Read in : English

Share the Article

ஒவ்வொருவரும் கொஞ்சங்கொஞ்சமாக கஷ்டங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பித்துவிட்டார்கள். பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 110-ரூபாயைத்  தொட்டபோதும், டீசல் விலை 100 ரூபாய் ஆனபோதும் (சில மாநிலங்களில்  இன்னும் அதிகம்) மக்கள் தொடர்ந்து இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் அங்குமிங்கும் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாஜக அரசால் பெரும் ஆரவாரத்துடன் உருவாக்கப்பட்ட இண்டர்நேஷனல் சோலார் அலையன்ஸை, இந்தியா தலைமை தாங்கி வழிநடத்துகிறது.  அதனால் இங்கிருக்கும் ரேஷன்  கடைகளில் அருமையாக தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி சமையல் பாத்திரங்களை இலவசமாகவே கொடுத்திருக்க முடியும். Ðபயோ கேஸ் விஷயத்தில் நிறைய உத்வேக சாத்தியம் இருக்கிறது. இயற்கைக் கழிவிலிருந்து பயோமீத்தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. குடும்பங்களுக்கான வடிவத்தில் குட்டி பயோ கேஸ் ஆலைகளை உருவாக்கும் தேசிய திட்டங்களைப் பற்றிப ஒன்றிய அரசு பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கே நடைமுறையில் இருப்பவை வீட்டுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சமையல் எரிவாயுவும், மின்சாரமும், நகராட்சிக் குழாய்களில் வரும் தண்மஈரும். மேலும்  பெட்ரோல் பங்குகளில் அதிக விலையில் விற்கப்படும் பெட்ரோலும்தான். மக்கள் இந்தக் கட்டமைப்பில் பிரிக்கமுடியாத அளவுக்குப் பொருந்திவிட்டார்கள். களைத்துவிட்ட மாநகரவாசிகளுக்கு மாற்றுவழிகளைத் தேடுவது அதிகபாரமானதொரு விஷயம்.

சூரிய வெளிச்சமும்திறந்த வெளி மொட்டைமாடிகளும் கொண்டிருக்கும் மக்களுக்கு சூரிய ஒளி சமையல் பாத்திரம் எரிபொருளைச் சேமிக்க உதவும்.

இந்தப் பின்புலத்தில் சுயமான வழிகளுக்கு என்னதான் சாத்தியங்கள்? சூரிய வெளிச்சமும், திறந்த வெளி மொட்டைமாடிகளும் கொண்டிருக்கும் மக்களுக்கு சூரிய ஒளி சமையல் பாத்திரம் எரிபொருளைச் சேமிக்க உதவும்.

காய்கறிகளை அல்லது ரொட்டியை  வேகவைக்கத் தேவையான அடிப்படை சூரிய ஒளி சமையல் பாத்திரம்,  பிரீஃப்கேஸ் போலத் தோற்றமளிக்கும் ஒரு சின்னபெட்டிதான். ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியும், மின்கடத்தாப் பொருளும், கறுப்புப் பாத்திரங்களும் அந்தப் பெட்டியில் இருக்கும். ஆனால் இதை அரசு நமக்கு எளிதாகப் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

பெரிய அளவில் இதைத் தயாரித்தால் ஒரு பிரஷர் குக்கரை விட அதிக விலை இருக்காது. சுமார் ரூ.1,000 மட்டுமே தேவைப்படும். ஆனால் சூரிய ஒளி சமையல் பாத்திரம் (சோலார் குக்கர்) கிடைப்பது அரிது. அமேஸானில் இரண்டு வகைகள் கிடைக்கின்றன. ஒன்றின் விலை ரூ 7,295; இது நான்கு நட்சத்திர தரமும், 42 தரமதிப்பீடுகளும் கொண்டது. மற்றொன்றின் விலை ரூ.7,500.  இதில்  எந்தவொரு  நட்சத்திர மதிப்பீடுமில்லை. மத்தியபிரதேசத்தில் ஓர் அரசுசாரா தொண்டு நிறுவனம் மக்கள் சொந்தமாக சோலார் குக்கரை வைத்துக் கொள்ள எப்படி உதவியது என்பதை சோலார் குக்கர்ஸ் இண்டர்நேஷனல் சொல்கிறது.

இந்தியாவில் எல்பிஜி அடுப்புகள் எளிதாகக் கிடைக்கும்போதுசோலார் குக்கர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

உலகத்தில் 40 லட்சம் சோலார் குக்கர்கள் இருக்கின்றன என்ற தகவலைச் சொல்கிறது அந்த இயக்கம். ஆனால் இந்தியாவில் எல்பிஜி அடுப்புகள் எளிதாகக் கிடைக்கும்போது, சோலார் குக்கர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது.

கோவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில் முன்னாள் ஐஐடி மாணவரான விவேக் காப்ரா, சொந்தமாக சோலார் குக்கர்கள் தயாரிப்பது எப்படி என்பது பற்றி 12 லட்சம் குழந்தைகளுக்குப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திச் பயிற்சி அளித்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கருவிகள் மையநீரோட்ட உலகத்தின் கவனத்துக்கு இன்னும் வரவில்லை. பெங்களூரில் ஒரு தம்பதியர் ஒவ்வொரு நாளும் வீட்டு மொட்டைமாடியில் ரூ. 7,000 மதிப்புள்ள பாரபாலிக் குக்கரில் சமையல் செய்து தங்களது கேஸ் சிலிண்டரின் பயன்பாட்டை மேலும் இருபத்தைந்து, முப்பது  நாட்களுக்கு நீட்டித்தனர் என்று ஒரு செய்தி சொல்கிறது. இந்த மாதிரியான வித்தியாசமான முயற்சிகள் நல்ல பலனைத் தரும். ஆனால் சோலார் குக்கர்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய அரசுகள் விரைந்து செயல்படுவதில்லை.

பாரபாலிக் குக்கர்கள் மிகவும் நவீனமானவை; பாத்திரத்தில்  குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளியைக் குவியவைத்து சமையலை துரிதப்படுத்துகின்றன. ஆனால் விலை அதிகம்.

இந்தியாவில் விளம்பரப்படுத்தப்படும் கான்சென்ட்ரேட்டார் குக்கர் மாடல் சன்விங்ஸ் என்றழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் பிக்னிக் செல்பவர்கள் பயன்படுத்தும் ‘கோ சன்’ குக்கர்களைப் போலவே அதை எங்கும் தூக்கிச் செல்லமுடியும். ஆனால் அந்தப் பொருளை வாங்கலாம் என்று நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்ததால்  எப்போதுமே ’தவறு 404’ என்றே வருகிறது.

(Photo Credit: Get Rooftop Solar for Home and Business by Emma Ava- Flickr)

இதற்கிடையில் மாற்று எரிபொருளுக்கு மாறுவதில் அரசுக்கு கடப்பாடு இருக்கிறது என்றும், அதற்கான வசதியை ஏற்படுத்தும் கொள்கைகளும் திட்டங்களும், சோலர் குக்கர் திட்டமும் அரசிடம் இருக்கிறது என்றும் ஒன்றிய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

எரிபொருள் மாற்றம் சம்பந்தமாக அதிகம் விவாதிக்கப்பட்ட வி<ஷயம் இது. வீட்டுக் கூரையின்மீது சில ஒளி மின்னழுத்த தகடுகளைப் பொருத்தி வெயில் நாட்களில் மின்சாரம் தயாரித்து மிச்சத்தை மின்சேமிப்பு விநியோக அமைப்பில் (கிரிட்டில்) வைத்துக்கொள்வது நல்ல பலன் அளிக்கும். இப்படி முதலீடு செய்து கூரைமீது பொருத்திய விநோதமான கருவிகள் மூலம் தயாரித்த சூரிய ஒளி மின்சாரத்தால் குளிர்சாதனப்பெட்டிகளையும், சலவை இயந்திரங்களையும், மேலும் மின்சக்தி தேவைப்படும் இயந்திரங்களையும் இயக்குகின்ற மக்கள் சென்னையிலே இருக்கிறார்கள். அவர்கள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து பேட்டரியில் தேக்கியும் வைத்துக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு சராசரி நடுத்தர வகுப்பு இந்தியருக்கு சூரிய ஒளி மின்சாரம் என்பது பெரிய விஷயம்தான். சின்ன தொழிலதிபர்களுக்கும்தான். இதற்குக் காரணம் அதிக விலையும், இணக்கமில்லாத சுற்றுப்புறச் சூழலும்தான். பி.வி. பத்திரிகை மேற்கோள் காட்டிய பிரிட்ஜ் டூ இந்தியா என்னும் தொழில்களைக் கண்காணிக்கும் அமைப்பு கூறுகிறது: 2021இல் கடைசி மூன்று மாதங்களில் கோவிட்டால் பாதிக்கப்பட்ட தேவைகள் மீண்டும் எழுந்தபோது, இந்தியாவில் மின்விநியோக அமைப்பைத் தாண்டி (ஆஃப் கிரிட்), தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி மின்சாரத்தின் திறன் 120 மெகாவாட் ஆகும். மொத்த சூரிய ஒளி மின் சேர்க்கையில் இது 4 சதவீதமாகும் (மிச்சமிருக்கும் மின்திறன் கிரிட்டுடன் இணைக்கப்பட்டவை). வழக்கமாகக் குடியிருப்புக் கட்டடங்களில் இணைக்கப்படும் தனித்த ’ஆஃப் கிரிட்’ கூரை சூரிய ஒளி மின்சாரத்தின் மொத்த தேசிய அளவு 1.47 கிகாவாட்; ’கிரிட் தொடர்புள்ள சூரிய ஒளி  மின்சார அளவு 8.57 கிகாவாட்; இதில் மொத்த தேசிய சூரிய ஒளி மின்திறன் 50.5 கிகாவாட் (இது நல்ல விஷயம் என்று பலர் கருதுகின்றனர். ஆயினும் இந்தியா 2030-க்குள் புதைபடிமம் அல்லாத எரிசக்தித் திறனில் மேலும் 500 கிகாவாட்டை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விரும்புகிறது). ஆஸ்திரேலியா  சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் முன்னணியில் நிற்கிறது; அதை கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.

கூரையில் சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவதற்கும் அவற்றை மின்விநியோக அமைப்போடு (கிரிட்டுடன்) இணைப்பதற்கும்  நுகர்வோர்களுக்குத் தேவைப்படும் உதவியைத் தருவதில் டான்ஜெட்கோ இழுத்தடிக்கிறது


கூரையில் சூரிய ஒளித் தகடுகளைப் பொருத்துவதற்கும் அவற்றை மின்விநியோக அமைப்போடு (கிரிட்டுடன்) இணைப்பதற்கும்  நுகர்வோர்களுக்குத் தேவைப்படும் உதவியைத் தருவதில் டான்ஜெட்கோ இழுத்தடிக்கிறது. அதனால் இந்த சூரிய ஒளி மின்சார வளர்ச்சி பெரிதாக இல்லை. இப்படி தனியான மின்சார உற்பத்திக்கான கட்டணங்களை அவர்கள் சீர்திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு சராசரி மனிதன், எரிசக்தியை உற்பத்தி செய்வதை யாரும் விரும்புவதில்லை.

கோடை உச்சத்தில் இருக்கும்போது சூரிய வெளிச்சம் அபரிமிதமாக பொங்கித் ததும்பும். குளிர்சாதனப் பெட்டிகள் சன்னமாகச் சத்தமிட்டு இயங்கும். அப்போதுதான் மின்சாரப் பிரச்சினை மிகச்சிரமமாக இருக்கும்., ஆனால் டான்ஜெட்கோ போன்ற நிறுவனங்கள் சூரிய ஒளி மூலம் தனியாக மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்காது. ஆனால் உண்மை என்னவென்றால் வெற்றுக் கூரையில் ’கிரிட்’ இல்லாமலே சூரிய ஒளி மின்சார அமைப்பை உருவாக்குவதற்காந ஆராய்ச்சி மிக நல்லது என்பதுதான்.

சூரிய ஒளி மின்சார தயாரிப்பின் விலை விஷயத்தில் பஞ்சாப் நமக்கு வழிகாட்டுகிறது. அந்த மாநிலத்து மின்சார வாரியம் சூரிய ஒளி மின்சாரத்திற்கு ஒரு மணி நேர கிலோ வாட்டுக்கு ரூ.37,000 (அல்லது ஒரு வாட்டுக்கு ரூ.37) என நிர்ணயித்திருக்கிறது. மேலும் குடியிருப்புக் கூரையில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சாரக் கட்டமைப்புகளுக்கு மானியமாக ரூ.22,000 (ஒரு மணிநேர கிலோவாட்டுக்கு) வழங்குகிறது. சூரியஒளியிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வது குறித்து தமிழக அரசு ஆராய வேண்டும்.

வீட்டுப் புழக்கடையில் காற்றின்றி வாழும் பாக்டீரியாக்களும் மக்கும் இயற்கை கழிவுகளும் பயோ மீத்தேனை உற்பத்தி செய்கின்றன. உயிரி வாயுவின் செரிமானத்தில் எந்தப் பொருட்கள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த மீத்தேனின் திறன் அமையும். ஆனால் இதுவொரு நற்பலன் தரும் விஷயம்.

நாரிழையால் பலமாக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பிரதானமான உற்பத்தியாளர் ஒருவர், ஒரு சிறிய பயோ கேஸ் பையின் (100 கிலோ கழிவு) விலை ரூ 25,000 என்று விளம்பரப்படுத்துகிறார். இந்த சிறிய ஆலைகள் வீட்டுப் புழக்கடையில் அமைதியாகக் கொலுவிருந்து மீத்தேனை உருவாக்குகின்றன. ஆனால் இந்த வாயு எல்பிஜியைப் போல அழுத்தத்தில்  இருப்பதில்லை. அதனால் அது ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும்.

பெரிய, சிறிய பயோ கேஸ் ஆலைகளை உருவாக்க ஒன்றிய அரசின் எரிசக்தி அமைச்சகம் தனித்தனி திட்டங்களை வைத்திருக்கிறது. புதிய தேசிய உயிரிவாயு மற்றும் இயற்கை உரத்திட்டம் கிராமப்புறங்களிலும் சிறுநகர்ப்புறங்களிலும் சுத்தமான கழிவறைகளுடன் கூடிய பயோ கேஸ் ஆலைகள் உட்பட சிலவற்றிற்கு மானியங்கள் வழங்குகிறது. அந்தமாதிரியான நிதி ஆதரவு இல்லாமலே பயோ கேஸ் ஆலைகளை உருவாக்குவது சாத்தியம். ஏனென்றால் அவற்றிற்கு காய்கறிக்கழிவுகளும்  பாக்டீரியாக்களுமே போதும். பல உணவகங்களுக்கும்கூட பயோ கேஸ் ஆலைகளை உருவாக்குவது ஒரு நல்ல தீர்வாகும். உணவுக்கழிவுகளை மீத்தேனை உற்பத்தி செய்ய பயன்படுத்தலாம்.

மரபு ரீதியிலான சைக்கிளில் மீண்டும் பயணப்படுவதைப் பற்றி யோசியுங்கள் (டச்சு வகை சைக்கிள் பேணிக்காப்பதற்கு எளிது). இன்றைய காலகட்டத்தை விட வேறெந்த காலத்திலும் அது ஆகச்சிறந்ததாக இருந்ததில்லை. 30 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும், பேட்டரியில் இயங்கும் பைக்குகள் வாங்கலாம்.

நிறைய பேருந்துகள் வேண்டும்; நிறைய ரயில்கள் வேண்டும்; குறைந்த கட்டணங்களில் அவை வேண்டும் என்று ஒவ்வொருவரும் கேட்க வேண்டிய காலம் இது. எல்லா பகுதிகளுக்கும் பொதுப் போக்குவரத்து வசதிகளையும் உரத்த குரலில் கேட்கவேண்டும் (இனி உருமாறிய வைரஸ் தொல்லை இருக்காது என்று நம்புவோம்). சென்னையைப் பொறுத்தவரையில் பரபரப்பான சாலைகளில் நடக்கவே மக்கள் அதீத முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இப்போது நடைமேடைகள் பெரும்பாலும் காணாமலே போய்விட்டன. சொல்லப்போனால் நடை என்பது சுதந்திரத்தின் அடையாளம்  அல்லவா?


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles