Read in : English
தவில் இசை சக்ரவர்த்தியான யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்தி தவில் வாசிக்கும் போது, மின்சார வேகத்தில் கை தவில் இயங்கிக்கொண்டிருக்கும். சில நேரங்களில் கை அசைவதே தெரியாமல் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கும். இசை தெரியாதவர்கள் கூட, அவரது கையையே பார்த்துக்கொண்டிருப்பார்கள். இந்த அதிசயத்தைக் கேள்விப்பட்ட அன்றைய செக்கோஸ்லோவியா நாட்டு தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த கன்செல்காவும் சிக்மண்டும் 1961ஆம் ஆண்டில் தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிப்பைப் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.
யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி இணுவில் என்ற ஊரில் தவில் வித்துவான் விஸ்வலிங்கம் & இரத்தினம் இணையருக்கு, 1933-ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்க காலங்களில் தந்தையரிடம் தவில் பயிற்சி பெறத் தொடங்கிய பின் வண்ணை காமாட்சி சுந்தரதிடம் தொடர்ந்து பயிற்சி பெற்றார். அவரது சகோதரர்களான உத்திராபதி, கோதண்டபாணி ஆகியோரின் நாதசுரங்களுக்கு தவில் வாசித்தார். அப்போதே அவரது வாசிப்பு பிரமிக்கும் படியாகவும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலை பாடுகள் நிறைந்ததாகவும் இருந்தது.
அன்றைய செக்கோஸ்லோவியா நாட்டு தொலைக்காட்சி நிலையத்தைச் சேர்ந்த கன்செல்காவும் சிக்மண்டும் 1961ஆம் ஆண்டில் தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிப்பைப் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள்.
தெட்சிணாமூர்த்தியின் அப்பா விஸ்வலிங்கம், நாச்சியார்கோவில் தவில் கலைஞர் ராகவப்பிள்ளையில் தவில் வாசிப்பில் பயிற்சி பெற்றார். ஒன்றரை ஆண்டு பயிற்சிக்குப்பின் இவரது குரு,” உனக்கு இனி சொல்லித்தர என்னிடம் ஒன்றும் இல்லை பாக்கியில்லை; ஒரு அபிப்ராயம் காதிலே விழுவதற்குள் உனது கைகளில் அது ஒலித்து விடும்படியான கடவுளின் வரப்பிரசாதம் பெற்ற நீ, ஊருக்குத் திரும்பலாம் .உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்துக்கிடக்கிறது ”என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
பெரிய மேளம் என்று அழைக்கப்படுகிற நாதசுர ஜமாவில் இரண்டு தவில்காரர்கள், துவாரபாலர்களாக இருபுறமும் நிற்க, நடுநாயகமாக நாகசுரக்காரர்கள் இருப்பார்கள் .அவர்களுக்கு பின் ஒத்தும், தாளக்காரர் இருப்பார். நாகசுரக்காரர்கள்தான் கதாநாயகர்கள். இதுதான் தமிழகம் கண்டது. ஈழத்திலோ தவில்காரருக்குத்தான் முன்னுரிமை. இந்த மரபில் வந்தவர்தான் யாழ்ப்பாணம் தெட்சிணா மூர்த்தி. இளம் வயதில் 12 மணிநேரம் அசுர சாதகம் செய்து தாளக்கணக்குகளை கைவரப்பெற்றவர். இளம் வயதிலேயே மேடையேறியவர். தவில்காரர்கள் அதிக சம்பளம் பெற இவரே வழிகாட்டினார். இவர் வெளியூர் செல்லும் போது தவிலை எடுத்து போகமாட்டார் ..ஆங்காங்கே கிடைக்கும் வலுகுறைந்த தவிலையும் மாற்றிவிடும் மாயாஜாலக்காரர்.
ஈழத்திலோ தவில்காரருக்குத்தான் முன்னுரிமை. இந்த மரபில் வந்தவர்தான் யாழ்ப்பாணம் தெட்சிணா மூர்த்தி. இளம் வயதில் 12 மணிநேரம் அசுர சாதகம் செய்து தாளக்கணக்குகளை கைவரப்பெற்றவர்.
பிரபல தவில் வித்வான்களாகிய யாழ்ப்பாணம் காமாட்சிசுந்தரம் பிள்ளை, இணுவில் சின்னத்தம்பி, பி.எஸ். ராஜகோபால், இந்தியாவிலிருந்து வருகைதந்த புகழ் பெற்ற தவில் கலைஞர்களான திருவிழந்தூர் ராமதாசப்பிள்ளை, வலங்கைமான் சண்முகசுந்தரம், வடபாதிமங்களம் தெட்சிணாமூர்த்தி பிள்ளை, நீடாமங்கலம் சண்முகவடிவேல் முதலியோருடன் தவில் வாசித்து கைவேகம் வரப்பெற்றார்.
இதுதவிர புகழ் பெற்ற நாகசுரக்காரர்களான திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணியபிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா, திருவீழிமிழலை சகோதரர்கள், செம்பொன்னார்கோயில் சகோதரர்கள், காருக்குறிச்சி அருணாச்சலம், நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன், எம்.பி.என். சேதுராமன் & பொன்னுசாமி சகோதரர்கள், திருமெய்ஞ்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை முதலிய தமிழகக் கலைஞர்களுடன் தவில் வாசித்துள்ளார்.
வலையப்பேட்டை சுப்பிரமணியம், ஹரிதுவாரமங்களம் பழனிவேல்,, தஞ்சை கோவிந்தராஜன், திருவாளப்புத்தூர் கலியமூர்த்தி முதலிய மாபெரும் கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்திருக்கிறார்.
“தவில் வித்துவான்கள் திறமை பல வகைப்பட்டது. சிலருக்கு லய சம்பந்தமான ‘கணக்கு’களில் நிறைந்த புத்திசாலித்தனம் இருக்கும். ஆனால் கரத்திலே ‘வேகம்’அல்லது பேச்சு குறைவாகவோ அல்லது இல்லாமல் இருக்கும். வேறு சிலருக்கு பேச்சு ‘அதிகம்’. ஆனால் ‘விவகார’ புலமை குறைந்து காணப்படும். சில உருப்படிகளுக்கு பொருத்தமாக வாசிப்பதில் தேர்ந்திருக்கலாம், இதர நுட்பங்களில் போதிய திறமை இருக்காது. இந்த எல்லா அம்சங்களிலும் முழுமை பெற்றவர் யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி” என்கிறார் இசை ஆய்வாளர் தஞ்சை பி.எம். சுந்தரம்.
யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிக்கும் திறமையைப் புகழ்ந்து, உலகத்தின் எட்டாவது அதிசயம் ”என்றார் பாலக்காடு மணி ஐயர்.
எப்பேர்ப்பட்ட லய விசேடங்களிலும், எந்த தாளத்திலும் ,எத்தனை வேகத்தில் வேண்டுமானாலும் மணிக்கணக்கில் வாசிக்கும் வல்லமை பெற்றிருந்தார். கண்டமோ, சங்கீர்ணமோ, எந்த கதியை அமர்த்திக்கொண்டாலும், கடைசிவரை மொஹார, கோவை உட்பட அந்தக்கதிக்கான சொற்களைக்கொண்டே வாசித்து முடிப்பார். சங்கீர்ணகதி, அவருக்கு விருப்பமான ஒன்று. கடுமையான சந்தத் தாளங்களில் லய வின்யாசம் செய்வது அவருக்கு தேனில் தோய்த்த பலாச்சுவை. தமிழகத்தில் லய வின்யாசம் தவிலில் செய்யும் போது தேநீர் குடிக்கப்போவது நடைபெறும் ஆனால் ஈழத்திலோ அந்த நேரத்தில் வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
11, 12, 17அட்சரங்களைக்கொண்ட கதிகளை உருவாக்கி ,அவற்றில் மிகச்சரளமாக தவில் வின்யாசம் செய்வார். தமிழகத்திலோ 7அட்சரங்களுக்கு மேல் போகமாட்டார்கள். எவ்வளவு கடுமையான பல்லவிகளையும் ஒருதரம் கேட்ட மாத்திரத்திலே அது அவரால் தயாரிக்கப்பட்ட பல்லவி ஆகிவிடும். இதனால்தான், யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தியின் தவில் வாசிக்கும் திறமையைப் புகழ்ந்து, உலகத்தின் எட்டாவது அதிசயம் ”என்றார் பாலக்காடு மணி ஐயர்.
1959-ஆம் ஆண்டு தெட்சணாமூர்த்தி இந்தியா வந்தபோது, அவரது நண்பரான நீடாமங்கலம் சண்முகவடிவேல், அன்று இரவு நடைபெறும் சென்னை தமிழிசைவிழாவில் காருக்குறிச்சி அருணாச்சலம் நாகசுரத்திற்கு தன்னுடன் தவில் வாசிக்கும்படி கேட்டுக்கொண்டது மட்டுமல்லாமல், அன்றைய கச்சேரியை தொடங்கிவைக்கும் கௌரவத்தையும் கொடுத்தார். தெட்சணாமூர்த்தி தவில் ஒலிக்கத் தொடங்கியதும் இசை மேதைகளாலும், இசைப்பிரியர்களாலும் நிரம்பி வழிந்த அரங்கு ‘சபாஷ் ‘போடத் தொடங்கியது. வழக்கமாக 12மணிக்கு முன் ஒலிபரப்பை நிறுத்திக்கொள்ளும் அகில இந்திய வானொலி இவரது லய வின்யாசத்தால் கவரப்பட்டு கச்சேரி முடியும்வரை ஒளிபரப்பியது.
இந்தியா, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளுக்கு சென்று தவிலிசை பரப்பியதால், ‘கற்பனை சுரங்கம்,’ கரவேக கேசரி’,’ தவில் வாத்திய ஏகச்சக்ராதிபதி ‘முதலிய பட்டங்களை பெற்றவர் 42 வயதே வாழ்ந்து மறைந்த தெட்சணாமூர்த்தி குறித்து, ‘ஞான குபேரபூபதி யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்தி’ என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளார் எழுத்தாளரும் இயக்குநருமான அம்ஷன் குமார். இதன் மூலம் அவரது கச்சேரிகள் அந்த ஆவணப்படத்தில் பதிவு பெற்றன.
தெட்சணாமூர்த்தி ஈழத்து இசை அடையாளமாக கருதப்படுகிறார். அக்பர் அவையில் இருந்த இசைமேதை தான்ஸேனை பற்றி அபுல் பாசில் எழுதும் போது,” ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான்ஸேனை போன்ற கலை மேதை இருந்ததில்லை; இனிவர இருக்கும் ஆயிரம் ஆண்டுகளில் ஒருவர் இருக்கப்போவதில்லை ”என்று குறிப்பிட்டது, யாழ்ப்பாணம் தெட்சணாமூர்த்திக்கும் பொருந்தும்.
Read in : English