Read in : English

கலகம் வெடித்த இலங்கை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ரத்தக்களரியாகிவிட்டது. 1971, 88/89 ஆகிய ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் தேசியவாத இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா – ஜேவிபி) அரசுக்கெதிராகக் கட்டவிழ்த்துவிட்ட ஆயுதக் கிளர்ச்சிகளைப் போல மற்றுமொரு கலகம் அல்லது அராஜகப்புரட்சி மீண்டும் அரசுக்கெதிராக தலைதூக்கலாம்.

’கறுப்புத் திங்கள்’ என்றழைக்கப்படும் மே 9, 2022 அன்று இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலே ஆகமோசமான, படுவன்முறையான கலகம் வெடித்தது. அப்போது காவல்துறை அதைக் கண்டுகொள்ளவில்லை. கால்லே ஃபேஸ் கிரீனில் பிரதமரின் வசிப்பிடமான டெம்பிள் ட்ரீஸ்க்கு வெளியே அரசுக்கு எதிராக அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது ராஜபக்ச விசுவாசிகள் எந்தவிதமான தூண்டுதல் இல்லாமலே வன்முறையைக் கட்டவிழ்த்தனர். அதன்பின்னர் நிகழ்ந்த கொலைவெறித் தாண்டவத்தை யாரும் அப்போது எதிர்பார்க்கவில்லை.

அகவை 76 ஆன மேனாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் அவரது குடும்பமும் டெம்பிள் ட்ரீஸில் ,மாட்டிக்கொண்டபோது பெருஞ்சினம் கொண்ட கும்பல்கள் கொலைவெறிப் பித்தின் உச்சத்தில் வாசல்கதவுகளை அடித்து நொறுக்கின. ஆட்சியாளரையும் குடும்பத்தையும் காப்பாற்ற இராணுவத்திற்கு ஏழுமணி நேரமானது. இவ்வளவுக்கும் ராஜபக்ச சகோதரர் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இராணுவப்படைகளின் தலைவர்.

கறுப்புத் திங்கள்’ என்றழைக்கப்படும் மே 9, 2022 அன்று இலங்கையின் சமீபத்திய வரலாற்றிலே ஆகமோசமான, படுவன்முறையான கலகம் வெடித்தது.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து டெம்பிள் ட்ரீஸ்க்கு மே 9 அன்று ராஜபக்ச ஆதரவாளர்கள் வந்துகொண்டிருந்த பேருந்துகளுக்கு வெறிபிடித்த கலகக்காரர்கள் தீவைத்தனர். இந்த ஆதரவாளர்களில் சிறைக்கைதிகளும் அடக்கம்.

அதன்பின் நடந்த கலகம், கொலையை, வன்முறையைச் சந்தித்தது. ஆளும்கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது உடல் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டது. மேலும் ராஜபக்சவின் பணக்கார விசுவாசுகளின், ஆளும்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்களும், வீடுகளும், விலையுயர்ந்த வாகனங்களான ஒரு லாம்போர்கினி, இரண்டு ஹம்மர்ஸ், ஒரு பெராரி, ஒரு கடிலாக் லிமோசின் ஆகியவையும் நெருப்புக்கு இரையாக்கப்பட்டன.

பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பும் (ஐயூஎஸ்எஃப்) போராட்டத்தில் குதித்தது. இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இலங்கையில் ஆகப்பெரும் மாணவர் அமைப்பு இது. நாட்டின் இலவசக் கல்வித்திட்டத்தில் பெரும்பயன் அடைந்த மாணவர்கள் இவர்கள். ஐயூஎஸ்எஃப் 1970-களின் மத்தியில் படுமும்முரமாகச் செயல்பட்டது. அதற்குக் காரணம் காவல்துறை ரோஹனா வீரசூர்யா என்ற மாணவனைச் சுட்டுக் கொன்றதுதான். அதன்பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பை, மார்க்ஸிஸ்ட் இயக்கமான ஜேவிபிக்கு விசுவாசமாக இருந்த மாணவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டமைப்பின் (ஐயூஎஸ்எஃப்) நெறியற்ற நடத்தையும் போக்கும் ஊடகங்களாலும், பல்கலைக்கழக நிர்வாகிகளாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. கொழும்பு, மொரட்டுவா பல்கலைக்கழகங்களும், பின்னார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் அந்த மாணவர்கள் அமைப்பைத் தடைசெய்தன.

பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கிங்கிற்கு எதிரான பரப்புரை செய்த ஸ்ரீஜெயவர்த்தனேபுரா பல்கலைக்கழகத்தின் மூன்றாமாண்டு நிர்வாகயியல் மாணவன் சமந்தா விதநாகேவைக் கொன்றதாக ஐயூஎஸ்எஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ராக்கிங் மூலம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களை தங்கள் கொள்கைக்குள் கொண்டுவர ஐயூஎஸ்எஃப் முயற்சி செய்கிறது என்று எதிரணி மாணவர்கள் அமைப்பான ’சமூக சமத்துவத்திற்கான பன்னாட்டு உலக மாணவர்கள்’ குற்றஞ்சாட்டியது.

ஆரம்பத்தில் ராக்கிங் பல்கலைக்கழகங்களில் சமூக சமத்துவம் கொண்டுவருவதற்கு உதவுவதாகச் சொல்லப்பட்டது. ஆனால் ஜேவிபியால் ஆதரிக்கப்பட்ட ஐயூஎஸ்எஃப் போன்ற மாணவர் அமைப்புகள் மேலெழுந்து செல்வாக்குப் பெற ஆரம்பித்தவுடன், பல்கலைக்கழகங்களில் ஜேவிபியின் அரசியல் அதிகாரத்தையும், ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தும் ஒரு கருவியாக ராக்கிங் மாறிப்போனது.

தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஐயூஎஸ்எஃப் ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தவுடன், பலர் மாணவர்களின் ஒழுங்கைப் பற்றி கேள்விகள் எழுப்பினார்கள். வகுப்புகளை மாணவர்கள் புறக்கணித்ததால் பட்டப்படிப்பு முடியும் காலம் தாமதமானது. பலசமயங்களில் மாணவர்களின் படிப்பும் விலக்கப்பட்டது.

அரசியல் சகிப்பின்மையால் பல்கலைக்கழகங்களில் கலகம் அதிகரித்தது. மாணவர்களுக்கிடையிலான அரசியல் மாச்சரியங்களைத் தூண்டி கலகம் அல்லது கிளர்ச்சியை வெடிக்கச் செய்கிறது என்று ஐயூஎஸ்எஃப் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஜேவிபி ஆதரிக்கும் ஐயூஎஸ்எஃப் சித்தாந்தங்களுடன் ஒத்துப்போகுமாறு தங்களுக்குக் கொலை மிரட்டல்கள் விடப்பட்டன என்று டீன்கள் சொல்கிறார்கள்.

சமீபத்திய கலகம் உண்டாக்கிய நாசத்திற்கு ஜேவிபிதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டால், தனது இரத்தவெறிப் படிமத்தை விட்டெறிந்து இயக்கம் ஒரு நேர்மையான, நம்பத்தகுந்த அரசியல் கட்சிதான் என்பதைக் கட்டமைத்துக் கொள்ள ஜேவிபி இதுவரை எடுத்த முயற்சிகள், கடினமான  பணிகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிடும்.

1987-ல் இந்தியா-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், ரோஹனா விஜேவீராவின் தலைமையிலான ஜேவிபி நாட்டில் கலகம், வன்முறை, கொலை என்று அராஜக நரகத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. நாடு முடங்கியது. நாடுமுழுவதும் இயங்கிக் கொண்டிருந்த ஜேவிபி செயற்பாட்டாளர்கள் தங்களுக்கு எதிரானவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சிங்களவர்களை மூர்க்கத்தனமாய்க் கொன்றுகுவித்தனர்.

1988-89-ல் கலகம் வெடித்தபோது கொழும்புப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தராவை பல்கலைக்கழகத்தை மூடச்சொல்லி ஜேவிபி வற்புறுத்தியது. ஆனால் அவர் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டார். அதனால் பல்கலைக்கழக வளாகத்திலே ஒரு ஜேவிபி செயற்பாட்டாளரால் அவர் கொலை செய்யப்பட்டார்.

இந்தப் பின்னணியில், தற்போதைய அரசுக்கெதிரான கலகம் ஐயூஎஸ்எஃப்-பின் பங்களிப்பால் மேலும் மோசமாக வாய்ப்பிருக்கிறது. ஆரம்பத்தில் அகிம்சை முறையில் போராடிக் கொண்டிருந்தவர்கள் கால்லே ஃபேஸ் கிரீனில் உருவாக்கிய ‘கோத்த கோ ஹோம்’ (வீட்டுக்குப் போ, கோத்த!) என்னும் கிளர்ச்சிக் களத்தில் ஐயூஎஸ்எஃப் போராளிகள் ஊடுருவி அந்தச் சாத்வீகப் போராட்டத்தை அமைதியான அதன் அசல் உரிமையாளர்களிடமிருந்துக் கைப்பற்றிக் கடத்திச் சென்றுவிட்டனர். அதன் விளைவாக முன்பு இந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்த பொதுமக்கள் இப்போது விலகிக் கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசநாயக்க மற்றும் அவரது அருகிருக்கும் தோழர்கள் ஆகியோர்களின் தலைமையிலான ஜேவிபி முந்தைய ஜேவிபியின் இரத்தவெறியிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு விட்டது. ஆனால் சமீபத்திய கலகம் ஜேவிபியால் உருவானது என்று சொல்லப்படும் சூழலில், பெரும்பான்மையான சிங்களவர்களுக்கு பழைய சிம்மச்சொப்பன ஞாபகங்கள் கிளர்ந்து வருகின்றன. வீடுகளையும், வாகனங்களையும் நெருப்புக்குப் பறிகொடுத்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கெல்லாம் காரணமாக ஜேவிபியைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

சமீபத்திய கலகம் உண்டாக்கிய நாசத்திற்கு ஜேவிபிதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டால், தனது இரத்தவெறிப் படிமத்தை விட்டெறிந்து இயக்கம் ஒரு நேர்மையான, நம்பத்தகுந்த அரசியல் கட்சிதான் என்பதைக் கட்டமைத்துக் கொள்ள ஜேவிபி இதுவரை எடுத்த முயற்சிகள், கடினமான பணிகள் எல்லாம விழலுக்கு இறைத்த நீராகிவிடும். பெரும்பான்மையான சிங்களவர்களைப் பொறுத்தவரை, 88/89-ல் தங்கள்மீது ஜேவிபி கட்டவிழ்த்த பேரச்சக் கலகம் பற்றிய ஞாபகங்கள் அவ்வளவு எளிதாக அழிந்துவிடக் கூடியவை அல்ல.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival