Read in : English

Share the Article

சூழல் சமநிலையை உறுதி செய்யும் துாதர்களாக உலகில் பவனி வருகின்றன பறவைகள். நகர்மயமாக்கல், காடு அழிப்பு, நீர், காற்று, ஒலி  மாசுகளால் அவற்றின் வாழிடங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பறவைகளை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்கு முக்கியமானது.

பறவைகள் தொடர்பான அறிவை மேம்படுத்தவும், அவற்றின் மீது நாட்டம் ஏற்படுத்தவும் சர்வதேச அளவில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. பறவை பற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்த, பறவை அவதானித்தல் (Birdwatching) என்ற நிகழ்வு ஆண்டு தோறும் உலக அளவில் நடத்தப்படுகிறது.

இந்த நிகழ்வு மாற்று பொழுது போக்காக பரவிவருகிறது. தமிழகத்திலும் இது ஒரு கலாசாரம் மாறி வருகிறது. ஆண்டு தோறும், பொங்கல் பண்டிகயை ஓட்டி நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுற்றுச்சூழிட, அறியும் அறிவியல் திட்டமாக வரவேற்றுள்ளது தமிழகம்.
வீட்டருகே தென்படும் பறவை பட்டியல் தயார் செய்து இணையத்தில் உள்ளிடும் நிகழ்வு இது. ஐரோப்பிய நாடுகளில் நெடுங்காலமாக தொடர்ந்துவரும் இந்த பண்பாடு, தமிழகத்திலும் காலுன்றியுள்ளது.

ஆண்டு தோறும், பொங்கல் பண்டிகயை ஓட்டி நடக்கும் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

வரித்தலை வாத்து

வரித்தலை வாத்து

தமிழகத்தில், 2015ல் இந்த நற்கலாசாரம் துவங்கியது. இது ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு (GBBC – Great Backyard Bird Count) என்று அழைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நடத்தப் படுகிறது.

ஆரம்பநிலை ஆர்வலர்களுக்காக, eBird இணையதளம் வழிமுறை மற்றும் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த பண்பாட்டு நிகழ்வில் 2018ம் ஆண்டு, 350 வகை பறவைகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டன.

பறவைகளுக்கு தனித்துவ உருவ அமைப்பு உண்டு. பார்க்க பார்க்க பரிச்சயம் ஆகிவிடும். முதலில் கண்ணில் படுவது பறவையின் வண்ணங்களே… உடலில் எந்த இடத்தில் என்ன மாதிரி நிறம் என கவனிக்கலாம்.

இனப்பெருக்க காலத்துக்கு முன், பல இனங்களில் ஆண் பறவையின் நிறம் வேறுபாட்டுடன் இருக்கும். இதை ப்ரீடிங் புளுமேஜ் (Breeding Plumage) என்பர். அதை வேறுபடுத்தி அறிய முயலலாம்.

அன்றில் பறவை

அன்றில் பறவை

பறவை இனங்களுக்கு குறிப்பான வாழிடங்கள் உண்டு. நீர்நிலைகளின் அருகில் வாழும் மீன்கொத்தி. அது இரை பிடிக்கும் முறை அலாதியானது. நீர்நிலையின் மேலே அந்தரத்தில் பறந்தபடியே, நீந்தும் மீன்களை கவனிக்கும். பொருத்தமானதை கண்டதும், அதிவேகமாக நீரில் பாய்ந்து பிடிக்கும். அமிழ்ந்து அலகால் துாக்கியபடி பறப்பதும் அதி சுவாரசியம் தரும்.
மரங்கொத்தி, மற்ற பறவைகளில் இருந்து வேறுபட்டது. செங்குத்தாக, மரங்களில் ஏறவும் இறங்கவும் திறன் பெற்றது. அலகால் மரத்தை தட்டி, பூச்சிகளை பிடித்து உண்ணும். மடையான் இரை பிடிக்கும் விதம் அலாதியானது. மீன் விரும்பும், சிறு புழுவை பிடித்து, தண்ணீரில் போட்டு காத்திருக்கும். அந்த புழுவை உண்ணவரும் மீனை, லாவகமாக பிடிக்கும்.
இது போல், பறவைகளுக்கு தனிப்பட்ட குணாதிசயங்கள் உண்டு.

பொதுவாக இரை, இடம், தற்காப்பு மற்றும் உணர்ச்சியை வெளிப்படுத்த பறவைகள், வித்தியாசமான ஒலியை எழுப்பும். இதை கவனிப்பது நல்ல பலனை தரும். அவற்றின் மூலம் இனம் காணலாம்.

பறவை நோக்குதல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். வன்மம், காழ்ப்புணர்ச்சி போன்ற பண்புகளை அகற்றும். பொறுமையை வளர்க்கும்

பறவை நோக்குதல் மனதுக்கு மகிழ்ச்சி தரும். வன்மம், காழ்ப்புணர்ச்சி போன்ற பண்புகளை அகற்றும். பொறுமையை வளர்க்கும். கோபம், எரிச்சலை அடங்கி அமிழ்க்கும். உயிரினங்கள் மீது மதிப்பு, புரிந்தலை ஏற்படுத்தும்.

யோகா மையங்களில் கிடைக்காத தியானம், அமைதி எல்லாம் இதில் கிடைக்கும். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்யபடுவது எல்லாம் தியானம் தான். இயற்கையின் பல பரிமாணங்களை ரசிக்கக் பழகிக் கொண்டால், வாழ்க்கையில் அலுப்பு தட்டாது. நோய்நொடிகள் அண்டாது.

நெடுங்கால் உள்ளான்

நெடுங்கால் உள்ளான்

புள்ளி ஆந்தை

புள்ளி ஆந்தை

தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் பறவைகளில் சில:
பச்சை பஞ்சுருட்டான் (Green Bee-eater)
செந்தார் பைங்கிளி (Rose-ringed Parakeet)
தகைவிலான் (Barn Swallow)
நீர்க்காகம் (Little Cormorant)
செம்மீசை சின்னான் (Red-whiskered Bulbul)
செம்புழைச் சின்னான் (Red-vented Bulbul)
கருப்பு வெள்ளை புதர் சிட்டு (Pied Bushchat)
காட்டுச் சிலம்பன் (Jungle Babbler)
விசிறிவால் குருவி (Fantailed flycatcher)
தையல் சிட்டு (Common Tailorbird)
தடித்த அலகு பூக்கொத்தி (Thick-billed flowerpecker)
சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-headed Canary flycatcher)
நீல ஈப்பிடிப்பான் (Tickell’s Blue Flycatcher)
பூக்கொத்தி (Tickell’s Flowerpecker)
கள்ளிப் புறா (Eurasian Collared Dove)
கோகிலம் (Asian Koel)
புள்ளிப்புறா (Spotted Dove)
மாடப் புறா (Blue Rock Pigeon)
கரும்பருந்து (Black-shouldered Kite)
சுடலைக் குயில் (Jacobin Cuckoo)
கருப்பு வெள்ளை வாலாட்டி (Large Pied Wagtail)
வெண்மார்பு மீன்கொத்தி (White breasted kingfisher)
மீன்கொத்தி (Common Kingfisher)
செவ்வரி நாரை (Painted stork )
சிவப்புமூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing)
சிறுவெண் கொக்கு (Little Egret)
உண்ணிக் கொக்கு (Cattle Egret)
வயல் கொக்கு (Indian pond heron)
சின்ன குருகு (Little Bittern)
ஊதாப்பிட்டு தேன்சிட்டு (Purple-rumped Sunbird)
லோடன் தேன்சிட்டு (Loten’s Sunbird)
ஊதாத் தேன்சிட்டு (Purple Sunbird)
கருந்தலை சில்லை (Black-headed Munia)
சிட்டுக்குருவி (House Sparrow)
தூக்கணாங்குருவி (Baya Weaver)
நாகணவாய் (Common Myna)
மாங்குயில் (Indian Golden Oriole)
கரிச்சான் (Black Drongo)
வால் காக்கை (Rufous Treepie)
அண்டங்காக்கை (Jungle Crow)
காக்கை (House Crow)
இவை தவிர, மேலும் பறவைகள் தமிழக சூழலோடு பொருந்தி வாழ்கின்றன.

பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு புத்தாண்டில் ஜனவரி 18 முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. ஆர்வமிருந்தால் பங்கேற்கலாம். கணக்கெடுப்பு நாட்களில் காலை மற்றும் மாலை அரைமணி நேரம் மட்டும் ஒதுக்கினால் போதும். வீட்டிற்கு பக்கத்தில் தென்படும் பறவைகளை காண்டு பட்டியலிடுவதில் துவங்கலாம். இதை வழக்கமாக கொண்டால் இனிய, பயனுள்ள பொழுது போக்காக மாறும். தமிழகத்தில் சிறந்த பண்பாட்டு நடைமுறை பலம் பெறும். பல்லுயிரினங்களை பாதுகாப்பதில் முதன்மை இடமாக தமிழகம் மாறும்.

நெடுங்கால் உள்ளான் பறவை கூட்டம்

நெடுங்கால் உள்ளான் பறவை கூட்டம்

வரித்தலை வாத்து

வரித்தலை வாத்து

தமிழில் பறவைகள் பற்றி அறிய உதவும் சில புத்தகங்கள்:
பறவை உலகம்
ஆசிரியர்: சலீம் அலி, ஸயீக் பதேஹ் அலி
வெளியீடு: National Book Trust of India
ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி
ஆசிரியர்: சலீம் அலி
வெளியீடு: National Book Trust of India
மழைக்காலமும் குயிலோசையும்
ஆசிரியர்: மா. கிருஷ்ணன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
வட்டமிடும் கழகு
ஆசிரியர்: ச.முகமது அலி
வெளியீடு: சந்தியா பதிப்பகம்
இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்
வானில் பறக்கும் புள்ளெலாம்
ஆசிரியர்: சு.தியடோர் பாஸ்கரன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
கானுறை வேங்கை
ஆசிரியர்: உல்லாஸ் கரந்த்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பறவைகள் அறிமுகக் கையேடு:
ஆசிரியர்கள்: ப.ஜெகநாதன் மற்றும் ஆசை
வெளியீடு: க்ரியா பதிப்பகம்
தமிழ்நாட்டுப் பறவைகள்
ஆசிரியர்: க.ரத்னம்
வெளியீடு: மெய்யப்பன் தமிழாய்வகம்
பறவைகள் குறித்த சில ஆங்கில நூல்கள்:
Joy of bird watching
Vishwa Mohan Tiwari: National Book Trust of India
The Book of Indian Birds
Salim Ali: Oxford University Press
Birds of Indian Subcontinent
Richard Grimmett, Carol Inskipp, Tim Inskipp: Helm Publishing Company

பறவைகளை காண, என்ன வகை பைனாகுலர் மற்றும் படம் எடுக்க கேமரா பயன்படுத்தலாம் என ஆலோசனைகள் kolkatabirds.com என்ற இணைய தளத்தில் கிடைக்கும்.
பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பான தகவல்களை, birdcount.in இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles