Read in : English
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் சமீபத்தில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மாநிலத்தின் நிதி நிலைமை, இலவசங்கள் மற்றும் மான்யங்களை மறு சீரமைப்பது, மற்றும் குறைப்பதற்கான பரிந்துரைகள் வெள்ளை அறிக்கையில் இடம் பெற்றன.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதாலும் நகராட்சி தேர்தல் டிசம்பரில் நடத்த வாய்ப்புள்ளதாலும், இந்த திட்டம் செயல் வடிவம் பெற இந்த ஆண்டு இறுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். நல்ல பொருளாதாரக் கொள்கைகள் நல்ல அரசியலாகாது என்பதை என்பதை மன்மோகன் சிங் போன்று பிடிஆர் கூட உணர்ந்தே இருக்கிறார்.
மின் கட்டணம், குடிநீர் கட்டணம், சொத்து வரி அதிகரிக்கப்படும் என்றும், விவசாய வருவாய்க்கும் வரி விதிக்கப்படும் என்றும் வெள்ளை அறிக்கையில் அவர் அடிக்கோடிட்டு காட்டியிருந்தார்.
தேர்தல் நேரத்தில் இதற்கு ஆளும் கட்சி தடை போட்டுள்ளது ஒன்றும் ஆச்சரியமல்ல.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் மக்கள் மத்தியில் முணுமுணுப்பை ஏற்படுத்தியுள்ள நேரத்தில், இந்த வரி உயர்வால் அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கவனமாக உள்ளார். பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியில் ₹3 குறைத்தது போல் நிதி நிலை சீராக தொடங்கியதும், நலத்திட்டங்களும் ஒவ்வொன்றாக அமல்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டில் நிலைமை ஒரளவு சீராகும் என திமுக அரசு நம்புகிறது, அது வரை பிடிஆர் வெளியிட்டுள்ள திட்டங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
பெருந்தொற்றின் போது ஏற்பட்ட வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னும் முழுமையாக மக்கள் மீளவில்லை, அதற்குள் பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் ஆகியவற்றை அதிகரித்தால், மக்களின் வெறுப்பை சந்திக்க வேண்டிவரும் என்பதை ஆட்சியாளர்கள் நன்று உணர்ந்திருக்கிறார்கள்.
நகர்ப்புறத்தில் பேருந்தில் பயணிக்க பெண்களுக்கு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு மூலம் மக்களின் தேவையை பூர்த்தி செய்துள்ளதாக திமுக கருதுகிறது. இது வரவேற்கப்பட்டாலும், இந்த சலுகை வெள்ளை போர்ட் உள்ள பேருந்துகளுக்கு மட்டுமே உள்ளது என பெண்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
பொருளாதார இழப்பில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், வரும் மாதங்களில் நிலைமை சீர்படும் என எதிர்பார்க்கிறது. ஆனால், கட்டண உயர்வை பயன்படுத்தி, எதிர்கட்சிகள் தங்களுக்கு எதிராக மக்களை திருப்பும் என திமுக கருதுகிறது.
தேர்தலில் பெற்ற ஆதரவை தக்க வைத்துக் கொள்ள, வெள்ளை அறிக்கையின் திட்டங்களை கிடப்பில் போட்டு, படிப்படியாக மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என திமுகவின் சில இரண்டாம் கட்ட தலைவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொருளாதார சிக்கலிலிருந்து மீள பிடிஆரின் திட்டத்தை வல்லுனர்கள் ஒரு புறம் ஆதரித்தாலும், வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு அரசு இதை அமல்படுத்தக் கூடாது என ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்.
உயர் படிப்பு, கார்பரேட் நிறுவனங்களில் வேலை என வெளிநாட்டில் பல ஆண்டுகள் வசித்த தியாகராஜன், அவர் பாணியில் சீர்திருத்தங்களை அமல்படுத்த, காத்திருந்து செயல் பட வேண்டும் என்பதை வெகு விரைவாகவே உணர்ந்துள்ளார்.
Read in : English