Read in : English
அன்றாடம் நாம் பயன்படுத்தி விட்டு தூக்கி எரியும் இ-வேஸ்ட் என்று சொல்லப்படும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ரானிக் கழிவுப் பொருள்களை கையாளுவதற்கான வழிமுறைகளை நிபுணர் குழுவை அமைத்துக் கண்டறிந்து அதன் பரிந்துரைகளைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியரான எஸ். ஜனகராஜன்.
உலகளவில் அதிக அளவில் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்படுகின்றன. அவை பயனற்றுப் போகும்போது அவை கழிவுகளாகக் குவிகின்றன. அதில் அதிகளவில் இ-வேஸ்ட் எனப்படும் மின்னணு பொருட்கள் கழிவுகள் குவியும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. 2018ஆம் ஆண்டு 3சதவீதமாக இருந்த இந்தக் கழிவுகள், 2019ஆம் ஆண்டு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. மின்னணு பொருள்கழிவுகள் குவிவதில் முதலிடம் மும்பைக்கு. இதற்கு அடுத்ததாக தில்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதரபாத், புனே, சூரத் உள்ளிட்ட நகரங்கள் உள்ளன.
வீடுகளில் சேரும் மின்னணுக் கழிவுகளை திரட்ட சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் ரெசிடென்ஸ் ஆஃப் கஸ்தூரிபா நகர் அசோசியேஷன் (ROKA).
செல்போன்கள், பேட்டரிகள், ஸ்விட்ச் போர்டுகள், கம்ப்யூட்டர் மதர்போர்டுகள், லேப்டாப், கணினி உள்ளிட்ட பல்வேறு எலெக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு செயலிதழந்து போகும் போது அவை வேண்டாமென தூக்கி எறியப்படுகின்றன. இதில் பிளாஸ்டிக் உள்ளிட்ட மட்காத பொருட்களும், மின் வயர்களும், பேட்டரிகளில் இருந்து வெளியேறும் சிலிக்கான் போன்ற அபாயகராமான வேதியியல் மூலக்கூறுகளும் மண்ணிற்கும், காற்றிற்கும், நீர் நிலைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எப்படி குப்பைகளில் மட்கும் குப்பை, மட்கா குப்பை என தரம் பிரிக்கப்படுகிறதோ அதே போல் இ—வேஸ்ட்களையும் தனியே பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். வீடுகளில் சேரும் மின்னணுக் கழிவுகளை திரட்ட சில தனியார் தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் ரெசிடென்ஸ் ஆஃப் கஸ்தூரிபா நகர் அசோசியேஷன் (ROKA). அடையாறு கஸ்தூரிபாய் நகரில் குடியிருக்கும் சிலர் ஒன்றிணைந்து தங்கள் பகுதியில் இருக்குமம் இ—வேஸ்ட்களை சேகரித்து சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
2019ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்ரீதரன். செயலாளர் ஜனனி. இவர்கள் மூலம் ஒன்றிணைந்த தன்னார்வலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வீடுகளில் இருக்கும் மின்னணுக் கழிவுகளை சேகரிக்க தொடங்கினர். சாதாரணமாக குடியிருப்போர் ஏன் இந்த மின்னணுக் கழிவுகளை தூக்கி எரியாமல் அதை முறையாக சேகரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர் என்ற கேள்வி எழலாம்.
“நாம் பயன்படுத்தும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களில் இருக்கும் தாமிரம், இரும்பு, பாதரசம், ஈயம், லித்தியம், லெட், பேரியம் உள்ளிட்ட கனரக உலோகங்கள் உள்ளன. இவை இருக்கும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை தூக்கி எரியும் போதோ அல்லது ஓரிடத்தில் குப்பையாக குவிக்கும் போதோ, அதிலிருந்து வெளியேறும் கனரக உலோகங்கள் பூமி வழியாக சென்று நிலத்தடி நீரை மாசடைய செய்கிறது. சரியான வழிகாட்டுதல்களும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் இ- வேஸ்ட்களை ஒரே இடத்தில் போட்டு எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் நச்சுகள் வளிமண்டலத்தை அடைந்து காற்றை சேதப்படுத்துகின்றன. அந்த நச்சுக்காற்றை சுவாசிக்கும் மக்களுக்கு உடல்நலக்கேடு ஏற்படுகிறது. இப்படி இந்தக் கழிவுகள் நிலம், நீர், காற்று என சுற்றுச்சூழலுக்குப் பேராபத்தை விளைவிப்பதால் அதை மிகுந்த கவனமுடன் கையாள வேண்டியது அவசியம்” என்கிறார் பெங்களூருவில் உள்ள குளோபல் அகாதெமியின் துணை பேராசிரியர் குஷ்பு.
மின்னணுக் கழிவுகள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், அவற்றைப் பாதுகாப்பாக அதை அகற்றுவது குறித்தும் மக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
“சாதாரண மக்களுக்கு தங்கள் வீடுகளில் இருந்து தூக்கி எரியும் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் பொருட்களில் எந்த மாதிரியான பொருட்கள் இருக்கும் என்ற புரிதல் இருக்காது. அதனால், அதன் தீமைகளை அறியாமல் சாதாரண குப்பையோடு, குப்பையாக தூக்கி எரிகின்றனர். முதலில் மின்னணுக் கழிவுகள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், அவற்றைப் பாதுகாப்பாக அதை அகற்றுவது குறித்தும் மக்களிடையே அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் அவர்.
“சென்னையில் ஏராளமான தொழிற்சாலைகள் இருப்பதால் அதிகளவில் மின்னணுக் கழிவுகள் சேர்ந்து விடுகின்றன. உதாரணமாக சோலார் பேனல் என்ற திட்டத்தைப் பயன்படுத்துவது பரவலாகி வருகிறது. ஒரு கட்டத்தில் அவற்றைப் பயன்படுத்த முடியாதபோது, அந்தக் கழிவுகளை எப்படி அழிப்பது என்ற திட்டம் அரசிடம் உள்ளதா? இதேபோன்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க பேட்டரி வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. ஒரு கட்டத்திற்கு மேல் பேட்டரி வாகனங்களைப் பயன்படுத்த முடியாமல் போனால் அவ்வளவு பேட்டரிகளையும் எங்கு கொண்டு போடுவது, அதை பாதிப்பில்லாமல் எப்படி அழிப்பது? செல்போன், லேப்டாப் என மனிதனின் எளிமைக்காக எத்தனையோ பொருட்கள் கண்டறியப்பட்டாலும், அதன் வாழ்நாளுக்கு பிறகு என்ன செய்வது என்ற முடிவை அரசு சிந்திப்பதில்லை” என்கிறார் அவர்.
“தற்பொழுது பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை அறிந்து அதை எப்படி பாதுகாப்பில்லாமல் அழிப்பது என்ற விடை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்களுக்கும் வந்துவிடக் கூடாது. உதாரணமாக பிளாஸ்டிக் பயன்படுத்த தொடங்கிய காலத்தில் போக்குவரத்திற்கு எளிமையாக இருக்கும், பயன்படுத்த எளிமையாக இருக்கும் என கூறப்பட்டது. தற்பொழுது பிளாஸ்டிக்கால் வரும் தீமைகளை அறிந்து அதை எப்படி பாதுகாப்பில்லாமல் அழிப்பது என்ற விடை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்ப் பொருட்களுக்கும் வந்துவிடக் கூடாது” என்கிறார் ஜனகராஜன்.
“குப்பைகளில் எப்படி மறுசுழற்சி செய்வது, பாதுகாப்பாக அகற்றுவது என திட்டங்களை வகுப்பது போன்று இ- வேஸ்ட்களையும் ஆபத்தில்லாமல் அகற்றவும், மறுசுழற்சி செய்யவும் அரசு தெளிவான திட்டங்களை கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக்கை போன்று எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்வது என்பது அவ்வளது எளிதானது இல்லை. ஒவ்வொரு எலெக்ட்ரானிக் பொருட்களிலும் ஒவ்வொரு உலோகங்கள் இருக்கும். அதன் விளைவுகளும் வெவ்வேறாக இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளை முறையாகச் சேகரித்து மறுசுழற்சி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலும் கையாளுவதற்கு துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய குழுவை நியமித்து அரசு செயல்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மனிதர்கள் வாழ பூமியில் இடமின்றி, வெறும் குப்பைக் கூடமாக மாறிவிடும்” என்றும் எச்சரிக்கிறார் பேராசிரியர் ஜனகராஜன்.
Read in : English