Read in : English
இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டக்காரர்களை சமாதானப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அரசு. அவற்றை மக்கள் ஏற்கவில்லை. தொடர்ந்து போராட்டம் பரவி வருகிறது. அங்குள்ள நிலைமை பற்றி இலங்கையின் முக்கிய மனித உரிமை செயல்பாட்டாளர் கணேஷ், இன்மதி இணைய இதழிடம் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்:
கேள்வி: இலங்கையில் தற்போதைய நிலை எப்படி உள்ளது?
கணேஷ்: அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்து வருகிறது. சமூக வலை தளங்கள் வழியாக துவங்கியது. அதை முடக்க முயன்றதால் மக்கள் நேரடியாக வீதிக்கு வந்துள்ளனர். ஆட்சியில் இருப்போரை வீட்டுக்கு போகச் சொல்லி, ‘கோ கோம்’ என்ற கோஷத்தை முன்வைத்து போராட்டம் நடக்கிறது. இலங்கையில் அனேகமாக எல்லா நகரங்களிலும் இது பரவிவருகிறது.
சிங்கள மக்களே இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர். தன்னெழுச்சியாகவே நடக்கிறது. திட்டமிட்ட போராட்டம் என்று சொல்ல முடியாது.
கேள்வி: எதிர்க்கட்சிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறதா?
கணேஷ்: அப்படி சொல்ல முடியாது. சிங்கள மக்களே இந்த போராட்டதை முன்னெடுத்துள்ளனர். தன்னெழுச்சியாகவே நடக்கிறது. திட்டமிட்ட போராட்டம் என்று சொல்ல முடியாது. குறிப்பாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் அடிப்படையில் நடக்கிறது. நகர்ப்புறங்களில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல், மண்ணெண்ணெய் போன்றவற்றுக்காக காத்திருக்கும் நகர்ப்புற மக்கள், ஆங்காங்கே குழுக்களாக போராடி வருகின்றனர். எதிர்க்கும் சிறு குழுக்களில் தன்னார்வமுடன் பலரும் இணைந்து வருகின்றனர்.
கேள்வி: இது எப்படி சாத்தியமாகிறது?
கணேஷ்: முதலில் மின்வெட்டு, எரிபொருள் விலை உயர்வை எதிர்த்துதான் மக்கள் போராட துவங்கினர். ஒரு நாளில், மூன்று மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே அரிதாக உள்ளது. இது, உள்ளூர் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்வெட்டை கண்டித்து துவங்கிய போராட்டம், எரி பொருள் தட்டுப்பாட்டால் தீவிரமடைந்தது. நகர்ப்புற மக்கள் எரி பொருள் இன்றி தவிக்கின்றனர். இந்த தவிப்புதான் போராட்டங்களாக மாறிவருகிறது. நகரங்களில் அன்றாடம் வாழ்வதே கேள்விக்குறியாகியுள்ளது.
கேள்வி: கிராமங்களில் நிலைமை எப்படி இருக்கிறது?
கணேஷ்: கிராமங்களில் நிலவரம் மோசம் என்றாலும், நேரடியாக பாதிப்பு இன்னும் தலை காட்டவில்லை. எனவே போராட்டம் பெருமளவில் அங்கு பரவவில்லை. அன்றாட சமையல் போன்றவற்றுக்கு, விறகை பயன்படுத்துகின்றனர் மக்கள். கிராமப்புறங்களில் மின்வெட்டு மிகவும் அதிகம். இதனால், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் சார்ந்தும் போராட்டம் தீவிரமாகியுள்ளது. மண்ணெண்ணெய், டீசல் தட்டுப்பாடு காரணமாக, மீன்பிடித் தொழில் முழுதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பெட்ரோல், டீசல் வருவதால், நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கனங்களுக்கு வாங்க முடிகிறது. ஆனால், கேன்களில் பிடித்து செல்ல அனுமதியில்லை. இது மீன்பிடி தொழிலுக்குப் பாதகமாக உள்ளது.
கேள்வி: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?
கணேஷ்: அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு பொருளுக்கு இவ்வளவுதான் விலை என்று நிர்ணயித்து சொல்ல முடியாது. கள்ளச்சந்தை பெருகிவிட்டதால், கண்டபடி விலை உள்ளது. நொடிக்கு நொடி இது மாறுகிறது. அரிசி, பருப்பு, சர்க்கரை, பால்மாவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுவதால், கள்ளச்சந்தை பெருகியுள்ளது. மக்களிடம் பணம் உள்ளது. அதைக் கொண்டு பொருட்கள் வாங்க முடியவில்லை. பொருட்கள் வாங்க பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. காத்திருந்தாலும், பொருள் கிடைக்கும் என்ற உறுதியில்லை.
கேள்வி: ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்ற கட்டடம் அருகில் எல்லாம் மக்கள் கூடி எதிர்ப்பை தெரிவிக்கிறார்களே!
கணேஷ்: உண்மைதான். இந்த அரசை தேர்ந்தெடுத்த சிங்கள மக்கள்தான் இதை முன்னெடுத்துள்ளனர். ஊரடங்கு உத்தரவுக்கு எதிராக இந்தச் செயல்பாடு உள்ளது. தடைச் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது அரசு. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனை இன்றி விடுதலை செய்யக் கோரி, கட்டணமும் வாங்காமல், 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை நடத்தி வருகின்றனர். இவற்றால் அரசு திணறி வருகிறது. இடைக்கால நடவடிக்கையை எடுப்பதாக அறிவிக்கிறது அரசு. ஆனால், எதுவும் போராட்டக்காரர்களை திருப்திபடுத்தவில்லை.
பெரும்பான்மை சிங்களர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அதே மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தேர்ந்தெடுத்த மக்களே அந்த அரசை வீழ்த்த களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர் தமிழர்கள்.
கேள்வி: தமிழர்கள் அதிகம் வாழும், வடக்கு, கிழக்கு பகுதியில் நிலைமை எப்படி இருக்கிறது.
கணேஷ்: தமிழர் மற்றும் முஸ்லிம் வாழும் பகுதிகளில் பெரும் போராட்டம் எதுவும் நடக்கவில்லை. அடையாள எதிர்ப்பு அங்கும் இருக்கிறது. ஆனால் தீவிர போராட்டம் நடக்கவில்லை. உள்நாட்டு போர் நடந்த போது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பல ஆண்டுகள் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இதனால், தற்போது நிலவும் தட்டுப்பாடு, தமிழர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை.
இந்த அரசு சிங்கள மக்களுக்கு சாதகமானது என வெளிப்படையாகவே அறிவித்திருந்தது. எனவே, பெரும்பான்மை சிங்களர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, அதே மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தேர்ந்தெடுத்த மக்களே அந்த அரசை வீழ்த்த களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிகழ்வில் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே உள்ளனர் தமிழர்கள்.
கேள்வி: இலங்கையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
கணேஷ்: பொருளாதார ரீதியாக இலங்கை மீண்டு வர வாய்ப்பு கடந்த இரண்டு மாதங்களில் பிரகாசமாக இருந்தது. அதாவது இலங்கை பொருளாதாரம், மீன்பிடித் தொழில், சுற்றுலா, தேயிலைத் தொழில் போன்றவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக, சர்வதேச சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. பிப்ரவரியில், லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்ததாக புள்ளி விவரம் உள்ளது. இதை பயன்படுத்தி நிலையை மேம்படுத்தி பொருளாதாரத்தை சீரமைக்க முயற்சித்திருக்கலாம். ஆனால் அரசு அதை செய்யாமல், வெளிநாடுகளில் கடன் வாங்குவதையே குறியாகக் கொண்டுள்ளது. கடன், மக்களின் வாழ்வை சீரமைப்பதற்காக அல்ல; ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தவே, மீண்டும் கடன் வாங்கப்படுகிறது. இந்த நிலையில் நிலைமை எப்படி சீராகும் என்பதுதான் கேள்வியாக உள்ளது.
கேள்வி: சீரமைக்க வேறு வழி ஏதும் இலங்கை அரசிடம் உள்ளதாக தெரிகிறதா?
கணேஷ்: சிங்கள மக்கள், அரிசி, பருப்பு, சம்பல் கிடைக்காமல் வேதனையில் உள்ளனர். அன்றாடம் வாழ்வை புதுப்பிக்கும் உணவு இது. அவை முறையாக கிடைக்காவிட்டால், அரசுக்கு பிரச்சினை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
பிரச்சினையை தீர்க்க அரசு முயல்வதாக தெரியவில்லை. மாறாக ஐ.எம்.எப். போன்ற நிதி நிறுவனங்களை நாடியுள்ளது தற்போதைய இலங்கை அரசு. வாங்கிய கடனுக்கான வட்டி பிரச்சினையை தீர்க்கவே முயல்கிறது. எனவே, போராட்டத்தின் மூலம் மக்கள் எந்தவகை முடிவை நோக்கி நகர்வார்கள் என்பதை எட்டியிருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது.
Read in : English