Read in : English

‘ஆயிரம் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது’ என்ற கருத்து பண்பட்ட நம் சமுதாயத்தில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. மேல் முறையீட்டு மனு ஒன்றின் மீது 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வழங்கிய தீர்ப்பிலும் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த சட்ட வல்லுநர்களில் ஒருவராக விளங்கிய சர் வில்லியம் ப்ளாக்ஸ்டோன் என்பவர் நீதி வழங்கும் முறையில் நிகழும் சில குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, ‘பத்து குற்றவாளிகள் நீதியின் பார்வையில் இருந்து தப்பித்துவிடலாம்; ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என அவர் எழுதிய ‘இங்கிலாந்து நாட்டின் சட்டங்கள் மீதான விரிவுரைகள்’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றம் செய்யாதவர் தண்டிக்கப்படக் கூடாது என்ற கருத்து மனித சமுதாயத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், நீதி வழங்கும் முறையில் நிகழ்ந்த பிழை காரணமாக நிரபராதி தண்டிக்கப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளன.செய்யாத குற்றத்திற்கு மரண தண்டனை அடைந்த கோவலனின் கதையே இதற்கு ஒரு சான்றாகும்.

சமுதாயத்தில் குற்றம் நிகழாமல் கண்காணிப்பதும், நிகழ்ந்த குற்றம் குறித்து துப்பு துலக்கி, குற்றவாளிகளைக் கண்டறிந்து, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதும் காவல்துறையின் முக்கியக் கடமையாகும்.

குற்ற வழக்குகள் மீதான புலன் விசாரணையின் பொழுது, சில வகையான குற்றச் செயல்களைப் புரிந்த குற்றவாளிகளைக் கைது செய்யும் அதிகாரத்தைச் சட்டம் புலன் விசாரணை செய்யும் அதிகாக்குக் கொடுத்துள்ளது.

ஒரு சில குற்றச் செயல்களைப் புரிந்த குற்றவாளிகளைக் கைது செய்ய, நீதிமன்றத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் சட்டம் வரையறை செய்துள்ளது.

ஜெய் பீம் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து பொதுவெளியில் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.

புலன் விசாரண என்ற பெயரில் குற்றம் செய்யாத அப்பாவி நபர்களைத் துன்புறத்தி குற்றத்தை ஒப்புக் கொள்ள வற்புறுத்துவதும், அவர்களுக்கு எதிராக பொய் சாட்சியங்களை உருவாக்குவதும் ஆன மனித உரிமை மீறல்களைப் போலீசார் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்.

புலன் விசாரணை என்ற பெயரில் தன் விருப்பத்திற்கு ஏற்ப யாரை வேண்டுமானாலும் போலீசார் கைது செய்கின்றனர். அத்தகைய அத்துமீறிய அதிகாரம் போலீசாரிடம் இருப்பதால், போலீசாரைக் கண்டு பயந்து வாழ வேண்டிய நிலையில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர். எனவே, கைது செய்யும் அதிகாரம் போலீசாரிடம் இருக்கக் கூடாது. நீதிமன்றத்தில் பிடி ஆணை (கைது வாரண்டு) பெற்றுதான் கைது நடவடிக்கையை போலீசார் மேற்கொள்ள வேண்டும் என்று கைது தொடர்பான சட்ட நடவடிக்கைகளைச் சிலர் எதிர்க்கின்றனர்.

இந்திய சட்ட ஆணையத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி, நம் நாட்டில் பதிவு செய்யப்படும் குற்ற வழக்குகளில் 40 சதவீத வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள் என்றும்இ மீதமுள்ள 60 சதவீத குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீதான வழக்குகள் பொய் வழக்குகள் என்பதால், அவர்கள் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவது இல்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த திருட்டு சம்பவம், அதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணை, விசாரணை என்ற பெயரில் போலீசாரின் அத்துமீறிய செயல்கள், அதைத் தொடர்ந்து நிகழ்ந்த மரணம் உள்ளிட்ட நிஜ வழக்கை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஜெய் பீம்.

சட்ட விதிகளையும், புலன் விசாரணைக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றாமல் போலீசார் இவ்வழக்கில் புலன் விசாரணை செய்த காரணத்தால் உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இவ்வழக்கின் மேல் விசாரணையை சிபிசிஐடி மேற்கொண்டது. புலன் விசாரணையில் நடந்த அத்துமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. அத்தகைய அத்துமீறிய செயல்கள் புரிந்த அனைவரும் சட்டப்படி கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

கால் நூற்றாண்டுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு குற்ற வழக்கின் புலன் விசாரணையைக் கதைக்களமாகக் கொண்டு, சமீபத்தில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தைத் தொடர்ந்து, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனக் குரல்கள் பல திசைகளில் ஒலிக்கின்றன. அவை வெளிப்படுத்தும் உண்மை என்ன?

நம் நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் ‘போலீஸ் அமைப்பு’ உருவாகக் காரணமாக இருந்தது 1857-ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய் கலகம் ஆகும். வர்த்தகம் செய்ய இந்தியா வந்த ஆங்கிலேயர்களைப் பெரிதும் கலக்கம் அடையச் செய்தது சிப்பாய் கலகம்.

தங்களின் செயல்பாடுகளை இந்தியாவில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால், தங்களுக்கு எதிராக எழும் கிளர்ச்சிகளை அடக்கி, தங்களின் செயல்பாடுகளுக்குப் பக்கபலமாக இருக்கும் வகையில் போலீஸ் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கருதினர். அதன் விளைவாக, 1861-ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரசாங்கம் இந்தியாவிற்கான போலீஸ் சட்டம் ஒன்றை இயற்றியது.

இந்தச் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட போலீஸ் அமைப்பு தான்இ இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்களின் கைப்பாவையாகச் செயல்பட்டு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது வன்முறை தாக்குதல்களை நடத்திய வரலாறு அனைவருக்கும் தெரியும்.

1861-ஆம் ஆண்டின் போலீஸ் சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட போலீஸ் அமைப்புதான் இந்தியா விடுதலை பெற்ற பின்னரும், சிற்சில மாற்றங்களுடன் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது. அன்று முதல் இன்று வரை பொதுமக்களின் நன்மதிப்பை நம்நாட்டு போலீசாரால் முழுமையாகப் பெற முடியவில்லை என்பது யதார்த்த நிலை.

ஒரு குற்றம் குறித்த தகவல்களை மறைக்க முயற்சிப்பதும், குற்றம் செய்தவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் பொய்யான தகவல்களைப் புலன் விசாரணையில் வெளிப்படுத்துவதும், குற்றம் செய்யாதவர் மீது குற்றப் பழியைச் சுமத்துவதும் குற்றச் செயல் என்ற உணர்வு பொதுமக்கள் பலரிடம் இருப்பதில்லை. இத்தகைய செயலால்தான், பாண்டிய நாட்டு அரசியின் காற்சிலம்பை கோவலன் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, மரண தண்டனையை எதிர்கொண்டான்.

ஒரு குற்ற வழக்கு மீதான புலன் விசாரணையில் சந்தேக நபர்களை உடல், மன ரீதியாகத் துன்புறுத்தினால்தான் அவர்களிடமிருந்து உண்மையை வெளிக் கொண்டு வரமுடியும் என்ற கருத்து நம் சமூகத்தில் நிலவி வருகிறது. திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் புகார் கொடுப்பவர்கள் சந்தேக நபர்களின் பெயர்களைப் புகாரிலோ அல்லது வாய்மொழியாகவோ விசாரணை அதிகாரியிடம் தெரிவிப்பதும் உண்டு.

வாதி கூறும் சந்தேக நபர்களைப் போலீசார் பிடித்து வந்து அடித்து விசாரிக்காவிட்டால், போலீசார் குற்றவாளிக்குத் துணைபோய்விட்டனர் என்ற குற்றச்சாட்டும் எழுவது உண்டு.
சந்தேக நபரைத் துன்புறுத்தி மேற்கொள்ளும் விசாரணையில் துப்பு துலங்கிய வழக்குகளும் உண்டு. ஆனால், சந்தேக நபரைத் துன்புறுத்தி, எல்லா வழக்குகளிலும் உண்மையை வெளிக் கொண்டுவர முடியாது என்பதையும், அத்தகைய முறை சட்டத்திற்கு முரணானது என்பதையும் துப்பு துலக்குவதில் உள்ள ஆர்வம் காரணமாக சில நேரங்களில் புலன் விசாரணை அதிகாரிகள் கருத்தில் கொள்வதில்லை.

துன்புறுத்தல் உள்ளிட்ட சில தவறான அணுகுமுறை காரணமாக புலன் விசாரணை சில சமயங்களில் தடம்புரண்டு, அசம்பாவித நிகழ்வுகள் நடைபெறக் காரணமாக அமைந்து விடுவதும் உண்டு. தடம்புரண்டு சென்ற புலன் விசாரணையை முறைப்படி சரி செய்வதைத் தவிர்த்து, நடந்த தவறை மறைக்க முயற்சிகள் செய்வதும் உண்டு.

ஒரு தவறை மறைக்க மேற்கொள்ளும் முயற்சி பல தவறுகளைச் செய்யக் காரணமாக அமைந்துவிடுவதும் உண்டு. அத்தகைய வழக்குகளில் ஒன்றுதான் ஜெய் பீம் திரைப்படத்தின் கதைக்களம் ஆகும்.

ஆண்டுதோறும் பல லட்சம் குற்ற வழக்குகளைப் போலீசார் புலன் விசாரணைக்கு எடுத்து, துப்பு துலக்கி வருகின்றனர். சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்டு, நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், பொதுமக்களின் அதிருப்திக்கும் காரணமாக அமைந்து விடுவதும் உண்டு.

புலன் விசாரணையை மேற்பார்வையிடுவதில் உள்ள கவனக்குறைவும், புலனாய்வு அதிகாரியின் அனுபவமின்மையும் புலன் விசாரணை தடம் புரளக் காரணமாக அமைந்துவிடுகின்றன.

பல்வேறு காரணங்களுக்காக போலீசார் மீதுள்ள வெறுப்புணர்வை அடித்தளமாகக் கொண்டு, புலன் விசாரணையின் பொழுது துன்புறுத்தல் என்றும், குற்றம் செய்யாதவர்களைப் பொய்யாக வழக்கில் சேர்க்கப்படுகின்றனர் என்றும் ஒரு சாரார் போலீசுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொள்ளும் பரப்புரைக்கு ஜெய் பீம் திரைப்படம் துணைநிற்கின்றது.

போலீசாரும் சில நேரங்களில் பொதுமக்களைத் திருப்திபடுத்தும் விதத்தில், புலன் விசாரணை என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களைச் செய்து, மக்களின் பாராட்டுகளைப் பெறுவதும் உண்டு. அவைகளில் ஒன்று ‘என்கவுண்டர்’ ஆகும்.

Source: Twitter.com

புலன் விசாரணையின் பொழுது குற்றவாளியைக் கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்குத் தேவையில்லை என்றும், குற்றம் செய்த நபர் மீதான ஆதாரங்களைத் திரட்டி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முறையைக் கொண்டு வந்தால், காவல் நிலையங்களில் ‘கஸ்டடி மரணங்கள்’ நிகழாது என்றும், தேவைப்படும் சூழலில் நீதிமன்றத்தில் கைது வாரண்டு பெற்று, கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும் சிலர் கருத்து வெளிப்படுத்தி உள்ளனர்.

கொலை, கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்களைப் புரிந்த குற்றவாளி ஒருவரை குற்றம் நிகழ்ந்த உடனே பிடித்து விசாரணை மேற்கொண்டால், குற்றம் நிகழ்த்த நடந்த சதி ஆலோசனைகள், குற்றம் செய்ய உதவி புரிந்தவர்கள், குற்றச் செயலில் தன்னுடன் பங்கெடுத்துக் கொண்டவர்கள் போன்ற தகவல்களை வெளிப்படுத்துவார். ஆனால், அக்குற்றச் செயலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போதிய அவகாசம் கொடுத்த பின்னர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டால், தான் எவ்வித குற்றமும் செய்யவில்லை என்ற நிலைபாட்டை அவர் எடுத்துவிடுவார் என்பதுதான் களநிலவரம்.

ஒரு குற்றவாளியைக் கைது செய்து, அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் கைப்பற்றப்படும் குற்றம் தொடர்பான பொருட்கள் நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபணம் ஆக முக்கியமான சாட்சியங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குற்றம் நிகழ்வதைப் போலீசார் நேரில் பார்த்தாலும், குற்றவாளியைக் கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு இல்லை என்ற நிலை நாட்டில் நிலவினால் குற்றங்கள் சமுதாயத்தில் மலிந்து போகும். வலிமை படைத்தவர்கள் வைத்ததுதான் சட்டம் என்ற நிலை நாட்டில் நிலவும்.

நீதிமன்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாத வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள் என்று தவறான கருத்தைச் சிலர் பொதுவெளியில் பதிவு செய்து வருகின்றனர்.

2020-ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் அதிகமான வழக்குகள் (8,91,700) பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு என தேசியக் குற்ற ஆவணக்கூட அறிக்கை கூறுகிறது.

அவைகளில் 1,661 கொலை வழக்குகளும், 12,492 திருட்டு வழக்குகளும், 4,275 களவு வழக்குகளும், 2,023 வழிப்பறி வழக்குகளும், 128 கொள்ளை வழக்குகளும் அடங்கும். மொத்த வழக்குகளில் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் 91 சதவீதம் ஆகும்.

பல லட்சம் வழக்குகளை ஆண்டுதோறும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் காவல்துறையில், சில வழக்குகளின் புலன் விசாரணை தடம் புரண்ட காரணத்திற்காக காவல்துறையின் புலன் விசாரணை திறனைக் கொச்சைப்படுத்தும் செயல் சமூக நலனைச் சீர்குலைக்கும் செயல் என்று கூறினால் அது மிகையாகாது.

அதே சமயம், புலன் விசாரணையின் தரத்தை உயர்த்தவும், அதற்கான பயிற்சிகளைப் புலன் விசாரணை அதிகாரிகளுக்குக் கொடுப்பதும் இன்றியமையாதவை என்பதில் இருவேறு கருத்துகள் இருக்காது.

(கட்டுரையாளர், தமிழகக் காவல் துறையில் ஓய்வு பெற்ற ஐ.ஜி.)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival