Read in : English
மாற்றம் ஒன்றே மாறாது. நன்மாறனைப் பொருத்தவரை இது பொருந்தாது. சட்டப்பேரவை உறுப்பினராவதற்கு முன்னாலும் சரி, அதற்குப் பிறகும் சரி எப்போதும் மாறாதவர்.
பதவி அவரது பொருளாதார நிலையையோ வாழ்க்கை முறையையோ மாற்றிவிட முடிந்ததில்லை. அவர் எப்போதும் போல சாமானியர்கள் அணுகக்கூடியவராகத்தான் இருந்தார்.
வெளியூரிலிருந்து மதுரைக்கு வரும் பஸ்களில் அதிகாலை நேரத்தில் இறங்கி, வீட்டுக்குச் செல்ல டவுன் பஸ் நிறுத்தத்தில் அவர் கையில் சிறு பையுடன் காத்திருப்பதைப் பார்க்கலாம். மதுரை வீதிகளில் சைக்கிளில் போய் வருவார்.
கட்சி அவருக்குக் கொடுத்த டி.வி.எஸ்.-50 வாகனத்தில் செல்வதையும் பார்த்திருக்கலாம். அல்லது யாராவது ஒரு தோழரின் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து செல்வதைப் பார்த்திருக்கலாம். பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அருகே, கூட்டம் தொடங்கும் முன் தோழர்களுடன் டீ கடையில் உரையாடிக் கொண்டிருப்பார்.
கட்சியின் சாமானியத் தொண்டராக இருந்தபோதும் அப்படித்தான். 2001, 2006ஆகிய நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக ஆன பிறகும் அப்படித்தான். எப்போதும் அவர் அரசு பஸ்சில் சென்று வருவார். அரசு பஸ்சில் வருவது எம்எல்ஏவா என்று கண்டக்டர்கள் அவர் காட்டும் பஸ் பாஸைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போய் இருக்கிறார்கள்.
தான் ஒரு எம்எல்ஏ என்று கூறி எந்த இடத்திலும் சலுகை பெறுவதை அவர் விரும்பமாட்டார். மக்களோடு மக்களாக கலக்கவே பிரியப்படுவார்.
சட்டப்பேரவை உறுப்பினர் என்றால் பெரிய வீடு. பெரிய கார். அவருக்கு உடனிருந்து சேவகம் செய்ய சிலர். இப்படி ஒரு சட்டமன்ற உறுப்பினரைப் பற்றி சமூகப் பொதுவெளியில் கட்டமைக்கப்பட்ட பிம்பத்துக்கு மாறானவர் நன்மாறன்.
சாகும் வரை அவருக்கு வாடகை வீடுதான். தன் தேவைகளை ஒதுக்கி, கட்சி கொடுத்த குறைந்த தொகையில் வாடகை வீட்டில் வசித்தவர். அரசு மருத்துவமனைக்குச் சென்றே சிகிச்சை பெறுவார்.
மதுரையில் பிறந்த நன்மாறனின் இயற்பெயர் ராமலிங்கம். அவரது அப்பா பஞ்சாலைத் தொழிலாளி. மார்க்சிஸ்ட் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர். அவரது மேடை பேச்சில் நகைச்சுவை களைகட்டும். அதனாலேயே அவரது பேச்சை ஆர்வத்துடன் கேட்க வரும் கூட்டம் வரும்.
1980ஆம் ஆண்டில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அகில இந்திய அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் முன்னோடியாக தமிழகத்தில் சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்ற அமைப்பு செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த அமைப்பின் பெயர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் மாநிலத் தலைவராக செயல்பட்டவர் அவர்.
சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி 1974இல் மதுரையில் மறியல் போராட்டம் நடத்தியது. இளைஞர்களுக்கு வேலை கொடு அல்லது நிவாரணம் கொடு என்ற கோஷத்துடன் நடந்தது இந்த மறியல் போராட்டம். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற நன்மாறன் மற்றும் 200க்கும் மேற்பட்ட இளை]ஞர்கள் பங்கேற்று கைதானார்கள். இதுபோல கட்சிப் போராட்டங்களில் சிறை சென்றவர்.
வாழ்வியல் எளிமையோடு அதே பின்னணியில் நகைச்சுவையோடு பேசி எழுதக் கூடியவர்.
“இளைஞர்களின் கவனம் தங்கள் படிப்போடு நூலகங்களில் கூடுதலாக பல்வேறு தகவல்களை படித்து அறிய வேண்டும். படியுங்கள், மனதில் நிறுத்துங்கள், செயல்படுத்துங்கள் என்பதே லெனின் இளைஞர்களுக்கு கூறிய வழிகாட்டுதல். இது இன்றைக்கும் தேவையான அணுகுமுறையாகும்” என்று வலியுறுத்தியவர் நன்மாறன்.
உத்தப்பபுரம் தீண்டாமைச் சுவர் பிரச்சினைக் குறித்து சட்டப்பேரவையில் பேசி, அன்றைய முதல்வர் கருணாநிதியின் கவனத்துக்குக் கொண்டு வந்து, உரிய நடவடிக்கை எடுக்கச் செய்தவர் நன்மாறன். எப்போதும் தனக்கே உரிய பாணியில் பேசி மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, அதை நிறைவேற்றுவதற்கான உறுதிமொழியையும் பெறுவது வழக்கம்.
சமூகப் போராளியாய் அரசியல் களத்தில் விளங்கிய நன்மாறன் பத்திரிக்கையாளர்களுடன் நல்ல நட்புக் கொண்டவர். மக்கள் பிரச்சினைகளை செய்திகளாக பரப்புங்கள், தோழா என்று உரிமையோடு கேட்டுக் கொள்வார்.
நேர்மையான, எளிய வாழ்க்கை. எப்போதும் Ñமக்கள் பணி. இதுதான் நன்மாறன். சாமானியக் குடும்பத்தில் பிறந்து சாமானியனாய் வாழ்ந்து 74 வயதில் மறைந்த அபூர்வ மக்கள் தொண்டர் நன்மாறன்.
Read in : English