Read in : English

சென்னையில் தொடர்ந்த கனமழை காரணமாக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் பல இடங்களில் மழை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதற்கு முன்பாக 2015ஆம்  ஆண்டில் இதேபோன்று கனமழையால் சென்னை வெள்ளநீரில் தத்தளித்தது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே பாதிப்பைச் சந்திக்கிறது. 2015ஆம் ஆண்டு கனமழையால் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகள், 2021ஆம் ஆண்டிலும் வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பிறகும் இதுபோன்ற கனமழை பெய்தாலும் இதே நிலைமைதான் நீடிக்குமா? சென்னையில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தேங்குவதற்கு காரணம் என்ன? தேங்கிய நீரை எப்படி வெளியேற்றுவது? மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு என்ன? ஏரி, ஆறுகளில் இருந்து வெளியேறும் உபரிநீரை தடுப்பது எவ்வாறு?

பேராசிரியர் ஜனகராஜன்

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான எஸ். ஜனகராஜன்:

பெருமழை காரணமாக சென்னையில் தேங்கும் தண்ணீரை வெள்ளநீர் என்று சொல்வது தவறு. இது வெள்ளம் இல்லை. குடியிருப்புப் பகுதிகளும் சாலைகளிலும் தேங்கும் தண்ணீர். உதாரணமாக, தி.நகரின் உஸ்மான் ரோடு, மேற்கு மாம்பலம், புளியந்தோப்பு, கோட்டூர்புரம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் தான் தண்ணீர் தேங்குகிறது. எங்கெல்லாம் தாழ்வான பகுதி இருக்கிறதோ, அங்கெல்லாம் தண்ணீர் தேங்குவது இயல்பு.

2015ஆம் ஆண்டு பெய்த கனமழையால் சென்னையின் குறிப்பிட்ட பகுதி முழுவதுமாக வெள்ளநீரால் சூழப்பட்டது. ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அதிக இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. ஆனால், தற்பொழுது நிலைமை அப்படி இல்லை. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

2005ஆம் ஆண்டில் சென்னையில் 300, 350 பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சென்னை மழை வெள்ளத்தில் சென்னை நகரில் 800 இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த அளவுக்கு சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் அதிகரிக்க முக்கியமான காரணம் மக்களின் அடர்த்தி தான்.

குறிப்பிட்ட பகுதியில் இவ்வளவு பேர் தான் வசிக்க முடியும் என்ற வரைமுறை உள்ளது. 2011ஆம் ஆண்டு சென்னையில் சதுர கிலோ மீட்டருக்கு 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்தனர்.

10 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 35 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், நகர பகுதியில் மக்கள் வாழ்வதற்கான இடத்தின் அளவு குறைகிறது. தனிநபர் வாழ்வதற்கு தேவையான இடத்தின் அளவும் குறைந்து விடுகிறது.

குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மக்களின் அடர்த்தி அதிகமாகஅதிகமாக, அவர்களது தண்ணீர் பயன்பாடும் அதிகமாகிவிடுகிறது. அதற்கேற்ற வடிகால் வசதிகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில், நிலத்தடி நீர் சேமிப்பதற்கான வசதிகளே இல்லாமல் கட்டடங்களும் சிமெண்ட் சாலைகளும் அமைக்கப்படுகின்றன.

இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2015ஆம் ஆண்டு 1000 மி.மீ. தாண்டி மழை பதிவாகி இருந்தது. இவ்வளவு மழை பதிவாகும்போது அந்தத் தண்ணீர் சீராக செல்வதற்கு சரியான வடிகால்கள் அமைக்கப்படவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள வடிகால்கள் அறிவியல் பூர்வமாக கட்டப்படவில்லை. இனிமேல் மழைநீர் செல்வதற்கு சரியான வடிகால் அமைப்பதும் கடினம். ஏனென்றால் தேங்கும் தண்ணீர் செல்வதற்கு ஏற்ற வகையில் வடிகால் அமைக்க வேண்டும்.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைக்கு தாழ்வாக தான் வீடுகள் உள்ளன. வீடுகளில் தேங்கிய நீரை குழாய்கள் மூலம் சாலையில் வெளியேற்றினால், அவை மீண்டும் வீட்டிற்குள் தான் வரும். பெரும்பாலான இடங்களின் மண் தரை மூடப்பட்டுள்ளன. மாம்பலம் கால்வாய் முழுவதுமாக அடைந்து விட்டது. ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் 20 அடியாக இருந்த மாம்பலம் கால்வாய், 10 அடி வரை குறுகியுள்ளது.
மாம்பலம் கால்வாய் மட்டுமில்லாமல் முக்கியமான 16 கால்வாய்கள் சென்னையில் இருந்தன.

அவை தூர்வாரப்படாமலும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன. ஒரு சில இடங்களில் கால்வாய்களையே காணவில்லை.
இங்கு தான் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். எங்கெல்லாம் கால்வாய்கள் இருந்ததோ அங்கு தான், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விருகம்பாக்கத்தில் இருந்த கால்வாயைக் காணவில்லை.

வியாசர்பாடி ஏரியின் உபரி நீர் வரும் கால்வாய் எங்குள்ளது என தெரியவில்லை. கொடுங்கையூரில் இருந்த கால்வாயும் தெரியாமல் போனது. வேளச்சேரியில் இருந்த கால்வாயும் இல்லாமல் போனது.

பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இப்படி நீர்செல்லும் வழித்தடங்களை ஆக்கிரமித்தால் மழைநீர் எங்கு செல்லும்? குடியிருப்புகளை தான் சூழ்ந்து கொள்ளும். இது மனிதப் பிழையால் ஏற்பட்ட பேரிடர்.

இதுவரை நீர் நிலைகளை பாதுகாக்காமல் இழந்து விட்டோம். இனி வரும்காலங்களில், மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். நீண்ட காலத் தீர்வு என்பது, சென்னையில் உள்ள ஏரிகளை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஆழப்படுத்தி அதில் மழைநீரை சேமிக்க வேண்டும். அடையாறு, கூவம், கொசஸ்தலை, ஆரணி ஆறுகளையும் பக்கிங்ஹாம் கால்வாயையும் பழைய நிலைக்குக் கொண்டு வர அவற்றை ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும்.

இப்படி தண்ணீர் ஒரேசீராகச் செல்ல நடவடிக்கை எடுத்தால் வெள்ளம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

நீண்ட காலத் தீர்வு என்பது, சென்னையில் உள்ள ஏரிகளை எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு ஆழப்படுத்தி அதில் மழைநீரை சேமிக்க வேண்டும்

இதை தவிர, சென்னையில் உள்ள வடிகால்களை தூர்வாரி நல்ல செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வரவேண்டும்.
இதையெல்லாம் செய்யாமல் தேங்கிய பகுதியில் உள்ள வெள்ளநீரை குழாய் மூலம் அகற்றுவது வாகனத்திற்கு பழுது பார்ப்பது போன்ற செயலாகும். நீர் நிலைகளை பராமரித்தால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்.

சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, மணி மங்கலம் ஏரிகளில் அதிகளவில் தண்ணீரை சேமிக்கும் வகையில், அதன் கொள்ளளவை அதிகரிக்க வேண்டும். கிழக்குக் கடற்கரை சாலையில் மட்டும் கிட்டத்தட்ட 30 ஏரிகள் உள்ளன. சென்னையில் இவ்வளவு ஏரிகள் இருக்கும்பொழுது அவற்றை ஆழப்படுத்தி வீணாகும் மழைநீரை சேமிக்கலாம். இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படுவதுடன், தண்ணீர் பற்றாக்குறையையும் தவிர்க்க முடியும்.

ஏரி, ஆறு, குளம், கால்வாய்களை மீட்டெடுக்க வேண்டும். ஆங்காங்கே அடைப்புள்ள வடிகால்களை தூர்வாரி நீர் செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். காலநிலை மாற்றத்தால் வருங்காலங்களில் கனமழை, புயல் போன்ற பேரிடர்களை நாம் சந்திக்க நேரிடும். அத்தகைய தருணத்தின் போது பாதுகாப்பாக இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர் நிலைகளை மீட்டெடுத்தல் மிகவும் முக்கியம். சென்னையில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேங்கும் நீரை அருகில் இருக்கும் ஆற்றிலோ, ஏரியிலோ அல்லது கால்வாய்களிலோ செல்லும் அளவுக்கு அறிவியல் பூர்வமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயங்கள் குறித்து தமிழக அரசு அமைத்துள்ள நிபுணர் குழு பரிசீலனை செய்து, தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதைத் தவிர்க்க முடியும்.

தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து, அங்கு தேங்கும் நீரை அருகில் இருக்கும் ஆற்றிலோ, ஏரியிலோ அல்லது கால்வாய்களிலோ செல்லும் அளவுக்கு அறிவியல் பூர்வமான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்

குடிமராமத்துப் பணிகளை செய்து நீர் மேலாண்மையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் திகழ்ந்ததாக கடந்த அரசு கூறி கொண்டது.

பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு குடிமராமத்து பணிகள் செய்தும் ஏன் வெள்ளம் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். நீர்நிலைகளை பாதுகாத்ததற்காக மத்திய அரசு கொடுத்த விருதை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது? என்று கேள்வி எழுப்புகிறார் பேராசிரியர் ஜனகராஜன்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival