Read in : English

Share the Article

ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி) டாலர் பொருளாதாரம் உள்ள நாடுகளின் பட்டியலில் 2007-இல் இந்தியா நுழைந்தது. 2024-25-க்குள் 5 டிரில்லியன் பொருளாதார அந்தஸ்தை அடையும் இலக்கை இந்தியா 2018-இல் நிர்ணயித்தது. இதற்கிடையில் சில மாநிலங்கள் டிரில்லியன் டாலர் பொருளாதார அந்தஸ்தை எட்டும் தொலைநோக்குக் கனவை, இலக்கை, லட்சியத்தை தங்களுக்கு விதித்துக்கொண்டன. இந்தியாவில் நடைபெறும் பொருளாதார செயற்பாடுகள் அளவின் பிரதிபலிப்புதான் இந்த மாநிலங்களின் லட்சியமும் இலக்கும். என்றாலும் இது கொஞ்சம் பேராசைதான்.

2024ஆம் ஆண்டு என்று உத்தரபிரதேசமும், 2025ஆம் ஆண்டு என்று மகாராஷ்ட்ரமும், 2030ஆம் ஆண்டு என்று தமிழ்நாடும் இந்த இலக்கை எட்டுவற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளன. குஜராத், ஆந்திரபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களும் இதே இலக்கை நோக்கியே நடைபோட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், 2020-21 நிலவரப்படி, அதன் பொருளாதாரம் 300 பில்லியன் டாலர் மதிப்பில், அதாவது சுமார் 22.2 லட்சம் கோடி மதிப்பில், இருக்கிறது. டிரில்லியன் டாலர் இலக்கை, அதாவது தற்போதைய மதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமான பொருளாதார லட்சியத்தை, 2030-க்குள் எட்டவேண்டுமென்றால், தமிழ்நாட்டிற்கு மேலும் 23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் தேவை.

பொருளாதார வளர்ச்சிக்கு அதிமுக்கியமான காரணி மின்சார உற்பத்தி, விநியோகம் (டிஸ்ட்ரிபியூஷன்) மற்றும் மின்பரப்பு (டிரான்ஸ்மிஷன்). ஆனால் நாடு முழுவதும் கடந்த இரண்டு தசாப்தங்களாகவே இந்தத் துறை சோதனைகளில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. சில முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றிய அரசு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாலும், மாநிலங்கள் தங்களின் பிராந்திய பொருளாதாரங்களில் இருக்கும் அமைப்பியல் குறைபாடுகளைக் கண்டுகொள்ளவே இல்லை. உதாரணத்திற்கு, மற்ற மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் இருக்கும் தொழில்நுட்பரீதியான, விநியோக ரீதியான நஷ்டங்கள் அதிகம்.

எல்லாத் துறைகளுக்கும் மின்சாரம் வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியான மாநிலம்தான். கிராமங்களை 100 சதவீதம் மின்மயப்படுத்தலில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு ஏற்கனவே முன்னணியில் இருந்தது. மேலும், தனிநபர் மின்நுகர்வு உச்சப்பட்டியலில் இருக்கும் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.


எல்லாத் துறைகளுக்கும் மின்சாரம் வழங்குவதில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரியான மாநிலம்தான். கிராமங்களை 100 சதவீதம் மின்மயப்படுத்தலில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு ஏற்கனவே முன்னணியில் இருந்தது. மேலும், தனிநபர் மின்நுகர்வு உச்சப்பட்டியலில் இருக்கும் 10 மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.  இந்த மாநிலத்தில் 2018-19இ-ல் மின்சாரத்துறைக்கான மானியம் 21.1 சதவீதம் என்ற அளவில் இரண்டாவது பெரிய மானியமாக இருந்தது; முதலாவது உணவுத்துறைக்கான மானியம் (36.8 சதவீதம்). இப்படியான சலுகைகள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

நாட்டிலே இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பிராந்திய பொருளாதார நிலையை இலகுவாக்குவதில் மின்சாரத்துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சமீபத்தில் நடந்த பல்வேறு ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன., “தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில், மொத்த மின்நுகர்வும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு – தொழில் மற்றும் வேளாண்மை உற்பத்தி மதிப்போடு  தொடர்புடையது. அதுமட்டுமில்லை. ஒவ்வொரு துறையின் மின்நுகர்வும் அந்தந்தத் துறையின் மொத்த உற்பத்தி மதிப்போடு தொடர்புடையது”என்று டில்லியில் இருக்கும் டெரி இன்ஸ்டிட்யூட் ஓர் ஆய்வில் (2017 -2030) சொல்லியிருக்கிறது.

கடந்த பத்தாண்டில் மின்சார உற்பத்திக்கான செலவு பல மடங்கு உயர்ந்துள்ளது. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ) தொடர்ந்து நஷ்டங்களையே சந்தித்துக் கொண்டிருக்கிறது. அதிகச் செலவுகள், குறைவான வரவுகள் இதற்குக் காரணம். அடிப்படையில் இதற்கெல்லாம் மூலக்காரணம் அமைப்பியல் ரீதியிலான, நிறுவன ரீதியிலான சீர்த்திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுதான். தமிழ்நாட்டின் மின்சார அமைப்புகள் டான்ஜெட்கோ மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்புக் கழகம் (டான்டிரான்ஸ்கோ). இவற்றின் கடன்களையும், மற்றும் மாநில மின்பரப்புச் சேவைகளின் (எஸ்டியூ) கடன்களையும் கூட்டிப்பார்த்தால் மொத்தக்கடன் 1.99 லட்சம்கோடி ரூபாய் ஆகும். அரசுக்குச் சொந்தமான மின்சார உற்பத்தி நிறுவனத்தின் நிலுவைக் கடன்கள் ரூபாய் 1.24 லட்சம்கோடி (62.31 சதவீதம்) (அரசுதந்த கடனைத் தவிர்த்து); மற்றும் ரூபாய் 1.34 லட்சம்கோடி (67.33 சதவீதம்) (அரசுக் கடனான ரூபாய் 4,582.45 கோடியையும், ‘உடேய்’ கடனான (Ujwal DISCOM Assurance Yojana – UDAY)  4,563 கோடி ரூபாயையும் சேர்த்து).

வேளாண்மை மின்சாரத்தை அளப்பது

வேளாண்மைத் துறைக்கு இலவச மின்சாரம் அளிக்கப்படுவது மாநிலத்தின் அமைப்பியல் குறைபாடுகளில் ஒன்று. பெரும்பான்மையான மானியங்கள் பெரிய விவசாயிகளைப் போய்ச் சேர்வதால் சிறு விவசாயிகளுக்குத்தான் பிரதானமான இழப்பு. வீட்டு மின்சாரத் துறையிலும், இரண்டு தண்ணீர் வாரியங்களிலும் பல்வேறு பிரச்சினைகளால் பெரும் நஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் ஏற்படுத்தி, பலமான சீர்திருத்தம் செய்வதை முன்மொழிந்திருக்கும் ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்படி, இந்தத் துறைகளை நேர்படுத்தி சீர்படுத்த வேண்டிய அவசரத் தேவை இருக்கிறது.

தற்போதைய திமுக அரசு வெளியிட்டிருக்கும் “தமிழ்நாடு அரசு நிதிநிலைமை பற்றிய வெள்ளை அறிக்கை” சொல்லியிருக்கும் சேதி இது: மாநிலத்தின் பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக, மின்சார உற்பத்தி, பகிர்மான நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான நிலுவைக் கடன்களை எதிர்கொண்டிருக்கின்றன. மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் அந்தக் கடன்கள் 36 சதவீதம். ஆனால் அனுமதிக்கப்பட்ட வரம்பு 25 சதவீதம்தான். முக்கிய மாநிலங்களில் இது ஆகப்பெரிய அளவிலான கடன்நிலுவை விகிதம். ஆதலால் தமிழ்நாடு திவாலாகாமல் இருக்க வேண்டுமென்றால், மின்சாரத் துறைச் சீர்திருத்தம் மிகமிக அவசியம். இதுவரை, அரசுக்கு இந்த  விஷயத்தில் பெரிதாக ஆர்வமோ, நம்பிக்கையோ இருந்தது போலத் தெரியவில்லை.

இத்தனை அம்சங்களையும் மனதில் வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டு  மின்சாரத்துறையின் நிலையைப் பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கும். மத்திய மின்சார ஆணையம் தந்திருக்கும் தகவல் இது: 2021 டிசம்பர் நிலவரப்படி, நாட்டில் மொத்தமாக நிர்மாணிக்கப்பட்ட மின்திறனில் 20 சதவீதம் மாநில அரசுகளிடமும், 56 சதவீதம் தனியார் துறையிடமும், 24 சதவீதம் ஒன்றிய அரசிடமும் இருக்கிறது.

நாட்டின் மொத்த மின்திறனில் தமிழ்நாட்டின் பங்கு 9 சதவீதம்; நாட்டின் தென் பிராந்தியத்தில் அதன் பங்கு 32 சதவீதம். மாநிலத்தின் மொத்த திறனைவிட மூன்று மடங்கு பெரியது தனியார் துறையின் பங்கு; இதுதான் நாட்டில் அதிக பங்கு வகிக்கும் துறைகளில் ஒன்று. நாட்டிலே அதிக அளவு காற்றிலிருந்தும், சூரிய ஒளியிலிருந்தும் மின்சாரம் உற்பத்திசெய்யும் மாநிலம் தமிழ்நாடுதான்.

தமிழ்நாடு அரசு நிஜமாகவே இந்த டிரில்லியன் டாலர் கனவைத் தொடர்வது போலத் தெரியவில்லை. இரண்டு நாள் சட்டசபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களில் ஒன்றுகூட டிரில்லியன் டாலர் லட்சியத்தோடு சம்பந்தப்பட்டதில்லை.

ஆனால், பொருளாதாரத்தை இயக்கும் சக்திகொண்ட மின்சாரத்துறையில் அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை. இந்தத் துறையின் நிறுவன நிர்வாக அமைப்பில் சீர்திருத்தங்களைச் செய்வது பற்றிச் சிந்திக்காமல், டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காகக் கொள்வது சரியான அணுகுமுறையில்லை. தமிழ்நாடு அரசு நிஜமாகவே இந்த டிரில்லியன் டாலர் கனவைத் தொடர்வது போலத் தெரியவில்லை. இரண்டு நாள் சட்டசபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களில் ஒன்றுகூட டிரில்லியன் டாலர் லட்சியத்தோடு சம்பந்தப்பட்டதில்லை.

புதுப்பிக்கத்தக்க எரிபொருளை உற்பத்திசெய்ய சூரியஒளிப் பூங்காக்களை உருவாக்குவதற்காக நிலங்களைத் தேர்ந்தெடுங்கள் என்று சமீபத்தில் மாநில அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டிருக்கிறது. மாநிலத்தில் தனியார் துறை செய்கின்ற பிரமாதமான மின்சார உற்பத்தியைக் கணக்கில் எடுத்துப் பார்த்தால், இது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் ஊழல், மற்றும் பல்வேறு தவறுகளால் சோதனையைச் சந்தித்துக்கொண்டிருக்கும் டான்ஜெட்கோ போன்ற அரசு அமைப்புகளுக்கு நேர்ந்த கதிதான் அரசின் திட்டங்களுக்கும், முனைப்புகளுக்கும் நேரக்கூடும்.

மேலும், ஒன்றிய அரசு ஆழமான சீர்திருத்தங்களை முன்வைத்திருக்கும்  2021ஆம் ஆண்டு மத்திய மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை, தற்போதைய திமுக அரசு கண்மூடித்தனமாக எதிர்த்துக் கொண்டிருக்கிறது. தான் இலக்கு வைத்திருக்கும் 5- டிரில்லியன் பொருளாதாரத்திற்கு கிரியா ஊக்கியாகச் செயல்படக்கூடிய நான்குவகை ‘சி’யின் மீது ஒன்றிய அரசு கவனம் குவித்திருக்கிறது. அந்த நான்கு ‘சி’க்கள் பின்வருமாறு: கஸ்டமர் (வாடிக்கையாளர்), காம்பெட்டிஷன் (போட்டி), கம்ப்லையன்ஸ் (அனுசரித்தல்) மற்றும் கிளைமேட் (வானிலை). மின்சாரத் துறையில் நிறைய போட்டியெழுந்தால், அது மிகக்குறைவான மின்சார விலைகளுக்கு வழிவகுக்கும்; அது வாடிக்கையாளர்களுக்கு நன்மையாகும். இது ஒரு எளிய பொருளாதாரம்.

மின்சாரத் துறையில் சீர்த்திருத்தங்கள் ஏற்படுத்தப்போகும் ஒன்றிய அரசின் திட்டங்களை ஆந்திரப்பிரதேசம் போன்ற பாஜக அல்லாத அரசுகள் பயன்படுத்திக் கொண்டன. சுமார் 18 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மின்சார மானியத்தை செலுத்தும் ’டைரக்ட் பெனிஃபிட் ட்ரான்ஸ்ஃபெர்’ (நேரடிப்பலன் மாற்றுதல்) திட்டத்தை நிறைவேற்ற ஆந்திரப்பிரதேச அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறது. மின்சாரப் பரவலில், விநியோகத்தில் ஏற்படும் நஷ்டங்களை, “ஸ்மார்ட் மீட்டர்கள், ஸ்விட்சுகள், மற்றும் எர்த் ஒயர்கள்’ ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் தவிர்த்துவிடுவதற்கு இந்த ’டைரக்ட் பெனிஃபிட் ட்ரான்ஸ்ஃபெர்’ (டிபிடி) திட்டம் மாநில அரசிற்கு உதவுகிறது. வேளாண்மைக்கென்று தனியாக மின்சாரம் வழங்கும் கருவிகளைப் பிரித்துவைக்கும் திட்டத்தை சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதை இப்போது ஆந்திர மாநிலமும் கையிலெடுத்திருக்கிறது. ”ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி” என்று தலைப்பிட்டு அரசு முன்வைத்திருக்கும் செயல் திட்டம், துறைகளின் சிறப்பான செயல்பாடாகவும், தேவைப்படும் சீர்திருத்தங்களாகவும் உருமாறுவதன் மூலம் இந்தக் கனவின் சாத்தியத்தை நேர்மையாக ஆராயும் என நம்புவோமாக!


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles