Read in : English
எம்ஜிஆர்,-கருணாநிதி நட்புறவு பற்றி மணிரத்தினம் இயக்கிய இருவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு காலத்தில் சேர்ந்து செயல்பட்ட முன்னாள் நண்பர்கள் நீண்டபிரிவுக்குப் பின்பு ஒருநாள் சந்திக்கும் காட்சி அது. ஒரு திருமண நிகழ்வு. அதில் அருகருகே உட்கார்ந்திருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் அந்தப் பழைய, பரிச்சய உணர்வை வெளிப்படுத்திக் கொண்டிருப்பார்கள். தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இருவரும் நட்போடு காட்சி தருவது நல்லதல்ல என்றும், போட்டியும் பகையும்தான் தங்களின் தேர்தல் வெற்றிக்கும் தோல்விக்கும் அச்சாணி என்றும் எம்ஜிஆராக நடித்திருக்கும் மோகன்லால் சொல்வார்.
அது திரைப்படம். ஆனால், அந்தத் திரைப்படத்தில் உள்ள அந்தக் காட்சி நிஜமாகவே நடந்த ஒரு சம்பவம்தான். தமிழகத்தின் எதிரும் புதிருமாக இருந்த அந்த இரு ஆளுமைகள் சந்தித்துக் கொண்ட அந்த முக்கியமான நிகழ்வு யூடியூப் காணொலிக் காட்சியில் இப்போதும் காணக்கிடைக்கிறது. ஒரு காங்கிரஸ்காரர் மகளின் திருமண வைபவம் அது. கன்னியாகுமரி நாடாரான குமரி அனந்தன் ஒரு காமராஜர் விசுவாசி; தன் தேசிய உணர்வுகளின்படி வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் மற்ற சாதிகள் போலல்லாமல், அவரது சாதிக்குழு திராவிடக் கட்சிகளை ஆதரித்தது போலவே காங்கிரஸ் பக்கமும், பாஜக பக்கமும் நின்றிருக்கிறது.
எம்ஜிஆரும் கருணாநிதியும் பொதுவெளியில் சேர்ந்து அமர்ந்திருந்த அந்தத் திருமண நிகழ்ச்சியில் மணமகளாக இருந்தவர், தற்போதைய ஆந்திரப்பிரதேசத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் பொறுப்பு வகிப்பவருமான, அடுத்த குடியரசுத் தலைவராக ஆர்வத்துடன் இருப்பவருமான தமிழிசை சௌந்தரராஜன் தான்.
தற்போதையக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் இந்த ஆண்டு முடிவுக்கு வருகிறது. ’ஒரு மனிதன், ஒரு பதவி, ஒருதடவை’ என்பது ஆர்எஸ்எஸ் கொள்கை. எனவே, இந்த முறை மட்டுமே அவர் குடியரசுத் தலைவராக இருந்துவிட்டுப் போக முடியும். மீண்டும் அவருக்கு வாய்ப்புக் கிடைப்பது சந்தேகமே. ஆனால் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் இந்தக் கொள்கை பொருந்தாது. அவர்கள் விதிவிலக்கு.
எங்கே பாஜக தனக்கான செல்வாக்கையும் வாக்கு வங்கியையும் கட்டமைக்க விரும்புகிறதோ, அந்த மாநிலத்திலிருந்து குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதாவது தமிழ்நாட்டிலிருந்து இந்த முறை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் நிறுத்தப்படலாம்.
ஒரு தலித் பிரதிநிதியாக கோவிந்த் முன்னிறுத்தப்பட்ட நோக்கம் இந்நேரம் முடிந்திருக்கலாம். தங்களது நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, மறுபடியும் குடியரசுத் தலைவர் என்னும் சீட்டை விளையாடுவதற்கான நேரம் இது. தமிழ்நாட்டின்மீது பாஜகவுக்கு அக்கறை உண்டு என்பதைக் காட்டும் நேரம் இதுவாக இருக்கலாம். எங்கே பாஜக தனக்கான செல்வாக்கையும் வாக்கு வங்கியையும் கட்டமைக்க விரும்புகிறதோ, அந்த மாநிலத்திலிருந்து குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார். அதாவது தமிழ்நாட்டிலிருந்து இந்த முறை குடியரசுத் தலைவர் பதவிக்கு ஒருவர் நிறுத்தப்படலாம். அந்த மாநிலத்திலிருந்து ஒருவரை குடியரசுத் தலைவர் ஆக்குவதால், அங்கே பாஜகவின் வாக்கு வங்கி உயரும் என்பது உத்தரவாதம் கிடையாது. ஆனால் 2024இல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முந்திய, பிந்திய கூட்டணிகளை உருவாக்குவதற்கு அது மறைமுகமாக உதவக்கூடும்.
ஆனால் பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் ஆகப்பெரும் ஆளுமைகளின் பற்றாக்குறை இருக்கிறது. தற்போது மணிப்பூரில் ஆளுநராக இருக்கும் இல. கணேசனுக்கு ஓரளவுக்கு அனுபவமும், ஆளுமையும் உண்டு. ஆனால் அவர் பிராமணர். அவரை குடியரசுத் தலைவராக்கினால் திராவிட இயக்கங்களில் ஊறித்திளைத்த தமிழ்நாட்டில் பாஜக தன்னைத்தானே பலி கொடுப்பதற்கு ஒப்பாகிவிடும். பாஜகவின் முன்னாள் தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் வேண்டுமானால் சரியான தேர்வாக இருக்கலாம்.
தமிழிசை அளவுக்குள்ள ஒருவர்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல வேட்பாளர். இதுதான் தமிழக பாஜக நிலைமை. தமிழிசையை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிப்பது நாடார்களிடம் பெற்ற ஆதரவிற்கு பாஜக நன்றி செலுத்துவது போலாகும். தற்போதைய தமிழ்நாட்டு நாடார்கள், வடமாநிலங்களில் உள்ள பனியாவுக்கு இணையான ஒரு சாதிக் குழு; பாஜகவே பிராமண,- பனியா கட்சிதானே. நாடார்களில் ஒரு பிரிவினர் கிறித்துவத்திற்கு மதம்மாறிப் போனவுடன், தேவாலயம் கன்னியாகுமரியில் ஓர் அதிகாரச்சக்தியாக மாறத் தொடங்கிவிட்டது. அதன்விளைவாக, பரவலாக இந்து நாடார்கள் பாஜக கட்சியால் கவரப்பட்டனர்.
“கன்னியாகுமரியும் கோயம்புத்தூரும் பாஜக ஓரளவு தனது செல்வாக்கைக் கட்டமைத்துக்கொண்ட மாவட்டங்கள். மிதமான திராவிடவியல் தன்மைகளைக் கொண்ட அஇஅதிமுகவும், காங்கிரஸும் காலங்காலமாகப் பலமாக இருந்த தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்•களிலும் பாஜகவுக்கும் ஓர் இடம் கிடைத்திருக்கிறது” என்ற கருத்தை அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் நரேந்திர சுப்ரமணியன் முன்வைக்கிறார்.
தமிழிசை அளவுக்குள்ள ஒருவர்தான் தமிழ்நாட்டில் பாஜகவுக்குக் கிடைக்கக்கூடிய ஒரு நல்ல வேட்பாளர். இதுதான் தமிழக பாஜக நிலைமை. தமிழிசையை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நியமிப்பது நாடார்களிடம் பெற்ற ஆதரவிற்கு பாஜக நன்றி செலுத்துவது போலாகும்
தனிப்பட்ட முறையில் தனது அரசியல் வாழ்க்கையில் இதுவரையில் எந்த சிறப்பும் இல்லாத அரசியல் பயணம் செய்தவர் தமிழிசை. இந்திய குடியரசுத் தலைவராக வரும் ஒருவரிடம் எதிர்பார்க்கும் ஆளுமை அவரிடம் இல்லை. தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலைக்கு அவர் தோசை பரிமாறுவதைக் காட்டிய சித்திரங்கள், பொதுவெளியில் அந்த அளவுக்கு இறங்கிப் போவதற்கு தயங்காதவர் என்பதைக்காட்டும்.
2019 தேர்தலுக்குப் பின்பு, ஓர் ஆங்கில இணையதளத்திற்காக நான் அப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசையைக் காணொலிக்காட்சி மூலம் நேர்காணல் செய்தேன். ஒரு கேள்வியோடு என் நேர்காணலை ஆரம்பித்தேன். அவரை நிலைகுலைய வைப்பது; அதேநேரம் அவரை என் கண்ணோட்டத்திற்குக் கொண்டுவருவது. இந்த இரண்டு நோக்கங்கள் இருந்தன என் கேள்வியில். இந்த மண்ணில் ஊறிப்போன பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். தமிழ்நாட்டு அரசியலில் நிலைத்த பலமான குடும்ப வேர்கள் அவருக்கு இருக்கின்றன. காங்கிரஸில் அவரது குடும்பமே தொடர்ந்து இருக்கிறது. தமிழக நிலைமை குறித்து பாஜக தலைமையால் புரிந்து கொள்ள முடியவில்லையா என்று கேட்டேன். சற்று பின்வாங்கிய அவர், பின்பு சுதாகரித்துக் கொண்டு, பாஜகவின் நிலைமைக்கு, திமுகவின் பொய்களும், போலி பரப்புரைகளும்தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். மென்மையான போக்கும், சிறு பெண்ணின் குணாம்சமும் கொண்டவராக, எப்போதும் புன்னகைக்கத் தயாராக இருப்பவராக அவர் தோன்றினார். அண்ணா அறிவாலயத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றுக்கு தான் அழைக்கப்பட்டிருப்பதால் நேர்காணலைச் சீக்கிரம் முடிக்கும்படியும் அவர் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
அரசியலில் எதிரும் புதிருமான எம்ஜிஆரும் கருணாநிதியும் தமிழிசையின் திருமணத்தின்போது ஒன்று சேர்ந்து கலந்ததுகூட ஒருவேளை மிகப்பொருத்தமானதாக இருக்கலாம். யாரையும் கவிழ்க்கும் நோக்கம் கொண்டவராக தமிழிசையைப் பார்க்க முடியாது. தன்னைப் பொருட்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவரிடம் கிடையாது. சர்ச்சைக்கு ஆளாகாத இலகுவான அரசியல்வாதி அவர்.
அரசியலைமைப்புச் சட்டம் சம்பந்தமான தீவிர முக்கியப் பிரச்சினைகளை கையாளுவதில் தமிழிசைக்கு புரிதல் போதாது. தனிநிலைப்பாடு எடுக்கக்கூடிய ஆற்றலும் கிடையாது. அதனால், மோடி ராஜ்யத்திற்குச் சுலபமாகப் பொருந்தக்கூடியவர் தமிழிசை.
ஏற்கனவே குடியரசுத் தலைவர் வேட்பாளர் நியமன விஷயத்தில் காங்கிரஸ் தனது தர அளவுகோலை மிகவும் தாழ்த்திவிட்டது; அதனால், அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது இது பாஜகவுக்குக் கைகொடுக்கும். ஃபக்ருதீன் அலி அகமதும், பிரதிபா பாட்டீலும் குடியரசுத் தலைவராகும்போது, தமிழிசை ஏன் குடியரசுத் தலைவர் ஆகக்கூடாது?
மிகப்பிரமாதமாகச் செயல்படாத, ஆனால் சுமாரான ஆளுமைகள்தான் முக்கியமான, ஆனால் அதிகாரமற்ற நாட்டின் மிக உயர்ந்த பதவியில் உட்கார வைக்கப்படுவார்கள். தமிழிசையும் அவ்வாறே நாட்டின் மிக உயர்ந்த பதவியில் பா•ஜகவால் அமர்த்தப்படலாம்.
Read in : English