Read in : English

1960களுக்கு பிறகு கொற்கையில் மீண்டும் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கியுள்ளன. ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள இன்றைய கொற்கை ஒரு சிறிய கிராமம். கடலுக்கு ஏறக்குறைய ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வடக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள இன்றைய கொற்கை ஒரு காலத்தில் மிகப்பெரும் துறைமுக நகரம். முந்தைய பாண்டியர்களின் வணிக தலைநகரமான கொற்கையில் இருந்து முத்தும், வாசனை பொருட்களும் இன்ன பிற பண்டங்களும் பாய்மர கப்பல்களில் மேலை மற்றும் கீழை நாடுகளுக்கு சென்றன. தாமிரபரணியின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் மெல்ல மெல்ல கொற்கையை பொலிவிழக்க வைத்தது. முதல் நூற்றாண்டில் கொற்கையில் இருந்த துறைமுகம் மணல்மூடி போக ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் துறைமுகம் பழையகாயலுக்கு மாறிவிட, கொற்கை தன்னுடைய பெயரை மெல்ல மெல்ல இழந்தது.

அகழ்வாராய்ச்சி மூலம் கொற்கையின் இழந்த புகழை நாம் அறிந்து வரும் நிலையில், கொற்கை என்ற நாவலை எழுதி 2013ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ. டி. குரூஸ், இன்மதியுடன் உரையாடினார். ஒரு பன்முக திறமை கொண்ட அவர், சுமார் நாற்பதாண்டு கடல்வழி வாணிபத்தில் ஈடுபட்டுள்ளவர். கடலோடிகளின் சமூகத்தில் தோன்றிய முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். அவருடன் இன்மதி நடத்திய உரையாடல்:

கேள்வி: கொற்கை என்ற நாவலின் ஆசிரியராக நீங்கள் கொற்கையில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சியை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
ஜோ. டி. குரூஸ்: என்னை பொறுத்தவரை கொற்கை என்பது நமது பண்டைய தமிழகத்தை ஆண்ட அரசர்கள் கடல்வழி வாணிபத்தின் மீது கொண்டிருந்த அணுகுமுறையும் அதன்மேல் அவர்கள் கொண்டிருந்த நிர்வாகத்திறனும் என்பேன். முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிப்ளூஸ் ஆப் எரித்ரியன் ஸீ என்னும் நூல் பண்டைய கடல்வழிகள் மற்றும் வாணிபம் பற்றி விரிவாக பேசுகிறது. அரபி கடலென்றோ இந்திய பெருங்கடலென்றோ அறியப்படாத அக்காலகட்டத்தில் கடல் வணிகர்கள் இதை முழுதும் ஆப்பிரிக்காவின் முனையில் உள்ள எரித்ரியாவை கொண்டு எரித்ரிய கடல் என்றே அழைத்தார்கள். மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்து வணிகர்கள் எவ்வாறு செங்கடலின் துறைமுகங்களை அடைந்தார்கள் எனவும், எரித்ரியாவின் முஸலின் துறைமுகத்திலிருந்து எப்படி பாய்மரக்கலமேறி இந்திய துறைமுகங்களை நோக்கி வணிகம் செய்ய வந்தார்கள் என்றும் பெரிப்ளூஸ் விவரிக்கிறது. மேற்கு கடற்கரையில் இருந்த முசிறி துறைமுகம் பாண்டிய அரசர்களால் மிக சிறப்பாக நிர்வாகம் செய்யப்பட்டதாக அந்த நூல் கூறுகிறது. கொற்கையை அவர்கள் கொல்கி என்றழைத்தார்கள். அன்றிருந்த அரசர்களுக்கு கடல் வாணிபத்தின் முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது.

நம்மை ஆண்ட பண்டைய ஆட்சியாளர்கள் துறைமுக நிர்வாகம், கப்பல் உரிமை மற்றும் கடலோடிகளை/வணிகர்களை ஒரு புள்ளியில் இணைத்தார்கள். கடல் வணிகத்துக்கு கடலோடிகள் ஒரு முக்கிய கண்ணி.

கேள்வி: கொற்கை மற்றும் பண்டைய தமிழக துறைமுகங்களின் நிர்வாகத்தை பற்றி நீங்கள் வலியுறுத்தி பேசுகிறீர்கள். இந்த நிர்வாகத்திறனை நீங்கள் எவ்வாறு வரையறுக்கிறீர்கள்?
ஜோ. டி. குரூஸ்: நம்மை ஆண்ட பண்டைய ஆட்சியாளர்கள் துறைமுக நிர்வாகம், கப்பல் உரிமை மற்றும் கடலோடிகளை/வணிகர்களை ஒரு புள்ளியில் இணைத்தார்கள். கடல் வணிகத்துக்கு கடலோடிகள் ஒரு முக்கிய கண்ணி. கடலை பற்றி நன்கறிந்தவர்கள் அவர்கள். மரக்கலங்களை உரிமையாக கொண்டிருந்ததோடு அவற்றை செலுத்தும் நுட்பத்தையும் நன்கறிந்த அவர்களை கடல் வணிகத்துக்கு ஆட்சியாளர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொண்டார்கள். அவர்களது வசதிக்கு துறைமுகங்களை அரசர்கள் நிர்வகித்தார்கள். நீர், நிலம், ஆகாயம் என்று இன்று மேற்கொள்ளப்படும் பயணங்கள் அன்றே வணிகர்களால் ஆற்றிலும், நிலத்திலும், கடலிலும் மேற்கொள்ளப்பட்டன. சரக்கு பல்வேறு போக்குவரத்து மார்க்கங்களை உபயோகப்படுத்தும் என்ற நிலையில், வணிகர்களின் ஒப்பந்தங்களை அரசர்களும் சாம்ராஜ்யங்களும் அங்கீகரித்தன. எனவே வணிகம் செழித்தது. அப்படிப்பட்ட ஒரு மையப்புள்ளியில் இணைக்கும் அளவுக்கு நமது கடல்வணிகம் இன்று இல்லையோ என்று எண்ண தோன்றுகிறது.

கேள்வி: நீங்கள் அவ்வாறு கருத காரணம்?
ஜோ. டி. குரூஸ்: சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்கு பிறகு நமது மைய அரசு இந்திய துறைமுகங்களை மேம்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து சாகர் மாலா என்ற திட்டத்தை கொண்டு வந்தது. பல புதிய துறைமுகங்கள் கட்டப்பட்டன. ஆனால் பல நூற்றாண்டுகளாக அறியப்பட்ட சிறு துறைமுகங்கள் பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை. நமது பெரிய துறைமுகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டும். துறைமுகங்களின் மேம்பாட்டை பற்றி யோசித்த அரசு, கப்பல் உரிமை மற்றும் கடலோடிகளை பற்றி பெரிதாக கருதவே இல்லை என்று சொல்லலாம்.

கேள்வி: கப்பல் உரிமை மற்றும் கடலோடுதல் குறித்து நீங்கள் அழுத்தம் கொடுப்பதேன்?
ஜோ. டி. குரூஸ்: புள்ளிவிவரங்களின்படி கப்பல் உரிமையாளர்களில் ஒரு சதவீதம் மட்டுமே இந்தியர்கள். இந்தியாவின் கடல்வணிகத்தில் வெறும் ஏழு சதவீதம் மட்டுமே இந்திய கப்பல்கள் கையாளுகின்றன. மீதமுள்ள 97 சதவீதம் வெளிநாட்டு கப்பல்கள் கையாளுகின்றன எனும் நிலையில் நாம் மேம்படுத்தும் துறைமுகங்கள் யாருக்கு நலம் பயக்கும்? நமது பண்டைய அரசர்களுக்கு இருந்த கடல்வணிக மேலாண்மை இன்றுள்ள ஆட்சியாளர்களுக்கு இருக்கிறதா என்ற ஐயமே எழுகிறது. கடலோடிகளை நாம் மீனவர்களாக சுருக்கிவிட்டோம். பாரம்பரியமாக கடலோடி வந்தவர்களின் வாரிசுகள் இன்றும் கடலோடுகிறார்கள் ஆனால் நமது கப்பல்களில் அல்ல. வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரியும் கணிசமான மாலுமிகள் நம்மவர்களே.

துறைமுகங்களை மட்டும் மேம்படுத்தினால் போதாது. இந்தியர்கள் மத்தியில் கப்பல் உரிமையை ஊக்குவிக்கவேண்டும். இந்திய கடலோடிகளின் திறமையை நம்மால் பயன்படுத்த முடிய வேண்டும்.

கேள்வி: இந்நிலையில் அரசுகள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
ஜோ. டி. குரூஸ்: பெருந்தொற்றுக்கு பிந்தைய சரக்கு வணிகத்தில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உதாரணத்திற்கு சிங்கப்பூர் தன்னுடைய தேவைக்கு சில ஆண்டுகள் முன்பு வரை சரக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. இன்றோ ஒரு கண்டெய்னருக்கு கிட்டத்தட்ட 500 முதல் 600 டாலர்கள் வசூலிக்கிறது. துறைமுகங்களை மட்டும் மேம்படுத்தினால் போதாது. இந்தியர்கள் மத்தியில் கப்பல் உரிமையை ஊக்குவிக்கவேண்டும். இந்திய கடலோடிகளின் திறமையை நம்மால் பயன்படுத்த முடிய வேண்டும். ஒரு காலத்தில் உலகத்தின் பெரும்பான்மை வணிகத்தில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளில் சீனாவும் இந்தியாவும் ஒரே அளவுகோலில் இருந்தன. இன்றைய நிலையில் நாம் சீனாவுக்கு எந்த அளவில் இருக்கிறோம்? சரக்கு போக்குவரத்துக்கு செலவழிக்கும் அந்நிய செலாவணியை நாம் கட்டுப்படுத்த தவறினால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.

கேள்வி: நமது ஆட்சியாளர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?
ஜோ. டி. குரூஸ்: பத்தாம் நூற்றாண்டு வாக்கில் மிகுந்த பலம் வாய்ந்த அரசாக திகழ்ந்த சோழ பேரரசின் முதலாம் ராஜேந்திர சோழன் தமிழக வணிகர்களின் நலம் பேண ஸ்ரீவிஜய அரசின் – இன்றைய மலேசியா – மீது போர் தொடுத்தான். வணிக குழுக்களின் கப்பல் பயணங்களில் பாதுகாப்பாக சோழ இளவரசர்களின் கொடிதாங்கிய கப்பல்கள் முதல் கப்பல்களாக சென்றன. சோழர்களின் அரசவையில் மரக்கல உரிமையாளர்களும் வணிக குழுக்களின் தலைவர்களுக்கும் மிகுந்த மரியாதை இருந்தது. வருத்தம் என்னவென்றால், கொற்கை தழுவிய நாகரிகத்தை பற்றி ஆட்சியாளர்களுக்கு உணர்விருப்பதாக தெரியவில்லை. இருக்க வாய்ப்பில்லாத ஒன்றான சரஸ்வதி நதிக்கரை நாகரிகத்தை தேடி அவர்கள் ஓடி கொண்டிருக்கிறார்கள். கொற்கை தரும் பாடங்களை அவர்கள் அறிந்துகொள்ள முயல்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival