Read in : English

கன்னியாகுமரி காடுகளின் நில அமைப்புகளில் ஒன்றான வரையாட்டு முடிக் குன்றின் சரிவுகளில் நழுவிச்செல்லும் நீலகிரி வரையாடு தினமும் தென்படுவதில்லை. புல் படர்ந்த குன்றின் உச்சிகளிலும், சோலைக் காடுகளிலும் சிரமத்துடன் பயணித்தால் அது வனப்புமிக்க வரையாடு (’குன்றின் ஆடு’ என்று பொருள்) வசிக்குமிடத்திற்கு நம்மை இட்டுச் செல்லும். அதுவோர் அற்புதமான நினைவில் நிற்கும்.

சமவெளியிலிருந்து அபூர்வமாக இங்கே சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். மற்றபடி மகேந்திரகிரி, திருவண்ணாமலை, வரையாட்டு முடி, முதுகுழு வயல் மற்றும் கீழவரை ஆகிய பனிபடர்ந்த குன்றுகள் பெரும்பாலும் இயற்கைத் தூய்மையோடு திகழ்கின்றன. இந்தச் சரணாலயம் தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தென்முனையில் படர்ந்து கிடக்கும் ஒரு காட்டுவெளி. இதன் வடக்கு எல்லையில் கேரளத்தின் நெய்யாறு காட்டுயிர்கள் சரணாலயமும், வடமத்திய கிழக்கில் தமிழ்நாட்டின் களக்காடு, -முண்டந்துறை புலிகள் காப்பகமும் இருக்கின்றன.

மற்ற எல்லைகளில் ரப்பர் தோட்டங்களும் அல்லது வருவாய் துறை நிலங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களைக் காக்கும் கோதையாறு, பரலயாறு, பழையாறு, வள்ளியாறு ஆகிய நதிகளின் ஆதிமூலம் இதுதான். இந்தச் சரணாலயத்தில் பல்லுயிரிகளும், பல நுண்ணுயிரிகளும் அடர்த்தியாக வசிக்கின்றன. மேலும் கனி இனத்து மலைச்சாதி மக்களின் வீடும் இதுதான்.

தெற்கு மேற்குதொடர்ச்சி மலைகளில் 1,200 முதல் 2,600 மீட்டர் உயரத்தில் மலைப்பாங்கான புல்வெளிகளில் ஆடித் திரியும் பலமான குளம்புகளுடைய நீலகிரி வரையாடு வசிக்கும் இடம் ஒரு சுற்றுப்புறச்சூழல் அதிசயம்.

வடக்கே உள்ள நீலகிரி குன்றுகளுக்கும், தெற்கே உள்ள கன்னியாகுமரிக் குன்றுகளுக்கும் இடையே குறுகலான் 400 கிமீ தொலைதூரப் பகுதியில் நீலகிரி வரையாடுகள் பரவலாகத் திரிகின்றன. 2008இல் தமிழ்நாடு, கேரளா வனத்துறைகள் முதன்முதலாக பரந்துபட்ட களஆய்வு செய்யப்படும் வரை இந்த விலங்கினத்தின் மொத்த எண்ணிக்கையைப் பற்றியும், படர்ந்த வசிப்பிடங்களைப் பற்றியும் எதுவும் தெரிந்ததில்லை.

உலகளாவிய இயற்கை நிதியம்-இந்தியா அமைப்பு அன்றிலிருந்து அது வரையாடு, அதன் வசிப்பிடம் ஆகியவற்றைப் பற்றி பருவந்தோறும் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறது.

உலகளாவிய இயற்கை நிதியம்-இந்தியா அமைப்பு இந்த கள ஆய்வில் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டது. அன்றிலிருந்து அது வரையாடு, அதன் வசிப்பிடம் ஆகியவற்றைப் பற்றி பருவந்தோறும் மதிப்பீடு செய்து கொண்டிருக்கிறது. 3,000 வரையாடுகள் அந்தக் குறுகலான நிலப்பகுதில் வசிப்பதாக 2015-இல் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடு செய்தது. நாங்கள் செய்துகொண்டிருக்கும் இப்போதைய களஆய்வு 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. பாதுகாக்கப்பட்ட குளம்புடை பாலூட்டியினத்தின் எண்ணிக்கை, செயற்பாடுகள் ஆகியவற்றைப் பற்றி செய்த ஆய்வு ஒரு புதிய அறிவைத் தருகிறது.

வரையாடுகளில் ஒன்றைக் கண்டதும் ஏற்பட்ட கிளர்ச்சியுணர்வால் உந்தப்பட்ட நான், வரையாட்டு முடிக் குன்றுகளில் செங்குத்தாகத் துருத்திக் கொண்டிருக்கும் விளிம்புகளில் ஏறினேன். சில இடங்களில் நாங்கள் பாறைகளின் வழியாக ஊர்ந்து செல்ல வேண்டிய அளவுக்குக் குன்றுகள் துருத்திக் கொண்டிருந்தன. புல் படர்ந்த உச்சியை அடைந்ததும் களைப்புமிக்க பயணத்திற்குப் பலன்கிடைத்தது. அங்கே வரையாடுகளைத் தேடி சுற்றியிருந்த குன்று உச்சிகளை ஆராய்ந்தோம். தள்ளாடாமல் உறுதியாய் ஓடி நழுவிச் செல்லும் அந்தப் பாலூட்டிகள் வசிக்கும் பகுதியில் நடந்துசெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சோர்வை ஏற்படுத்தக்கூடியது அது.

நீலகிரி வரையாடு குறித்து சர்வே மேற்கொள்ள மலையில் ஏறிச் செல்லும்

மலையேறிய களைப்பு தீரவும், எங்களை நாங்கள் ஆசுவாசப் படுத்திக்கொள்ளவும், ஒரு மலைப் பேரீச்ச மரத்தின் அடியில் உட்கார்ந்தோம். அந்த ஆதிகாலக் குன்றுகளின் அழகும், நீல அடிவானத்தின் வனப்பும் எங்கள் கண்களுக்குள் ஒருமந்திர சக்தியை அனுப்பியது போல உணர்ந்தோம்; அந்த சௌந்தர்யத்தை ஆராதித்தோம். ஆனால் ரொம்ப நேரம் இது நீடிக்கவில்லை. காரணம் குழு உறுப்பினர் ஒருவர் பெரிய இந்திய காட்டெருமை ஒன்று எதிர்த்த மலைச் சரிவில் ஏறிப்போவதைப் பார்த்தார். எங்களைப் போன்ற ஆராய்ச்சி செய்யும் மனிதர்களுக்கு இந்த விலங்கு பொதுவாகத் தோழமையாக இருப்பதில்லை. சில நிமிடங்களுக்கு, எங்களின் களைத்த கண்கள் ஒளிர்ந்த அந்த ஊதாநிற வடிவத்தையே தொடர்ந்தன; அது திரும்பி வேறு எங்கேயோ போக ஆரம்பித்ததும் நாங்கள் நிம்மதிப் பெருமூச்செறிந்தோம்.

குன்றுகளின் விளிம்புகளை துரிதமாக நோட்டம் விட்டோம், ஏதாவது வரையாடு தென்படுகிறதா என்று. சற்று தொலைதூரத்தில் புல்வெளி நிலத்தின் மீது புள்ளிப்புள்ளியாய்ச் சிறுகுண்டுகள் சிதறிக் கிடப்பதைப் போன்ற காட்சியைக் கண்டோம். குட்டிகள் புடைசூழப் போகும் ஒரு மந்தை அது என்பதைப் புரிந்துகொண்டோம். நீண்ட நேரமாக நாங்கள் அது என்னவென்று பார்க்கத் தேவை இல்லாமல் போயிற்று. ஏனென்றால் அதிர்ஷ்டவசமாக நாங்கள் 30-க்கு மேற்பட்ட விலங்குக் கூட்டத்தைப் பார்த்தோம். குன்றின் பெயர் சுட்டிக்காட்டுவதைப் போல, அது வரையாட்டு மந்தையின் வசிப்பிடம்.

குறிப்புகள் எடுத்துக் கொண்டோம். பின்பு குன்றுச்சரிவில் இறங்கத் தீர்மானித்து நடக்க ஆரம்பித்தோம். அப்போது அதிர்ஷட தேவதை எங்களைப் பார்த்து கிண்டலாகச் சிரித்து ஆகாயத்தைத் திறந்துவிட்டாள். நிலைத்த தூறல் விழுந்தது. காற்றில் பனித்தகடுகள் எங்களை உரசிச் சென்றன. பார்வை மங்கலானது. தொடர்மழையில் போராடி, ஷுக்களில் ஒட்டிய அட்டைப்பூச்சிகளைப் பொருட்படுத்தாமல், கடினமான பாதையில் கால்களால் பயணித்து உருண்டுகொண்டே இருக்கும் புல்வெளிகள் நிறைந்த அடுத்த குன்றுகளின் உச்சிக்கு ஏறினோம். அது மேற்குத்திசையில் கேரளத்தை இணைக்கும் பகுதி.

உற்சாகம்தரும் அந்த நிலப்பரப்பைக் கண்டு ரசிப்பதற்கு முன்பே ஏதோவோர் அமானுஷ்ய கை, மேகங்களைத் தட்டித் திறந்துவிட்டது போலிருந்தது. எனினும் சிறிது நேரம் கழித்து சூரியன் பிரகாசமாக ஒளிர ஆரம்பித்தது. சிற்றோடைகள் பச்சைப்புல் சரிவுகளில் ஒழுக ஆரம்பித்தன

நீலகிரி வரையாட்டைப் பாதுகாத்தல் என்பது இந்த கம்பீரமான விலங்கினத்தை உயிரோடு வைத்திருத்தல் மட்டுமல்ல, தென்மாநிலங்களின் தண்ணீர் பாதுகாப்பின் எதிர்காலமும் கூட.

பாதையில் தென்பட்ட கழிவுகளும் கால்தடங்களும் அங்கே ஒரு சிறுத்தை இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டின. நாங்கள் மேலும் குன்றேறும் போது, தூரத்து புல்வெளிகளில் சில வரையாடுகளைக் கண்ணுற்றோம். ஒரு செங்குத்தான சிறுகுன்றின் பக்கவாட்டு ஓரத்தில் அமர்ந்தபடி, குட்டி உள்பட மூன்று வரையாடுகள் பாறைகளில் படர்ந்திருந்த பாசியைச் சுரண்டிக் கொண்டிருந்தன.

எங்களது மூன்றுநாள் ஆய்வு வேலையின் முதல்நாளில் ஏழு கிலோமீட்டர் தூரம் நடைப்பயணம் செய்ததால் இரவுக்கு ஒரு குகையில் தஞ்சமடைந்தோம். அவ்வப்போது ஒரு தேவாங்கு கரடியின் ஊளைச்சத்தம் வேறு கேட்டது.

இரண்டாவது நாள் ஏழு வரையாடுகள் மந்தையின் காட்சியோடு தொடங்கியது. சரணாலயத்தின் வேறு பகுதியில் அது நிகழ்ந்தது. நாங்கள் உடனே அந்த விலங்குகளின் வயது, பாலினம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டோம். கள ஆய்வின் ஓரங்கமாக ஜிபிஎஸ் குறிப்பும் எடுத்துக் கொண்டோம். இறுதியில் அவை மாயமாய் மறைந்தன. படங்கள் எடுத்தோம். காட்சியின் வெவ்வேறான விவரங்களை, தரவுகளை, நாங்கள் சந்தித்த மானுட அழுத்தங்களை மதிப்பீட்டின் ஒரு பகுதியாக ஆய்வேட்டில் பதிவு செய்துகொண்டோம்.

வரையாடுகள் வாழும் புல் படர்ந்த சோலைக்காடுகள்

வரையாடுகளின் நழுவி ஓடும் போக்கினாலும், அவை வசிக்கும் இடத்தின் கடினத்தன்மையாலும், பெரும்பாலும் மலைகளை வருத்தியெடுக்கும் தட்பவெப்ப நிலையாலும், வரையாட்டு எண்ணிக்கைகளை ஆய்வு செய்வது பெருஞ்சவாலானதொரு பணி. எனினும் இந்த விலங்கினத்தின் சுற்றுச்சூழலையும், அவற்றின் இப்போதைய எண்ணிக்கையையும், அவை எதிர்கொள்ளும் மானுட அழுத்தங்களையும் நேரடியாகப் புரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உதவுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருதடவை தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் நடத்தப்படும் ஒன்றிணைத்த வரையாட்டு ஆய்வுகள் வரையாடுகளைப் பேணிக் காப்பதில் இருக்கும் சவால்களை படம் போட்டுக் காட்டுகின்றன; சவால்களை எதிர்கொண்டு கடந்து போவதற்கும் அந்த ஆய்வுகள்தான் உதவுகின்றன. அடுத்த இரண்டு நாட்கள் எதிர்பார்த்தபடியே கழிந்தன. பின்பு, வரையாடுகளை அவற்றின் சொர்க்கத்திலே விட்டுவிட்டு, எங்கள் மாநகரங்களுக்கு நாங்கள் திரும்பினோம்.

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாத்தல் என்பது அவை வசிக்கும் புல்வெளி நிலத்து சோலைக் காடுகளின் வசிப்பிடங்களையும் பாதுகாத்தல் என்று பொருள்படும். அந்த இடம்தான் பல சிறிய பாலூட்டிகளும், ஊர்ந்து செல்லும் உயிரினங்களும், நீர்சார்ந்த, நிலம் சார்ந்த விலங்குகளும், பறவைகளும், பல்வேறு பூச்சிகளும் வசிக்கின்ற புகலிடம். தனித்துவமான இந்தச் சுற்றுச்சூழல் பிரதேசம் மழைநீரைத் தேக்கிவைத்து அதை ஆண்டு முழுவதும் வெளியேற்றுகிறது. இந்த மழைநீர்தான் சிற்றோடைகளாக உருமாறி நதிகளை உருவாக்குகிறது. ஆதலால், நீலகிரி வரையாட்டைப் பாதுகாத்தல் என்பது இந்த கம்பீரமான விலங்கினத்தை உயிரோடு வைத்திருத்தல் மட்டுமல்ல, தென்மாநிலங்களின் தண்ணீர் பாதுகாப்பின் எதிர்காலமும் கூட.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival