Read in : English
மும்பை -ஐஐடி பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி 11 ஆண்டுகள் விடுமுறை கேட்டு 2020-இல் விண்ணப்பித்தார். விடுமுறை காலத்தில் தன் வீட்டுக்குப் போகவேண்டும் என்று அவர் முடிவெடுக்கவில்லை. மாறாக 2020ஆம் ஆண்டு நவம்பரில் சூரிய ஒளி எரிசக்தியில் ஓடும் பேருந்தில் தனது எரிசக்தி சுயராஜ்ய யாத்ராவை அவர் தொடங்கினார். அன்று முதல் அந்த பேருந்துதான் அவரது நடமாடும் வீடாயிற்று. அவர் தன் யாத்திரையை 2030-ல் முடிக்கும் வரை அந்தப்பேருந்துதான் அவரது வீடாகவே இருக்கப்போகிறது. பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய பருவநிலை மாற்றத்தின் காரணமாக, 100 சதவீத சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக்கும் நோக்கத்தில் இந்த எரிசக்தி சுயராஜ்ய யாத்ரா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
100 சதவீத சூரிய ஒளி எரிசக்தியைப் பயன்படுத்துவதை ஒரு மக்கள் இயக்கமாக்கும் நோக்கத்தில் இந்த எரிசக்தி சுயராஜ்ய யாத்ரா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மும்பை ஐஐடியில் பல சூரிய ஒளித் திட்டங்களை வழிநடத்திய சோலங்கி 2020ஆம் ஆண்டு நவம்பரிலிருந்து வட இந்தியா முழுக்கப் பயணம் செய்தார். இப்போது தென்னிந்தியாவில் பயணித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய எரிசக்தி சுயராஜ்ய பேருந்தில் வேலை செய்ய, சந்திக்க, தூங்க, சமைக்க, சலவைசெய்ய, பயிற்சிகொடுக்க என்று பல்வேறு வசதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு இடத்திலும் உரைமுடிந்தவுடன் பேருந்தைப் பற்றி விளக்கங்கள் சொல்லப்படும். பேருந்தில் 3.2 கிலோவாட் சூரிய ஒளித் தகடுகளும், மணிக்கு 6 கிலோவாட் சக்திகொண்ட பேட்டரி ஸ்டோரேஜும் இருக்கின்றன; மூன்று கிலோ வோல்ட் ஆம்ப்ஸ் இன்வர்ட்டரும் உண்டு. மின்விளக்குகளும், கூலரும், சமையல் ஸ்டவ்வும், டிவியும், குளிர்சாதனப்பெட்டியும், மடிக்கணினியும் பேருந்தில் இருக்கின்றன. இவையாவும் சூரியஒளி எரிசக்தியில் இயங்குகின்றன. பேருந்தின் எஞ்சின் மட்டும் டீசலில் இயங்குகிறது.
கடந்த மார்ச் 31ஆம் தேதி சோலங்கி கோயம்புத்தூரில் இருந்தார். தமிழ்நாட்டின் மற்ற நகரங்களான கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, சென்னை, வேலூர் ஆகிய இடங்களில் அவர் ஏப்ரல் 10 முதல் 23 வரை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். “பருவநிலை மாற்றம் தாக்குபிடிக்கக்கூடிய உயிர்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் தருவதில்லை; பூமியில் உயிரைத் தக்கவைத்துக் கொள்ளவைக்கும் திறனுக்கும் அது அச்சுறுத்தல்தான். புவி வெப்பமயமாகும் நிலை 1.5 டிகிரி செல்சியஸ் (ஐநாவின் அரசுகளுக்கிடையிலான பருவநிலை மாற்றக் குழுவின் அறிக்கையின்படி) அதிகரிப்பதற்கு இன்னும் 7-8 ஆண்டுகள் இருக்கின்றன. அதனால் பருவநிலை மாற்றத்தின் பாதிப்பைக் குறைக்க ‘உடனடியான’, மற்றும் ‘கடுமையான’ நடவடிக்கைகள் தேவை. இதற்குத் தீர்வு எரிபொருள் தன்னிறைவை அடைவதில் இருக்கிறது; அல்லது உள்ளூரிலே எரிசக்தியைத் தயாரித்துப் பயன்படுத்த வேண்டும்,” என்கிறார் சோலங்கி.
ஏழை, பணக்காரன் என்று வித்தியாசம் இல்லை. எரிபொருள் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் எனது இலக்கு என்று அவர் கூறுகிறார். “நாம் பயன்படுத்தும் எரிபொருளின் 85 சதவீதம் புதைபடிமங்களிலிருந்துதான் வருகிறது என்பதை நமது அரசுக்கொள்கை வகுப்பாளர்கள் புரிந்துகொள்வதில்லை. புதைபொருள் எரிசக்தியைப் பயன்படுத்தும்போது கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாகிறது. அது பருவநிலை மாற்றத்தில் கொண்டுவிடுகிறது. கியோட்டோ ஒப்பந்தமும், பல்வேறு உலக உடன்படிக்கைகளும் இருந்தபோதிலும், கரியமிலவாயு வெளிப்பாடுகள் நாளுக்குநாள் ஏறிக்கொண்டேதான் போகின்றன. ஒவ்வொரு தனிமனிதனுமே இதற்குப் பொறுப்பு. நமது எரிபொருள் மூலங்களை எப்படிச் சரியாகப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்துவதுதான் என் இலக்கு,” என்று சொல்லும் சோலங்கி தற்போது கேரளாவில் பல மாவட்டங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அவரின் சூரிய ஒளி எரிசக்திப் பேருந்து தனது பயணத்தின் 500-ஆவது நாளில் ஏப்ரல் 10ஆம் தேதி கன்னியாகுமரியைச் சென்றடையும்.. இந்தப் பயணத்தின் லட்சியமே விழிப்புணர்வை உருவாக்கி செயலாற்ற வைப்பதுதான்.
அவரின் சூரிய ஒளி எரிசக்திப் பேருந்து தனது பயணத்தின் 500-ஆவது நாளில் ஏப்ரல் 10ஆம் தேதி கன்னியாகுமரியைச் சென்றடையும். “எங்கள் பயணத்தின் 500-ஆவது நாள் கன்னியாகுமரியில் ஏப்ரல் 10ஆம் தேதி முடிகிறது என்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தப் பயணத்தின் லட்சியமே விழிப்புணர்வை உருவாக்கி செயலாற்ற வைப்பதுதான். விழிப்புணர்வைவிட மிகவும் முக்கியம் செயல். அது இயற்கை வளங்கள் குறிப்பிட்ட நிலையிலே இருக்கும் பூமிக்கிரகத்தில் மனித இருப்பின் விதியை அடிப்படையாகக் கொண்டு அந்தச்செயல் உருவாக வேண்டும். பூமி கிரகத்தை மேலும் பெரிதாக்க முடியாது. விஞ்ஞானம்கூட அதைச் செய்யமுடியாது. அதைப்போலத்தான் இயற்கை வளங்களையும் நம்மால் இன்னும் பெரிதாக்க முடியாது. நவீன மனிதர்கள் ஒரு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு மற்றொரு பிரச்சினையை உருவாக்குவதில் திறமைசாலிகள்,” என்கிறார் சோலங்கி.
“நாம் எல்லாவற்றையும் மையப்படுத்தும்போது, அது இயற்கை வளங்களின் சமச்சீர்வற்ற பகிர்வில் போய்முடிகிறது. நாம் நமது நுகர்வைக் குறைத்துக்கொண்டு உற்பத்தியை உள்ளூர்மயமாக்க வேண்டும். எரிபொருள் தன்னிறைவை மேற்கொண்டால் திறன்களை மேம்படுத்தலாம்; வாழ்வாதாரத்தை உருவாக்கலாம்; எரிபொருள் சுதந்திரத்தை அடையலாம்; உள்ளூர்ப் பொருளாதாரத்தைப் பலப்படுத்தலாம்; பின்பு பருவநிலை மாற்றத்தை எதிர்கொண்டு அதைக் குறைக்கலாம். நான் இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருப்பது ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்கவும், எரிபொருள் தன்னிறைவை நிறுவவும்தான்,” என்கிறார் அவர்.
மும்பை ஐஐடியின் முக்கியமான திட்டமான ‘சோலார் உர்ஜா த்ரூ லோக்கலைசேஷன் ஃபார் சஸ்டெயினெபிலிட்டி’ (சோல்ஸ்) உட்பட பெரிய சூரிய ஒளி எரிசக்தித் திட்டங்களை சோலங்கி வழிநடத்தியிருக்கிறார். ‘சோல்ஸ்’ திட்டத்தின்மூலம், அவர் 75 லட்சம் குடும்பங்களுக்கு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறார். “இந்தியாவின் சோலார் மேன்” என்றும், “சோலார் காந்தி” என்றும் அவர் அழைக்கப்படுகிறார். காந்தியின் லட்சியங்களை அடியொற்றி அவர் ‘எரிபொருள் சுயராஜ்’ என்ற பதத்தை உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் எரிபொருள் சுயராஜ்யத்தைக் கட்டியெழுப்ப அவர் எரிபொருள் சுயராஜ் ஃபவுண்டேஷனை அமைத்திருக்கிறார். சிபிஎஸ்இ, மற்றும் ஏஐசிடிஇ ஆகிய கல்வி அமைப்புகளில் சூரிய ஒளி பாடத்திட்டத்தை மேம்படுத்தும் குழுவின் தலைவராகவும் அவர் இருக்கிறார். ஏழு புத்தகங்களை வெளியிட்டிருக்கும் அவர், உலக அளவில் 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார்.
தனது எரிபொருள் சுயராஜ்ய யாத்ராவை ஆரம்பிக்கும் முன்பு அவர் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறார். அந்த அனுபவம் அவருக்குக் கற்றுக் கொடுத்த விஷயத்தைப் பின்வருமாறு சொல்கிறார்: “ஒவ்வொன்றுக்கும் நாம் அரசைக் குற்றஞ்சொல்ல முடியாது. அரசுகள் குறைந்த காலத்திற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதனால் நானே ஒவ்வொரு தனிமனிதனிடம் போய்ச் சொல்வது என்று முடிவெடுத்தேன். நம் தேசத்தை, சமூகத்தை, ஏன், பருவநிலை மாற்றத்தைக்கூட விட்டுவிடுங்கள். தயவுசெய்து நம் குழந்தைகளைப் பற்றி யோசியுங்கள். நம் குழந்தைகள் வசிப்பதற்கான சிறந்ததோர் இடத்தை நாம் உருவாக்குவோம் என்று ஒவ்வொரு பெற்றோரிடமும் நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீரும், காற்றும் சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் இல்லை என்றால், நம் குழந்தைகளுக்கு நாம் என்ன செல்வத்தைக் கொடுக்கமுடியும்?”
தனது எரிபொருள் சுயராஜ்ய யாத்ராவுக்கு தன்னாட்டு மக்களிடம் நல்ல தாக்கம் ஏற்பட்டு இருப்பதாகச் சோலங்கி சொல்கிறார். “இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் வாழ்பவர்களைக் காட்டிலும், தென்னாட்டு மக்கள் மிகவும் முற்போக்கானவர்கள். எரிபொருள் சுயராஜ்ய யாத்ராவின் 500-ஆவது நாளைக் கன்னியாகுமரிக்குச் சென்று முடித்துவைக்கிறோம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழக அரசு நல்ல ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த மாநிலத்தில் இன்னும் நிறையபேர் இந்த முயற்சியில் என்னோடு சேர்ந்து பணியாற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சோலங்கி.
Read in : English