Read in : English
அதிமுக கட்சியில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அணிக்கும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் அதிமுக கட்சி உடைவதைத் தவிர்க்க முடியாததாக்கிவிட்டது என்பதை அதிமுக பொதுக் குழு நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ. பன்னீசெல்வத்தை ஓரம் கட்டிவிட்டு, கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வந்துவிட முடியும் என்று எதிர்பார்த்து காய்களை நகர்த்தினார். ஆனால், தற்போதைய இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்று அதனை மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் பொதுக் குழு நடப்பதற்கு சில மணி நேரம் முன்னதாக இடைக்காலத் தடை விதித்ததை அடுத்து எடப்பாடியின் எண்ணம் உடனடியாக நிறைவேறாமல் போய்விட்டது.
ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் பரஸ்பரம் வெறுப்புடன் இருக்கிறார்கள் என்பதே தற்போதைய யதார்த்தம். எடப்பாடியை பொதுச்செயலாளராக விடாமல் தடுப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் சட்டரீதியாக முயற்சி செய்வார். அதுதான் கட்சி இரண்டாகப் பிளவுபடாமல் தடுப்பதற்கான கடைசிப்படி என்று இன்மதி இணைய தளம் கருதுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. கட்சியில் ஒற்றைத் தலைமை வேண்டும் அதுவும் தனது தலைமையில் என்று ஈபிஎஸ் கருதுவதற்கு எதிராக, இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்ற பன்னீர்செல்வத்தின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் ஈபிஎஸ் அணி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவதை சிரமமானதாக்கியது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11ஆம் தேதி சென்னையில் பொதுக் குழுக் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்றும் நிலுவையில் உள்ள தீர்மானங்கள் அப்போது எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவித்தார். உயர்நீதிமன்றத் தீர்ப்புப்படி, கட்சிப் பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அனுமதி தேவை என்பதையும் அவரது அனுமதி இல்லாமல் எந்தத் தீர்மானமும் கொண்டுவரக் கூடாது என்பதையும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அடுத்த சில மாதங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டங்கள் நடைபெறுவதற்கான கண்ணிவெடிகளைப் புதைத்துச் சென்றுள்ளார் ஓபிஎஸ்
இந்தப் பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தது. ஆனால், அடுத்த சில மாதங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டங்கள் நடைபெறுவதற்கான கண்ணிவெடிகளைப் புதைத்துச் சென்றுள்ளார் ஓபிஎஸ். 1987-88இல் எம்ஜிஆர் மரணத்துக்குப் பிறகும், 2017இல் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகும் நடந்த வலி நிறைந்த வரலாறு மீண்டும் திரும்புகிறது.
மேலும் படிக்க:
எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி: மீண்டும் பிளவுபடுகிறது அதிமுக!
தேநீர் விருந்து புறக்கணிப்பு: ஆளுநருக்கு திமுகவின் திராவிட மாடல் பதிலடி!
பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் சமரசமாகி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகத் தொடர்ந்தார். துணை முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றார். அத்துடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக கட்சியில் முதல் இடத்தையும் பெற்றார். பல்வேறு சந்தர்ப்பங்களில் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு சிறையிலிருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலையாகி வந்தது இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கியது. அவரது நெருங்கிய உறவினரான டி.டி.வி. தினகரன், அமமுக என்ற கட்சியைத் தொடங்கி தனி வழியில் சென்றார்.
தனது முக்கிய ஆதரவாளர்களுக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை பன்னீர்செல்வத்தால் வாங்கித் தர முடியவில்லை. அத்துடன் சசிகலாவுக்கு ஆதரவான அவரது நிலைப்பாடு அவருக்கு நெருங்கி இருந்தவர்களிடம் ஆத்திரமூட்டியது. சிலர், முன்பே அவரை கைவிட்டுவிட்டுச் சென்றனர். மேலும் சிலர் கடந்த இரண்டு நாட்களில் ஓபிஎஸ்ஸை விட்டு வெளியேறி, எடப்பாடி அணியில் சேர்ந்தனர். எடப்பாடி மீது அன்பு காரணமாகவோ, மரியாதை காரணமாகவோ அவருடன் சேரவில்லை. சசிகலாவுக்கு எதிரான அணியை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக இருந்தது.
இந்த மோதல் காட்சிகள் இனி உச்சநீதிமன்றத்தை நோக்கி நகரலாம். Ðபாஜக தலைமை தங்களைக் காப்பாற்ற வருமா என்று ஈபிஎஸ் அணி எதிர்பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் பெரும்பாலான தீர்ப்புகள் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு சாதகமாகவே இருந்துள்ளன. எனவே, பாஜக உதவக்கூடும் என்று ஈபிஎஸ் அணி நம்பலாம். எனினும், பாஜக வேறு வகையான ஆட்டத்தை ஆடும்போல தெரிகிறது. 2017இல் ஓபிஎஸ் கூறிய நிபந்தனைகளை ஏற்று கட்சி இணைப்புக்கு ஈபிஎஸ்ஸை கட்டாயப்படுத்தியது. சசிகலா, தினகரன் உள்பட குடும்ப உறுப்பினர்களை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி சாதித்தது பாஜக.
ஆனால் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக ஆதரவு வாக்குகள் பிரிந்து விடாமல் இருக்க சசிகலாவையும் அவரது அணியினரையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தனது நிலையை மாற்றிக் கொண்டது பாஜக. கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரதற்கு ஈபிஎஸ் பயந்தார். அதனால் அந்த யோசனைக்கு ஈபிஎஸ் அணி எதிர்ப்புத் தெரிவித்தது. தென் மாவட்டகங்ளில் அதிகமாக உள்ள தேவர் இன மக்களை ஒருங்கிணைக்க இது உதவும் என்பதால் பாஜகவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ஓபிஎஸ் (அவரும் சசிகலாவும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்). இது மேற்கு தமிழ்நாட்டில் கவுண்டர்கள் ஆதரவு உள்ள ஈபிஎஸ் அணியை எதிர்கொள்ள இது உதவும் என்று அவர் கருதினார்.
எம்ஜிஆர் போன்றோ ஜெயலலிதா போன்றோ மக்களைக் கவரக்கூடிய கவர்ச்சிகரமான தலைவர்கள் தாங்கள் இல்லை என்பதை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை
அதிமுகவில் நடைபெறும் மோதல் தொடர வேண்டும் என்றும் அதனால் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அதன் மூலம் தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக வருவதற்கு பாஜக முனைப்புடன் உள்ளது என்றும் கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். சில மாநிலங்களில் பாஜக இதுபோன்று செயல்பட்டுள்ளது. அந்த யுக்தி தமிழ்நாட்டிலும் பயன் அளிக்கக்கூடும்.
தொடர்ச்சியாக நான்கு தேர்தல்களில் தனது தலைமையின் கீழ் தோல்வியைச் சந்தித்தபோதிலும்கூட, திமுகவுக்கு எதிராக சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்குவதற்கு எடப்பாடி பழனிசாமி அவசரம் காட்டவில்லை. அதேபோல, திமுகவை எதிர்ப்பதைவிட, ஈபிஎஸ் அணிக்கு எதிராக காய்களை நகர்த்தி வருவதில் தீவிர கவனம் செலுத்துகிறார் ஓ. பன்னீர்செல்வம். ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் தங்களது உண்மையான எதிரியான திமுகவை மறந்துவிட்டு, ஒருவருக்கொருவர் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களது ஆதரவாளர்களும், தங்களது தலைவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டிவிட்டு, எடப்பாடி பழனிசாமியைப் பொதுச் செயலாளராக்க வேண்டும். ஆனால், பொதுக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்கும் அல்லது ஒற்றைத் தலைமைக்கான தீர்மானத்தை கூட்ட நிரலில் சேர்ப்பதற்கும் ஓபிஎஸ் அனுமதி தேவை. எனவே, அதிமுகவின் பொதுச் செயலாளராகும் கனவு நிறைவேறுவதற்கு இது சற்று பின்னடைவுதான். கட்சியினால் முதல்வர் வேட்பாளராக நியமிக்கப்பட்டு முதல்வர் ஆகலாம் என்றும் கட்சியின் பொதுச் செயலாளராகி, முதல்வராகலாம் என்றும் எடப்பாடி தொடர்ந்து கனவு காணலாம். ஆனால் எம்ஜிஆர் போன்றோ ஜெயலலிதா போன்றோ மக்களைக் கவரக்கூடிய கவர்ச்சிகரமான (திரைப்படத்தில் நடித்ததன் மூலம்) தலைவர்கள் தாங்கள் இல்லை என்பதை ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய இருவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பலவீனமான தலைவராகக் கருதப்பட்டாலும்கூட, இந்தச் சுற்றில் ஓபிஎஸ் வெற்றி பெற்று இருக்கிறார். ஆனால், அதிமுக தற்போது இரண்டாகப் பிளவுபட்டு இருக்கிறது. அதிமுகவில் இரு அணிகளும் மீண்டும் சமரசமாகி இணைந்து செயல்பட முடியாத நிலையை எட்டி இருக்கிறது.
Read in : English