Read in : English

Share the Article

இயற்கை விவசாயத்தை பரப்பும் நிறுவனங்கள் இந்தியாவில் பல உள்ளன. நிலைத்த நீடித்த வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு லாபமற்ற முறையில் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள், நலம், பொருளாதார வளத்தை முன்னிறுத்தி பிரசாரம் செய்வதுடன், அது சார்ந்த செயல்களை ஊக்குவிக்க பயிற்சியும் அளிக்கின்றன. அதில் முன்னோடி நிறுவனங்களில் ஒன்று புதுச்சேரி ஆரோவில் பகுதியில் இயங்கும் நிலைத்த நீடித்த வளர்ச்சிக்கான நிறுவனம் Sustainable Livelihood Institution. இதன் தலைமைப் பொறுப்பு வகிப்பவர் ராமசுப்ரமணியம். இயற்கை விவசாயம் குறித்து, இருபது வருடங்களாக தமிழகத்தின் பல பகுதி விவசாயிகளுடன் பயணித்து வருபவர். இயற்கை விசாயகளின் உற்பத்தியை சந்தை படுத்துதல் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவின் முதல் இணய வழி இயற்க்கை விவசாய இதழை 1999ல் நிறுவி நடத்தி வந்தார். தற்போது இயற்கை விவசாயம் தொடர்பாக ஓர் ஆராய்ச்சி குழுவை நிறுவி அதன் மூலம் கொள்கை பரிந்துரை அளிக்கும் பணி செய்து வருகிறார். இவரைப் பற்றி www.samanvaya.com என்ற இணயதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை விவசாயத்தை அமல்படுத்தியதால் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்ற பரபரப்புக்கு மத்தியில் ‘இன்மதி’ இணைய இதழ் சார்பில் அது குறித்து அவருடன் நடத்திய உரையாடலின் ஒரு பகுதி:

Ramasubramaniam, president Sustainable Livelihood Institution

கேள்விஇலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பான சூழல் நிலவுகிறதே

ராம்: அறிந்தேன். அதை தீவிரமாக கவனித்து வருகிறேன். இலங்கையில் உள்நாட்டுப் போரைத் தொடர்ந்து கொரானா தொற்று போன்ற காரணங்களால் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனால், சிக்கன நடவடிக்கையாக அதிகம் செலவு பிடிக்கும் திட்டங்களை கவனித்து, செலவை குறைக்கும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, உணவு உற்பத்திக்கான ரசாயன உரங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து இயற்கை விவசாயத்தை முழு அளவில் ஆதரிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

கேள்வி: இந்த அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமாகுமா

ராம்: இலங்கை அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு இது. அங்குள்ள விவசாய உற்பத்தி சூழலை ஆராய்ந்து எடுத்தது அல்ல. இலங்கை விவசாயம், பெரும்பாலும் ரசாயன இடுபொருட்களை நம்பித்தான் உள்ளது. யூரியா, பொட்டாஷ், களைக் கொல்லி, பூச்சு மருந்து பயன்பாடு அதிக அளவில் உள்ளது. கிட்டத்தட்ட, 95 சதவீதம் பரபரப்பில் விவசாயம் அப்படித்தான் நடக்கிறது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் திடீர் என, ஒரே இரவில், இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறோம் என்ற அறிவிப்பு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் பின்புலம் வேறானது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்களே தவிர, அதை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றே தெரிகிறது.
இந்த அறிவிப்பால் விவசாயிகள் திணறிப்போயுள்ளனர். அவர்களக்கு, ரசாயன இடுபொருள் பயன்படுத்தி நடத்தும் சாகுபடி முறை மட்டுமே தெரியும். இதனால் கொந்தளிப்பு நிலவுகிறது. இதை சமாளிக்க முடியாத அரசு, ரசாயன உரம் மற்றும் இடுபொருட்களை இறக்குமதி செய்து விற்க தனியாருக்கு அனுமதி அளிப்பதாகவும், உரம் இறக்குமதி செய்யும் நடவடிக்கையில் அரசு ஈடுபடாது என்றும் அறிவித்துள்ளது.

இதிலிருந்து, இலங்கை அரசின் நோக்கம் இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஊக்குவிப்பதல்ல எனத் தெரிகிறது. செலவினங்களை குறைக்கும் வழிமுறைகளில் ஒன்று என புரிந்து கொள்ளலாம். தற்போது கூட சீன அமைச்சர், இலங்கையில் பயணம் செய்துள்ளார். அவரிடம் சீனாவிடம் வாங்கிய கடனை திரும்பிச் செலுத்தும் காலக்கெடுவை நீட்டிக்கும் படி கேட்டுள்ளது இலங்கை அரசு. இதற்கு முன் இத்தகைய கோரிக்கையை இந்தியா அரசுக்கும் வைத்துள்ளது. இவற்றில் இருந்து அந்த அரசின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

ஒரே இரவில், இயற்கை விவசாயத்துக்கு மாறுகிறோம் என்ற அறிவிப்பு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் பின்புலம் வேறானது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்களே தவிர, அதை அமல்படுத்துவதற்கான திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்றே தெரிகிறது.

கேள்வி: இயற்கை விவசாயத்தை அமல்படுத்தும் அறிவிப்புக்கும், உணவுப் பொருள் தட்டுப்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது

ராம்: அது பற்றித்தான் சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கை அரசு இயற்கை விவசாயத்தை அமல்படுத்துவது குறித்து அறிவித்தவுடனே, இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படப்போகிறது என உலகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஏற்படுத்துவது யார் என்று பார்க்க வேண்டும். பூச்சி மருந்து, ரசாயன உரம் உற்பத்தி நிறுவனங்களே இந்த பிரச்சாரத்தை நடத்திவருகின்றன என்றே கருதுகிறேன்.

ஒரு சின்ன உண்மையை பார்க்கலாம். விவசாயத்தில் மாறுதல் என்று அறிவித்த உடனே உணவுத்தட்டுப்பாடு எதுவும் ஏற்பட்டு விடாது. விவசாயம் சார்ந்தே அந்த நாட்டின் உணவு பாதுகாப்பு இருக்குமேயானால் அந்த அறிவிப்பின் தாக்கம், ஒரு போக சாகுபடிக்கு பின்னர் தான் தெரியவரும். அதாவது, நான்கு முதல் ஆறுமாதம் வரை ஆகும். அப்படியான காலம்  எதுவும் கடந்துவிடவில்லை. ஆனால், உணவுத்தட்டுப்பாடு ஏற்படப்போவதாக பரப்புரை நடக்கிறது; அங்கு உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உணர்ந்து வருகிறது.
இது ஒரு மாயையான தோற்றம். இந்த பிரசாரம் செயற்கையாக பன்னாட்டு உரம் மற்றும் பூச்சிக் கொல்லி உற்பத்தி நிறுவனங்களால் முன்னெடுக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது.

கேள்வி: பாலிசி அளவில் இந்த திட்ட அறிவிப்பு சரியானதா
ராம்: இயற்கை விசாயத்துக்கு மாறுவதாக இலங்கை அறிவிப்பு வெளியிட்ட விதம் ஒரு தவறான முன்னுதாரணம். எந்த மாற்றத்தையும் விவசாயிகளிடம் திணிக்க முடியாது. சமீப காலத்தில் இந்தியாவிலும் அதனை உணர்ந்துள்ளோம்.

கேள்வி: தவறு என்பதை எப்படி கணிக்கிறீர்கள்

ராம்: உலகிலே அதிக இயற்கை விவசாயிகளைக் கொண்ட நாடு இந்தியா. ஆனால், இந்திய அரசாலோ, அரசு நிறுவனங்களாலோ, விவசாய பல்கலைக் கழகங்களாலோ, இயற்கை விவசாயம் செய்யும் இந்திய விவசாயிகளுக்கு மிகக்குறைந்த ஆதரவுதான் கிடைக்கிறது. ஆதரவு இல்லை என்றே கூட சொல்லலாம். எட்டு ஆண்டுகளுக்கு முன், டில்லி, ஜவஹர்லால் நேரு பல்லைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தேன். அதில், இந்தியாவில் இயற்கை விவசாயத்துக்கு அரசு மற்றும் பல்கலைக் கழங்கள் வழங்கும் ஆதரவு பற்றிய தரவுகளை அலசியிருந்தேன்.

விவசாய பல்கலைக்கழக பாடத்திட்டங்களில், இயற்கை விவசாய நுட்பங்கள் பற்றிய பாடத்திட்டங்களின் புள்ளி விரவத்தையும் விவாதித்திருந்தேன். மிகக்குறைந்த அளவிலே தரவுகள் இருந்ததை காண முடிந்தது. இந்தியாவில் விவசாயம் கற்பிக்கும் 52 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுாரிகளில், இரண்டில் மட்டுமே இயற்கை விவசாயத்துக்கு தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது.  அரசின் ஆதரவில் இயற்கை விவசாயம் வளரவில்லை என்பதை இந்த தரவுகள் மூலம் தெரிந்து கொண்டேன். இங்கு பெரும்பாலும் இயற்கை விவசாயம், நம்மாள்வார் போன்ற சமூக ஆர்வலர்கள் முயற்சியால்தான் வளர்ந்துள்ளது.

அரசு அறிவிப்பு வெளியிட்ட ஒரே இரவில், விவசாய உற்பத்தி முறையில் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்பது நம்ப முடியாதது. விவசாயம் போன்ற நீண்ட உற்பத்தி நடைமுறைகளில் அது சாத்தியப்படாது. உலகெங்கும் ரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அரசின் ஆதரவில்தான் இயங்கி வருகின்றன. இந்தியாவில் ‘என்டோ சல்பான்’ என்ற கொடும் பூச்சிக் கொல்லியை தடை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது, ‘ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு பறிபோகும்’ என்ற காரணத்தை கூறி, அந்த நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்த வரலாற்றை மறக்க முடியாது. அதை எல்லாம் தாண்டி இயற்கை விவசாயம், இந்திய மண்ணில் வளர்ந்து வருகிறது. தற்போதுதான், சில திட்டங்களை இந்திய மற்றும் மாநில அரசுகள்  கொண்டுவந்துள்ளன.

இலங்கை அரசு இயற்கை விவசாயத்தை அமல்படுத்துவது குறித்து அறிவித்தவுடனே, இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்படப்போகிறது என உலகம் முழுதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஏற்படுத்துவது யார் என்று பார்க்க வேண்டும். பூச்சி மருந்து, ரசாயன உரம் உற்பத்தி நிறுவனங்களே இந்த பிரச்சாரத்தை நடத்திவருகின்றன என்றே கருதுகிறேன்.

கேள்வி: இலங்கையிலும் இதே நிலைதானா

ராம்: இலங்கையில் இயற்கை விவசாயம் தொடர்பாக ஒரு பயணத்தை சில வருடங்களுக்கு முன் மேற்கொண்டேன். இயற்கை விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் அங்கு இருக்கின்றன. ஆனால் மண்ணின் தன்மையில் குறைபாடு உள்ளது. கண்டபடி ரசாயன உரங்களை பயன்படுத்தியதால், அங்கு  மண் மலடாகியுள்ளது. அதை சீரமைக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். அங்குள்ள விவசாயக் களப்பணியாளர்களில் பலர், எங்கள் மையத்தில், இயற்கை முறை விவசாயம் குறித்து பயிற்சிகள் எடுத்துள்ளனர். எனவே, அங்கு படிப்படியாக இயற்கை விவசாயத்தை பெருக்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இயற்கை உரங்கள் போட்டு அந்த மண்ணை வளப்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்தின் முக்கிய அம்சமே, மண்வளம் தான். மண் வளத்தை அதிகரித்தால் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி அதிகரிக்கும். அதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்திய விவசாயிகள் இதை சாதனையாக செய்துள்ளனர்.

அதுபோல், பயிர் சுழற்சிமுறையும் மிகவும் அவசியம். சொந்த நிலத்திலேயே தயாராகும் ரசாயனமற்ற விதை, உரம், பூச்சிதடுப்பு போன்ற இயற்கை இடுபொருட்களும் தேவை. இவை எல்லாம் ஒருங்கிணைந்தால்தான், இயற்கை விவசாயம் வளமிக்க உற்பத்தியை தரும். அதை ஒரே நாளிலோ, ஒரே உத்தரவு மூலமோ சாதித்து விட முடியாது.

கேள்வி: இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில்தானே, சீனாவில் இருந்து இயற்கை இடுபொருளான உரத்தை இறக்குமதி செய்தது இலங்கை. அதில், பிரச்னை இருப்பதாக சரக்கு கொண்டுவந்த கப்பலைத் திருப்பி அனுப்பி, பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்துள்ளதே

ராம்: உண்மைதான். அது எனக்கு வேடிக்கையாக பட்டது. இயற்கை விவசாயத்தின் மீது அக்கறையுடன் இலங்கை அரசு இருந்தால், இலங்கை விவசாயிகளுடன் கலந்து பேசி அல்லவா அந்த உர இறக்குமதியை செய்திருக்க வேண்டும். முன் திட்டமிடல் இல்லாது நடந்த செயல் அது. வாங்கியபின், தரமற்றது விவசாயத்துக்கு பயன்படாது என கண்டறிந்து  பொருளாதார இழப்பை சந்தித்திருப்பது, ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பொறுப்புடன் செயல்பட வில்லை என்பதையே காட்டுகிறது.

மீண்டும் சொல்கிறேன். மாற்றம் என்பதை ஒரே நாளில் செய்துவிட முடியாது. இயற்கை விவசாயத்தை அமல்படுத்தியதால், இலங்கையில் உணவுப்பஞ்சம் என்பது ஏற்கக்கூடியது அல்ல. அது பன்னாட்டு வியாபரிகள் நடத்தும் அவதுாறு பிரசாரம் என்றே நான் நினைக்கிறேன். இது போன்ற அவதுாறுகளை புறக்கணிக்க வேண்டும். இலங்கையில் விவசாயம் படிப்படியாக, இயற்கை முறைக்கு மாறினால், தன்னிறைவு அடைய வாய்ப்பு உண்டு.


Share the Article

Read in : English

Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles Green path to health: Have a different keerai every day