Read in : English

அகதிகள் மற்றும் புகலிடச் சட்ட மசோதா ஒன்றை பிரபல காங்கிரஸ் எம்பி சசி தரூர்  நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.  ʺஅகதிகள் மற்றும் புகலிடச் சட்டத்தை இயற்றும் வகையில் ஒரு தனி நபர்  மசோதாவை மக்களவையில் முன்மொழிந்துள்ளேன். இந்த மசோதா மூலம்  புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை அங்கீகரிப்பதற்கான

அனைத்துவித அளவுகோல்களும் வரையறுக்கப்படும். மேலும் அகதிகளின் உரிமைகள் கடமைகளையும் மசோதா பரிந்துரைக்கும், என இரண்டு நாட்களுக்கு முன் ஆங்கில இந்து நாளேட்டில் வெளியாகியுள்ள கட்டுரையில் தரூர். குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, தரூர்  தாக்கல் செய்திருக்கும் மசோதா குறித்து அவரே நமக்குச் சொல்ல வேண்டியிருக்கிறது.

மசோதா தாக்கலாயிருப்பதாக ஊடகங்களில் செய்தி ஏதும் வெளியாகவில்லை. தரூரின் கட்டுரை மட்டும் இந்து நாளேட்டில் பிரசுரமாகியிருக்காவிட்டால், மசோதா நாடாளுமன்ற கணினி இணைப்பிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கும். ஏதாவது ஒரு கட்டத்தில் சில மேலோட்டமான விவாதங்களுக்குப் பிறகு அது அப்படியே மறக்கடிக்கப்பட்டிருக்கும். கட்சி பின்புலம் இல்லாத தனி நபர் மசோதாவிற்கு அவ்வளவுதான் முக்கியத்துவம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலிருந்தபோது 300க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் நான்கு சதம் மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. மற்றவை நாடாளுமன்ற பரிசீலனைக்கே முன்வைக்கப்படவில்லை. இந்தியா விடுதலை பெற்ற பின் முதல் நாடாளுமன்றம் 1952இல் அமைக்கப்பட்டது. 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் வெறும் 15 தனி நபர் மசோதாக்களே நிறைவேற்றப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் விளக்குவதானால் தனி நபர் மசோதாவை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை, எவரும் எடுத்துக்கொள்வதுமில்லை. அத்தகைய மசோதாக்களை தாக்கல் செய்வோர் சண்டமாருதமாகப் பொழியலாம். ஊடகங்களில் பரபரப்பாக பிரசுரமாகலாம். விளம்பர மோகியாக அறியப்படும் சசி தரூரும் எல்லோருடைய கவனத்தை ஈர்க்க, அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார். ஓரிரு நாட்களாவது பரபரப்பாகப் பேசப்படும். அதைத் தாண்டி இம்மசோதாவால் எப்பயனும் இருக்கப்போவதில்லை.

தரூரின்  சக காங்கிரஸ் உறுப்பினர்கள்கூட, இம்மசோதா மீது அதிக நேரம் செலவழிக்கமாட்டார்கள். உலகில் பல நாடுகள் அகதிகள் பிரச்சினையை எதிர்கொள்கின்றன. உதை பந்தாக அவர்கள் அந்தந்த அரசுகள் விரும்பியபடி அடித்துத் திருப்பப்படுகின்றனர். சிறையில் கூட அடைக்கப்படுகின்றர். ஆனால் அகதிகளுக்காக ஆர்வலர்கள், தன்னார்வக் குழுவினர் தவிர வேறு எவரும் கவலைப்படுவதில்லை. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்லதானே.

தமிழ் நாட்டில் உள்ள நாமும் இத் தருணத்தில்  நான்கு தசாப்தங்களாக எதிர்கொண்டுவரும் இலங்கைத் தமிழர் நிலை பற்றி சற்று பரிசீலிக்கலாமே.

ஆயினுங்கூட,  தேசியம், இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து வெளிநாட்டினருக்கும் இந்தியாவில் தஞ்சம் கோரும் உரிமையை உறுதி செய்ய  வேண்டியதன் அவசியத்தையும்,, புகலிட விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கவென தனி ஒரு தேசீய ஆணையத்தையும் அமைக்க வேண்டும் என தரூர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்த,  பிரச்சினையினை ஊடகங்கள் ஓரிரு நாட்களாவது விவாதித்தால், அது நிச்சயமாக ஒரு முன்னேற்றமே ஆகும்.

எந்தக் கட்சிக்கும் அதிக லாபத்தை அளிக்காத பிரச்சனைகள் எப்போதாவதுதானே மையப்படுத்தப்படுகிறது நம் நாட்டில்.

தவிரவும்  தமிழ் நாட்டில் உள்ள நாமும் இத் தருணத்தில்  நான்கு தசாப்தங்களாக எதிர்கொண்டுவரும் இலங்கைத் தமிழர் நிலை பற்றி சற்று பரிசீலிக்கலாமே.

தோராயமாக இங்கு 95,000 இலங்கை அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர்.  அவர்களில் 60,000 பேர் அரசாங்கத்தால் நடத்தப்படும் முகாம்களிலும்,  மீதமுள்ளவர்கள் வெளியே எந்த அரசாங்க உதவியும் பெறாமலும் வாழ்கின்றனர்.  போர் முடிந்துவிட்டது. முன்போல் அவர்க்ள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பெரிதாக ஆபத்தேதும் இல்லை, எனவே அவர்கள் நாடு திரும்பலாம்தான். ஆனால் அவர்கள் திரும்பிச் செல்ல விரும்புகிறார்களா என்பது கேள்விக்குறியே.

அனைத்து இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்குவது ஒருவிதத் தீர்வாகலாம்.  ஆனால் நம் அரசியல்வாதிகள்  மேடைகளில் முழங்குவதோடு சரி, இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படியே முயன்றாலும் வடவர் ஆதிக்கத்தில் இருக்கும் மத்திய அரசு கண்டு கொள்ளப் போகிறதா என்ன?

இன்னமும் முக்கியமாக, அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப் படுகிறது, முகாம்கள் மூடப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். வெளியே வருவோர் எப்படிப் பிழைப்பார்கள்? தண்ணீரிலிருந்து தூக்கி எறியப்பட்ட மீன்களாகவன்றோ தவிப்பார்கள்/

முகாம்வாசிகளின் வாழ்வாதாரம் என்ன? அரசின் உதவித் தொகை மட்டுமே. சிலர் ஆங்காங்கே கூலி வேலைக்குச் செல்லலாம். எல்லோராலும் இயலாது. சிறப்புத் தொழிற் திறன் பெற்றோர் அதிகமில்லை. அதற்கான பயிற்சி ஏதும் முகாம்களில் அளிக்கப்படவில்லை.

அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சடடத் திருத்தம் இலங்கைத் தமிழர்களுக்குப் பொருந்தாது.

இளைஞர்கள் பலர் படித்து பட்டம் பெற்றிருக்கின்றனர் என்பது உண்மை. ஆனால் வேலை? தவிரவும் முகாம்களுக்கு வெளியே அகதிகளுக்கான உறைவிடம்? வாடகை? எல்லாமே சிக்கல்தான், வாழ்வாதாரத்தை விட்டுவிடுவோம். இந்தியக் குடியுரிமை அளிக்கப்பட்டால் ஓரளவேனும் அவர்களது கவலைகள் மட்டுப்படக்கூடும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட சர்ச்சைக்குரிய குடியுரிமைச் சட்டத் திருத்தம்  இலங்கைத் தமிழர்களுக்குப் பொருந்தாது. திருத்தம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் அல்லோதோருக்கு மட்டுமே. அதிகபட்சமாக  தமிழ் அகதிகளுக்கு  நீண்ட கால விசாக்கள் வழங்கப்படலாம்.  அப்படிச் செய்தாலும் அது அவர்களது நிச்சயமற்ற நிலையினை நிரந்தரமாக்கும் அவ்வளவே.

இது நம் பிரச்சினை அல்லதான். அவர்கள் நாட்டில் மோதல்கள் நின்றுவிட்டன, சொல்லிக்கொள்ளும்படியான ஆபத்து ஏதும் வாராது எனும்போது திரும்பலாம். ஆனால் இலங்கை அரசு அவர்களை வரவேற்று, இடைத் தங்கல் முகாம்களை உருவாக்கி, அவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களை அமல்படுத்தப்போகிறதா என்ன? அங்கேயே கடும்  பொருளாதார நெருக்கடி.

ʺஅந்நியர்களுக்கான புகலிடம் மற்றும் விருந்தோம்பல் போன்ற இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகால மரபுகள்ʺ பற்றித் தரூர் தனது கட்டுரையில் விதந்தோதுகிறார். கொச்சையாகச் சொன்னால் நீட்டி முழக்குகிறார். ஆனால், அவரே  ஒத்துக்கொள்வது போல் அகதிகள் தொடர்பான எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடவில்லை.

ஜவஹர்லால் நேரு காலத்தில் எவ்வித அரசியல் உள்நோக்கமுமின்றி, (இன்னுஞ் சொல்லப்போனால் சீனத்தின் பகையை நாம் சம்பாதித்துக்கொள்கிறோம் என்றறிந்தும்), முற்றிலும்  மனிதாபிமான அடிப்படையில் இந்தியா திபெத்தியர்களுக்கு அடைக்கலம் அளித்தது. இன்றளவும் அவர்கள் ஏதோ சில சலுகைகளுடன் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். நாடு கடந்த அரசு கூட இங்கிருந்து செயல்படுகிறது.

ஆனால் இத்தகைய மனிதாபிமான போக்கிற்கு நேரு பெரும் விலை கொடுக்க நேரிட்டது. மனமுடைந்து இறந்தார் மனிதர். அச்சம்பவத்திற்குப் பின்னர் வங்க தேசம் உள்ளிட்ட அனைத்து அகதிகள் பிரச்சினைகளிலும் அரசியல் ரீதியாக சாதக பாதகத்தினை நன்கு ஆய்ந்தே எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

மோடி அரசு ரோஹிஞ்சாக்கள் முஸ்லிம்கள் என்பதால் அவர்களுக்குப் புகலிடம் கொடுக்கத் தயங்கலாம், வந்திருப்பவர்களையும் திருப்பி அனுப்ப முயலலாம். ஆனால் முஸ்லிம் அரசிடமிருந்து தப்பி வந்துள்ள வங்க தேச சக்மாக்களுக்குக்கூட  குடியுரிமை வழங்கப்படவில்லையே.

முஸ்லிம் அல்லாத அகதிகளுக்கெனவே உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தம் இன்னமும் அமலுக்கு வரவில்லை. மோடி அரசு என்னவிதமான எதிர்விளைவுகள் என்று இன்னமும் யோசித்துக்கொண்டிருக்கிறது.

ஏன் இங்கு தமிழ்நாட்டில் எப்படி? தொப்புள்கொடி உறவல்லவா இலங்கைத் தமிழர்? அவர்கள் நலனில் எந்த அளவு அக்கறையுடன் நம் தலைவர்கள் செயல்படுகின்றனர்?

ஏன் இங்கு தமிழ்நாட்டில் எப்படி? தொப்புள்கொடி உறவல்லவா இலங்கைத் தமிழர்? அவர்கள் நலனில் எந்த அளவு அக்கறையுடன் நம் தலைவர்கள் செயல்படுகின்றனர்? மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உலகிலுள்ள அனைத்து தமிழர்களின் தலைவரென புகழ்ந்து புளகாங்கிதமடைவர் அவரது ஆதரவாளர்கள். ஆனால் அவர் இலங்கைத் தமிழர் நலனை அனைத்து காலகட்டங்களிலும் சமரசமின்றி முன்னிறுத்தியதில்லை. தனக்கு எது வசதியோ, ஆதாயமோ, அதை மட்டுமே செய்வார் கலைஞர். 1989 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது,  இடதுசாரிகளின் வற்புறுத்தலால்  இலங்கைப் பிரச்சனையை எழுப்புவதையே கவனமாகத் தவிர்த்தார்.

ஈ பி ஆர் எல் எஃப் பத்மநாபா மற்றும் அவரது சகாக்களைக் கொன்றவர்களை தப்ப அவர் அனுமதித்திருக்கலாம். மற்றும் புலிகளின் படைகளுக்குக் குறைந்த அளவிலாவது சுதந்திரத்தை அனுமதித்திருக்கலாம்.  ஆனால் சந்திரசேகர் அரசின் அழுத்தத்தால், போராளி இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட முகாம் வாழ் இளைஞர்கள், மற்றும் அவர்கள் குடும்பத்தினரைக்கூட கருணாநிதி அரசுதான் சிறப்பு முகாம்களுக்கு மாற்றியது.

மேலும், இறுதிக்கட்டப் போரின் போது, பேரழிவை எதிர்நோக்கியிருந்த இலங்கைத் தமிழரைக் காப்பாற்ற உருப்படியாக ஏதும் செய்யவில்லை. நாங்களே மத்திய அரசின் அடிமைகள்தானே, என்ன செய்ய, என பகிரங்கமாகவே தன் கையறு நிலையினை ஒப்புக்கொண்டார். போரை  நிறுத்தக் கோரி அவர் இருந்த சில மணிநேர உண்ணாவிரதம் அவரைக் கேலிப்பொருளாக்கியது. ஜெயலலிதா  துவக்கத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் மீது கிட்டத்தட்ட ஒரு போரை அறிவித்தார் எனலாம். அவர்களை வழிப்பறிக்கொள்ளையர் என்றே சாடினார். சட்டம் ஒழுங்கு சீர் குலைகிறது எனக் குற்றஞ்சாட்டி, இலங்கையில் மோதல்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையிலும்  அவர்களை கட்டாயமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பவும் முயன்றார். அவ்வாறு  50,000 க்கும் அதிகமான அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.  ஆனால், கடுமையான எதிர்ப்புகளாலும் மற்றும் நீதிமன்றத்தின் தலையீடுகளினாலும்  அத்தகைய கட்டாயத் திருப்பி அனுப்பும் படலம் முடிவுக்கு வந்தது. (தனி ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று சூளுரைத்து ஈழத்தாயாக உருவெடுத்தது மிகப் பின்னால். அந்த சூளுரையினால் வெற்றி எதையும் அவர் ஈட்டிவிடவும் இல்லை.) எம்ஜிஆரோ பிரபாகரனுடன் நட்பு பாராட்டினாலும், பெரும்பாலும் மத்திய அரசை அனுசரித்துப் போனார். இந்திய அரசு புலிகள் மீது போர் தொடுக்க முடிவெடுத்த நேரத்தில் எதிர்ப்பேதும் காட்டவில்லை.

இவ்வாறாக. ஒரே  மொழி, ஒரே இனம், ஒரே வித  மத நம்பிக்கைகள், உண்மையிலேயே தொப்புள் கொடி உறவு என்றிருந்தாலும் நம் அரசியல்வாதிகள் தொடர்ந்து சுய லாப நஷ்டங்களைக் கருதியே நடந்து கொண்டனர், ஓர் எல்லைக்கு மேல் அவர்கள் அன்பு, அபிமானம் செல்லவில்லை. அப்படியிருக்கையில் ஏன் மத்திய அரசு கவலைப்படப் போகிறது, பிரச்சினைகளை நன்கு உணர்ந்திருந்தாலுங்கூட? அவர்களுக்கு அதிகம் தெரியாது, அவர்கள் அக்கறையும் கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மை.

அகதிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும், அவர்களுக்கு எப்படிப்பட்ட உதவிகள் அளிக்கப்படவேண்டும் என்பது குறித்த தெளிவு சற்றும் இல்லை. அந்தந்த நேர அரசு, அதிகாரிகள், பொது வெளி அழுத்தம் அவற்றையொட்டியே நடவடிக்கைகள்.

அதிதி தேவோ பவா (விருந்தினரே கடவுள்) என்பது இந்திய பண்பாட்டின் ஒரு பரிமாணமாக இருந்தாலும் அதற்கும் எல்லைகள் உண்டுதான் அனைத்து நாடுகளும் தத்தம் நலன்களைக் காத்துக் கொள்ள, சமூக அமைப்பு அதிகம் பாழ்பட்டு விடாமல் இருப்பதில் மேலதிக அக்கறை காட்டுவதை நாம் புரிந்து கொள்ளமுடியும். ஆனாலும் சிக்கல்கள் மோதல்கள் எழும்போது அந்தந்தப் பிராந்தியங்களில் இருக்கும் சற்றே வளம் பெற்ற நாடுகள் அகதிகளை வரவேற்று இயன்றதைச் செய்வதே நியாயம்.

மோடி என்ன, கலைஞர் என்ன, எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ஆனாலும் அதற்கப்பால் பொதுவாகவே நாமெல்லோருமே இரட்டை வேடம் போடுகிறோம், சுய நலமே தாரக மந்திரமாக இருக்கும்போது எங்கே கிடைக்கும் நீதி?.

சசி தரூரின் கட்டுரைக்கு எதிர்வினை இக்கட்டுரை. அவர் அகதிகளுக்காக உருகுகிறார். அவர் எப்படிப்பட்ட நபர்? ஐ.நாவில் பணியாற்றிய போது ஒரு கட்டம் வரை அமெரிக்க அடிவருடியாயிருந்தார். ஆனால் அவரை செயலாளர் நாயகமாக்க அமெரிக்கா மறுத்தபோது அதனுடைய ’ஏகாதிபத்திய மமதையினை’ சாடத் துவங்கினார்.  இதுதான் உலகம். வேறென்ன சொல்ல?

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival