Read in : English

பாரதீய ஜனதா கட்சி, அதிமுக வை கபளீகரம் செய்யப் பார்க்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான  பொன்னையன். இதுகுறித்து மூத்த தலைவர்கள் எவரும் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை, ஏன் நமக்குள் இருக்கவேண்டியதை பகிரங்கப்படுத்துறீங்க என்று வேண்டுமானால் அவரிடம் தனிப்பட்ட முறையில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தலாம். இரு கட்சிகளுக்கும் நெருக்கமான உறவிருப்பதாக ஒரு புரிதல் இருக்கையில், பாஜகவின் தயவு அதிமுகவிற்கு பல தளங்களில் தேவைப்படுகையில், இப்படி ஓர் அஸ்திரத்தை ஏவியதற்கு பொன்னையன் மீது நடவடிக்கைகூட எடுக்கலாம்.

கட்சியின் தற்போதைய இரட்டைத் தலைவர்களாக வலம் வரும் எடப்பாடி பழனிச்சாமியும் ஓ. பன்னீர்செல்வமும் அப்படி எடுக்கத்தான் விரும்பவேண்டும். ஆனால் கட்சி தொடர்ந்து வலுவிழந்து வருகையில் ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் குழப்பங்கள் எழக்கூடும் எனவும் அவர்கள் கவலைப்படக்கூடும். எனவே ஓரிரு நாட்கள் தலைப்புச் செய்திகளுடன் இது ஓய்ந்துவிடுமென்றே தோன்றுகிறது. அதிமுக தலைவர்களை மட்டுமல்ல தொண்டர்களையும் பாஜக தொடர்ந்து தன் வசமாக்கும்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை ‘நல்ல’நேரத்தில் பாஜகவில் இணைந்திருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, ஜோசியக்காரர்கள் மொழியில் சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருக்கிறதாக்கும்! எனவே தமிழகத்தில் தொடர்ந்து கட்சி வளரும், இவரது செல்வாக்கும் உயரும்.

பெரியார் மண்ணில் சாதி உணர்வுகள் தலை விரித்தாடலாம். ஆனால் இந்து மதப்பற்று  வெறியாக என்றும் மாறப்போவதில்லை. இங்கே யோகி ஆதித்யநாத்கள் உருவாகப்போவதில்லை, ஒரு நூற்றாண்டு சென்றாலுங்கூட.  

பலர் பன்னிப்பன்னி கூறுவதைப் போல் தமிழகத்தில் பாஜக வேரூன்றுவதற்கான வாய்ப்பு பொதுவாக இல்லை. இருக்கக்கூடாது. பெரியார் மண்ணில் சாதி உணர்வுகள் தலை விரித்தாடலாம். ஆனால் இந்து மதப்பற்று  வெறியாக என்றும் மாறப்போவதில்லை. இங்கே யோகி ஆதித்யநாத்கள் உருவாகப்போவதில்லை, ஒரு நூற்றாண்டு சென்றாலுங்கூட. ஆனாலும் பாஜக பெரும் சக்தியாக உருவாகக்கூடுமெனில் அதற்குக் காரணம் தமிழக அரசியல் வரலாற்றுச் சூழல்.

பொன்னையன்

பாரதீய ஜனதா கட்சி, அதிமுகவை கபளீகரம் செய்யப் பார்க்கிறது என்கிறார் முன்னாள் அமைச்சரும் அமைப்புச் செயலாளருமான பொன்னையன்

ஜெயலலிதாவின் மரணம் எப்படி ஸ்டாலினுக்கு மிகச் சாதகமாக அமைந்ததோ, அதே போன்றுதான் பாரதீய ஜனதாவிற்கும் பெரும் பயனளிக்கும். அதாவது அக்கட்சியின் இந்துத்துவ மேலாதிக்கம், இஸ்லாம் மற்றும் கிறித்தவர் மீதான வெறுப்பு இவற்றை பரந்துபட்ட தமிழ்ச் சமூகம் ஏற்றுக்கொள்ளாத நிலையிலும் பாரதீய ஜனதா திமுகவிற்கு முக்கிய எதிர்ப்புச் சக்தியாக உருவாகி வருகிறது. அதற்கான அடித்தளத்தை நாட்டிய பிறகே ஜெயலலிதா மறைந்திருக்கிறார்.

கடவுள் இல்லை, இல்லவே இல்லை, வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற பெரியாரின் முழக்கத்திலிருந்து திமுகவினர் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று தங்கள் எதிர்ப்பை மென்மையாக்குகின்றனர். ஒவ்வொரு பார்ப்பனரையும் பகைவனாக சித்தரிப்பது மறைந்து பார்ப்பனீயமே சவாலாகிறது.

கருணாநிதி ஆலயங்களுக்குச் சென்று பரிவட்டம் கட்டிக்கொண்டாலும், அவ்வப்போது தனது திராவிடக் கொள்கை தீவிரத்தை வெளிப்படுத்துவார். எம் ஜி ஆரோ தயங்கித் தயங்கியே தான் கடவுளை நம்புபவன் என்று பகிரங்கமாக அறிவித்தார். அப்போதுகூட அவர் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ரகசியமாகவே சென்று வந்தார். செய்தியாளர்கள்தான் மோப்பம் பிடித்தனர்.

ஜெயலலிதா தலைமையில் எதையும் மறைக்கவேண்டிய அவசியமில்லை, கோயிலுக்குப் போகலாம், யாகம் நடத்தலாம், திருநீறு அணியலாம், ஏன் வேப்பிலை கட்டிக்கொண்டு ஆலயத்தில் உருளலாம் என்றானது. ஜெயலலிதா பங்கு பெறும், யாகம் நிகழும் ஆலயங்கள் பிரபலமாயின.

இந்தப்போக்கு காவிக் கட்சியை அவர் நெருங்குவதை எளிதாக்கியது எனலாம். ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே தன் உடன் பிறவா சகோதரி சசிகலாவுடன் மகாமகம் குளத்தில் நீராடியவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டத்தில் பேசுகையில், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டவேண்டும் என்ற இந்துக்களின் நம்பிக்கை மதிக்கப்படவேண்டும் எனக் கோரினார்.

சோனியா காந்தி இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பதை வலியுறுத்தும் வண்ணம் அவரை Sonia Antonio Maino  என்றழைத்து பரபரப்பை ஏற்படுத்தியவரும் ஜெயலலிதாதான்.

கோத்ரா கலவரங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியபோது ஜெ பெயரளவில் காங்கிரஸ் கூட்டணியில்தானிருந்தார். திமுகவோ பாஜக அரசில் அங்கம் வகித்து வந்தது. திமுகவைத் தாக்குவதற்காகக்கூட அவர் மோடியை விமர்சிக்கவில்லை. அது அம்மாநிலப் பிரச்சினை என்று சொல்லி ஒதுங்கிக்கொண்டார்.

பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக மறைமுகமாக முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் செய்து பெரும் வெற்றியையும் ஈட்டி, மோடி மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோது, அழைப்பில்லாமலேயே சென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜெயலலிதா. அடுத்த முறையும்கூட அவர் அகமதாபாத் சென்று வந்தார். மோடி சென்னைக்கு வந்தபோது ஜெயலலிதாவை அவர் வீட்டில் சென்று சந்தித்தார். இவ்வாறாக வாஜ்பேயி அரசுடன் இருந்த பிணக்குகளையெல்லாம் மறந்து பாஜகவின் உற்ற நண்பராகவும் ஆனார்.

இன்னமும் சரியாகச் சொல்லவேண்டுமானால் 1998லேயே பாஜகவுடன் கூட்டணி அமைக்க முன்வந்தவர் அவர். அந்த நேரம் வரை தமிழகத்தில் எவரும் நெருங்காத கட்சியாக இருந்தது அது. ஓராண்டில் வாஜ்பேயி அரசைக் கவிழ்த்தாலுங்கூட, திமுகவிற்கு முன்னரே பாஜக ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல என செயலில் காட்டியவர் ஜெ.

இவ்வாறாக மெல்ல மெல்லக் காவிமயமாகிவிட்டது அஇஅதிமுக. ஜெயலலிதா போன்ற மக்களிடையே செல்வாக்கு படைத்த தலைவர் எவரும் இல்லாத நிலையில் கட்சி மெல்ல மெல்லத் தேய்வது தவிர்க்கவியலாததாகிவிட்டது.

ஜெ மரணத்திற்குப் பின்னும் அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் தொடர்வது தனக்குப் பயன்படும் எனச் சரியாகவே கணித்து, பிரதமர் நரேந்திர மோடி அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். அந்த நேரம் பார்த்து உச்ச நீதிமன்றம் சசிகலாவை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிதான் எனத் தீர்ப்பளித்து, அதன்பின்  மோடி தனது திட்டங்களை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.

நாடாளுமன்றத் தேர்தல்களில் அதிமுக பெருந்தோல்வியடைந்தாலும், தொடர்ந்த 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஒன்பது இடங்களில் வென்றது. அதிமுகவை எவரும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்று நமக்குக் கூறியதாகக்கூட அம்முடிவுகளைக் கருதலாம்.

இச்சூழலில் பாஜக வெகு வேகமாக வளரக்கூடும். அப்படி அது வளருமானால் அ இஅதிமுக தொண்டர்களும் தலைவர்களும் அதனை நாடிச் செல்வது உறுதி.  

ஆனால் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக பெரும் வெற்றி, அதிமுக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.  தொடர்ந்த உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக பிரம்மாண்ட வெற்றி,  அதிமுக படுதோல்வி. தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா தடம் பதிக்க முடிந்தது.

இன்மதி.காமில் வெளியான ஓர் ஆய்வு குறிப்பிட்டது: “2011 உள்ளாட்சித் தேர்தலுடன் ஒப்பிடும்போதுபாஜக தனது வாக்கு வங்கியை இரட்டிப்பாகியுள்ளதுகுறிப்பாக வட தமிழ்நாடு உள்பட பல மாவட்டங்களில் பரவலாக வெற்றி பெற்று, 308 இடங்களை கைப்பற்றியுள்ளதுஇதுமட்டுமின்றி மிகச்சிறப்பான தலைமையால்கன்னியாகுமரி மாவட்டத்தில் சக்தி வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது.”

திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரசும் அதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பொதுவாக வெற்றி பெற்றிருந்தாலும் மற்ற கட்சிகளின் ஆதரவினால்தான் அது சாத்தியமானது என்பதை அனைவருமே அறிவர். தொண்டர்கள் மெல்ல மெல்லக் கரைந்துவிட்டனர். இருப்பது காங்கிரசில் தலைவர்கள் மட்டுமே என்பதுதான் மறைக்கமுடியாத உண்மை.

அதிமுக, காங்கிரஸ் இரண்டுமே திசை தடுமாறி விழிக்கின்ற நிலையில், அகில இந்திய அளவிலும் காங்கிரஸ் மீண்டும் தலைதூக்கும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே இருப்பதாகத் தெரியவில்லை, இச்சூழலில் பாஜக வெகு வேகமாக வளரக்கூடும். அப்படி அது வளருமானால் அ இஅதிமுக தொண்டர்களும் தலைவர்களும் அதனை நாடிச் செல்வது உறுதி.

திமுகவை மக்கள் விரோதக் கட்சி எனத் தொடர்ந்து சொல்லித்தான் எம்ஜிஆர் தன் கட்சியினை வளர்த்தார். பல்வேறு காரணங்களினால் அந்தப் பிரச்சாரம் எடுபடவும் செய்தது. கருணாநிதியை அடியோடு வெறுத்த தரப்பினர் எம்ஜிஆர் கட்சியோடு தங்களை அடையாளப்படுத்திக்கொண்டனர்.

அவரது “மூளைச் சலவை” பாணி ஜெயலலிதா தொடர் வெற்றிகளைக் குவிக்க உதவியது. 1991-96 கட்டத்தில் ஜெயலலிதாவும் அவரைச் சுற்றியிருந்தவர்களும் நடத்திய காட்டு தர்பாரின் விளைவாய் பரவலாய் எழுந்த அதிருப்தியில், 1996இல்  மக்கள் ஜெவை முற்றிலுமாக நிராகரிக்க, அவரது கட்சி  நான்கு தொகுதிகளில் மட்டுமே வெல்ல முடிந்தது என்றாலும், சடுதியில் தன் போக்கை மாற்றிக்கொண்டு ஜெயலலிதாவால் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரமுடிந்தது. ஆனால் அவர் மறைவிற்குப் பின் எம்ஜிஆர் உருவாக்கிய உணர்வுகளைப் பயன்படுத்தி பெரிய அளவில் வெற்றியைப் பெற  இன்று அதிமுகவில் எவருமே இல்லை.

எம்ஜிஆர் நோயுற்று நலிவடைந்து கட்சிக்குள் பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், சோ ராமசாமியிடம் ஏன் எம்ஜிஆர் தனக்குப் பின் எப்படி கட்சி இருக்கவேண்டுமென நினைக்கிறார், யாரை அவர் தனது வாரிசாக அறிவிக்கக்கூடும் எனக் கேட்டபோது, சோ, “எம் ஜி ஆர் தனக்குப் பின் கட்சி இருக்கவேண்டுமென்றுகூட நினைப்பதாகத் தெரியவில்லை. அவர் போனார் கட்சியும் குலைந்தது என மக்கள் வருந்தவேண்டுமென்றுதான் அவர் நினைக்கிறார் என்பது என் புரிதல்.”

சரியோ தவறோ அவருக்குப் பின் கட்சி அழிந்திருக்கக்கூடும், ஆனால் அன்றைய சூழலில் கருணாநிதி செய்த தவறுகள், ஏற்கெனவே எம்ஜிஆர் இட்டிருந்த அடித்தளம் இப் பின்னணியில் ஜெயலலிதா, அதிமுகவை வலிமையுடன் நீடிக்கவைக்க முடிந்தது. இப்போது அவர் இல்லை. அவரைப் போன்ற ஆளுமையும் இல்லை. எனவே அதிமுக கட்சியின் தொடர் சரிவும் அதனைப் பயன்படுத்தி பாரதீய ஜனதா கட்சி வளர்வதும் தவிர்க்கவியலாது.

தமிழகத்திற்கு என்றுமே அந்நியமாக இருக்கும் பாஜக பிரதான எதிர்க்கட்சியாவதை திமுகவும் விரும்பக்கூடும். அதனை தேர்தல்களில் வெற்றி கொள்வது எளிது என திமுக தலைமை கருதக்கூடும் எனவும் சில நோக்கர்கள் கருதுகின்றனர்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival