Read in : English

நீரஜ் சோப்ரா உலகத் தடகள சாம்பியன்ஷிப்பில் ஜாவ்லின் விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்து உலகப்புகழ் வெளிச்சம் பெற்றிருக்கலாம். ஆனால், அந்த உலகப்போட்டி இந்தியாவின் ஊக்கமருந்துப் பிரச்சினையையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. புதிய சாதனை படைத்த தமிழ்நாட்டுத் தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர் ஊக்கமருந்து எடுத்திருக்கிறார் என்று பரிசோதனை காட்டிக் கொடுத்திருக்கிறது.

உலக அரங்கில் அதிகத் திறன்கொண்ட தடகள வீராங்கனைகளாக முன்னேறி வந்துகொண்டிருந்த தனலட்சுமியும், பி. ஐஸ்வர்யாவும் ஊக்கமருந்துப் பரிசோதனையில் தோல்வியடைந்த விளையாட்டு வீர்ர்களின் பட்டியலில் சேர்ந்துவிட்டார்கள். கையோடு அவர்கள் வீட்டுக்கும் அனுப்பப்பட்டுவிட்டார்கள். அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் அவர்கள் பங்கெடுத்துக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

ஊக்கமருந்து எடுத்துக்கொண்டிருப்பார்களோ என்ற சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கும் விளையாட்டு வீரர்களது சமீபத்துச் சாதனைகளும் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் படுவேகத் தடகள வீராங்கனை தனலட்சுமி துருக்கிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.26 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்தார் (இந்தியாவின் பட்டியலில் மற்றொருவருடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்). பின் கஜகஸ்தானில் 200 மீட்டர் பந்தயத்தில் 22.89 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்.

தனலட்சுமியின் மூர்க்கமான வேகம்
தனலட்சுமி இந்தியாவின் தலைசிறந்த தடகள வீராங்கனை டூட்டி சாந்தை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தோற்கடித்துத் தங்கம் வென்றார்.மற்றொரு சிறந்த வீராங்கனையான ஹிமா தாஸை 200 மீட்டர் பந்தயத்தில் தோற்கடித்தார் தனலட்சுமி. 2021 ஃபெடரேஷன் கப் போட்டியில் கலந்துகொண்டு தனது அசுரத்தனமான வேகத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே ஒரு குக்கிராமத்தில் 1998-ல் பிறந்த தனலட்சுமி ஃபெடரேஷன் கப் போட்டியில் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொண்டு பெரும்புகழ் பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார். பி.டி. உஷா 23 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தனலட்சுமி பிறப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு, பெருஞ்சாதனை செய்திருந்தார்.

தமிழ்நாட்டின் படுவேகத் தடகள வீராங்கனை தனலட்சுமி துருக்கிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.26 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்தார். பின் கஜகஸ்தானில் 200 மீட்டர் பந்தயத்தில்  22.89 வினாடிகளில் ஓடி இலக்கை அடைந்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தினார்

தனலட்சுமியிடம் அசுரவேகம் உண்டு; ஆனால், நுட்பமான உத்திகள் இல்லை என்று அவரது பயிற்சியாளரும் தமிழ்நாட்டைச் சார்ந்த தடகள ஜாம்பவானுமான மணிகண்டன் ஆறுமுகம் ஒருமுறை சொன்னார். உத்திகளைக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், மூர்க்கமான வேகம் இயல்பாக இருக்க வேண்டும்; அதைக் கற்றுக் கொடுக்க முடியாது.

புதியபாதை வகுத்த தனலட்சுமி
2018-ல் இந்தியாவின் தடகளப்பிரிவில் சாதனை படைத்த தனலட்சுமி ஓராண்டு கழித்து ஃபெடரேஷன் கப் போட்டியில் 200 மீட்டர் பந்தயத்தில் வெண்கலப் பரிசைத் தட்டிச் சென்றார். பின் ஃபிரான்ஸில் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். அதுதான் அவருடைய முதல் வெளிநாட்டு அனுபவம்.

2019-ல் நடந்த மாநிலங்களுக்கிடையிலான சாம்பியன்ஷிப்பில் அவர் அங்கம் வகித்த தமிழ்நாட்டுக் குழு 4×100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றது. ஆனால், தடகளத்தில் புதிய தடம் பதித்த தனலட்சுமியின் சொந்த வாழ்க்கையில் துக்கம் கவிந்தது. 2020-ல் அவரது சகோதரிகளில் ஒருவர் கோவிட்டுக்குப் பலியானார்.

புத்துணர்வான மீள்வருகையும் ஊக்கமருந்து சர்ச்சையும்
2021-ல் தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 11.38 வினாடிகளில் இலக்கை அடைந்தார் (தனிப்பட்ட முறையில் 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் செய்த உச்சபட்ச சாதனை இது). இறுதிச்சுற்றுக்குப் படுவேகமான தடகள வீராங்கனையாக அவர் தகுதி பெற்றார். டூட்டி சாந்தைத் தோற்கடித்து முதன்முதலாகத் தேசியப் பட்டத்தை வென்றார்.

2015-க்குப் பின்பு, உள்நாட்டில் நடந்த 100 மீட்டர் நிகழ்வில் டூட்டி பெற்ற முதல் தோல்வி இதுதான்.
4×400 மீட்டர் ரிலே பரிசோதனைகளில் தனலட்சுமி தனது முதல் கால்மைல் ஓட்டத்தில் மூன்றாவது வந்து டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்குச் சென்றார். 100, 200, 400 மீட்டர் ஓட்டங்களில் அவர் பதித்த அற்புதமான சாதனைகள் எல்லாம் கடந்த மாதம் நிகழ்த்தப்பட்டவை.

மேலும் படிக்க:

நீச்சல் போட்டிகளில் பதக்கங்களைக் குவித்தும் தேசிய போட்டிகளில் பங்கேற்க முடியாமல் ஈழத்தமிழ் அகதி மாணவி தவிப்பு! 

பிரக்ஞானந்தா: தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதிய செஸ் சாம்பியன் உருவாகிறார்!

ஊக்கமருந்துக்கு எதிரான முகமைகள் அவரைக் கண்காணித்தன. தடகள விளையாட்டுகளின் நேர்மை நிறுவனம் நடத்திய ஆய்வில் 24 வயது தடகள வீராங்கனை தனலட்சுமி ஊக்கமருந்தான ஸ்டெய்ராயிடு சோதனையில் தோற்றுப் போனார். தடை செய்யப்பட்ட வஸ்துவான ஸ்டெய்ராயிடு தசைத்திரட்சியை அதிகரித்து அதன் செயற்பாட்டை அதிகரிக்கச் செய்கிறது. ஊக்கமருந்தின் விளைவாகத் தசைகள் இயல்பாகவே உறுதிபெற்று நல்ல பலனைத் தருகின்றன.

தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகே ஒரு குக்கிராமத்தில் 1998-ல் பிறந்த தனலட்சுமி ஃபெடரேஷன் கப் போட்டியில் 200 மீட்டர் பந்தயத்தில் கலந்துகொண்டு, பெரும்புகழ் பெற்ற தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்தார்

தடைசெய்யப்பட்ட வஸ்துகள்
ஊக்கமருந்துகள் இரத்த சிகப்பணுக்களை அதிகரித்து தசைகளுக்குப் பிராணவாயுவைக் கொண்டுசெல்கின்றன. போட்டியின் போதும், போட்டிக்கு அப்பாலும் ஆகமொத்தம் இரண்டு முறை சோதனைகள் நடத்தப்படுகின்றன.அதனால் தடகள விளையாட்டு வீரர்கள், நேரடியாக வந்து இரத்த மாதிரிகளைச் சேகரிக்கும் ஊக்கமருந்துக்கெதிரான முகமை அதிகாரிகளைத் தவிர்த்து விடுதல் அடிக்கடி நடக்கும்.

ஊக்கமருந்து விதிமீறல்களுக்காகத் தடை செய்யப்பட்ட தடகள நட்சத்திரங்களின் பட்டியலைப் பார்த்தால் அதில் பெரும்பாலும் இடம்பெற்றிருப்பது இளைய வயதினரே. விளையாட்டுகளைக் கண்காணிக்கும் தடகள விளையாட்டுகளின் நேர்மை நிறுவனம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் இடம்பெற்ற வீரர்கள் “தடை செய்யப்பட்ட வஸ்துகளின் கலவையை அருந்தியவர்கள் அல்லது ஊசிமூலம் செலுத்திக்கொண்டவர்கள்.”

சமீபகாலங்களில் ஊக்கமருந்து சோதனைகளில் தோற்றவர்கள்
தனலட்சுமி, ஐஸ்வர்யா போன்ற இந்தியத் தடகளப் பிரிவில் பெரும்புகழ் பெற்றவர்கள் தடைசெய்யப்பட்ட வஸ்துக்களுக்கான பரிசோதனையில் தோற்றுப் போயிருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களில் இப்படித் தோற்றுப் போனவர்களின் பட்டியல் நீளமானது. வட்டெறிதல் வீரர் கமல்பிரீத் கெளர், ஈட்டி எறியும் வீரர் ஷிவ்பால் யாதவ், கால்மைல் ஓட்டவீரர் எம்.ஆர். பூவம்மா, முன்னாள் தேசிய ஈட்டி எறிதல் சாதனையாளர் ராஜேந்தர் சிங், தேசிய தங்கப்பதக்க வீரர்களான தரன்ஜீட் கெளர் மற்றும் கே., நரேஷ் குமார் ஆகியோர் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

கெளர் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆறாவது இடத்தைப் பிடித்தவர். உலக ஊக்கமருந்துக்கெதிரான முகமையின் விதிகளின்படி தடை செய்யப்பட்டிருந்த அனபாலிக் ஸ்டெய்ராயிடான ஸ்டானோஜொலால் என்ற வஸ்துவை அவர் உட்கொண்டிருந்தார் என்று பரிசோதனை காட்டியது. 65-மீட்டர் தடை ஓட்டத்தில் வென்ற முதல் இந்திய பெண்வீராங்கனை அவர்.

ஊக்கமருந்து சர்ச்சைகளில் ரஷ்யாவுக்கும், இத்தாலிக்கும் பின்பு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்று உலக ஊக்கமருந்துக்கெதிரான முகமையின் அறிக்கை சொல்கிறது

காமன்வெல்த் போட்டிகளிலும், ஆசிய விளையாட்டுகளிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் அவர் பதக்கங்களை அள்ளிக் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களும் கூட இந்த ஊக்கமருந்துச் சர்ச்சையில் மாட்டியுள்ளனர். இந்தியாவின் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் குழு பர்மிங்காமிற்குச் சென்றபோது, அனீஷ் குமார் (ஆண்களின் ஷாட்புட் ஐஎஃப்ஐ பிரிவில் கலந்துகொள்ளப் போனவர்) மற்றும் பளுதூக்கும் வீராங்கனை கீதா ஆகியோர் போட்டிக்குப் பின்னர் நடந்த ஊக்கமருந்துச் சோதனையில் தோற்றுப் போனார்கள் என்ற செய்தி இந்தியாவுக்குத் தர்மசங்கடமானது. அவர்கள் காமன்வெல்த் கேம்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

ஊக்கமருந்து சர்ச்சைகளில் ரஷ்யாவுக்கும், இத்தாலிக்கும் பின்பு இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது என்று உலக ஊக்கமருந்துக்கெதிரான முகமையின் அறிக்கை சொல்கிறது.

விளையாட்டு வீரர்கள் ஏன் ஊக்கமருந்து எடுத்துக் கொள்கிறார்கள்?
எந்தவொரு பெரிய நிகழ்விலும், வெற்றிபெற்று வெற்றி மேடையேறுவது பெரிய கெளரவமாகப் பார்க்கப்படுவது முக்கியக் காரணம். பதக்கங்களைக் குவித்தால் இந்தியாவில் பேரும் புகழும் கிடைப்பதுடன் சிறப்பான வாய்ப்புகளும் வசதிகளும் வசமாகின்றன. அரசு வேலைவாய்ப்பும் பிற பாதுகாப்பு அம்சங்களும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்பை அதிகரிக்கின்றன.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பயணத் தடைகள் உட்பட ஏராளமான தடைகளால், நிறைய போட்டிகளில் ஊக்கமருந்துச் சோதனைகள் இல்லாமல் போயின. அதனால் விளையாட்டு வீரர்கள் பலர் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக உற்சாகம் தரும் ஊக்கமருந்தை எடுத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
இந்த மாதிரியான வேளைகளில் விளையாட்டு வீரர்களுக்கு நன்னடத்தை போதிக்க மருத்துவர்களும் பயிற்சியாளர்களும் தவறிவிடுகிறார்கள்.

“விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சியாளர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் நம்புகிறவர்கள். பயிற்சியாளரே சொல்வதால் அவர்கள் தடைசெய்யப்பட்ட வஸ்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்” என்று விளையாட்டு உளவியலாளர் அட்வானி ‘மின்ட்’டிடம் சொன்னார்.
மேலும் அவர், “விளையாட்டு வீரர்களின் முழுமையான முன்னேற்றத்திற்கு ஏதுவான சிறப்பான நிபுணர்களைக் கொண்ட ஒரு சூழலை நாம் ஏற்படுத்தவில்லை. நம்மிடம் அதற்கான நிபுணர்களோ வளங்களோ இல்லை என்று சொல்ல முடியாது.

ஏதாவது ஓரிடத்தில் யாராவது பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதற்கான விலையை விளையாட்டு வீரர்கள்தாம் கொடுக்க வேண்டிவருகிறது. அதனால் பாதிக்கப்படுவது விளையாட்டைச் சார்ந்த அவர்களது தொழில் வாழ்க்கைதான்” என்றார்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival