Read in : English

Share the Article

கனடாவில் டொரன்டோவில் மெக்கில் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியராகப் பணிபுரியும் நரேந்திர சுப்ரமணியன், இந்திய அரசியலில் இனம், தேசியவாதம், மதம், பாலினம் ஆகியவற்றைக் கற்றுத்தேர்ந்தவர். அவரது படைப்புகள் அடையாள அரசியல், தேர்தல் போட்டி, பொதுக்கலாச்சாரம் மற்றும் கொள்கை ஆகியவற்றின் பங்களிப்பை ஆராய்கின்றன. “Ethnicity and Populist Mobilization: Political Parties, Citizens and Democracy in South India”  (இனவியல் மற்றும் வெகுமக்களிய திரட்சி: தென்னிந்தியாவில் அரசியல் கட்சிகள், குடிமக்கள், மக்களாட்சி) என்ற அவரது புத்தகம் இந்தியாவின் சிலபகுதிகளில் மொழியை மையப்படுத்தி மக்களைத் திரட்டும் வழக்கம், சாதிப் பதாகைகள் பலப்படுத்திய ஜனநாயகம் ஆகியவற்றைப் பேசுகிறது. தமிழ்நாட்டில் திராவிட அரசியலின் எதிர்காலம் என்ன என்பது பேராசிரியர் நரேந்திர சுப்ரமணியனோடு இன்மதி மேற்கொண்ட விவாதத்தின் இரண்டாம் பகுதி இது.

கேள்வி: பாஜக தமிழ்நாட்டுக்கு எப்போதாவது பொருந்திவருமா?

நரேந்திர சுப்ரமணியன்: முன்பு தான்பலனமாக இருந்த தெற்கு, கிழக்கு மாநிலங்கள் உட்பட இந்தியா முழுக்க பாஜக கடந்த இரண்டு தசாப்தங்களில் வளர்ச்சி அடைந்திருக்கிறது. என்றாலும் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பாஜகவும், இந்து தேசியவாதமும் எப்போதும் பலவீனமாகவே இருந்திருக்கின்றன.

பேராசிரியர் நரேந்திர சுப்பிரமணியன்

கடந்த தமிழ்நாட்டுச் சட்டசபைத் தேர்தல்களில் பாஜக 3.2 சதவீதத்திற்கு மேல் அதிகமான வாக்கைப் பெறவில்லை; 2006-ஆம் ஆண்டிலிருந்து அது 2.9 சதவீதத்திற்கு மேலான வாக்கைப் பெற்றதில்லை. சில நாடாளுமன்ற தேர்தல்களில் அது நிறைய வாக்குகளைப் பெற்றதுண்டு. அது பெற்ற உச்சபட்ச வாக்குச்சதவீதம் 1999 இல் கிடைத்த 7.1- சதவீதம்தான். மாநிலத்தில் அதற்கிருந்த ஆதரவிற்கு அதிகமாகவே, அதன் கூட்டணிக்கட்சியான  அஇஅதிமுக அதற்கு இடங்களை ஒதுக்கியது. காரணம் பாஜகவுக்கு இருந்த தேசிய அளவிலான செல்வாக்கு.

தெலங்கானா பிரிக்கப்படாமலிருந்த ஆந்திரப்பிரதேசத்தில் பாஜக முற்றிலும் பலகீனமாக இருந்தது. அங்குநடந்த 2014 சட்டசபைத் தேர்தலில் 2.2 சதவீதமும், 2019 தேர்தலில் 0.9 சதவீதமும் வாக்குகளைப் பெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் 2014-இல் 7.2 சதவீதமும், 2019-இல் 1 சதவீதமும் வாக்குகளைப் பெற்றது.

1970 களிலிருந்து மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடக் கட்சிகள்குறிப்பாக திமுகமதத்தைவிட  சாதியால்மொழியால்  வரையறுக்கப்பட்டுப் பிரபலமான ஓர் இனத்தின் மீதான அரசியல் சித்தாந்தத்தைக் கட்டமைத்துக்கொண்டவை.  

சமீபகாலம் வரையிலும் பலவீனமாக இருந்த கேரளா, தெலங்கானா, ஒடிஷா, மேற்கு வங்கம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், நாகலாந்து, மிஜோரம் ஆகிய வெவ்வேறு மாநிலங்களில் பாஜக கடந்த இரண்டு பத்தாண்டுகளில் வேகமாக வளர்ந்திருக்கிறது. 2014-இல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய நாளிலிருந்து பாஜக பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாகவும், மும்முரமான குடிமைச் சமூகத் திரட்சியின்  மூலமாகவும் அந்த மாநிலங்களில் அபரிமிதமாக வளர்ந்தது. மேலும் அதன் அரசியல் எதிரிக்கட்சிகள் பலமற்றுக் கிடந்ததும் பாஜகவுக்கு வசதியாகப் போயிற்று.

இருபதாம் நூற்றாண்டில் தெற்கிலும், கிழக்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் பாஜக ஏன் பெரிதாக வளரவில்லை என்றால் அது வடக்கிலும், மேற்கிலும் பின்பற்றிய மேல்தட்டு மற்றும் மேல்தட்டு நடுத்தரவர்க்கத்துச் சாதிகளை ஈர்க்கும் வழிமுறைகளை ஊக்குவித்ததுதான் காரணம். என்றாலும் சில பகுதிகளில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அக்கட்சி சாதித்த வளர்ச்சி, பாஜகவால் தமிழ்நாட்டிலும் கலாச்சார எல்லைகளைத் தாண்டமுடியும் என்பதைத்தான் காட்டுகிறது.

தமிழ்நாடு, பாஜகவின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முட்டுக்கட்டைப் போடுகிறது. ஏனென்றால் 1970-களிலிருந்து மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய திராவிடக் கட்சிகள், குறிப்பாக திமுக, மதத்தைவிட  சாதியால், மொழியால்  வரையறுக்கப்பட்டுப் பிரபலமான ஓர் இனத்தின் மீதான அரசியல் சித்தாந்தத்தைக் கட்டமைத்துக்கொண்டவை. மேலும் இந்துக்களை (குறிப்பாக இடைநிலைச் சாதிகளைச் சேர்ந்தவர்களை) இஸ்லாமியர்களோடும், ஓரளவு கிறித்துவர்களோடும் ஒன்றிணைத்து துணைக் கலாச்சாரங்களைத் திராவிடக் கட்சிகள் உருவாக்கி வைத்திருந்தன.

மதச்சிறுபான்மையரின் ஆதரவைப் பெற்றபோதும், அஇஅதிமுகவும், காங்கிரஸும் அந்த மாதிரியான மதங்களுக்கிடையிலான சமூகத் தொடர்புகளைக் கட்டமைத்துக் கொள்ளவில்லை. திமுக ஆழமாக வேரூன்றிய வடக்கு மற்றும் மத்திய தமிழ்நாட்டைவிட, அஇஅதிமுக-காங்கிரஸ் கோட்டைகளான தெற்கு, மேற்குத் தமிழ்நாட்டில் பாஜகவும், ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற இந்து தேசியவாத அமைப்புகளும் வளர்ந்ததற்கு அதுதான் காரணம்.

எனினும், திமுகவும், அஇஅதிமுகவும் 1990 களிலிருந்து குடிமைச் சமூக மக்களைத் திரட்டும் பணியில் போதிய அக்கறைகாட்டவில்லை. அதனால் குடிமை சமூகத்தில் அவற்றின் செல்வாக்கு ஓர் எல்லைக்குள் நின்றுவிட்டது; இதனால், பாஜக உட்பட வேறு அரசியல் பார்வைகள் கொண்ட சக்திகள் வளர்வதற்கு வழி ஏற்பட்டது.

இதுவரை, திராவிட அரசியல் சக்திகளைச் சாராமல், திராவிடச் சித்தாந்தத்தை மறுதலித்த தமிழ் தேசிய அம்சங்களை மீள் உருவாக்கம் செய்த கட்சிகளும்,  நாம் தமிழர் கட்சியும், தேசிய முற்போக்குத் திராவிடக் கழகமும், சில இடைநிலைச் சாதிகளைத் திரட்டிய பாட்டாளி மக்கள் கட்சியும், கொங்குநாடு முன்னேற்ற கழகமும், தலித் சாதிகளை ஒன்றுதிரட்டிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், புதிய தமிழகமும், ஆதி தமிழர் பேரவையும்தான் இந்த வளர்வதற்கான வழிகளைப் பயன்படுத்திக் கொண்டன.

சாதியையும், மொழியையும் குறைவாக மையப்படுத்தியதால் சில கட்சிகள் சரியாக வளரவில்லை. அவற்றில் பாஜக மட்டுமல்ல, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும், ரஜினிகாந்த் தொடங்க இருந்த மக்கள் சேவைக் கட்சியும் அடக்கம்.

கேள்வி: ஸ்டாலினைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? திமுக வேறொரு பரிணாமத்தை அடையுமா? இனி அதன் குணாம்சம் என்னவாக இருக்கும்?

நரேந்திர சுப்ரமணியன்: ஏழு தசாப்தங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து, குறிப்பாக 1960களிலிருந்து, திமுக தமிழ்நாட்டில் ஆகப்பெரும் சக்தியாக விளங்குகிறது. அதன் அதிலிருந்து உருவான அஇஅதிமுகவுடன் சேர்ந்து திமுக, புதிய மக்கள் திரட்சி வடிவங்களையும், வேறுமாதிரியான ஆட்சி வடிவங்களையும் அறிமுகப்படுத்தியது. திராவிடக் கட்சிகள் வெகுமக்கள் உரையாடலின்மூலம் அடித்தட்டு மக்களை மேல்தட்டு மக்களிடமிருந்துப் பிரித்துக் கொண்டுவந்து பல்வேறு இடைநிலை, அடிநிலை சாதிக்குழுக்களைத் திரட்டி, மேல்தட்டுப் பிரிவினரிடமும், அரசு அதிகாரிகளிடமும் பரவலாகப் பெரும் ஆதரவோடு புகழ்பெற்றிருந்த காங்கிரஸை தோற்கடித்தன. இடைநிலை, அடிநிலை குழுக்களுக்கு நிறைய செல்வ வளங்களை புதிய கொள்கைகள் மூலம் மடைமாற்றின திராவிடக்கட்சிகள். சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை 41சதவீதத்தி-லிருந்து 69 சதவீதமாக உயர்த்தின; மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தன. அந்தத் திட்டத்தின் வெற்றியால் உந்துதல் பெற்ற பல மாநிலங்கள் அதைச் சுவீகரித்துக்கொண்டன; அதைப் போன்று தேசிய அளவில் கொண்டு வரப்பட்ட திட்டம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம். திமுகவும், அஇஅதிமுகவும் 1990 களிலிருந்து மக்களைத் திரட்டும்பணியை நிறுத்திவிட்டபோதிலும், மேற்சொன்ன கொள்கைகளின் அம்சங்கள் சிலவற்றைத் தக்கவைத்துக் கொண்டன.

1990 களில் புதிய தாராளமயக் கொள்கையை நோக்கி நாடு திரும்பியதைத் தொடர்ந்து, திராவிடக் கட்சிகள் ஆட்சியைப் பற்றிய தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக்கொண்டன. பொதுத்துறையை விரிவாக்கம் செய்வதிலிருந்து தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் கொள்கைகளுக்கு அவை மாறின. புதிய தாராளமயக் கொள்கையில் உள்ள சில பிற்போக்கான அம்சங்களை பின்பற்றத் தொடங்கியதால், சில குடிமைச் சமூகக் குழுக்களின் எதிர்ப்பை சம்பாதித்தன. உதாரணமாக, இடஒதுக்கீட்டில் மேலும் புதிய சாதிகளைச் சேர்க்கும்படி அல்லது இட ஒதுக்கீட்டில் புதிய அடுக்குகளைக் கட்டமைக்கும்படி ஏராளமான சாதிக் குழுக்கள் கோரிக்கை விடுத்தன. அந்தக் குழுக்கள் நீட் தேர்வை எதிர்த்தன; மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில இடஒதுக்கீட்டின் மீது வைக்கப்பட்ட வரம்புகளையும் எதிர்த்தன. கூடங்குளம் அணுமின்நிலையம், காவிரிப்படுகையில் ஹைட்ரோகார்பன் திட்டம் போன்ற குறிப்பிட்ட திட்டங்களை பல்வேறு குழுக்கள் எதிர்த்தன.

அந்த மாதிரியான எதிர்ப்புகளை அடக்க, திமுக மானியங்களை அதிகரித்தது. உயர் கல்வியிலும் அரசு வேலைகளிலும் மலைச்சாதியினருக்குத் தனியாக 1 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது; 1989-இல் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்காகவும், சீர்மரபினருக்காகவும் இட ஒதுக்கீட்டில் 20 சதவீத ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. 2009இ ல் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கென தனியாக 3 சதவீத உள்ஒதுக்கீட்டையும் திமுக அறிமுகப்படுத்தியது.

அதைப்போலவே அஇஅதிமுக அரசு, பாமக கொடுத்த அழுத்தத்தினால்,  மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கென்று 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. அதனால் மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் மற்றவர்களின் பங்கு 2.5 சதவீத-மாகவும், சீர்மரபினரின் பங்கு 7 சதவீதமாகவும் குறைந்தன.

மக்களைத் திரட்டும் பணியிலும், கொள்கை விஷயத்திலும் திமுகவின் அணுகுமுறைகள் மாறிய காலகட்டத்தில், 1980 களிலிருந்தே, கருணாநிதியின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் வளர்த்தெடுக்கப்பட்டார். ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு  வந்ததிலிருந்து, புதிய தாராளமயக் கொள்கைப்படி நிறுவனங்களின் ஆளுகையும் ஓரளவு மறுவிநியோக நடவடிக்கைகளும் ஒன்றுசேர்ந்த பரவலான போக்குகளைத்தான் ஸ்டாலின் தொடர்ந்து கடைப்பிடிப்பார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

இரண்டு திராவிடக் கட்சிகளும் ஊழலை நிறுவனமயமாக்கிவிட்டன என்பது அனைவரும் அறிந்ததுதான். அதனால் அது தேர்தல் பரப்புரைகளில் ஒரு பெரும் பிரச்சினையாகப் பேசப்படுவதில்லை. தேர்தல் என்றால் காசு என்ற மனநிலைக்கு வாக்காளர்களும் வந்துவிட்டார்கள். இதற்குக் கருத்தியல் ரீதியிலான கட்டமைப்பு ஏதாவது இருக்கிறதா? இந்த மாநிலத்து மக்கள் நிதிப்பரிவர்த்தனை மனநிலை கொண்டவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களா?

தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும், ஊழல் என்பது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் அரசுத் திட்டங்களின் முழுமையான பலன்கள் குடிமக்களுக்குப் போய்ச்சேர்வதைத் தடுத்து தங்களுக்கான பங்குகளைச் சுரண்டுவதைத்தான் குறிக்கிறது. மிகக்குறைவான செல்வம்தான் தேர்தல் பரப்புரையின்போது வாக்காளர்களுக்கு மடைமாற்றப்படுகிறது. பணத்தை வாங்கிக்கொள்ளலாம்; ஆனால் சலுகைகள் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கு தாங்கள் ஒன்றும் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்று வாக்காளர்கள் நினைக்கிறார்கள்.

இட ஒதுக்கீடுக் கொள்கைகள், மதிய உணவுத்திட்டம், கல்வியிலும் அடிப்படை சுகாதாரத்திலும் செய்யப்படும் முதலீடுகள், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் கிடைக்கும் பலன்கள்தான் மக்கள் வாக்களிக்களிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தத் திட்டங்கள்தான் மக்கள் நலனில் நல்லதோர் விளைவை ஏற்படுத்தி, புதிய தாராளமய ஆட்சியின் பிற்போக்கு விளைவுகளை மட்டுப்படுத்துகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் வளர்ச்சி என்பது ஓரளவுக்கு சமதர்மமாக இருப்பதற்கும் அவையே முக்கிய காரணங்கள். ஆதலால், திராவிடக்கட்சிகள் மக்களோடு பேசி அவர்களைத் திரட்டுகின்ற அரசியல் பணியை நிறுத்திவிட்டாலும்கூட, அக்கட்சிகளின் தேர்தல்ஆதிக்கம் என்பது அப்படியேதான் இருக்கிறது.

இட ஒதுக்கீடுக் கொள்கைகள்மதிய உணவுத்திட்டம்கல்வியிலும் அடிப்படை சுகாதாரத்திலும் செய்யப்படும் முதலீடுகள்தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றில் கிடைக்கும் பலன்கள்தான் மக்கள் வாக்களிக்களிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்றன.

கேள்வி: திராவிட இயலை எதிர்க்கும் தமிழ்தேசியவாதத்தின் மறுஎழுச்சியை இப்போது நாம் காண்கிறோம். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

நரேந்திர சுப்ரமணியன்: இந்தப் போக்கு பெரும்பாலும் 2000-களில் தேமுதிகவோடும், 2016-க்குப் பின்பு நாம் தமிழர் கட்சியோடும் சம்பந்தமுடையது. தேமுதிக, திராவிடக் கட்சிகளின் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு எழுந்த வெகுமக்களியமான மாற்றுச் சக்தி. அது திராவிட முத்திரையைத் தக்கவைத்துக்கொண்டது. அதன் தலைவர், எம்ஜிஆரின் உணர்ச்சிமயமான பாணியை மீளுருவாக்கம் செய்துகொண்டார். நாம் தமிழர்க் கட்சியின் தமிழ் தேசிய வாதம், பிரதானமான திராவிடக்கட்சிகளின் போக்கைவிட, பெரும்பாலும் இலங்கைத் தமிழர்களைச் சுற்றியே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் 2016 இல் நாம் தமிழர்க் கட்சி பெற்ற 1.1 சதவீத வாக்குவங்கி 2021 சட்டசபைத் தேர்தலில் 6.9 சதவீத-மாக உயர்ந்தது. இந்த வளர்ச்சி பாக் ஜலசந்திக்கு அப்பாலுள்ள தமிழர்களுக்கு அந்தக் கட்சி கொடுத்த ஆதரவினால் ஏற்பட்டது அல்ல. ஆட்சிக்கு எதிராக புகைந்துக் கொண்டிருந்த மக்கள் அதிருப்தியை அந்தக் கட்சி அறுவடை செய்தது. காவிரி நீரில் தமிழ்நாட்டின் பங்கு, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் பாதியை தனியார்மயமாக்கும் கொள்கை, சென்னை- சேலம் இணைப்புச்சாலைத் திட்டம் ஏற்படுத்தக்கூடிய சுற்றுப்புற பாதிப்புகள், திருட்டு மணல் கொள்ளை ஆகிய பிரச்சினைகளில் கொதித்துக் கிடந்த மக்களின் கோபத்தின் பலன் நாம் தமிழர் கட்சிக்குச் சென்றது.

தேமுதிக 2000-களில் பெற்றிருக்கும் வாக்கு வங்கி வளர்ச்சியும், 2021இ ல் நாம் தமிழர் கட்சி பெற்றிருக்கும் தேர்தல் அரசியல் வளர்ச்சியும், திராவிடம் அல்லாத தமிழ் தேசியம் மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது என்பதைவிட, புதிய மற்றும் கூடுதலான ஜனநாயக முறையிலான ஆட்சியைத் தரக்கூடியது என்று கருதத்தக்க மாற்று அரசியல் சக்திகளுக்கு கணிசமான மக்கள் ஆதரவு காத்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான் அதிகமாகச் சுட்டிக்காட்டுகின்றன.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles