Read in : English
தமிழ்நாட்டில் தேவர்கள் அதிகம் உள்ள தென் மாவட்டங்களுக்கு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் அவரது ஆட்சிக் காலத்தில் கட்சியிலும் ஆட்சியிலும் முப்பது ஆண்டுகளுக்கு மேல் பெரும் செல்வாக்கு செலுத்தி வந்த தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த சசிகலா சுற்றுப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவுண்டர் சமுதாயத்தில் செல்வாக்கு உள்ள முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் அதிமுக உறுப்பினர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனக்கு கட்சியில் செல்வாக்கு இருந்தவரை, அமைச்சர் பதவி முதல் அரசு அதிகாரிகள் பொறுப்புவரை தான் சார்ந்த தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வழங்கியதுடன், கட்சிக்குள்ளும் தனது சமூகதைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்தார். அவருக்கு எதிராக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. அவ்வாறு எதிர்ப்புக் குரல் எழுப்ப முயன்றவர்கள் உடனடியாக அமைச்சர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கின்றனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்றதும், அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட அவர், தற்போது தேவர் ஜெயந்தி நிகழ்வைப் பயன்படுத்தி, தேவர் சமூகத்தின் ஆதரவை திரட்டி கட்சிக்குள் மீண்டும் வர முயற்சி செய்கிறார். அது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பது போகப்போகத் தெரியும்.
தமிழகத்தின் மேற்குப் பகுதியில் கவுண்டர்கள் அதிகமாக உள்ள நான்கு ஐந்து மாவட்டங்களில் உள்ள ஆதரவை வைத்துக் கொண்டு கட்சியில் செல்வாக்கு செலுத்தும் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் ஒவ்வொரு நகர்வுக்கும் தடையாக இருக்கிறார். ஜெயலலிதா சமாதிக்கு அல்லது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்கோ சசிகலா போகவிடாமல் தடுக்கப்படுகிறார். எனினும், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைக்கமாக இருந்து எடப்பாடி பழனிசாமியை அகற்றுவதற்கான புதிய வழியை சசிகலா தொடங்கியுள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் சசிகலா காலடி எடுத்து வைத்துவிட்டால், அவருக்கு ஆதரவு கிடைத்துவிடும் என்று ஓ. பன்னீர்செல்வம் நம்புவதாகத் தெரிகிறது. இதற்கிடையே அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கும் இந்த நேரம், பொறுப்பைக் கைப்பற்றுவதற்கு முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதற்கான நேரம் இது என்று சசிகலா கருதுகிறார்.
இத்தேர்தலில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்திருப்பதைக் காட்டுகிறது. இதற்கு கொங்கு மண்டலம் அல்லாத தமிழ்நாட்டின் பிற பகுதியின் பெரும்பான்மை சமூகத்தினருக்கு அதிமுக மீது உள்ள அதிருப்தியும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதிமுகவில் எம்ஜிஆர், ஜெயலலிதா விசுவாசிகளை ஒருங்கிணைக்க சசிகலாவால் மட்டுமே முடியும் என்று சசிகலா ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் நடந்துவரும் திரைமறைவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் சசிகலா இருக்கிறார் என்றே கருத வேண்டியுள்ளது.
1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தோல்வியைச் சந்தித்த பிறகு ஜானகி அணியினருடன் பேசி இரு அணிகளை ஒன்றுபட வைத்து, கட்சிக்கு இரட்டை இலைச் சின்னம் கிடைக்கச் செய்ததில் சசிகலாவுக்குப் பங்கு இருக்கிறது. சசிகலா யோசனையின்படி, ஜெயலலிதா, தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சந்திப்பு நடந்து 2001 தேர்தலில் அக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஏற்பட்டது. அதேபோல, 2011 தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அதிமுக கூட்டணிக்குக் கொண்டு வந்ததிலும் அவரது பங்கு இருக்கிறது.
இந்த முயற்சிகளில் சசிகலாவின கணவர் நடராஜனின் கையும் இருந்தது என்பதும் தெரியும். கட்சியின் ஒவ்வொரு நெருக்கடியின்போதும் அவர்கள் இருவரும் கட்சிக்கு வெற்றியைக் கொண்டு வர உதவியிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும். இந்தக் காரணங்களால் அதிமுகவில் ஒரு பிரிவினர் சசிகலா கட்சிக்கு மீண்டும் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியால் வெற்றிக்கூட்டணியை உருவாக்க முடியவில்லை. புதிய கட்சிகளை அதிமுக அணியில் சேர்க்கமுடியவில்லை. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகிவிட்டது. அதுவும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற முக்கியக் காரணம். அதிமுக வசம் உள்ள ஒரே கட்சி பாஜகதான்.
அந்தக் கட்சியும் தனது தளத்தை வலுப்படுத்தி 2024 மக்களைத் தேர்தலில் தமிழகத்தில் முக்கிய கட்சியாக உருவாக அது விரும்புகிறது.
வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ஆகியவை சசிகலாவுக்கும் அவரது உறவினர்களுக்கும் எதிராகத் தொடர்ந்த வழக்குகளிலிருந்து சசிகலா தப்பிப்பதற்காக இருபது ஆண்டுகளுக்கு முன்னால் பாஜகவின் பின்னால் அதிமுக சென்றது. அதனால்தான், அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்றும் சசிகலாவின் உறவினரான டி.டி.வி. தினகரன் தலைமையிலான அமமுகவைச் சேர்ந்தவர்களுக்கு சில இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் சில பாஜக தேசியத் தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் அதிமுகவைக் கொண்டு வந்த பிறகு கவுண்டர் தலைவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுத்ததும் கடந்த மூன்று ஆண்டுகளில், அதாவது எம்ஜிஆர் காலத்திலிருந்து இருந்து வந்த பாரம்பரியமான தலித் வாக்கு வங்கியை அதிமுக பெருமளவில் இழந்துள்ளது. அதிமுகவில் சசிகலா, ஜெயலலிதா, தேவர் ஆதிக்கம் மேலோங்கியதும் தலித்துகள் அதிமுக ஆதரவிலிருந்து விலகத் தொடங்கிவிட்டனர். தென்மாவட்டங்களில் கட்சி தலைமையில் இருந்த தேவர் இன நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டத் தொடங்கினார்.
ஏற்கெனவே, அந்தப் பகுதியில் முக்கிய சக்தியாகத் திகழ்ந்த தலித்துகள் அதிமுக ஆதரவு நிலையிலிருந்து ஏற்கெனவே விலகிவிட்டனர். இதனால் கவுண்டர்கள் அல்லாத வேறு முக்கிய சமூகங்கள் இருக்கும் பகுதியில் தகுந்த பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் அதிமுக கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு சசிகலா வர வேண்டும் என்றும் அதன் மூலம் மேற்கு மாவட்டங்கள் அல்லாத மற்ற பகுதிகளில் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று ஓ.பன்னீர்செல்வம் கருதுவதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
கட்சிக்கு சசிகலா வருவது பயனுள்ளதாக இருக்கும் என்று எடப்பாடி பழனிசாமிக்குத் தெரிந்தாலும்கூட, சசிகலாவைக் கட்சிக்குள் நுழைய அனுமதிப்பது தனக்குப் பாதகமாகிவிடும் என்று பயப்படுகிறார்.
அதிமுகவில் தேவர்களுக்கும் கவுண்டர்களும் தங்களது செல்வாக்கை நிலைநிறுத்த போட்டி நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதிமுகவைக் காப்பாற்ற யார் வருவார்கள் என்று அதிமுகவின் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Read in : English