Read in : English

Share the Article

மரபு வழியிலான விவசாய நடைமுறை குறைந்து வருகிறது. ரசாயன உரம் பயன்படுத்தி விளைவித்த காய்கறி மற்றும் உணவுப் பொருட்களே, இந்தியாவில் உணவு பற்றாக்குறையை தீர்க்கிறது. இதன் தொடர்ச்சியாக, நஞ்சு உணவை வழங்கி நலத்தை கெடுப்பதாக பெரும் குற்றசாட்டும் எழுந்துள்ளது. அந்த கூற்றை வலுவாக்கும் விதமாக, பல வகை நோய்கள் அன்றாடம் பெருகிவருகின்றன. இதை தவிர்க்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும் பயன் ஏதும் விளையவில்லை. நலம் பேணும் பிரசாரத்தில் பொருட்களை விற்கும் இயற்கை விவசாய அங்காடிகள் பெருகி வந்தாலும், அவற்றின் மீதான நம்பிக்கை வளர்ந்துவிடவில்லை. அவற்றில் விற்கப்படும் பொருட்கள், நஞ்சற்றவை என்பதற்கு உத்தரவாதமும் இல்லை.

நல வாழ்வுக்கு, இயற்கையாக விளையும் உணவுப் பொருட்களை பயன்படுத்துவது மட்டுமே தீர்வாகும். அது குறித்த விழிப்புணர்வு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. பல குழுக்கள் பிரசாரம் செய்து வருகின்றன. சுயநலமற்ற விவசாயிகள் இதில் ஈடுபட்டு வருகின்றனர். அனாலும், உணவு தேவையை சிறிதளவேனும் பூர்த்தி செய்யும் ஆற்றல் இன்னும் ஏற்பட்டுவிடவில்லை.

ஆரோக்கிய உணவை தேடும் விழிப்புணர்வு பெருமளவு ஏற்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி, கலப்பட உணவுப் பொருட்களும், ரசாயனங்கள் நிறைந்த காய்கறிகளும் பழங்களுமே சந்தையை ஆக்கிரமிக்கின்றன. இயற்கை அங்காடி என்ற பெயரில் கள்ளச்சந்தை வாணிகம் பெருகிவருகிறது. இதற்கு காரணம் இயற்கையாக விளையும் நலம் தரும் காய்கறி, பழங்கள், உணவு தானியங்களைக் கண்டறிவது மிகவும் கடினம் என்பதுதான்.

இதை தீர்க்க மூன்று வழிகள் இருக்கின்றன.
* நேரடியாக நிலத்தில் இயற்கை விவசாயம் செய்வது…
* இயற்கை பொருட்களை நம்பத்தகுந்த விவசாயிகளிடம் பெறுவது…

இறுதியாக ஓர் எளிய வழி உள்ளது.
அதுதான் வீட்டின் மாடியில் தோட்டம் அமைப்பது, அல்லது வீட்டருகே தோட்டம் போடுவது… அதன் மூலம் இயற்கையாக தரமான, நலம் தரும் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம். இதற்கு நம்பிக்கையும் உழைப்பும் மட்டுமே அவசியம். சிறிய அளவிலான உற்பத்தி எப்படி, நலத்தை பாதுகாக்கும் என்ற ஐயம் ஏற்படும். ஆனால் அனுபவம் கற்றுத்தரும் பாடம், மகிழ்ச்சியை ஊட்டக்கூடியதாக இருக்கும்.  மாடியில் தோட்டம் அமைக்க ஆர்வம் இருந்தாலும், அது குறித்த தெளிவு பலருக்கு இல்லை. சில எளிய நடைமுறைகளை பின்பற்றினாலே ஓரளவு காய்கறி, பழங்களை பயிர் செய்து அறுவடையைக் காண முடியும்.

அதற்கான சில எளிய வழிமுறைகள்:
• மாடித்தோட்டம் அமைக்க முதலில், இடம் தேர்வு செய்ய வேண்டும்.
• மாடியில் காலியாக உள்ள வெயில் வரும் இடங்கள், படிக்கட்டுகள் மற்றும் தொங்கும் தொட்டிகளில் செடி, கொடிகளை வளர்க்கலாம். உரிய நீர் வசதி இருக்க வேண்டும்.
• பிளாஸ்டிக் பைகள், மண் தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்டவற்றில் வளர்க்கலாம். இவற்றில் உயிர்மண், தென்னை நார்கழிவு, மண்புழு உரம், மாட்டு எரு, உயிர் உரங்கள் கலந்து நடலாம்.
• தென்னை நார்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்து காக்கும். தொட்டியின் அடிப்புறம் அதிகப்படியாக ஊற்றும் நீர் வெளியேறத் துவாரங்கள் இட வேண்டும்.
• நீர் தேங்கினால் வேர் அழுகி, செடி வாடிவிடும்.

எளிய முறையில் மாடியில் தோட்டம் அமைக்க தமிழக அரசின் தோட்டக் கலைத்துறையும் சிறப்பாக வழிகாட்டுகிறது. தோட்டம் அமைப்பதற்கான உபகரணங்களை, சலுகை விலையில் வழங்குகிறது.
இந்த செடி வளர்ப்பு தொகுப்பில்…
தென்னை நார் கழிவு – 2 கிலோ
செடி வளர்க்கும் பை – 6
காய்கறி விதை – 6 பாக்கெட்
அசோஸைபைரில்லம் – 200 கிராம்
பாஸ்போ பாக்டீரியா – 200 கிராம்
கண்ட்ரோல் ஏஜெனெட் – 200 கிராம்
வேப்பெண்ணெய் பூச்சி விரட்டி – 100 மிலி.

இவை தொகுப்பாக வழங்கப்படுகிறது. உடன் செயல்விளக்கக் கையேடு ஒன்றும் வழங்கப்படுகிறது. இந்த கையேட்டில் உள்ள வழிமுறைகளை பின்பற்றினால், தோட்டம் அமைப்பதற்கான அடிப்படைகளை சுலபமாக அடையலாம்.

இந்த மாடித்தோட்ட தொகுப்பின் மதிப்பு 850 ரூபாய். மானியமாக 340 ரூபாய் வழங்குகிறது. பொதுமக்களுக்கு, 510 ரூபாய் விலை நிர்ணயம் செய்துள்ளது. சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மாடித்தோட்ட விளைச்சல் தொகுப்பு விற்பனைக்கு கிடைக்கிறது.
மாடித்தோட்டம் அமைக்க விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தொடர்பான விவரங்களை…
http://tnhorticulture.tn.gov.in/horti/tnhorticulture/roof
இந்த இணைய தள பக்கத்தில் பெறலாம்.
மாடித்தோட்ட தொகுப்புகள் வாங்க
சென்னையில்…
திருவான்மியூர் – 82200 56056
அண்ணாநகர் – 88258 07250
மாதவரம் – 88705 62306
செம்மொழி பூங்கா – 96771 40624
என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தோட்டக்கலை அலுவலர்களிடம் விசாரித்து தொகுப்புகளை பெறலாம். தொகுப்பு வாங்குவதற்கு, ஆதார் அடையாள அட்டை நகலை சமர்பிக்க வேண்டும்.

மாடியில் தோட்டம் அமைக்கும் போது மனங்கொள்ள வேண்டியவை:
* கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்
* நிழல் விழும் பகுதியை தோட்டத்துக்கு தேர்வு செய்யக் கூடாது
* செடி வளர்க்கும் பைகளை நேரடியாகத் தளத்தில் வைக்கக் கூடாது. டிரைன் செல் என்ற

பிளாஸ்டிக் தட்டுகளை பரப்பி வைக்கலாம்
செடி வளர்க்கும் பைகளைத் தயார் செய்த உடனே விதை போடுவதோ, நடவு செய்வதோ கூடாது. பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.
மாடித்தோட்டத்தில் விளையும் பொருட்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும். இதனால் மருத்துவச் செலவுகள் குறையும். அவசரக் காலங்களுக்குத் தேவையான பலவித மூலிகைகளை மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம். மாடியில் தோட்டம் அமைப்பதால் வீட்டின் உள்ளறை குளிர்ச்சியாக இருக்கும். குளிர்சாதன பயன்பாடு குறையும்.

மாடித்தோட்டத்தைப் பராமரிப்பதால் மனம் தவநிலையை அடையும். கவலையிலிருந்து விடுபடும். பெண்களுக்கும் மாடித்தோட்டம் அருமருந்து.

சமையலறை கழிவுகள், மட்கும் குப்பை, பழக்கழிவு, முட்டை ஓடுகளை செடிகளுக்கு, இயற்கை உரமாகப் பயன்படுத்தலாம். அவற்றை நிர்வகிப்பது பற்றிய சிந்தனை சிறப்பான பலன்களை தரும். இதுபோல நன்மைகள் மாடித்தோட்டத்தால் விளையும். இது போன்ற வழிமுறையில் தோட்டம் ஒன்றை அமைத்து, நலமிக்க உணவு உற்பத்தி பெருக்கத்தில் இணைவோம். வாழ்வை நலமாக்குவோம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles