெற்றிருக்கும் நுகர்வோர்கள் தங்களின் மின்னுபகரணங்கள் பழுதாகிப் போய்விட்டால் மீட்டரில் தெரியும் டிஜிட்டல் தகவலைப் படமெடுத்து அதை நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பி நட்டஈடு கேட்கலாம்

தங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அழுத்தம் (வோல்டேஜ்) மற்றும் தரம் தொடர்பான தகவல்களைத் தரும் டிஜிட்டல் மீட்டர்கள் நுகர்வோர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்று தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (டிஎன்ஈஆர்சி) முன்னாள் இயக்குநர் பி. முத்துசாமி கூறுகிறார். மூன்று ஃபேஸ் மின் இணைப்பைப் பெற்றிருக்கும் நுகர்வோர்கள் தங்களின் மின்னுபகரணங்களில் ஏதேனும் ஒன்று கெட்டுப் போய்விட்டால் மீட்டரில் தெரியும் டிஜிட்டல் தகவலைப் படமெடுத்து அதை டிஎன்ஈஆர்சி-யின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பி நட்டஈடு கேட்கலாம். அதற்கான இணையதள முகவரி இதுதான்: http://www.tnerc.gov.in/PressRelease/files/PR-160620220551Eng.pdf

அப்படியும் குறைதீரவில்லை என்றால் மின்நுகர்வோர்கள் ஓம்பட்ஸ்மேனை அணுகலாம். புகார்களும் குறைகளும் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்த்து வைக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது என்கிறார் முத்துசாமி.

பிரச்சினைக்கான சான்றாகப் புகைப்படத்தைக்கூடச் சமர்ப்பிக்கலாம் என்கிறார் அவர். இது அடிக்கடி நிகழும் பிரச்சினை என்று சொல்வதற்கு அதை ஒவ்வொரு முறையும் பொறுமையுடன் படம்பிடித்து வைத்திருக்க வேண்டும். “மின்னழுத்த மாறுபாடு கொண்ட, அதாவது வோல்டேஜ் கூடிக் குறைவது போன்ற பிரச்சினையைக் கொண்ட மின் விநியோகத்தால் கெட்டுப்போன உபகரணங்களுக்கு நட்டஈடு கேட்கும் உரிமை நுகர்வோர்க்கு நிச்சயமாக உண்டு” என்றும் அவர் சொல்கிறார்.

மேலும் படிக்க:

மின்கட்டணம் உயர்வு: சூரிய ஆற்றல் மின்சாரமே இப்போதைய தேவை!

தமிழக மின்துறை சீர்திருத்தம் காலத்தின் கட்டாயம்

மின்சாரத் தரம் மிகவும் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு விசயம் என்று ஃபோர்டெக் எலக்ட்ரிக் என்னும் நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் கே. ரவிச்சந்திரன் சொல்கிறார். வோல்டேஜ் அல்லது ஃபிரிக்வென்சி ஆகியவற்றைத் தாண்டி நமக்கு வரும் மின்சாரத்தில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. வீட்டில் ஏசி இயந்திரம் கெட்டுப்போய்விட்டால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் வார்த்தை ‘வோல்டேஜ் பிரச்சினை’ என்பதுதான். நமக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் ‘ட்ரான்சியண்ட்ஸ், ஹார்மோனிக்ஸ், மல்டிப்பிள் ஃபிரிக்வென்ஸிகள்” என்று சில நுண்மையான அம்சங்கள் இருக்கின்றன. “ஒரு ஸ்கேன் மையத்தில் எம்ஆர்ஐ இயந்திரத்தின் அருகே நீங்கள் ஃபோன் பேசினால், தெளிவான தொடர்பு கிடைக்காது. சில உபகரணங்கள் ஏற்படுத்தும் விளைவுதான் இது” என்கிறார் அவர்.

சிலவேளைகளில் மின்தடைக்குப் பின்பு மீண்டும்வரும் மின்சாரத்தில் வீட்டு உபகரணங்கள் பழுதுபட்டு விடுகின்றன. அல்லது இரவில் ஏசி இயந்திரம் இயங்கிக்கொண்டிருக்கும்போது வோல்டேஜ் குறைவதாலும் உபகரணங்கள் சீர்கெட்டுப் போகின்றன

மின்சாரக் குறைபாடு பற்றியும் பேசுகிறார் ரவிச்சந்திரன். மின்விசிறிகளுக்கு, தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு, ஏசி இயந்திரங்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு பயன்பாடுகளுக்கும் மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவை மின்சார இணைப்புப் பாதைகளிலோ மின்கட்டமைப்பிலோ (கிரிட்) குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. மின்சாரத்தில் தேவையற்ற அம்சங்களை உட்புகுத்தி அந்தத் தொழிற்சாலைகள் மின்சாரத்தின் தரத்தைக் கெடுக்கின்றன.

மூன்று ஃபேஸ் மின் இணைப்பைப் பெற்றிருக்கும் நுகர்வோர்கள் தங்களின் மின்னுபகரணங்களில் ஏதேனும் ஒன்று கெட்டுப் போய்விட்டால் மீட்டரில் தெரியும் டிஜிட்டல் தகவலைப் படமெடுத்து அதை டிஎன்ஈஆர்சி-யின் நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு அனுப்பி நட்டஈடு கேட்கலாம், என்று தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் (டிஎன்ஈஆர்சி) முன்னாள் இயக்குநர் பி. முத்துசாமி கூறுகிறார்

குறைபாடு கொண்ட மின்சாரத்தால் கருவிகள் கெட்டுப்போகும் என்பதற்கு இன்னொரு உதாரணம் மருத்துவமனை. “சிறுநீரில் கிரியேட்டினின் அளவை மதிப்பிடும் கருவிக்கும், ஈசிஜி இயந்திரத்திற்கும் வழங்கப்படும் மின்சாரம் தரம் குறைந்தது என்றால், எடுக்கப்படும் மருத்துவ அளவுகள் கூடப் பாதிக்கப்படலாம். அதனால் நோயைக் கண்டுபிடிக்கும் முறையிலும் சிகிச்சை முறையிலும் பாதிப்புகள் ஏற்படலாம்” என்கிறார் அவர். மின்சாரத்தின் பல்வேறு பயன்பாடுகளில் சிக்கல்கள் இருக்கின்றன. மின்மோட்டார் வாகனங்களில் ஏற்றப்படும் மின்சாரம் கூட மாசுபடலாம்,. அதனால் சீர்திருத்த நடவடிக்கை தேவை என்கிறார் ரவிச்சந்திரன்.

இந்தச் சிக்கலை மேலும் சிக்கலாக்குவது சூரிய ஆற்றல் மின்னாலைகள். சூரிய ஆற்றல் மின்னாலைகள் நேர்திசை மின்சாரம் (டிசி) தயாரித்து அதை மாறுதிசை மின்சாரமாக (ஏசி) மாற்றிக் கட்டமைப்புக்குள் அனுப்பிவைக்கிறது. இப்படி மாற்றியனுப்பி வைக்கப்படும் நேர் திசை மின்சாரம் மாறுதிசை மின்சாரத்தோடு சில அம்சங்களில் மட்டுமே ஒத்துப்போகும், பல அம்சங்களில் ஒத்துப் போகாது. “சூரிய ஆற்றல் மின்னாலைக்கருகே மருத்துவமனையைக் கட்டமைப்பது சரியானதல்ல, மின்சாரத்தின் தரக்குறைவால் மருத்துவ உபகரணங்கள் பாதிக்கப்படலாம்” என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குழுவாகத் திரண்டு வழக்குத் தொடுக்கலாம் என்கிறார் முன்னாள் அரசுத் தலைமை மின்னாய்வாளர் அப்பாவூ சுப்பையா. வோல்டேஜ் மற்றும் ஃபிரிக்வென்ஸி ஆகியவற்றைத் தாண்டி மின்சார வழங்கலில் இருக்கும் நடுநிலைமையான மின்தடை, மின்னல் மற்றும் ஹார்மோனிக்ஸ் (மின்மாசு) ஆகிய பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகிறார் அவர். மின்னல் என்பது இயற்கையானது; ஆனால் நியூட்ரல் மின்தடையும், ஹார்மோனிக்ஸும் மனிதனால் ஏற்படுபவை.

எர்த் குறைபாட்டால் மின்சாரம் அதிவேகமாகப் பாய்ந்து மின்சார உபகரணங்களைக் கெடுத்துவிடும். இதற்குக் காரணம் பிராந்தியங்களின் மாறுபாடுகளுக்கு ஏற்ப ‘எர்த்திங்க்’ கட்டமைப்பு மாறுபடுகிறது.  மாநிலம் முழுவதும் ஒரேவிதமான எர்த்திங் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

எர்த் குறைபாட்டால் மின்சாரம் அதிவேகமாகப் பாய்ந்து மின்சார உபகரணங்களைக் கெடுத்துவிடும். இதற்குக் காரணம் பிராந்தியங்களின் மாறுபாடுகளுக்கு ஏற்ப ‘எர்த்திங்க்’ கடடமைப்பு மாறுபடுகிறது. மாநிலம் முழுவதும் ஒரேவிதமான எர்த்திங் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்கிறார் அப்பாவூ சுப்பையா.

ரவிச்சந்திரன் பேசும் ஹார்மோனிக்ஸ் அல்லது மின்மாசைத் தொழில் நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களும், பெரிய வணிக வளாகங்களும் மின்சாரச் கட்டமைப்புக்குள்ளே செலுத்திவிடுகின்றன. இதுதொடர்பான பன்னாட்டு விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சினைக்கு முடிவுகட்டும் ஓர் ஆணித்தரமான அறிவிப்பு வரும்வரை கட்டுப்பாடுகளும் மின்பாதுகாப்பு நடவடிக்கைகளும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஹார்மோனிக்ஸ் இல்லங்களில் உள்ள மின் உபகரணங்களையும் பாழ்படுத்தி விடும் என்று அப்பாவூ சுப்பையா சொல்கிறார்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles