Read in : English
தமிழ்நாட்டில் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீர் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் திமுக அரசின் சட்ட மசோதா, இந்தப் பிரச்சினையில் முந்தைய அரசினால் அனுப்பி வைக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கும் தீர்மானங்களுக்கும் என்ன கதி நேர்ந்ததோ அதே கதியைத்தான் சந்திக்கும் என்று தெரிகிறது.
நீட் தேர்வு கட்டாயம் என்றும், அந்தத் தேர்வு வரம்பில் இருந்து எந்த மாநிலத்துக்கும் விதி விலக்கு கிடையாது என்றும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு உறுதியாகக் கூறி வருகிறது. நீட் தேர்வுகள் தொடர வேண்டும் என்றே இதுவரையிலும் உச்ச நீதிமன்றம் நிலைப்பாட்டை எடுத்திருப்பதால், பொறுப்பை மத்திய அரசு மீது சுமத்துவதைத் தவிர திமுகவினால் வேறு எதுவும் செய்ய முடியாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டப் பேரவையில் பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சட்ட மசோதா-2021 என்ற புதிய சட்ட முன்வடிவை தயாரிப்பதற்காக திமுக அரசு மேற்கொண்ட விரிவான சட்ட ஏற்பாடுகள்தான், இந்த முறை காணப்பட்ட வேறுபாடு.
இந்த சட்ட முன்வடிவை மாநில சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி பேசும்போது, மருத்துவக் கல்வி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பற்றி அரசமைப்புச் சட்டத்தின் VII-வது அட்டவணையின் III-வது பட்டியலில் 25-வதாக குறிப்பிட்டிருப்பதால், இந்த சட்ட மசோதாவைக் கொண்டு வரும் சட்ட உரிமை மாநில அரசுக்கு இருக்கிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
“மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களை தேர்வு செய்வதற்கு நீட் தேர்வு நியாயமான, சமத்துவமான முறையா என்பதை ஆய்வு செய்தல், மாநிலத்தின் கல்வி அமைப்பின் மீது நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை பரிசீலித்தல்” உள்பட, நீட் தேர்வின் பல்வேறு அம்சங்களையும், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஆராய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட உயர் நிலைக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில்தான் இந்த சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
“தமிழ்நாடு தொழில்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கை சட்டம், 2006 ( தமிழ்நாடு சட்டம் 3, 2007) போல ஒரு சட்டத்தை தமிழ் நாடு அரசு இயற்றலாம் என இந்தக் குழு பரிந்துரை செய்திருப்பதாக” சட்டப் பேரவையில் ஸ்டாலின் தெரிவித்தார்.
“மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பது எந்த விதத்திலும் கல்வித் தரத்தை குறைத்துவிடாது; ஏனெனில், மேல்நிலைப் பள்ளிக் கல்வி பாடத் திட்டம் போதிய தரமுடையதாக இருக்கிறது” என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
எனினும், இந்தப் பிரச்சினையில் வளைந்து கொடுக்காத பாரதிய ஜனதா தனது நிலைப்பாட்டை கைவிட விரும்புமா என்பதே முக்கியமான கேள்வியாகும்.
தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு அனுமதி அளித்தால், இதே போல மற்ற மாநிலங்களும் விதிவிலக்கு கேட்பதற்கு அது வழி திறந்து விட்டுவிடும். இந்நிலையில், நீட் தேர்வுத் திட்டத்தை அமல்படுத்துவதில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பதையே எல்லா நடவடிக்கைகளும் காட்டுகின்றன.
நீட் பிரச்சினைதான் தாண்டிச் செல்வதற்கு கடினமான ஒரு பெரும் மலை போல இருப்பதாக திமுக அரசு கருதுகிறது. திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, இந்தப் பிரச்சினையில்தான் அதிமுக அரசு மீது பல ஆண்டுகளாகக் குற்றம்சாட்டி வந்தது. மாணவர்களின் தற்கொலைகளைச் சுட்டிக் காட்டி, இந்தப் பிரச்சினையை அனல் வீசச் செய்து கொண்டிருந்தது.
இப்போது நிலைமை நேர் மாறாகிவிட்டது. எதிர்க்கட்சிகளின் விமர்சனக் கணைகளைச் சந்திக்க வேண்டிய நிலை இப்போது திமுகவுக்கு. தேர்தல் வாக்குறுதியை திமுக காப்பாற்றத் தவறிவிட்டது என்று அதிமுக குற்றம்சாட்டுகிறது.
தமிழகச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீது குற்றம் சாட்டுவதற்கு ஒரு மாபெரும் தளத்தை திமுக உருவாக்கி இருக்கிறது.
மாநில நலன்களுக்கு எதிராக பாஜக செயல்படுகிறது என்பதற்கு இது மற்றுமொரு ஆதாரம் என திமுக குற்றம்சாட்டும். தமிழ்நாட்டை பழிவாங்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுகிறது என்ற தேர்தலுக்கு முந்தைய திமுகவின் பிரச்சாரத்துக்கு இது மீண்டும் தீனி போடும்.
திமுகவின் பிரச்சாரத்தை எதிர் கொள்வற்கு, பாரதிய ஜனதா தற்காப்பு நிலையைத்தான் எடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தில் மேலும் மேலும் மாணவர்கள் நீட் தேர்வுக்காகப் பயிற்சி மையங்களில் சேரும்போது, தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வின் மூலமாக மருத்துவப் படிப்புகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை விரைவில் கணிசமாக அதிகரிக்கும் என்று வேண்டுமானால் அது நம்பிக்கை கொள்ளலாம். அப்போது வேண்டுமானால் நீட் தேர்வுக்கு மாணவர்கள் ஆதரவு அதிகரித்து வருகிறது என்றும் நீட் தேர்வை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறது என்றும் பாஜக வாதிடலாம்.
பாஜக மீதும் மாநிலங்களுக்கு எதிரான அதன் அடக்குமுறைக் கொள்கைகள் மீதும் திமுக குறைகூறுவதும், மக்களை ஏமாற்ற திமுக நாடகமாடுகிறது என பாஜக குறைகூறுவதும்தான் வரும் சில மாதங்களில் நடக்கப்போகிறது.
விவசாயிகள் கொந்தளித்துக் கிளம்பியுள்ள பஞ்சாப், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் விரைவில் தேர்தல் வர இருப்பதுதான் விவசாயிகள் பிரச்சினையில் பாஜக பின்வாங்கியதற்குக் காரணம். என் வழிக்கு அடிபணியுங்கள் என்ற முறையில் எதிர்க்கட்சிகளை நடத்தி ஆட்சி நடத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் இயல்புக்கு இந்தப் பின்வாங்குதல் முற்றிலும் மாறானது.
புரட்சிகரமான விவசாயச் சீர்திருத்தங்கள் என முன்னர் தம்பட்டம் அடித்த மூன்று வேளாண்மைச் சட்டங்களையும் தவறு என ஏற்றுக் கொண்டு நீக்கியிருப்பதற்கு, உ.பி.யிலும் பஞ்சாபிலும் அவரது கட்சிக்கு எதிராக விவசாயிகள் பெருமளவில் வாக்களிப்பார்கள் என்ற கள நிலவரமே காரணமாகும்.
தமிழ்நாட்டில் அடையாளம் பதிப்பதற்கு பாஜக கடுமையாக முயற்சி செய்து வந்த போதிலும், உ.பி., பஞ்சாப் போல அத்தகைய உடனடி அரசியல் நிர்பந்தம் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இல்லை.
எனவே பாஜகவிடம் இருந்து எதிர்ப்பைத்தான் திமுக எதிர்பார்க்க முடியுமே தவிர, விருந்தோம்பலை அல்ல.
Read in : English