Read in : English
தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பின் 12-ஆவது நிகழ்வு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களின் பாசன நீர்த்தேக்கங்களைச் சுற்றிய பகுதிகளுக்கு வரும் வலசைப் பறவைகளைக் கணக்கெடுத்தது. குறைந்தபட்சம் 69 இனங்களைச் சார்ந்த 28,831 பறவைகளையும், மூன்று புதிய பறவைகள் தங்குமிடங்களையும் அந்நிகழ்வு பதிவுசெய்திருக்கிறது.
ஜனவரி 20-லிருந்து 22 வரை தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் 65 பாசன நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பை நடத்த ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்நிகழ்வின்போது அருந்தபெட்டி ஏரி (ராஜகோபாலபேரி), கீழ்பாவூர் (தென்காசி), மூப்பன்பட்டி (தூத்துக்குடி) என்ற மூன்று புதிய பறவைகள் தங்குமிடங்களையும் கண்டுபிடித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் இருக்கும் நீர்ப்பாசன தேக்கங்களைச் சுற்றியிருக்கும் பறவைகள் தங்குமிடங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது இந்த ஆய்வுமுடிவு.
அதிகரித்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும், புதிய பறவை தங்குமிடங்களின் கண்டுபிடிப்பும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்புறச்சூழல் சுற்றுலாவை வளர்த்தெடுக்கும் வாய்ப்பை சுட்டிக்காட்டுகின்றன.
அதிகரித்து வரும் பறவைகளின் எண்ணிக்கையும், புதிய பறவை தங்குமிடங்களின் கண்டுபிடிப்பும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுற்றுப்புறச்சூழல் சுற்றுலாவை வளர்த்தெடுக்கும் வாய்ப்பை சுட்டிக்காட்டுகின்றன. ஒன்றிய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகள்படி, 2020-இல் உள்ளூர்ச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (மில்லியனில்) தமிழ்நாட்டில் உச்சத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டில் 140.65 மில்லியன்; உத்தரபிரதேசத்தில் 86.12; கர்நாடகத்தில் 77.45. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் (மில்லியனில்) உச்சத்தில் இருப்பவை மூன்று மாநிலங்கள்: மஹாராஷ்டிரம் (1.26); தமிழ்நாடு (1.23), உத்தரபிரதேசம் (0.89). 2020-ஆம் ஆண்டின் இந்த புள்ளிவிவரங்கள் 2019-இல் பதிவு செய்யப்பட்ட 31.41 மில்லியனோடு ஒப்பிடுகையில் வெளிநாட்டுச் சுற்றுலாவின் வீழ்ச்சியையே குறிக்கின்றன. இதற்குக் காரணம் கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நாடுமுழுவதும் அமலில் இருந்ததுதான்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் திருநெல்வேலியின் மேற்கு எல்லையில் அகஸ்திய மலைச்சரிவில் கட்டப்பட்டிருக்கிறது. கூம்புவடிவ அகஸ்திய மலைச்சிகரம் (1868 மீ) சாகச மலையேற்றத்திற்குப் பெயர் போனது. 895 சதுர கி.மீ. தூரம் விரிந்துகிடக்கும் ஒரு பல்லுயிர் காப்பகம். அருகிக்கொண்டெ வரும் பல விலங்கினங்களுக்கும், தனித்துவமான தாவரங்களுக்கும் அதுதான் சரணாலயம்.
“களக்காடு காப்பகத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். ஏனென்றால் அவர்களைக் கவர்ந்திழுப்பது அங்கிருக்கும் இயற்கைக்காட்சிகளும், அழகான அருவிகளும். ஆனால் அவர்கள் அங்கிருக்கும் சதுப்பு நிலங்களுக்குப் போவதில்லை; ஏனென்றால் அங்கே எப்படிச் செல்வது என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. பறவைகள் தங்குமிடங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அந்த இடங்களை அரசுதான் பிரபலப்படுத்த வேண்டும்,” என்கிறார் அகஸ்தியமலைவாசிகளின் பராமரிப்பு மையத்தின் அமைப்பாளர்களில் ஒருவரும், கள ஒருங்கிணைப்பாளருமான எம்.மதிவாணன்.
திருநெல்வேலியிலிருந்து 38 கிமீ தூரம் தள்ளியிருக்கும் கூந்தங்குளம் பறவை சரணாலயம் , பறவை ஆர்வலர்களும், வழமையான சுற்றுலாவாசிகளும் செல்ல விரும்பும் இடம். “பலர் இந்த சரணாலயத்திற்கு பறவைகளைப் பார்க்க வருகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனோ தொற்றுக் கட்டுப்பாடுகளை நாங்கள் விதித்துவிட்டோம். நிறைய வலசைப் பறவைகளும் இந்தப் பிரதேசத்திற்கு வர ஆரம்பித்து விட்டன என்பது உண்மைதான். இதுவொரு நல்ல அறிகுறி,” என்றார் கோட்ட வன அதிகாரி ஆர். முருகன் (டிஎஃப்ஓ). “தாமிரபரணி நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடம்பக்குளம், வெளூர், மேல்புதுக்குடி, சுனை, பெருங்குளம், முல்லைக்காடு ஆகிய நீர்நிலைகளுக்கு ஏராளமான வலசைப்பறவைகள் வருகின்றன என்பதைக் சுட்டிக்காட்டியது.
சில நாட்களுக்கு முன்பு, எங்கள் தன்னார்வலர்களில் ஒருவர் முல்லைக்காட்டில் 600-க்கு மேற்பட்ட ஃப்ளாமிங்கோஸ் பறவைகளைப் பார்த்திருக்கிறார். நானே 5,000-க்கும் மேலான கார்கனேய்ஸ் பறவைகளை தூத்துக்குடியிலுள்ள ஆறுமுகமங்களம் நீர்த்தேக்கத்தில் பார்த்திருக்கிறேன்,” என்று சொன்னார் மதிவாணன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் நீர்த்தேக்கம், நாரையினப் பறவைகளான ஓப்பன்பில், கறுப்புத்தலை ஐபிஸ், நீர்க்காக்கை, டார்ட்டர், கறுப்புச்சிறகு ஸ்டில்ட் மற்றும் கறுப்பு ஐபிஸ் ஆகியவற்றின் கூடு. “இந்த நீர்த்தேக்கங்கள் ஒன்றுக்கொன்று அருகிலே இருக்கின்றன. அதனால் அவற்றையெல்லாம் ஒன்றிணைத்து ஒரு கட்டமைப்பில் கொண்டுவந்து நிர்வகித்தால், சுற்றுலாவாசிகளுக்கான சுற்றுலாத் திட்டத்தை தயார் செய்வது எளிதாக இருக்கும். அதைப்போல, ராஜவல்லிபுரம், பாலமடை, கள்ளக்குறிச்சி, குப்பக்குறிச்சி மற்றும் கங்கைகொண்டான் ஆகிய நீர்த்தேக்கங்களுக்கு வலசைப் பறவைகள் வருகின்றன.
அந்த நீர்த்தேக்கங்களையும் ஒன்றிணைத்து சுற்றுப்புறச்சூழல் சுற்றுலாச் செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். மாவட்ட சதுப்புநில நிர்வாகக் குழுவில் எல்லா அரசுத்துறை உறுப்பினர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த யோசனையைப் பற்றி சிந்திக்கலாம்,” என்றார் அவர்.
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகி வரும் பறவைகளின் பட்டியலில் ’காட்விட்’ என்னும் கறுப்புவால் பறவை இடம்பெற்றிருக்கிறது. அது சைபீரியா வலசைப் பறவையினம். அந்த இனத்தில் 300 பறவைகள் திருநெல்வேலியில் நைனார்குளத்திலும், 46 சுரண்டையிலும் காணப்பட்டதாக பறவைக் கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன
பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் அருகி வரும் பறவைகளின் பட்டியலில் ’காட்விட்’ என்னும் கறுப்புவால் பறவை இடம்பெற்றிருக்கிறது. அது சைபீரியா வலசைப் பறவையினம். அந்த இனத்தில் 300 பறவைகள் திருநெல்வேலியில் நைனார்குளத்திலும், 46 சுரண்டையிலும் காணப்பட்டதாக பறவைக் கணக்கெடுப்பு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
“வரித்தலை வாத்து மங்கோலியாவிலிருந்து வரும் மற்றுமொரு வலசைப் பறவை; உயரே பறக்கும் பறவையினங்களில் அதுவும் ஒன்று. அந்தப் பறவைகள் திருநெல்வேலியின் விஜயநாராயணம், புதுக்குளம், கலுவூர் நீர்த்தேக்கங்களில் காணப்பட்டன. கோவில்பட்டிப் பகுதியில் முடுக்குமீண்டான்பட்டி நீர்த்தேக்கத்தில் கம்பளிக்கழுத்து நாரைகள் என்னும் அருகிவரும் உள்ளூர் பறவைகளும் கணக்கெடுக்கப்பட்டிருக்கின்றன,” என்றார் மதிவாணன்.
தொற்றுப்பரவல் கட்டுப்பாடுகளை மீறி இந்தப் பறவைகள் கணக்கெடுப்பு முயற்சிக்கு நல்லதோர் எதிர்வினை இருந்தது. கால்நடைக் கோழி (4907), கறுப்புத்தலை ஐபிஸ் (1752), சிறிய நீர்க்காக்கை (1574), பளபளப்பான ஐபிஸ் (1567), விசிலடிக்கும் டீல் (1480) ஆகிய பறவைகள் கணக்கில் வந்திருக்கின்றன. வலசைப்பறவைகள் இனத்தில், விஸ்கர்ட் டெர்ன் (1066), கார்கநேய் (845), பார்ன் ஸ்வால்லோ (768) ஆகியவை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஐரோப்பாவிலும் ஆர்க்டிக் பிரதேசத்திலும் வளரும் போச்சார்டு என்னும் பலகீனமான இனப்பறவைகள் குப்பக்குறிச்சி நீர்த்தேக்கத்தில் காணப்பட்டன. தாமிரப்பரணி வடிகால் நீர்த்தேக்கங்களுக்கு அபூர்வமான மங்கலான பழுப்புமஞ்சள் நிறத்து விசில்வாத்து ஆறுமுகமங்களம் நீர்த்தேக்கத்தில் காணப்பட்டது. கணக்கெடுப்பு ஜனவரி 20-ல் தொடங்கி ஜனவரி 22-ல் முடிவடைந்தது. “பல்வேறு துறைகளிலிருந்து 90-க்கும் மேலானவர்கள் இந்த மூன்று நாள் கணக்கெடுப்பில் கலந்துகொண்டார்கள்.
மாணவர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வீட்டுப்பெண்கள் என்று ஏராளமானவர்கள் வந்தார்கள். திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மொத்தம் 65 நீர்த்தேக்கங்களில் கணக்கெடுப்பை நடத்த ஒன்பது குழுக்களாக அவர்கள் பிரிக்கப்பட்டார்கள்,” என்கிறார் மதிவாணன்.
ஆசியா ஓப்பன்பில், சாம்பல்நிற ஹெரான், கீழ்த்திசை டார்ட்டர், சிறிய நீர்க்காக்கை, இந்திய ஷாக் போன்ற பறவைகளைக் குழுக்கள் பதிவுசெய்தன. கறுப்புத்தலை ஐபிஸ் பறவைகள் ஒன்றாய் வளரும் கூட்டங்கள் கங்கைகொண்டான் நீர்த்தேக்கத்தில் கண்டறியப்பட்டிருக்கின்றன.
“ஏராளமான கீழ்த்திசை டார்ட்டர் பறவைகளின் வளர்ப்புக்கூட்டம் திருநெல்வேலியின் மையத்தில் இருக்கும் நைனார்குளத்தில் இருந்தது கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன. கறுப்புத்தலை ஐபிஸ் கூட்டங்கள் சூரங்குடி நீர்த்தேக்கத்தில் பதிவு செய்யப்பட்டன. அதைப்போல, ஆசியா ஓப்பன்பில், கறுந்தலை ஐபிஸ், நீர்க்காக்கை, டார்ட்டர், இரவு ஹெரான், சிகப்புப்பிடரி ஐபிஸ் கூட்டங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் திருப்பணி செட்டிக்குளத்தில் காணப்பட்டன. சாம்பல்நிற ஹெரான் கூடமைத்தது கோவில்பட்டிப் பகுதியிலுள்ள மூப்பன்பட்டி நீர்த்தேக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது,” என்கிறார் அவர்.
முந்தைய ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தென்காசி மாவட்டத்தில் வாகைக்குளம் நீர்த்தேக்கத்தில் கறுந்தலை ஐபிஸ், நீர்க்காக்கை, சாம்பல்நிற ஹெரான், இரவு ஹெரான், ஊதா ஹெரான் ஆகிய பறவைகள் தங்கியிருந்தன. “தென்காசி மாவட்டத்தில் ராஜா கோபாலபேரி கிராமத்தில் அருந்தாபட்டி நீர்த்தேக்கத்தில் கறுந்தலை ஐபிஸ் ஓய்வெடுப்பது பதிவுசெய்யப்பட்டது. புள்ளி அலகு கொண்ட வாத்து, பரவலான ‘கூட்’ வகை வாத்து, வெள்ளைமார்பு நீர்க்கோழி, நீர்மூழ்கிப் பறவை, பரவலான வெண்கழுத்து நாரை போன்ற பறவையினங்கள் குஞ்சுகளோடு பல நீர்த்தேக்கங்களில் காணப்பட்டன,” என்று குறிப்பிடுகிறது இந்த ஆய்வு முடிவு.
“திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் தாமிரபரணி ஆற்றையும், மாவட்டத்தில் இருக்கும் 1,200 நீர்த்தேக்கங்களையும் புத்துயிரூட்டிப் பராமரிக்க கொண்டுவந்த ‘நெல்லை நீர்வளம்’ என்னும் திட்டம் வேந்தன்குளம் நீர்த்தேக்கத்திற்கு நல்ல பலனை அளித்திருக்கிறது. அந்தக் குளம் இப்போது சுத்தமாகக் காட்சியளிக்கிறது. அதன்விளைவாக அங்கே 20-க்கும் மேற்பட்ட பறவையினங்களை எங்களால் பதிவு செய்யமுடிந்தது.
பரவலான ’கூட்’ வகை வாத்துக்களை குஞ்சுகளோடு வேந்தன்குளத்தில் காண முடிந்தது. ஆனால் நைனார்குளம் அதிகமாக மாசுபட்டுக் கிடக்கிறது. அந்தக்குளம் ஏராளமான பறவைகளை ஈர்த்து அவற்றை வளர்க்கும் இயல்பு கொண்டது என்பதால் அதைப் புனரமைக்க வேண்டிய நடவடிக்கைகள் மிகவும் அவசியம்,” என்கிறார் மதிவாணன்.
கூந்தங்குளம் அருகே இருக்கும் வடக்கு கலுவூர் நீர்த்தேக்கம் புள்ளிஅலகு கொண்ட பெலிகன் பறவைகள் வளர்வதற்கு உகந்த நல்லதொரு களம்; அது இப்போது வெறுமையாகக் காட்சியளிக்கிறது. ஏனென்றால் பறவைகள் கூடுகட்ட முயலும்போது யாரோசிலர் பட்டாசு கொளுத்தி அவற்றை விரட்டி விட்டனர் என்று சொன்னார்கள் உள்ளூர்வாசிகள்.
29 இனங்களைச் சார்ந்த 2,126 பறவைகளோடு தூத்துக்குடியில் உள்ள வெளூர் நீர்த்தேக்கம் பட்டியலில் முதலாவது வருகிறது.
அடுத்த இடத்தைப் பிடித்திருப்பது, 19 இனங்களைச் சார்ந்த 1,777 பறவைகளோடு இருக்கும் திருநெல்வேலியில் உள்ள குப்பக்குறிச்சி நீர்த்தேக்கம். திருநெல்வேலியில் இருக்கும் கங்கைகொண்டான் நீர்த்தேக்கம் 27 இனங்களைச் சார்ந்த 1,385 பறவைகளைக் கொண்டிருக்கிறது; தென்காசியில் சுரண்டை நீர்த்தேக்கத்தில் 19 இனங்களைச் சார்ந்த 1,373 பறவைகள் காணப்பட்டன. தூத்துக்குடியில் ஆறுமுகமங்களம் நீர்த்தேக்கத்தில் 40 இனங்களைச் சார்ந்த 1,325 பறவைகளும், சிவகளை நீர்த்தேக்கத்தில் 16 இனங்களைச் சார்ந்த 1,116 பறவைகளும், திருநெல்வேலியில் கங்கைகொண்டான் வடகரையில் 12 இனங்களைச் சார்ந்த 1,021 பறவைகளும், தென்காசியில் வாகைக்குளத்தில் 29 இனங்களைச் சார்ந்த 1,010 பறவைகளும் காணப்பட்டன.
”இங்கே பட்டியலிடப்பட்ட நீர்த்தேக்கங்களைப் பேணிக்காப்பதற்கு, பறவைகளையும் அவற்றின் வாழுமிடங்களையும் கண்காணிக்க எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்லுயிர் நிர்வாகக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறை, கிராமப்புற மேம்பாட்டுத் துறை, வருவாய்த்துறை, வனத்துறை, மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் எல்லாம் ஒன்றிணைந்து தாமிரப்பரணி நதிசார்ந்த நிலப்பகுதியில் இருக்கும் விலையில்லா இந்தப் பொக்கிஷங்களை நிர்வகிக்க வேண்டும்,” என்றார் அவர்.
தாமிரபரணி நீர்ப்பறவைக் கணக்கெடுப்பின் 11-ஆவது நிகழ்வு 2021-ல் நடந்தது. அப்போது 62 பாசன நீர்த்தேக்கங்களில் 73 இனங்களைச் சார்ந்த 26,868 பறவைகள் பதிவு செய்யப்பட்டன. இந்தக் கணக்கெடுப்பு 2011-இல் தொடங்கப்பட்டது.
மிக அதிகமான பறவைகள் (67,194) பதிவு செய்யப்பட்டது 2014-இல்தான். இந்த 12-ஆவது நிகழ்வை, மணிமுத்தாறில் இருக்கும் ’அட்ரி’யின் அகஸ்தியமலை கம்யூனிட்டி பராமரிப்பு நிலையம், தூத்துக்குடியில் இருக்கும் முத்துநகர் இயற்கைக் கழகம், நெல்லை இயற்கை கிளப் ஆகிய அமைப்புகள் தமிழ்நாடு வனத்துறையின் வழிகாட்டுதலோடு நடத்தி முடித்திருக்கிறது.
Read in : English