Read in : English
பத்திரிகைகளும் மேடைப்பேச்சும்தான், தனது கருத்துகளைக் கொண்டு செல்வதற்கான வாகனமாகப் பயன்படுத்தியவர் தந்தை பெரியார். குடியரசு, ரிவோல்ட் (ஆங்கில வார இதழ், புரட்சி, பகுத்தறிவு, விடுதலை, தி ஜஸ்டீஸ் (ஆங்கில வாரஇதழ்), உண்மை, தி மார்டன் ரேஷனலிஸ்ட் (ஆங்கில மாத இதழ்) போன்ற இதழ்களை நடத்தியவர் அவர். தேர்தல் அரசியலிருந்து விலகி இருந்த பெரியாரின் துணிச்சலான பேச்சு, மக்களின் நலனுக்காகச் சொல்லப்பட்டவை என்பதை அவரது கருத்துகளை ஏற்காதவர்கள்கூட புரிந்து கொள்வார்கள். தனது கருத்துகளை அழுத்தம் திருத்தமாகக் கூறி வந்த பெரியார், கருத்துச் சுதந்திரத்தை எப்போதும் ஆதரித்தவர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
நான் சுதந்திர மனிதன் எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் உங்களைப்போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து ஒப்பக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக்கூடியவைகளைத் தள்ளவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன் என்று கூறியவர் தந்தை பெரியார் (புரட்சி 17.12.1933)
பெரியாரின் பணிகள் குறித்து பெரியாரிய மார்க்சீய அறிஞர் எஸ்.வி. ராஜதுரையும் வ. கீதாவும் சில புத்தகங்களை எழுதியுள்ளனர். பெரியாரின் இதழியல் பணிகள் குறித்து அ. இறையரசன் எழுதிய இதழாளர் பெரியார் என்ற புத்தகமும் (2005) .ஏன் நமக்கு இத்தனை எதிரிகள் தந்தை பெரியாரின் இதழியல் என்ற இரா. சுப்பிரமணியின் ஆய்வுரையுடன்கூடிய தொகுப்பு நூலும் (2022) வெளிவந்துள்ளன. பத்திரிகைகளின் நோக்கங்கள் குறித்தும் பெரியாரின் இதழியல் பார்வை குறித்தும் இந்தப் புத்தகங்களிலிருந்து அறியலாம்.
மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட பெரியாரின் இதழியல் பார்வை:
சரியான கட்டடம் அமைக்கப்படுவதற்கு உத்திரங்கள் எவ்வளவு அவசியமோ அதைவிட மிக அவசிமயானவை சரியான சமூகத்தை அமைக்க சமாச்சாரப் பத்திரிகைகள். ஒரு சரியான சமூகம் எந்தவிதமாக அமைக்கப்பட வேண்டுமென்பதை எடுத்துரைத்து மக்கள் மனதை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டுவது இன்றையமையாத வேலையாகும். பத்திரிகைகளுக்கு 18 கோடி பாமரர்களைப் பாழான சார் ஆட்சியிலிருந்து அடைத்தோம் சமர்தர்மியர்களாகிய நாம். அந்த 18 கோடி மக்களில் பெரும் பகுதி படிப்பென்பதையே பயிலாதவர்கள். ஆகவே, அவர்களைக் கொண்டு அமைக்க விரும்பும் நமது அரசியலுக்கு ஆக்கவேலை அடிப்படையை அயராது ஆக்க வேண்டிய கடமை நமது பத்திரிகைகளுடையதாகும். தங்களின் பொறுப்பு எத்தகையது என்பதை உணர மக்களுக்கு மதியூட்ட வேண்டும். புதிய சமூகத்தின் முறைகளைப் போதிக்க வேண்டும்.
சுருக்கமாய் சொன்னால் 18 கோடி மக்களின் புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பத்திரிகை மூலம் பரிபாலிக்கப்பட வேண்டும். கண்காணிக்கப்பட வேண்டும் என்று அன்று சொன்னார் அந்த நாட்டின் அரசியல் அறிந்த லெனின் என்பார்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மக்களும் செய்ய வேண்டிய கடமைகளைத் திட்டமிட்டுச் சொல்ல வேண்டும். மக்கள் முதலில் படிப் பதில் கவலை கொள்ளக் கற்பிக்க வேண்டும். சுகாதாரமாய் வாழ வழிகளை வகுத்துக் காட்ட வேண்டும். குறித்த காலத்தில் குறித்த காரியத்தைச் செய்யும் கொள்கையை வளர்க்க வேண்டும். வளரும் வாலிப சிறார்களை வன்மொழி பேசி வதைத்காதிருக்க வற்புறுத்த வேண்டும். ஒருவரை ஒருவர் ஏமாற்றி பிழைக்கும் எக்காரியமும் இல்லாதிருக்க இடித்துக்காட்டி, இனிய வழியில் ஏற்ற வாழ்க்கை நடத்த எழுத வேண்டும்.
எம் நாட்டு பத்திரிகைகள் மேழி செல்வம் கோழைப்படாது என்ற மூதுரைக்கிணங்க நம் நாட்டு மக்கள் விவசாயத்தைக் கொண்டே விரும்பிய நலனை உழைத்துப் பெற்று வாழ வேண்டும். வானத்தை நோக்கி வரம் வாங்கி வாழ்வு நடத்துவதில் வைத்திருக்கும் பாழான நோக்கம் பட்டு வீழ பகுத்தறிவுச் சுடர் பற்றிய பத்திரிகைகள் பாடுபட வேண்டும். சுருக்கமாய் சொன்னால் 18 கோடி மக்களின் புதிய வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பத்திரிகை மூலம் பரிபாலிக்கப்பட வேண்டும். கண்காணிக்கப்பட வேண்டும் என்று அன்று சொன்னார் அந்த நாட்டின் அரசியல் அறிந்த லெனின் என்பார்.
எமது பத்திரிகையின் நோக்கத்தையறிய விரும்புபவர்களுக்கு நமது தாய்நாடு, அரசியல், பொருளியல், சமூகவியல், ஒழுக்கவியல் முதலிய எல்லா துறைகளிலும் மேன்மையுற்று விளங்கச் செய்வதேயாகும் எனக்கூறுவோம். நமது நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்காவும் அறிவு வளர்ச்சிக்காவும் மொழி வளர்ச்சிக்காகவும் கலை வளர்ச்சிக்காகவும் சமய வளர்ச்சிக்காகவும் இதன் வாயிலாக இடையறாது உழைத்து வருவோம்.
ஆயிரக்கணக்காக பொருள் செலவிட்டு கட்டிய அஸ்திவாரம் பலமில்லாவிடில் இடந்து விழுந்து அழிந்து போவதைப் போல, ஒரு தேசத்தின் அடிப்படைகளாகிய தனிமனிதன், குடும்பம், பல குடும்பங்கள் சேர்ந்த ஒரு வகுப்பு, பல வகுப்புகளாலாகிய கிராமம் ஆகிய இவைகள் எல்லா துறைகளிலும் மேன்மையுறாவிடின் அத்தேசம் ஒருநாளும் முன்னேறறமடையாது. ஆகையினால், நமது தேசம் சுதந்திரம் பெற்று எல்லாத் துறைகளிலும் மேன்மையுற்று விளங்க வேண்டுமாயின் நமது நாட்டிலுள்ள ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு தனிக்குடும்பமும் நன்நிலையடைய வேண்டும். ஒவ்வொரு வகுப்பினரும் முன்னேற்றமடைதல் வேண்டும். ஒவ்வொரு கிராமமும் பிற கிராமங்களினுடையவோ, நகரங்களினுடையவோ, நாடுகளினுடையவோ உதவியை எந்நாளும் எதிர்பார்த்து நிற்காத வண்ணம் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றமெய்தி தனித்தியங்கும் பெருமையை அடைதல் வேண்டும். அடிப்படைகளான இவைகளை அறவே விடுத்து வெறும் தேசம், தேசம் என்று கூக்குரல் இடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. ஆகவே, இவ்வடிப்படைகளின் வளர்ச்சிக்கான முறைகளில் இடையறாது உழைத்து வருவதே எமது கொள்கையாகும்.
பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்தே எமது நோக்கம்.
மக்களுக்குள் தன்மதிப்பும், சமுத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளரல் வேண்டும். மக்கள் அனைவரும் அன்பின்மயமாதல் வேண்டும். உயர்வு, தாழ்வு என்ற உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும் சாதிச் சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாக இருப்பதால், இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிரும் ஒன்றென்று எண்ணும் உண்மையறிவு மக்களிடம் வளர்தல் வேண்டும். சமயச் சண்டை ஒழிய வேண்டும். கடவுளர்களை நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லும் இழிதகைமை தொலைய வேண்டும். இன்னோரன்ன பிற நறுங்குணங்கள் நம்மக்கள் அடையப் பாடுபடுவதும் எமது நோக்கமாகும்.
இதுகாறும் விதந்தோதிய நோக்கங்கள் நிறைவேற உண்மை நெறி பற்றியே ஒழுகுவோம். அன்பு நெறியே எமக்கு ஆதாரம். பொய்மை நெறியையும், புலையொழுக்கத்தையும் எமது அன்பு நெறியால் தகர்த்தெறிவோம். இவர் எமக்கு இனியர், எமக்கு இன்னார் என்ற விருப்பு வெறுப்புக்கள் இன்றி செம்மை நெறி பற்றி ஒழுகி எம்மாலியன்ற தேசத்தொண்டாற்றி வருவோம். நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக் கண் மேற் சென்றிடிதற் பொருட்டு எனும் தெய்வப் புலமை திருவள்ளுவரின் வாக்கைக் கடைப்பிடித்து, நண்பரேயாயினுமாகுக! அவர்தம் சொல்லும், செயலும் தேசவிடுதலைக்குக் கேடு சூழ்வதாயின் அஞ்சாது கண்டித்துதொதுக்கப்படும்…
தேசபிமானம், பாஷாபிமானம், சமயாபிமானம் இன்னும் மற்ற விஷயங்களையும் ஜனங்களிடையுணர்த்துவதற்கே யாம். ஏனைய பத்திரிகைகள் பலவிருந்தும், அவைகள் தங்களது மனசாட்சிக்குத் தோன்றிய உண்மையான அபிப்பிராயங்களை வெளியிட அஞ்சுகின்றன. அவைகளைப் போலல்லாமல் பொது ஜனங்களுக்கு விஷயங்களை உள்ளவற்றை உள்ளபடி தைரியமாகத் தெரிவிக்க வேண்டுமென்தே எமது நோக்கம்.
-குடியரசு 2.5.1925
(பத்திரிகை நிருபர்களுக்கு பாரதியார் 1908இல் சொன்னது, இப்போதும் பொருத்தமானது! “என்ற கட்டுரை இன்மதியில் ஏற்கனவே வெளியாகியுள்ளது. தற்போது, பத்திரிகைகளின் நோக்கம் குறித்து தந்தை பெரியாரின் கருத்துகள் வெளியாகிறது.)
Read in : English