Read in : English

Share the Article

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தற்போது தாக்கல் செய்திருக்கும் அவரது இரண்டாவது பட்ஜெட்டும், சிலர் பயந்தது போல, பலர் ஆவலுடன் எதிர்பார்த்தது போல, பெரும் அதிரடியான சீர்திருத்தங்களைக் கொண்டுவரவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கடி பேசும் திராவிட மாடலை அது தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது.

கல்வி, ஆரோக்கியம், குடிமை உட்கட்டமைப்பு, தமிழை மேலும் முன்னெடுத்துச் செல்லும் முனைப்பு, தமிழ் நாகரிகம் பற்றிய ஆராய்ச்சி, மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அவை சமுதாயத்தின் அடிமட்டத்து மக்களுக்குச் சாதகமாக, திராவிட மாடலின் அடிப்படை நம்பிக்கைகளை மேலும் பலப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. தமிழ்நாட்டின் பட்ஜெட் எப்போதுமே ஒரு நிரந்தர வடிவமைப்பைக் கொண்டிருப்பது; இந்த ஆண்டும் அது மீறப்படவில்லை.

கடந்த ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில், ஏறிக்கொண்டே போகும் கடனைப் பற்றியும், கடன் வாங்கி வட்டிகட்டும் போக்கைப் பற்றியும், உயர்ந்து கொண்டிருக்கும் வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறைகளைப் பற்றியும் நிதியமைச்சர் பேசினார். இந்தப் பட்ஜெட்டில், கவலைக்குரிய அந்தப் பிரச்சினைகளை, திராவிட எதிர்கொள்வதுபோல அவர் காட்ட முயன்றிருக்கிறார்.

வருவாய் செலவு கணக்கில் 9 ஆயிரம் கோடி அதிகரித்தாலும்,  வருவாய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் வருவாய் கூடுதலாக அதிகரிக்கும்.

நிதி சம்பந்தமாகப் பேசும்போது அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆங்கிலத்திற்கு மாறினார். அதனால் முதலீட்டாளர்களால் அவர் சொல்லிய புள்ளி விவரங்களைக் கேட்டு நம்பிக்கை கொள்ள முடிந்தது. தன் அறிமுக உரையில் நடப்பு நிதி ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை 7,000 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது என்றும், நிதிப்பற்றாக்குறை மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.6 சதவீதத்திலிருந்து 3.8 சதவீதத்திற்கு இறங்கியிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

வருவாய் செலவு கணக்கில் 9 ஆயிரம் கோடி அதிகரித்தாலும்,  வருவாய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் வருவாய் கூடுதலாக அதிகரிக்கும். எடுத்துக்காட்டாக, வணிகவரி மூலம் 15 ஆயிரம் கோடியும் அதாவது 25 சதவீதம் வருவாய் அதிகரிக்கும். மோட்டார் வாகன வரி, கலால் வரி, பத்திரப் பதிவு மூலமும் வருவாய் அதிகரிககும் என்று கூறியிருக்கிறார்.

2022-23 நிதியாண்டில், பொதுக்கடன் 90,116.52 கோடி ரூபாய் இருக்குமென்று அவர் கணித்திருக்கிறார். ஒட்டுமொத்த கடன் நிலுவை ரூபாய் 6,53,348.73 கோடி ரூபாயாக இருக்கும்; கடனுக்கும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 26.29 சதவீதமாக இருக்கும்; இது 15-வது நிதிக்குழு விதித்திருந்த எல்லைக்குக் கீழ்தான் இருக்கும். இப்படியெல்லாம் அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் சொல்லியிருக்கிறார்.

இடைக்கால  பட்ஜெட்  (2021-22) மதிப்பீடுகள்படி மொத்த கடன் 4,85,502 கோடி ரூபாயாகவும், அது இடைக்கால பட்ஜெட் மதிப்பீடுகள்படி மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 26.69 சதவீதமாகவும் இருக்கும் என்று வெள்ளை அறிக்கை சொன்னது. இதன் அர்த்தம், மாநிலத்தின் கடன்களின் மொத்த கூட்டுத்தொகையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான். கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதக் கணக்கில் கடன் அதே நிலையில்தான் தொடர்ந்திருக்கிறது.

வெள்ளை அறிக்கையின்படி வரிக்கும், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையிலான விகிதம் 5.4 சதவீதமாக சரிந்திருக்கிறது. அது இந்த ஆண்டு 6.5 சதவீதமாக ஏறுவதற்குச் சாத்தியம் உண்டு. சரிந்திருக்கும்  இந்த விகிதத்தைக் கவலைக்குரிய விஷயமாக வெள்ளை அறிக்கைச் சுட்டிக்காட்டியது.

இன்மதி.காம் ஏற்பாடு செய்திருந்த பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்ற திராவிட தொழில்முறை நிபுணர்கள் அமைப்பின் செயல் ஒருங்கிணைப்பாளரான எஸ். தரணிதரன், மாநில பட்ஜெட்டில் ஓர் அங்கமாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறைப் போக்கு இப்போது மாற்றம் கண்டிருக்கிறது என்றார். நமது பட்ஜெட்டில் வரவு செலவு கட்டுக்குள் வந்துள்ளது. வருங்காலத்தில் பற்றாக்குறை குறைந்து மிகை வருவாய் நிலையை எட்ட முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

பட்ஜெட் உரையின் 165வது பத்தி, வருவாய் செலவினங்களில் 2,000 கோடி ரூபாய் வீழ்ச்சியைக் குறிப்பிடுவதாகச் சுட்டிக்காட்டினார் பொருளாதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா. 166வது பத்தி மாநிலத்தின் சொந்த வரி வருமானத்தில் 5,000 கோடி ரூபாய் குறைவதைச் சொல்கிறது; 167வது பத்தி, ஒன்றிய அரசு வருவாயில் மாநிலப் பங்கில் 6,000 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்திருப்பதைச் சொல்கிறது; 168வது பத்தியில் சொல்வதைப் போல, அந்தப் பங்கில் நிலுவைத் தொகைகளும் அடங்கும்; 169வது பத்தி வரி அல்லாத வருமானத்தில் 2,000 கோடி ரூபாய்க்கும் மேலான பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டுகிறது. மொத்தத்தில் வருமானப் பற்றாக்குறையில் 3,420 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது என்றார் அவர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலால் முதலீடு செலவு குறைந்ததை நிதியமைச்சர் குறிப்பிட்டார். கூட்டிக்கழித்துப் பார்த்தால், நடப்பு நிதி ஆண்டில்(2021-22) ஒன்றிய அரசு வரி வருமானத்தில் மாநிலத்திற்கான பங்காக அதிகமாகக் கிடைத்த பணம் போன்று எதிர்பாராத நிதி தமிழகக் கணக்கில் வந்துவிழுந்தபடியால், மொத்தத்தில் தமிழ்நாட்டின் வரவு-செலவுக் கணக்கு ஓரளவு சமச்சீராக இருப்பதற்குச் சாத்தியங்கள் உண்டு.

பட்ஜெட் உரையில் விவரிக்கப்பட்ட இந்தச் சிறப்பு நிகழ்வை உருவாக்கியது  ஆகப்பெரிய செலவினக்குறைப்போ அல்லது வருவாய் உயர்வோ அல்ல; அல்லது வெள்ளை அறிக்கை பேசிய வாழ்வில் ஒருமுறை வரும் பெரும் சீர்திருத்தங்களோ நிச்சயமாக இல்லை. பல்வேறு துறைகளில் இருக்கும் வரவு-செலவைப் பற்றி ஒரு தெளிவான கணக்கைச் சொல்லும் ஒன்றிய அரசின் ’பட்ஜெட்- ஒரு -பார்வை’ என்ற ஆவணங்களைப் போன்று மாநில அரசுகளும் கடைப்பிடித்தால், அந்த ஆவணங்கள் உதவியாக இருக்கும் என்றார் ஆத்ரேயா.

தரவு மைய ஆளுகையும், அரசுச் சேவைச் சீர்திருத்தமும் வருமென்று பழனிவேல் தியாகராஜன் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். மேம்படுத்தப்பட்ட ஊழலொழிப்புத் துறை உருவாக்கப்படுமென்று இந்த ஆண்டு பட்ஜெட் உறுதியளித்திருக்கிறது.

அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் செய்யும் எல்லாக் கொள்முதலுக்கும்  2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இணையவழிக் கொள்முதல் அமைப்பு கட்டாயமாக்கப்படும் என்ற மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வந்திருக்கிறது. இதற்காக தமிழ்நாடு டெண்டர் விதிகளில் வெளிப்படைத்தன்மை என்ற சட்டத்தில் தேவையான திருத்தங்களை அரசு செய்ய இருக்கிறது. தற்போது இந்த இணையவழி கொள்முதல் என்பது வெறும் கருத்தாக்கமாகத்தான் இருக்கிறது. சட்டத்திருத்தம் இணையவழிக் கொள்முதல் முறையைப் பின்பற்ற வைத்துவிடும் என்று ஊழலுக்கெதிரான செயற்பாட்டாளரும் அறப்போர் இயக்கத்தைச் சார்ந்தவருமான ஜெயராம் வெங்கடேசன் விவாதத்தின்போது குறிப்பிட்டார்.

ஊழலை எதிர்த்துப் போராடுவதில் திமுகவின் பின்னணியைப் பற்றி இன்மதி.காமிற்கு முன்பு கொடுத்த ஒருநேர்காணலில், ’இந்த ‘இ–டெண்டர்’ ஒப்பந்ததாரர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை முற்றிலும் ஒழிப்பதின்மூலம் ஊழலைக் குறைப்பதில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் என்றார் வெங்கடேசன். இ-டெண்டர்  போட்டியை உருவாக்கி டெண்டர் தொகையைக் குறைத்து அரசுக்குப் பணத்தை மிச்சப்படுத்திக் கொடுக்கும். வெளிப்படைத்தன்மை நிலவும்; டெண்டர் ஆவணங்களை அவ்வளவு எளிதாகக் கைவைக்கமுடியாது.

அரசு ஒப்பந்தங்களை ஏலத்தில் எடுக்க விரும்பும் நேர்மையான தொழிலதிபர்களுக்கு சமவாய்ப்புகள் தரும் வெளிப்படையான இந்த இ- டெண்டர் முறை ஆதரவையும் தைரியத்தையும் கொடுக்கும் என்றார் வெங்கடேசன். இந்த இ-டெண்டர் முறையால், உண்மையான போட்டியை உருவாக்குவதன்மூலம் அரசின் கொள்முதலுக்காகும் செலவில் 20 சதவீதம் குறையும் என்று அவர் கணக்குப்போடுகிறார்.

இன்மதி.காமில் எழுதும் பொதுக்கொள்கை ஆய்வாளரான பி. சந்திரசேகரன் இணையவழி கொள்முதல் வழிமுறையை ஆதரித்து இது வெறும் ஆரம்பம் மட்டுமே என்றார். இதைப்போன்ற உத்திகளைக் கையாளும்  மற்ற மாநிலங்களிலிருந்து பாடங்கள் கற்றுக்கொண்டு அவற்றையும்  உள்வாங்கிக் கொள்ளலாம். பட்ஜெட்டை விமர்சிக்கும் சந்திரசேகரன், தொழில்வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளுக்கும் கொடுப்பதைவிட, சமூகநலனுக்குத்தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றார். கடந்தகாலத்தில் சமூகநலன் மூலம் சமத்துவம் அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டது; அதுதான் தாராளமயமாக்கலுக்குப் பின்பு தமிழ்நாடு வளர்ச்சி பெற்றதற்கான காரணம் என்று தரணிதரன் பதில் அளித்தார்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles