Read in : English

தேவதாசி குடும்பத்தில் பிறந்து சின்ன வயதில் வறுமை காரணமாக 10 ரூபாய் பணத்துக்கும் ஒரு பழம் புடவைக்கும் தேவதாசி ஒருவரிடம் விற்கப்பட்ட மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883-1962). திராவிட இயக்க வரலாற்றிலும் பெண்ணிய வரலாற்றிலும் மறக்க முடியாத மாபெரும் ஆளுமை.

மகாத்மா காந்தி, பெரியார், திருவிக, வரதராஜுலு நாயுடு, அண்ணா போன்ற பல தலைவர்களோடு பொது வாழ்க்கையில் பங்கேற்றவர் இராமாமிர்தம் அம்மையார். “திராவிடர் இயக்க வரலாற்றினை யார் எழுதினாலும் அதிலே தந்தை பெரியாருடன் பணியாற்றியவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் அதிலே முதல் வரிசையில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாருக்கு ஒரு முக்கிய இடம் தராமல் எழுத முடியாது’’ என்கிறார் மறைந்த பிரபல பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி.

தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரைக் குறிப்பிடும் அளவுக்கு, அதற்காகக் கடுமையாகப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயர் இடம் பெறுவதில்லை என்பது வரலாற்று சோகம்.

தமிழ்நாட்டில் தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரைக் குறிப்பிடும் அளவுக்கு, அதற்காகக் கடுமையாகப் போராடிய மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெயர் இடம் பெறுவதில்லை என்பது வரலாற்று சோகம்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் 50 ஆண்டு பொது வாழ்க்கைக்கு அவர் வாழும்போதே பெற்ற ஒரே அங்கீகாரம். சுயமரியாதை இயக்கத்தில் உழைத்ததற்காக, திமுக சார்பில் 1956ஆம் ஆண்டில் அண்ணா வழங்கிய விருதுதான்.

இராமாமிர்தம் அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, 1989ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏழைப் பெண்களின் திருமண உதவித் திட்டத்துக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் என்று பெயர் சூட்டியவர் அன்றைய முதல்வர் மு. கருணாநிதி.

இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தியின் தலைமையை ஏற்று காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியபோது, காங்கிரஸ் கொள்கைகளை நேசிப்பவர்கள் குடிசைகளில் வாழ வேண்டும் என்று காந்தி கூறியதும், ஓட்டு வீட்டில் வசித்த இராமாமிர்தம் அம்மையார், அருகே குடிசை வீடு போட்டுக்கொண்டு அதில் தங்க ஆரம்பித்தார். கதர் கட்டாதவர்கள் வீட்டிற்குள் நுழையக் கூடாது என்ற போர்டையும் வீட்டுக்கு வெளியே வைத்திருந்தார்.

அந்தக் காலத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக போராடிய, தலித்துகளுக்கு வேட்டி கட்டும் உரிமையுண்டு என்று சொல்லி அவர்களை வேட்டி கட்டச் சொல்லி பொது வெளியில் அவர்களை தைரியமாக அழைத்து வந்தவர்.

பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தபோது, அவரும் அக்கட்சியில் இணைந்தார். திராவிடர் கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியபோது அவருடன் கட்சியிலிருந்து வெளியேறி திமுகவில் சேர்ந்தார்.

தேவதாசி முறைக்கு எதிரான கருத்துகள் அவரது நாடகத்தில் இருந்ததைப் பொருத்துக் கொள்ளாத சனாதனிகள், கும்பலாக நாடக மேடையில் ஏறி அவரது கூந்தலை அரிவாளால் அறுத்துவிட்டனர். அதன் பிறகு நீண்ட கூந்தல் வளர்ப்பதை நிறுத்திவிட்டு தன் இறுதிகாலம் வரை தனக்குத்தானே கிராப் செய்து கொள்ளத் தொடங்கிவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

மூவலூர் இராமாமிர்தம் வாழ்வு பணியும் என்ற தலைப்பில் பா. ஜீவசுந்தரி எழுதிய புத்தகம் (2006) முக்கியமான வரலாற்றுப் பதிவு.“தேவதாசி ஒழிப்புச்சட்டம் குறித்துப் பேசும்போது, அதில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் பங்கு பேசப்படுவதில்லை. எனவேதான் அவரது வரலாற்றுத் தகவல்களைத் தேடிப்பிடித்து புத்தகமாக’கொண்டு வந்தேன்’’ என்கிறார் பா. ஜீவசுந்தரி. இராமாமிர்தத்தின் `எனது வாழ்க்கைச் சரித்திரம்’ என்ற கையெழுத்துப் பிரதியைத் தேடிக் கண்டறிந்து, அவரது வரலாற்றுப் பதிவினூடாக அதை அச்சில் கொண்டுவந்தவர் அவர். அந்தப் புத்தகத்தில் இராமாமிர்தத்தின் சமூக அரசியல் வாழ்க்கையையும், தேவதாசி முறை ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பணிகளையும் விரிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அதைத் தொடர்ந்து, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் என்ற தலைப்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்த மு.வளர்மதி தனியே புத்தகம் எழுதியுள்ளார். 1936இல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் எழுதிய தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர் என்ற நாவல் மிகவும் முக்கியமானது. தேவதாசிகளின் வாழ்க்கை முறை, அதன் அவலங்கள், அதிலிருந்து மீளும் முறை ஆகியற்றை சொல்லுகிறது அந்தக் காலத்திய இந்தப் பெண்ணிய நாவல். தேவதாசி முறைக்குள் தாம் தள்ளப்பட்டு அதிலிருந்து மீண்டவள் என்றும் இதனால் தேவதாசி முறையை ஒழிக்க சபதம் மேற்கொண்டதாகவும் அதன் முன்னுரையில் கூறியுள்ளார். இந்த நாவலின் முக்கியத்துவம் குறித்து எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில் எம்ஐடிஎஸ் பேராசிரியர் எஸ்.ஆனந்தி ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அண்ணாவை ஆசிரியராகக் கொண்ட `திராவிட நாடு’ இதழில் 1945இல் தமயந்தி என்ற தொடர்கதையை இராமாமிர்தம் எழுதியிருக்கிறார்.

இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் என்ற கட்டுரையை 1.7.1939இல் எழுதி தனிப் பிரசுரமாக வெளியிட்டுள்ளார். .மதத்தீவிரவாதமும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான சூழலும் நிலவும் இந்தக் காலத்தில், இப்பிரசுரத்தில் இராமாமிர்தம் அம்மையார் கூறியுள்ள கருத்துகள் இன்றைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது

இஸ்லாமும் இந்தியர்களின் நிலைமையும் என்ற கட்டுரையை 1.7.1939இல் எழுதி தனிப் பிரசுரமாக வெளியிட்டுள்ளார். மதத் தீவிரவாதமும் குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிரான சூழலும் நிலவும் இந்தக் காலத்தில், இப்பிரசுரத்தில் இராமாமிர்தம் அம்மையார் கூறியுள்ள கருத்துகள் இன்றைக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்த ராமாமிர்தம் அம்மையாரின் தந்தை கிருஷ்ணசாமி. தாயார் சின்னம்மாள். வறுமைகாரணமாக ஆச்சிக்கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும் ஒரு பழஞ்சேலைக்கும் விற்கப்பட்டு, அவரால் வளர்க்கப்பட்டார். தனது பெயரை ஆ. ராமாமிர்தம் என்றே எழுதினார். ஆ என்பது வளர்ப்புத் தாய் ஆச்சிக்கண்ணுவைக் குறிக்கும். கோவிலில் பொட்டுக் கட்டுவதற்கு மறுத்து தனது இசை ஆசிரியர் சுயம்பு பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டவர் அவர். குத்தூசி குருசாமிக்கு குஞ்சிதத்தை பெரியார் சுயமரியாதைத் திருமணம் செய்து வைப்பதற்குக் காரணமாக இருந்தவர் இராமாமிர்தம். ஆடம்பரத் திருமணங்களை எதிர்த்தும் வரதட்சணையை எதிர்த்தும் மேடைதோறும் முழங்கினார். சுயமரியாதைத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள், விதைமறுமணம், எளிய முறைத் திருமணங்களை ஆதரித்து ஊர் ஊராக முழங்கினார். 50 ஆண்டுகள் பொது வாழ்வில் ஈடுபட்டு தமது 80வது வயதில் மறைந்தபோதும் இறுதிவரை எந்தவிதமான பதவி சுகத்தையும் காணாதவர்.

பால் நுரை போல தலை!
தும்பை மலர் போல் உடை!
கம்பீர நடை!
கனல் தெறிக்கும் பேச்சு!
அனல் பறக்கும் வாதத் திறன்
அநீதியைச் சுட்டெரிக்க சுழலுகின்ற கண்கள்
அடிமை விலங்கு தகர்த்தெரிய ஆர்ப்பரிக்கும் உள்ளம்
ஓயாத பணி! ஓழியாத அலைச்சல்!
பேச்சு, மூச்சு செயல் அனைத்திலும் திராவிடம்!, திராவிடம்! என்ற இலட்சிய கீதம் என்று மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மறைந்தபோது முரசொலி தலையங்கம் (26.6.1962) தீட்டியது.

மறைக்கப்பட்ட வரலாறுகளைப் புதுப்பிப்பதில் இருந்தே புதிய வரலாறு தொடங்குகிறது. இராமாமிர்தம் அம்மையார் மறக்கப்பட்ட, என்றும் நினைவில் கொள்ள வேண்டிய மாபெரும் ஆளுமை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival