Read in : English

இலங்கை, 1948ஆம் ஆ-ண்டில் பிரிட்டனிலிருந்து விடுதலை பெற்ற பின்பு இதுவரை காணாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் இனவாரியாகப் பிளவுப்பட்டிருந்த இலங்கை மக்கள் இப்போது சர்வ அதிகாரமுள்ள, ஊழல்மயமான, ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக வெகுண்டெழுந்து வீதிக்கு வந்து வந்துவிட்டனர்.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மீதும், தேசிய அரசியலில் பலகாலம் கொடிகட்டி ஆண்ட பெரும் செல்வாக்கு படைத்த அவரது குடும்பத்தின் மீதும் விரக்தியில் ஆழ்ந்த குடிமக்கள் வீட்டுக்குப் போ கோத்த,’ என்ற எதிர்ப்புக் குரல்களால், தங்களின் அறச்சீற்றத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 1977-இல் நாட்டின் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டபின் இலங்கை மக்களுக்குப் பழக்கமாகியிருந்த நல்லதொரு வாழ்க்கைமுறை நாடுமுழுவதும் இப்போது மாயமாய் மறைந்துவிட்டது. கடன் சுமையில் தத்தளிக்கும் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவினால் இப்போது உணவுப் பஞ்சமும், மின்சாரம், மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் வாகன எரிபொருள் ஆகியவற்றின் தட்டுப்பாடும் தலைவிரித்தாடுகின்றன.

பொது மக்களின் எதிர்ப்பை சந்தித்த ராஜபக்ச குடும்பம், அவர்களது அரசியல் செல்வாக்கு கடுமையாக சரிந்துவிட்டது. ஜனாதிபதி ராஜபக்ச மந்திரிசபை ராஜினாமா செய்ததும், அவரது ஆளும் கூட்டணியிலிருந்து பலர் விலகிப் போனதும், 225 உறுப்பினர் கொண்ட நாடாளுமன்றத்தில் அவருக்கிருந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வீழ்ச்சியடைந்தது

இந்தத் தீவுத்தேசத்தில் நிகழும் இன்றைய காட்சிகள் ஆசியாவில் அபகீர்த்தி அடைந்த பெரும்பலம் கொண்ட ஆட்சியாளர்கள் சிலரின் இறுதிநாட்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.

அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மக்களின் ஏகோபித்த குரல் இருந்தாலும்கூட, தனக்கு ராஜினாமா செய்யும் நோக்கம் இல்லை என்றுதான் ஜனாதிபதி ராஜபக்ச கூறியிருக்கிறார். இந்தத் தீவுத்தேசத்தில் நிகழும் இன்றைய காட்சிகள் ஆசியாவில் அபகீர்த்தி அடைந்த பெரும்பலம் கொண்ட ஆட்சியாளர்கள் சிலரின் இறுதிநாட்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. பொங்கியெழுந்த மக்களின் கோப அலையில் வீழ்ந்தவர்தானே இந்தோனேசியாவின் சுஹார்ட்டோ!

இதுவரை காணாத மக்கள் கோபத்தின் பெரும்வெடிப்பு இலங்கை முழுவதும் மார்ச் 31ஆம் தேதி வெடித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் வீதிக்கு வந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மீதும், அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியும், இன்றைய பிரதமருமான மகிந்த ராஜபக்ச மீதும் தங்கள் கோபத்தை வெளிக்காட்டினர். இந்த மகிந்த ராஜபக்சதான் தனிநாடு கேட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் அடக்கி ஒடுக்கியதற்காக பெரும்பான்மை சிங்கள-புத்த பேரினவாத மக்களால் கொண்டாடப்பட்டார் என்பது ஒரு சரித்திர நகைமுரண்.

ராஜபக்ச குடும்பத்தின் அதீத தேசிய அடையாள அரசியல், நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மை சிங்கள-புத்த மக்கள் மத்தியில் எதிரொலித்தது. கோத்தபய ராஜபக்ச அதைத் தன் தேர்தல் பரப்புரையில் ஒரு லட்சியமாக்கிக் கொண்டார். இலங்கையை ஒரு சிங்கள- புத்தமத பேரினவாத நாடாக்குவதுதான் அந்த லட்சியம்; இலக்கு.

மிகப் பெரியதும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாத திட்டங்களுக்கு, ஊழல் சகதியில் மாட்டிக்கொண்ட திட்டங்களுக்கு, கோடிகோடியாய் அமெரிக்க டாலர்களைக் கடன்வாங்கினார். எதிர்பார்தது போலவே, இந்தப் பெரிய திட்டங்கள் பயனில்லாமல் போயின.

தனது 10-ஆண்டு ஆட்சியில் (2005-15) மகிந்த ராஜபக்ச இலங்கையை சீனாவின் வசீகரமான வளையத்திற்குள் கொண்டு சென்றார்; மிகப் பெரியதும், நடைமுறைக்கு ஏற்றதாக இல்லாத திட்டங்களுக்கு, ஊழல் சகதியில் மாட்டிக்கொண்ட திட்டங்களுக்கு, கோடிகோடியாய் அமெரிக்க டாலர்களைக் கடன்வாங்கினார். எதிர்பார்தது போலவே, இந்தப் பெரிய திட்டங்கள் பயனில்லாமல் போயின. ராஜபக்சவின் அகந்தைக்கு முட்டுக்கொடுத்த இந்தச் செயற்பாட்டிற்கு இனிப்பிறக்கப் போகும் இலங்கைத் தலைமுறையினர்தான் விலைகொடுத்தாக வேண்டும்.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, தனது வலதுகையான சகோதரர் கோத்தபய ராஜபக்சவைப் பாதுகாப்புச் செயலாளராக நியமித்தார். அந்தப் பாதுகாப்புச் செயலாளரின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் சென்றன ராணுவமும், காவல்துறையும். ’காலிசெய்பவர்’ என்று தன்சொந்த குடும்பத்தாலே அழைக்கப்பட்ட கோத்தபய, மரணப்படைகளை உருவாக்கி பல அரசியல் எதிரிகளையும், ஆட்சிக்கு எதிராக எழுதிய பத்திரிகையாளர்களையும் கடத்தி காணாமல் போகச் செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் பரவலாகவே இருந்தன.

2019-இல் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள் 269 பேரை கொன்றன. அமெரிக்கக் குடியுரிமை வாங்கியிருந்த கோத்தபய ராஜபக்ச உடனடியாக இலங்கைக்குத் திரும்பினார். ‘குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய இஸ்லாமிய தீவிரவாதிகளை’ அழித்து ஒழிப்பதாக அவர் வாக்களித்தார். இது அவரை ஆகபெரும் அதிகாரமிக்க செயல் ஜனாதிபதிப் பதவியில் ஏற்றிவைத்தது. அந்த ஈஸ்டர் படுகொலைக்குத் திட்டம் போட்டுக்கொடுத்தவரே கோத்தபய ராஜபக்சதான் என்று இப்போது பரவலாகச் சந்தேகிக்கப்படுகிறது.

மற்றொரு ராஜபக்ச சகோதரரான பாசில் ராஜபக்ச என்பவர் நிதி மந்திரியாக இருந்தவர்; அவர் சமீபத்தில்தான் பதவியை ராஜினாமா செய்தார். அரசு ஒப்பந்தங்களில் கிடைக்கும் கமிஷன்களைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டவர் என்பதால் அவருக்கு “மிஸ்டர் டென் பெர்சண்ட்’ என்ற அடைமொழிப் பெயரும் உண்டு. சகோதரர் கோத்தபய ஜனாதிபதி ஆனவுடன், அரசு கஜானாவிலிருந்து கோடிக்கணக்கான டாலர்களை கையாடியதாக பாசில் மீதிருந்த வழக்குகள் எல்லாமே வாபஸ் ஆயின.

ராஜபக்சவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ச இலங்கையில் காவல்துறை அதிகாரியாக இருந்தவர். உலகிலே முதல் பெண் பிரதம அமைச்சரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் அந்தரங்க மெய்க்காப்பாளராகவும் இருந்தார். மகிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது சமல் நாடாளுமன்ற சபாநாயராக நியமிக்கப்பட்டார். சகோதரர் கோத்தபய ஆட்சியில், சமலுக்கு நீர்ப்பாசன அமைச்சர் பதவியும், பாதுகாப்பு அமைச்சகத்தில் இரண்டாவது இடமும் கொடுக்கப்பட்டன. ஜனாதிபதி கோத்தபய, பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தார்.

நமல் ராஜபக்ச மகிந்தாவின் மூத்தமகன். ராஜபக்ச வம்சத்தில் அவர் ‘மணிமகுட இளவரசர்’ என்று கருதப்படுகிறார். எதிர்காலத்தில் இலங்கை ஜனாதிபதி ஆவதற்கு இப்போதே அவர் தயார் செய்யப்படுகிறார். அப்பா ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பதவி இல்லையென்றாலும் நமல் பெரிய செல்வாக்குடன் இருந்தார். கறுப்புப்பணத்தை வெள்ளையாக்கினார் என்ற குற்றச்சாட்டும், இன்னும் பல குற்றஞ்சாட்டுகளும் அவர் மீதிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் அவர் மறுக்கிறார்.

ராஜபக்ச குடும்பம் நடுத்தர விவசாயக் குடும்பம்; ஹாம்பன்டோட்டா என்னும் தென்மாநகரத்தில் வசித்தது. ராஜபக்ச சகோதரர்களின் தந்தை டி. ஏ. (டான் ஆல்வின்) ராஜபக்சவும் அரசியல்வாதிதான்; அவருக்கு ஒன்பது குழந்தைகள். அவர்களில் நால்வர் சமல், மகிந்த, கோத்தபய, பாசில் ஆகியோர். தந்தை ராஜபக்ச இலங்கை சுதந்திராக் கட்சி (எஸ்எல்எஃப்பி)யை நிறுவினார்; நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

இலங்கை சுதந்திராக் கட்சி 1965ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோற்றபின்பு, டான் ஆல்வின் ராஜபக்ச தனது அரசியல் அதிகாரத்தையும் செல்வத்தையும் இழந்தார். இந்தக் காலகட்டத்தில் அவரது குழந்தைகள் சிலர் கொழும்பில் படித்துக்கொண்டிருந்தனர். நிதி நெருக்கடியில் இருந்த அவரால் தனது பெரிய குடும்பத்தைக் காப்பாற்ற முடியவில்லை. அதனால் அவர் தன் வாகனத்தை விற்றார்; நிலங்களை குத்தகைக்கு விட்டார். குடும்பத்தைக் கவனிக்க பல்வேறு கஷ்டங்களை அவர் அனுபவித்தார். 1967ஆம் ஆண்டு நவம்பரில் அவர் நோய்வாய்ப்பட்டபோது, அவரை மருத்துவமனைக்குக் கொண்டுபோகக்கூட வண்டி இல்லை. இறுதியில் வண்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்குள் அவரது இதயம் மிகவும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடனே காலமானார்.

சிங்களம் பேசும் ராஜபக்ச குடும்பம் 1936-லிருந்து இலங்கையின் நாடாளுமன்றத்தோடு சம்பந்தப்பட்டிருந்தாலும், தேசிய அரசியலில் பெரும்பாலும் ஆங்கிலக் கல்வியும், மேல்நாட்டு வாழ்க்கைமுறையும் கொண்டிருந்த சேனநாயக்காக்களும், பண்டாரநாயக்காக்களும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும் அவரது உறவினருமான ரணில் விக்கிரம சிங்கவும் ஆதிக்கம் செலுத்தினர். ஜெயவர்த்தனாவின் ஐக்கிய தேசிய கட்சி 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பெரும்வெற்றி பெற்றபின்பு ராஜபக்ச குடும்பத்தினரால் நாடாளுமன்றத்தில் நுழைய முடியவில்லை.

2005-இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 39 நபர்களைக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் பல்வேறு அரசியல் மற்றும் தூதரகப் பதவிகளில் இருந்தனர். ஒருகட்டத்தில் தேசிய பட்ஜெட்டின் 70 சதவீதம் ராஜபக்ச சகோதரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதுதான் அவர்கள் அரசியல் சக்தியாக மீண்டு வந்தனர். தங்களது சொந்த ஊரான ஹாம்பான்டோட்டாவில் போட்டியிட்டு மகிந்தவும், சமலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள். 2005-இல் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிருந்து 39 நபர்களைக் கொண்ட ராஜபக்ச குடும்பத்தின் பல்வேறு உறுப்பினர்கள் (நிருபமா ராஜபக்ச உட்பட) பல்வேறு அரசியல் மற்றும் தூதரகப் பதவிகளில் இருந்தனர். ஒருகட்டத்தில் தேசிய பட்ஜெட்டின் 70 சதவீதம் ராஜபக்ச சகோதரர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

கோத்தபய ஜனாதிபதியானவுடன் ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் தொடர்ந்தது. நிருபமா ராஜபக்சவின் பெயரை 2021ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியான ‘பாண்டோரா பேப்பர்ஸ்’ (உலகப் புலனாய்வு இதழியல்) வெளியிட்டது. அவர் தன் கணவரோடு சேர்ந்து ஒரு ஷெல் நிறுவனத்தை (பல்வேறு நிதிப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட, ஆனால் இயங்காத ஒரு டம்மி நிறுவனம்) கட்டுப்படுத்தினார் என்றும், அதன்மூலம் லண்டனிலும், சிட்னியிலும் ஆடம்பரமான அபார்ட்மெண்ட்டுகள் வாங்கினார் என்றும், மேலும் பல முதலீடுகள் செய்தார் என்றும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது அந்தப் பத்திரிகை.

ராஜபக்சவின் இலங்கை அரசுடன் தொழில்செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆலோசனை கொடுக்கும் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகவும், விலை உயர்ந்த ஓவியங்களை வாங்குவதற்காகவும் நிருபமாவும் அவரது கணவரும் மேலும் பல ஷெல் நிறுவனங்களை நிறுவினர் என்றும் சொல்லப்பட்டது.

இந்த மோசடி ஒப்பந்தங்கள் எல்லாம் ராஜபக்ச குடும்பம் வெளிநாடுகளில் மறைத்திருக்கும் அளப்பரிய சொத்துக்களின் ஒருபகுதி என்று செய்திகள் சொல்கின்றன. அவர்களின் அறக்கட்டளைகள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் இண்டர்நேஷனல் கன்சார்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் கேட்டபோது, நிருபமா ராஜபக்சவும் அவரது கணவரும் பதிலளிக்க மறுத்துவிட்டார்கள் என்று அந்த அமைப்பு சொல்கிறது.

இப்போது ராஜபக்ச என்ற பெயர் சர்வாதிகாரம், ஊழல், குடும்ப உறவுகளுக்கு ஆட்சியில் பதவிகளைக் கொடுத்தல், மோசமான ஆட்சி ஆகியவற்றின் அடையாளம் ஆகிவிட்டது.

(சர்மினி செரசிங்கே, மூத்த பத்திரிகையாளர். அச்சு, மற்றும் மின்னணு இதழியலில் செழுமையான 40 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ”இலங்கை: ஆசியாவின் விலகிப்போகும் அற்புதம்” என்னும் சர்ச்சைக்குரிய புத்தகத்தின் பெண் எழுத்தாளர்.)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival